Saturday, 22 June 2019

ஸ்ரீராமகிருஷ்ணரின் விரிவான வாழ்க்கை வரலாறு

ஸ்ரீராமகிருஷ்ணரின் விரிவான வாழ்க்கை வரலாறு
-
பாகம்-10

காமார்புகூருக்கு வடக்கே இரண்டு மைல் தொலைவில் உள்ளது ஆனூர் என்னும் கிராமம்.
புகழ் பெற்ற  விசாலாட்சி திருக்கோயில் ஒன்று அங்கு உள்ளது. ஒரு நாள் அந்தக்கோயிலுக்குப் போகும் வழியில் கதாதரன் திடீதென வெளியுலக உணர்வை  இழந்து மயங்கி விழுந்தான். அவனுடன் சென்றவர்களும் தர்மதாஸ் லாஹாவின் தங்கை பிரசன்னமயியும் ஒருத்தி. சிறந்த பக்தையான அவள் ஆன்மீக உணர்வே கதாதரனில் இந்த நிலையை எற்படுத்தியுள்ளது என்பதை உணர்ந்தாள். பிரசன்னமயி கூறியதை சந்திராதேவி நம்பவில்லை.
வாய்வு கோளாறு அல்லது வேறு ஏதாவது நோயினால் தான் இந்த நிலை ஏற்பட்டிருக்க வேண்டும் என்று அஞ்சினாள்.
 கதாதரனோ தன் மனம் தேவியின் மீது பதிந்து, அவளது திருவடித் தாமரைகளில் ஒன்றியதால் தான் புற உணர்வை இழக்க நேர்ந்தது என்று கூறினான்.

 மேலும் இரண்டு ஆண்டுகள் கழிந்தன. வாழ்க்கையினூடே மாறிமாறி வந்த சுகதுக்கங்கள் கதாதரன் படிப்படியாகத் தந்தையின் பிரிவுத்துயரை மறக்கும்படிச் செய்தன.
தர்மதாஸ் லாஹாவின் மகனான கயாவிஷ்ணுவும் கதாதரனும் நெருங்கிய நண்பர்கள். பள்ளியிலும் வெளியிலும் இருவரும் சேர்ந்தே இருந்தனர். ஒருவரையொருவர் அன்புடன், அண்ணா, தம்பி என்றே அழைத்தனர். கிராமப்பெண்கள் விருந்திற்கு அழைக்கும்போதெல்லாம் கதாதரன் கயாவிஷ்ணுவையும் உடன் அழைத்துச் செல்வான்.
சந்திராவின் தோழியான தனி இனிப்புவகைகளையும் மற்ற பண்டங்களையும் கொடுக்கும் போது கயாவிஷ்ணுவுக்குத் தந்த பிறகு தான் கதாதரன் உண்பான்.
தர்மதாஸீம் கதாதரனின் வீட்டினரும் இவர்களின் நட்பைக்கண்டு மகிழ்ந்தனர்.

