அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு-பாகம்-41
குருதேவர் சியாம்புகூருக்குச்
சென்றபின் அன்னையும் அதிக நாட்கள் தட்சிணேசுவரத்தில்
தங்கவில்லை. குருதேவரைக் கல்கத்தாவுக்கு அழைத்துச் சென்று சிகிச்சை துவங்கிய போது அவருக்குத்
தேவையான பத்திய உணவைச் சமைக்கவும், வேளாவேளைக்குப் பசியறிந்து பக்குவமாக உணவு தரவும்
அன்னையின் உதவி மிகவும் தேவைப்பட்டது.
ஆனால் சியாம்புகூரில்
குருதேவர் தங்கியிருந்த வாடகை வீட்டில் பெண்கள் வசிப்பதற்கென்று தனியான அறைகள் எதுவும்
இல்லை. வீடு முழுவதும் பக்தர்களே பெரும்பாலும் நிறைந்திருந்தனர். இயற்கையாகவே கூச்ச
சுபாவம் மிக்கவரான அன்னை, இத்தகைய சூழ்நிலையில் வசிக்க இசைவாரா என்ற சந்தேகம் அவர்கள்
மனத்தில் எழுந்தது. எனவே இது பற்றி குருதேவரிடம் பேசினார்கள்.
அவளால் இங்கு வந்து
வசிக்க முடியுமா? அவளையே கேட்டுப்பாருங்கள். சூழ்நிலையை நன்றாகப்புரிந்து கொண்டபின்
அவள் இங்கே வர விரும்பினால் வரட்டும்.என்றார்
அவர். தட்சிணேசுவரத்திற்கு அன்னையிடம் ஆள் அனுப்பினார்கள்.
எப்போது எப்படியோ
அப்போது அப்படி, எங்கே எப்படியோ அங்கே அப்படி யாரிடம் எப்படியோ அவரிடம் அப்படி என்பார்
குருதேவர். இடம், பொருள், காலம் தகுதிக்கேற்ப வாழக்கற்றுக்கொள்ள வேண்டும். அப்படி வாழ
முடியாவிட்டால் அமைதி பெறுவதோ, இலக்கை அடைவதோ முடியாத காரியம் ஆகிவிடும்.நாணம் என்னும்
ஊடுருவமுடியாத திரைக்குப் பின்னால் எப்போதும் அன்னை இருந்த போதிலும் குருதேவரின் மேற்கூறிய உபதேசத்திற்கு
ஏற்பத் தம் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும் படிப்பினையைப் பெற்றிருந்தார். எனவே தமது
சிரமங்களை,ச் சிறிதும் பொருட்படுத்தாமல் சியாம்புகூருக்குவந்து மகிழ்ச்சியுடன் அந்தப்
பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.
முன்பின் அறியாத ஆண்கள்
இருக்கின்ற வீட்டில் எல்லாவித அசௌகரியங்களையும் சகித்துக்கொண்டு தமது கடமையைச் செய்யலானார்
அன்னை. அங்கே ஒரு குளியல் அறை தான் இருந்தது. எனவே அதிகாலை மூன்று மணிக்கு முன்னால்
எப்பொழுதும் எழுந்து குளியல் முதலானவற்றை முடிப்பார். முடிந்ததும் இரண்டாம் மாடியிலுள்ள
மறைவிடத்திற்கு எப்போது போவார் என்பது யாருக்கும் தெரியாது. பகல் முழுவதும் அங்கேயே
கழிப்பார். குருதேவருக்குத் தேவையான உணவைச் சமைப்பார். பின்பு முதியவரான மூத்த கோபால்
அல்லது லாட்டு மூலம் கீழே சொல்லி அனுப்புவார். குருதேவருடன் இருப்பவர்கள் போய்விட்டால்
அவரே உணவைக் கீழே கொண்டு வந்து கொடுப்பார். இல்லையெனில் மற்ற பக்தர்கள் கொண்டுவந்து
கொடுப்பார்கள். பின்னர் அன்னையும் சாப்பிட்டுவிட்டு அங்கேயே ஓய்வெடுத்துக் கொள்வார்.
