Sunday, 23 June 2019

ஸ்ரீராமகிருஷ்ணரின் விரிவான வாழ்க்கை வரலாறு பாகம்-34

ஸ்ரீராமகிருஷ்ணரின் விரிவான வாழ்க்கை வரலாறு
பாகம்-34

தவம் செய்வதற்கு தகுந்த புனிதமான ஓர் இடம் தேவை. என்று உணர்ந்த குருதேவர் ஐந்து புனித மரங்கள் நடப்பட்ட புதிய பஞ்சவடி ஒன்றை உருவாக்கவேண்டும் என்ற தம் விருப்பத்தை ஹிருதயரிடம் வெளியிட்டார்.
ஹிருதயர் கூறினார்,
பஞ்சவடியின் அருகிலிருந்த சிறிய குளமான ஹம்ச புகூர் தூர்வாரப்பட்டு அந்த மண்ணைப் பழைய பஞ்சவடிக்கு அருகில் இருந்ததாழ்ந்த நிலத்தில் பரப்பி, அந்தப்பகுதி சமநிலமாக்கப்பட்டிருந்தது. எனவே குருதேவர் எந்த நெல்லி மரத்தின் அடியில் அமர்ந்து தியானம் செய்வாரோ அந்த மரம் அப்போது இல்லை, அதனால் தற்போது சாதனைக்குடில் அமைந்திருக்கின்ற இடத்திற்கு மேற்கில் குருதேவர் தம் கைகளாலேயே ஓர் அரசமரத்தை நட்டார். ஆல், அசோக, வில்வ, நெல்லி மரங்களை ஹிருதயர் நட்டார். அந்த இடத்தைச்சுற்றி துளசி, அபராஜிதம், இன்னும் பல செடிகொடிகளும் நடப்பட்டன. ஆடு, மாடுகள் அந்த இளஞ்செடிகளை அழித்து விடாதிருக்க கோயில் தோட்டக்காரன் பர்தாபாரியின் உதவியுடன் வேலியும் அமைக்கப்பட்டது.
குருதேவரின் பராமரிப்பினால் துளசிச் செடியும் அபராஜிதக் கொடியும் வெகுவிரைவில் அடர்த்தியாக வளர்ந்தன. அங்கு அவர் தியானத்தில் அமரும் போது வெளியிலிருந்து யாரும் அவரைப்பார்க்க முடியாத அளவுக்கு அவை காடுபோல் வளர்ந்து விட்டிருந்தன.
காளிகோயிலைக் கட்டிய ராணி, அங்கு வந்துத் தங்கிச் செல்கின்ற யாத்திரிகர்களுக்கும் துறவிகளுக்கும் வேண்டிய வசதிகள் செய்து கொடுத்தார்.
 இதைப்பற்றிக்கேள்விப்பட்டவர்கள் புரி,கங்காசாகர், போன்ற புண்ணியத் தலங்களுக்குச் செல்கின்ற வழியில் அங்கு வந்து ஓரிரு நாட்கள் தங்கிச் செல்லலாயினர்.
மகான்களும், சிறந்த சாதகர்களும் தட்சிணேசுவரத்திற்கு வருவது வழக்கம் என்று குருதேவர் கூறியுள்ளார்.
இவர்களுள் ஒருவரின் அறிவுரைப்படி குருதேவர் பிராணாயாமம் போன்ற ஹடயோகப் பயிற்சிகளைச் செய்ததாக அறிகிறோம்.
ஒரு நாள் ஹிலதாரியைப் பற்றிப்பேசிக் கொண்டிருந்தபோது குருதேவர் இதைத் தெரிவித்தார். ஹடயோகத்தைப்பயின்று அதனால் ஏற்பட்ட விளைவுகளை அறிந்திருந்த அவர் எங்களை அந்தப் பயிற்சிகளில் ஈடுபட வேண்டாம் என்று தடுத்தார்.