சந்திராவின்  தோழியருள் தனி என்பவளைப்பற்றி ஏற்கனவே அறிந்துள்ளோம்.
தனி கொல்லர்  இனத்தைச்சேர்ந்தவள்.
கதாதரன் பிறந்ததிலிருந்து அவனிடம் அதிக வாஞ்சை கொண்டிருந்தாள் அவள்.
ஒரு நாள் அவள் கதாதரனிடம், கதாயீ,உனது உபநயனத்தின் போது என்னிடம் முதல் பிச்சை ஏற்று, என்னை அம்மா என்று  அழைப்பாயானால் நான் எத்தனை மகிழ்வேன், தெரியுமா? என்று மிகுந்த அன்புடன் வேண்டினாள்.
தன் மீது  அவளுக்கிருந்த உளமார்ந்த அன்பைக் கண்டு  நெகிழ்ந்த கதாதரன் அவளது விருப்பத்தைப் பூர்த்தி செய்வதாக உறுதியளித்தான். 
அந்த ஏழைப்பெண்ணும் தன்னால் இயன்ற அளவு பணமும் மற்ற பொருட்களும் சேகரித்து வைத்துக்கொண்டு அந்த நன்னாளை எதிர்பார்த்துக் காத்திருந்தாள்.
ஓரிரு ஆண்டுகள் கடந்த பின் அந்த நாளும் வந்தது. கதாதரனுக்கு ஒன்பது வயது நிறைவடைய இருந்த போது உபநயன ஏற்பாடுகளைராம்குமார் செய்தார். தனிக்குத் தான் கொடுத்திருந்த வாக்குறுதியைப் பற்றி தக்கத் தருணத்தில் ராம்குமாரிடம் கூறினான் கதாதரன்.
ஆனால் அவன் எண்ணியது போல விஷயம் அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை.
தாழ்ந்த குல மாது ஒருத்தியிடம் இருந்து பிச்சை ஏற்பது வழக்கத்திற்கு மாறானது என்று கூறி,ராம்குமார் கதாதரனின் விருப்பத்தை நிறைவேற்ற மறுத்துவிட்டார்.
 கதாதரனோ தான் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்ற வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தான். அண்ணா, தனியிடமிருந்து பிச்சை ஏற்கத் தவறினால், நான்  சொன்ன சொல் தவறியவன் ஆவேன். சத்தியத்திலிருந்து வழுவிய ஒருவன் பூணூலை அணிந்து கொள்ளவே தகுதியற்றவன் ஆகிவிடுவான்.எனவே நான் எப்படிப்பூணூல் அணிய முடியும்? என்று அவன் வாதம் செய்தான்.

உபநயன நாள் நெருங்கியது. அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றன. எங்கே கதாதரன் தனது பிடிவாதத்தால் எல்லாவற்றையும் தடுத்துவிடுவானோ என்று வீட்டிலுள்ளோர் அஞ்சினர். இந்தச் செய்தி தர்மதாஸ் லாஹாவின் செவிக்கு எட்டியது. அவர் ராம்குமாரை அழைத்து,ராம்குமார் உன் குடும்பத்தில் இது வரை இவ்வாறு நடந்ததில்லை என்பது உண்மை தான்  .ஆனால் எத்தனையோ வேறு பல நல்ல  அந்தணர் குடும்பங்களில் பலர் தாழ்ந்த குலத்தினரிடமிருந்து பிச்சை ஏற்றுள்ளனர்.  இதனை  அனுமதிப்பதால் உன்னை எந்தப் பழியும் சேராது. அது மட்டுமின்றி சிறுவனின் மகிழ்ச்சி, மனநிறைவு இவற்றைக்குறித்தும் நீ சற்று எண்ணிப்பார்க்க வேண்டும் என்று எடுத்துக்கூறினார்.
வயதில் பெரியவரானஅவரது அறிவுரையை ராம்குமாரும் மற்றவர்களும் ஏற்றுக்கொண்டனர். கதாதரனின் ஆனந்தம் கரை புரண்டோடியது. உபநயச்சடங்குகள் இனிது நடைபெற்றன. சாஸ்திரங்களுக்கு ஏற்பச் சடங்குகள் செய்து,பூணூல் தரித்து, தனியிடமிருந்து முதற்பிச்சை ஏற்றான் கதாதரன்.
தன் வாழ்வே புனிதம் பெற்றுவிட்டதாக தனி பேரானந்தம் எய்தினாள். உபநயனத்திற்குப் பின்னர் கதாதரன் சந்தியா, பூஜை போன்ற ஆன்மீக சாதனைகளில் ஆழ்ந்து ஈடுபட்டான்.