அனைவரும் உறங்கிய பின் இரவு பதினொருமணி வேளையில் கீழே வந்து அவருக்காக ஒதுக்கப்பட்டுள்ள
அறையில் காலை இரண்டு மணி வரை உறங்குவார்.குருதேவரின் நோய் குணமாகிவிட வேண்டும் என்ற
ஒரே ஆசையுடன் அவர் ஒவ்வொரு நாளையும் இவ்வாறு
கழித்தார். அங்கு நாள்தோறும் வருபவர்களுள் பலர் கூட அப்படி ஒருவர் அங்கு வாழ்ந்து
. குருதேவருக்கு முக்கியமான சேவை செய்து வருவதை அறிந்திருக்கவில்லை.
-
பணியை ஒப்படைத்தலும்
குருதேவரின் மறைவும்
-
குருதேவர் சியாம்புகூருக்கு
வந்து மூன்று மாதங்கள் ஆகி விட்டிருந்தன. மருத்துவர்களின் சிகிச்சையையும் அன்னையின்
கவனிப்பையும் சீடர்களின் சேவையையும் மீறி அவரது நோய் நாளுக்குநாள் தீவிரமாகியது. முன்பு ஏதோ
பலனளித்து வந்த மருந்துகளும் இப்போது பலனளிக்காமல்
போயின. கல்கத்தாவின் புழுதிமிக்க காற்றின் காரணமாத்தான் இவ்வாறு நோய் தீவிரமாகிறது
என்று முடிவு செய்த மருத்துவர்கள் நகரப்பகுதியை
விட்டுச் சற்று வெளியே காற்றோட்டமான இடத்திற்கு அவரை அழைத்துச் செல்வது நல்லது என்று
கூறினர். அதற்கேற்ப வீடு தேடிய பக்தர்கள் காசிப்பூர் என்ற இடத்தில் தோட்ட வீடு ஒன்றை வாடகைக்கு அமர்த்தினர்.
1885 டிசம்பர் 11-ஆம் நாள் அங்கே குடிபெயர்ந்தார் குருதேவர்.
காசிப்பூர்த் தோட்டம் பரந்ததாக,ஜனசந்தடிஅற்றதாக இருந்தது.
எந்தப்பக்கம் திரும்பினாலும் பச்சைப்பசேலென்ற மரங்கள், வண்ண மலர்ச் செடிகள், பச்சைப்பட்டு
விரித்தது போன்ற புல்தரை! தட்சிணேசுவரத்திலுள்ள காளிகோயிலின் அற்புதமான இயற்கை எழிலுடன் இதனை ஒப்பிட முடியாது தான். எனினும் நான்கு மாதங்கள்
தொடர்ந்து கல்கத்தாவில் வாழ்ந்த குருதேவருக்கு இந்த இடம் மிகவும் அழகாகத் தோன்றியது.
தோட்டத்திற்குள் நுழைந்து அதன் திறந்த வெளிக்காற்றைச் சுவாசித்ததுமே அவர் பூரித்துப்போய்,
சற்று முற்றும் மகிழ்ச்சியுடன் பார்த்தவாறு உள்ளே சென்றார்.பின்னர் மாடியில் தமக்கென
ஒதுக்கப்பட்ட அறைக்குத் தெற்கில் அமைந்துள்ள திறந்த மாடியில்வந்து நின்று கொண்டு தோட்டத்தின்
அழகை ச்சிறிது நேரம் கண்டு களித்தார்.சியாம்புகூர் வீட்டில் அடைபட்டுக்கிடந்ததைப்போன்று
இங்கு இருக்க வேண்டியது இல்லை. எனவே முன்னைப்போலன்றி, குருதேவருக்குச் சிறப்பாகப் பணிவிடை
செய்ய முடியும் என்பதை எண்ணி அன்னையும் மகிழ்ந்திருப்பார். இவர்கள் இருவரும் மகிழ்ந்ததால்
சீடர்களின் மனங்களும் ஆனந்தத்தால் நிறைந்தது.
பக்தர்கள் குருதேவரின் சிறந்த சிகிச்சைக்குத் தேவையான எல்லா
வசதிகளையும் செய்தனர். பிரபல டாக்டரான மகேந்திரலால் சர்க்கார் குருதேவருக்குச் சிகிச்சை அளித்தார்.
இளம் சீடர்கள் குருதேவருடனேயே தங்கி, அவருக்குப் பணிவிடை புரிந்து காத்து நின்றனர்.
-
-
தொடரும்...
-
ஸ்ரீராமகிருஷ்ணரின்
ஆன்மீகக் குழுவில் இணைய 9789374109 என்ற எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலம் ரிக்கொஸ்ட் மெசேஜ்
அனுப்பவும்
No comments:
Post a Comment