ஸ்ரீமத்பகவத்கீதை-வாழ்க்கைக்கான பாடங்கள்-5
ஸ்ரீமத்பகவத்கீதை-வாழ்க்கைக்கான பாடங்கள்-5 -வகுப்பு-5 நாள்-21-12-2019 - ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார் - நத்வேவாஹம் ஜாது நாஸம் ந த்வம் நேமே ஜநாதிபா:। ந சைவ ந பவிஷ்யாம: ஸர்வே வயமத: பரம்॥ 2.12 ॥ நானோ, நீயோ, இம்மன்னர்களோ இல்லாமலிருந்த ஒரு காலம் என்று எதுவும் இல்லை. நாம் எக்காலத்திலும் இருக்கிறோம். எதிர்காலத்திலும் நாமெல்லோரும் இல்லாமலிருக்கவும் போவதில்லை. தேஹிநோ அஸ்மிந்யதா தேஹே கௌமாரம் யௌவநம் ஜரா। ததா தேஹாந்தரப்ராப்திர்தீரஸ்தத்ர ந முஹ்யதி॥ 2.13 ॥ எப்படி உடலில் குடியிருப்பவனுக்கு, இந்த உடலில் குழந்தைப்பருவம், இளமைப்பருவம், முதுமைப்பருவம் ஏற்படுகிறதோ அதேபோல்தான் வேறு உடலை எடுப்பதும் அமைகிறது. தீரன் இதைகுறித்து குழப்பமடைவதில்லை வாழ்க்கையில் மிகப்பெரிய பயம் மரணபயம். ஒருவேளை நாம் இறந்துவிட்டால் என்ன செய்வது? நமது குடும்பத்தில் உள்ள யாராவது இறந்துவிட்டால் என்ன செய்வது? இந்த பயம் எல்லோருக்குள்ளும் இருக்கிறது. இதற்கு காரணம் அறியாமை. முதல் அணுவிலிருந்து படிப்படியாக பரிணமித்து நாம் மனித உடலை அடைந்திருக்கிறோம். இந்த லட்சக்கணக்கான பிறவிகளில் மரணபயம் நம்மை தொடர்ந்து வந்துகொண்டே இருக்கிறது. அவ்...