கதாதரனுக்குப் பத்து வயது நடந்து கொண்டிருந்த போது அவனது ஒப்பற்ற அறிவுத் திறமையை வெளிப்படுத்தும் நிகழ்ச்சியொன்று நடந்தது.
அப்போது லாஹாவின் வீட்டில் நடைபெற்ற சிராத்தச் சடங்கை ஒட்டி பண்டிதர்களின் சபை ஒன்று கூடியது.
அதில் தர்மம் சம்பந்தமான ஒரு வாக்குவாதம் எழுந்தது. பண்டிதர்களால் சரியான எந்த முடிவிற்கும் வர முடியவில்லை. அப்போது அங்கிருந்த கதாதரன், அந்தப் பிரச்சனைக்கு மிகவும் சரியான தீர்வு ஒன்றைச் சொன்னான். பண்டிதர்கள் அந்தப் பத்து வயது சிறுவனின் புத்திக் கூர்மையைக் கண்டு மகிழ்ந்தனர். மனம் நிறைந்தது அவனை ஆசீர்வதித்தனர்.
உபநயனத்திற்குப் பின்னர் தெய்வத் திருவுருவங்களைத் தொட்டுப் பூஜை செய்யும் வாய்ப்பு கதாதரனுக்குக் கிட்டியது.
பூஜை செய்வது அவனுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. இந்த வாய்ப்பினால் அவனது இயல்பான ஆன்மீக உணர்வுகள் விழித்தெழுந்தன.
ஸ்ரீரகுவீரர் எவ்வாறு தன் தந்தையின் கனவில் காட்சியளித்தார். வீட்டில் முதலில் ஸ்ரீரகுவீரர்  எவ்வாறு இடம்  பெற்றார், ஸ்ரீரகுவீரர் வந்த நன்னாளிலிருந்து சிறிய நிலம் எவ்வாறு  போதிய  நெல்லை வழங்கியது.
சொற்ப வருவாயினால் குடும்பத்தின் எல்லாத் தேவைகளும் எவ்வாறு நிறைவு பெற்றன. அந்தச் சொற்ப வருமானத்திலும் வீட்டிற்கு  வந்தோருக்கெல்லாம் உணவளித்து வரவேற்க அன்புள்ளம் கொண்ட சந்திராதேவியால் எவ்வாறு இயன்றது. போன்றவற்றை எல்லாம் முன்னரே அறிந்திருந்தான் கதாதரன்.
ஸ்ரீரகுவீரரின் பேரருளைச் சந்திக்கும் போதெல்லாம் வியப்பில் ஆழ்வான். இப்போது  அந்த ரகுவீரரைத் தொட்டு வழிபடும் பேறு கிடைத்ததும் அவனது மனத்தில் புதியதொரு பக்திவேகம் பிறந்தது. தினமும் சந்தியா வந்தனம் போன்ற கடமைகளைச் செய்த பின்னர் நீண்ட நேரம் பூஜையிலும் தியானத்திலும் ஈடுபட்டான்.
அருட்காட்சி அளித்தும் அவ்வப்போது அருளாணை தந்தும் தந்தைக்கு ஸ்ரீரகுவீரர் ஆசி வழங்கியது  போன்று தனக்கும் ஆசி வழங்கி மகிழ்வு தரவேண்டும் என்பதற்காக ஸ்ரீரகுவீரரை சிரத்தையோடும் பக்தியோடும் பூஜித்தான்.
ஸ்ரீரகுவீரருடன் ராமேசுவரசிவனையும் சீதளாதேவியையும் உள்ளமுருகி வழிபட்டான். அவனது தீவிர பக்தி பலனளிக்க வெகுகாலம் ஆகவில்லை. வெகுவிரைவில் பாவ சமாதி அல்லது சவிகல்ப சமாதி எனப்படும் மிக உயர்ந்த நிலையை அடைந்து விட்டான். அந்த நிலையில் அவனுக்குப் பல தெய்வீகக் காட்சிகள் கிடைத்தன.