சிலர் அவரிடம் ஹடயோகப் பயிற்சி பற்றி அறிவுரை கேட்பதற்காகச் சென்றபோது அவர், இக்காலத்திற்கு இந்தப் பயிற்சிகள் ஏற்றவையல்ல, கலியுகத்தில் வாழ்நாள் குறுகியது. வாழ்க்கையும் உணவை அடிப்படையாகக்கொண்டுள்ளது. அகவே ஹடயோகப் பயிற்சிகளில் ஈடுபட்டு உடம்பைத் தகுதியுடையதாக்கி, ராஜயோகத்தின் உதவியுடன் இறைவனை அழைப்பதற்கு நேரம் எங்கே உள்ளது? ஹடயோகப் பயிற்சிகளை ஒருவர் செய்ய விரும்பினால் யோகத்தில் நன்கு பயிற்சி பெற்ற குருவுடன் தங்கி நீண்ட நாட்கள் பயிற்சி பெற வேண்டும். உணவு போன்ற விஷயங்களில் அவரது உபதேசப்படி கடுமையான நியதிகளைக் கடைபிடிக்க வேண்டும்.
நியமங்களிலிருந்து சிறிது வழுவினால் கூட உடலில் நோய்கள் ஏற்படக்கூடும். ஏன், மரணமே நேரலாம். எனவே இந்தப் பயிற்சிகள் அவசியமில்லை.
மனத்தை அடக்குவதற்காகத்தானே மூச்சைக் கட்டுப்படுத்திப் பிராணாயாமம் செய்ய வேண்டியிருக்கிறது! ஆனால் பக்தியுடன் தியானம் செய்தால் அதன் மூலமாகவே படிப்படியாக மனம் மூச்சு இரண்டும் தானாகவே  கட்டுப்பட்டு விடுகின்றன.
கலியுகத்தில் மக்களின் வாழ்நாளும் குறைவு, ஆற்றலும் குறைவு. அதனால் தான் கடவுள் எல்லையற்ற கருணைகொண்டு தம்மை அடைவதற்கான வழியை எளிதாக்கி உள்ளார்.
மனைவியையோ மக்களையோ இழக்கும்போது உண்டாகும் துயரமும் ஏக்கமும் அவன் ஒரு நாள் முழுவதும் கடவுளுக்காக ஏற்கி அழுதால் இறைவன் அவனுக்குக்காட்சி அளித்தே தீருவான்.
ஸ்மிருதிகளைப் பின்பற்றுகின்ற பக்த சாதகர்களுள் பலரும் செயல்முறையில் தந்திர சாதனைகளிலேயே ஈடுபடுகின்றனர்.
வைணவப் பிரிவைச்சேர்ந்த அத்தகைய சில சாதகர்கள் பரகீய பிரேம சாதனைகளைச் செய்கின்றனர். வைணவ நெறியில் ஈடுபாடு கொண்ட ஹலதாரி, ராதாகோவிந்தர் ஆலய அர்ச்சகர் பொறுப்பை ஏற்ற சில நாட்களுக்குப்பின் ரகசியமாக பரகீய சாதனைகளில் ஈடுபட்டார்.
இந்த விஷயம் மெதுவாகப் பரவியது. பலரும் இது பற்றி ஒளிவுமறைவாகப்பேசத் தொடங்கினர். ஹலதாரிக்கு வாக்குசித்தியிருந்தது. அவர் எது சொன்னாலும் அப்படியே பலித்துவிடும். அப்படியொரு பிரசித்தி இருந்ததால் ஹலதாரி  யின் கோபத்திற்கு ஆளாக அஞ்சி, அவரது பரகீய சாதனை பற்றி அவரெதிரில் பேசவோ கேலிசெய்யவோ யாரும் துணிந்து முன்வரவில்லை.
நாளடைவில் ஹலதாரியின் விஷயம் குருதேவருக்குத் தெரியவந்தது.தங்களுக்குள் எதையெதையோ கற்பனை செய்து கொண்டு மக்கள் அவரைத்தூற்றுவதைக்கண்ட குருதேவர் ஹலதாரியிடம்,ஒன்றையும் மறைக்காமல் சொல்லிவிட்டார்.
ஹலதாரி அதற்கு விபரீதமாகப்பொருள் கொண்டு கடுங்கோபத்துடன் என்னைவிடச் சிறியவனான நீ என்னைப்பற்றி அவதூறு பேசுகிறாயா நீ ரத்தமாக வாந்தியெடுப்பாய் என்று சாபமிட்டார். தாம் அவ்வாறு சொன்னதற்கான காரணங்களை எடுத்துச்சொல்லி ஹலதாரியை அமைதிப்படுத்த குருதேவர் எவ்வளவோ முயன்றும் ஹலதாரியின் கோபம் தணியவில்லை.