அந்த ஆண்டு சிவராத்திரியின் போது கதாதரனுக்கு அத்தகைய காட்சியும் பாவ சமாதியும் ஏற்பட்டது.
சிவராத்திரியின் போது கதாதரன் உண்ணாநோன்பு இருந்து ஆழ்ந்த பக்தியுடன்  முழுமுதற் கடவுளான சிவபெருமானை வழிபட்டான். அவனுடன் கயாவிஷ்ணுவும் வேறு பல சிறுவர்களும் நோன்பிருந்தனர்.சீதாநாத் பைன் என்பவரின் வீட்டில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிவபெருமானின் திருவிளையாடல் சம்பந்தமான நாடகத்தைப் பார்த்தபடி அன்றிரவு கண்விழிக்க ஊரார் முடிவு செய்திருந்தனர்.கதாதரன் தன் வீட்டிலேயே பூஜை, ஜபம் என்று சாதனைகளில் ஈடுபட்டான். முதல் யாமப்பூஜைக்குப்பிறகு சிவ தியானத்தில் மூழ்கியிருந்த போது அவனது நண்பர்கள் அங்கு வந்து, பைன் வீட்டில் நடக்கவிருந்த நாடகத்தில் வழக்கமாக சிவவேடத்தில் நடிப்பவர்  திடீரென நோய்வாய்ப் பட்டுவிட்டதாகவும், கதாதரன் அந்த வேடத்தில் நடிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.
தனது பூஜை பாதிக்கப்படும் என்பதால் முதலில் கதாதரன் அதனை மறுத்தான். சிவனாக நடித்தால் சிவனையே நினைக்க வேண்டிவரும்,அந்த நினைவு பூஜைக்கு நிகரானதே,மேலும் அவனது இசைவு பலருக்கு மகிழ்ச்சியூட்டும் என்றெல்லாம் நண்பர்கள் எடுத்துக்கூறினர். அவர்கள் பல முறை வேண்டிக்கொண்ட பின் நடிப்பதற்கு இசைந்தான் கதாதரன்.
ஜடாமுடி, ருத்திராட்ச மாலை, திருநீறு முதலியன தரித்து சிவவேடம் பூண்டான். ஆனால் மேடையில் தோன்றிய போது தன்னை மறந்து  சிவபெருமானின் நினைவில் ஆழ்ந்து மூழ்கிப்போனான்.
கொஞ்சம், கொஞ்சமாக அவனது வெளியுணர்வு முற்றிலும் அகன்று விட்டது.நீண்ட நேரம் அவனுக்குச் சுயவுணர்வு வராததால் அன்றிரவு நாடகம் நடைபெறவில்லை.
இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு கதாதரன் அடிக்கடி இத்தகைய பாவ சமாதியில் ஆழ்வது வழக்கமாயிற்று.
தெய்வீகப் பாடல்களை கேட்கும் போதும் தெய்வங்களை தியானிக்கும் போதும் தன்னையும் சுற்றுப்புறத்தையும் அறவே மறந்தான்.
அந்த நேரத்தில் புறவுலகின் தூண்டுதல் எதுவும் அவனது மனத்தைக் கலைக்க முடிவதில்லை. முற்றிலுமாக மனம் உள்நோக்கிய வண்ணம் இருக்கும். சில வேளைகளில் உடல் மரக்கட்டை போல்                                      உணர்வற்றுக் கிடக்கின்ற அளவிற்கு தியானத்தில் ஆழ்ந்திருப்பான்.
அந்த நிலையிலிருந்து மீண்ட பிறகு அது பற்றி அவனைக்கேட்டால் தியான வேளையில் தோன்றுகிற காட்சிகளாலும் இறைவனின் திருப்புகழைச் செவியுற்று அதில் மூழ்குவதாலும் ஏற்படுகின்ற பேரானந்தத்தில் லயித்துவிடுவதால் தான் இப்படிப்புறவுணர்வை இழக்க நேர்வதாக க்கூறுவான்.
இவையெல்லாம் சந்திராவிற்கும் மற்றவர்களுக்கும் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தின. ஆனால் இத்தகைய பரசவ நிலையால் கதாதரனின் உடல்நலம் எவ்விதத்திலும் பாதிக்கப்படவில்லை என்பதையும், எல்லாவிதத்திலும் அவன் திறமைசாலியாக இருப்பதையும், எப்போதும் ஆனந்தமாக இருப்பதையும் பார்த்த பிறகு அவர்களின் அச்சம் விலகியது.

தொடரும்

No comments:

Post a Comment