ஒருசில நாட்களுக்குப் பிறகு இரவு சுமார் எட்டு அல்லது ஒன்பது மணிக்கு  குருதேவருக்குக் குமட்டல் ஏற்பட்டு அவர் ரத்தவாந்தி எடுக்க நேர்ந்தது.
இதைப்பற்றி குருதேவர் கூறினார், 
அந்த ரத்தத்தின் நிறம் அவரையிலைச் சாறு போன்று கறுப்பாக இருந்தது. வாயிலிருந்து கட்டியாக வெளிப்பட்ட அதன் ஒரு பகுதி கீழே விழுந்தது. இன்னொரு பகுதி உள்ளே சுற்றிக்கொண்டு ஆலம் விழுது தொங்குவது போல் முன்பல் அருகில் உதடுகளிலிருந்து வழிந்து தொங்கியது. துணியை வைத்து ரத்தம் வருவதைத்தடுக்க நான் முயன்றும் அது நிற்கவில்லை. எனக்கு மிகவும் பயமாகிவிட்டது. அக்கம்பக்கத்திலிருந்த எல்லோரும் ஓடி வந்தனர்.
ஹலதாரி அப்போது கோயிலில் பூஜை செய்து கொண்டிருந்தார். விவரமறிந்து அவரும் விரைந்தோடி வந்தார். அவரைக் கண்டதும், நான் ”அண்ணா உங்கள் சாபத்தால் எனக்கு ஏற்பட்டிருக்கும் நிலைமையைப் பாருங்கள் என்று கண்களில் நீர் ததும்பக்கூறினேன்.எனது பரிதாப நிலையைக் கண்டு அவரும் அழத்தொடங்கிவிட்டார்.
வயதான அனுபவம் மிக்க சாது ஒருவர் அன்று கோயிலுக்கு வந்திருந்தார். கூக்குரல் கேட்டு அவரும் என்னருகில் ஓடி வந்தார். ரத்தத்தின்  நிறத்தையும் ரத்தம் வெளிப்பட்ட இடத்தையும் உன்னிப்பாகக் கவனித்த அவர், அச்சம். வேண்டாம் ரத்தம் வெளியேறியது நல்லதாகப்போயிற்று. நீங்கள் யோகப் பயிற்சிகள் செய்துவந்தீர்கள் அல்லவா?
யோகப் பயிற்சிகளின் விளைவாக சுழுமுனை நாடி திறந்து தலையை நோக்கி ரத்தம் வேகமாகப்போகத் தொடங்கியது. அந்த வழியாக ரத்தம் மேலே போவதற்குப் பதிலாக பாதை மாறி வாய்வழியாக வந்தது நல்லதாயிற்று.
ஹடயோகத்தின் இறுதியில் ஒருவர் ஜடசமாதி நிலையை அடைகிறார். நீங்களும் அந்த நிலையைத்தான் நெருங்கிக் கொண்டிருந்தீர்கள். ரத்தம் மட்டும் உங்கள் தலையை அடைந்திருந்தால்  ஜடசமாதிநிலையிலிருந்து நீங்கள் திரும்பியிருக்கவே முடியாது. அன்னை உங்கள் மூலமாக ஏதோ ஒரு தலையாய பணியை நிறைவேற்ற எண்ணியிருக்கிறாள். அதனால் தான் உங்களைக் காப்பாற்றி இருக்கிறாள் என்று நினைக்கிறேன் என்றார்.
அந்த சாதுவின் சொற்களைக்கேட்ட பிறகு தான் எனக்குப்போன உயிர் திரும்பி வந்தது போலிருந்தது, குருவி உட்காரப் பனம்பழம் விழுந்தது போல் ஹலதாரியின் சாபமும் தற்செயலாக ஒரு பெரிய நன்மையில் முடிந்தது.

தொடரும்..

No comments:

Post a Comment