Friday, 21 June 2019

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு-பாகம்-64

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு-பாகம்-64

ஷோடசி பூஜையுடன் குருதேவரின் சாதனை வாழ்வு நிறைவுற்றது போல் பஞ்ச தவ சாதனையுடன் அன்னையின் தவ வாழ்வும் நிறைவுற்றது. ஆன்மீகப் பேரரசின் அரசியாக,ராமகிருஷ்ண மரபின் தேவியாக, விவேகானந்தர் போன்ற ஞானியருக்கும்  குருதேவியாக, பிரபஞ்சம் தழுவிய தாய்மையின் ஒரு வடிவமாக அவரது அவதாரப்பணி ஆரம்பமாகியது. அன்னையின் வாழ்க்கையில் இந்தக் காலம் தான் அவரது குருநிலை பூரணமாகப் பொலிந்த காலமாகும். யோகினுக்கு தீட்சை அளித்ததன் மூலம் பிருந்தாவனத்திலேயே இது துவங்கியது என்றாலும் காமார்புகூரிலிருந்து கல்கத்தாவிற்குத் திரும்பிய பிறகே, அது அவருடைய வாழ்க்கையில் மிக முக்கியப் பணியாக மாறியது. இந்தக் காலத்தில் தான் யோகின்மா முதலியவர்கள் அன்னை புறவுணர்விலிருந்து விடுபட்டு, அடிக்கடி அகவுலகில் ஆழ்ந்து மூழ்குவதையும் உலகை முற்றிலும் மறந்து விடுவதையும் கண்டனர். இந்த உலகத்தில் யாரிடமும் காண முடியாத கருணையும்  அன்பும்  தாய்மையும் கலந்த ஒரு தெய்வீக ஒளி அவர் முகத்தில் வீசுவதையும் கண்டனர். இந்த நாட்களில் அன்னை பெற்ற ஒரு காட்சி அவதாரப் பணியின் முழுப்பரிமாணத்தையும் விளக்குவதாக  அமைந்தது.
அன்னை நீலாம்பர் முகர்ஜியின் வீட்டில் தங்கியிருந்தார். அன்று பௌர்ணமி இரவு. முழுநிலவின்  குளிர்க்கிரணங்கள் சுற்றுப்புறமெங்கும் படிந்து உலகை ஒரு கனவுலகம்போல் ஆக்கியதுடன், கங்கையின் சிற்றலைகளிலும் பட்டுப் பிரதிபலித்ததால், கங்கை அந்தக் கனவுலகில் ஒரு வெள்ளியாறு போல் பாய்ந்து கொண்டிருந்தது. அந்தச்சூழலில் தம்மை முற்றிலுமாக இழந்த அன்னை மெல்லச் சென்று கங்கை ப் படித்துறையின் படியில் அமர்ந்து அந்த அழகைப் பருகினார். அப்போது திடீரென குருதெவர் அங்கே தோன்றி பின்னாலிருந்து, வந்து அன்னையை இடித்துத் தள்ளிவிடுபவர் போல் சென்று சரேலென கங்கையில் இறங்கினார். இறங்கியவர் அப்படியே அதில் கரைந்துவிட்டார். அன்னை பிரமிப்புடன் அந்த இடத்தைப் பார்த்தபடியே அமர்ந்திருந்தார். மறுகணம் திடீரென நரேந்திரர் அங்கே தோன்றினார். அவர் அந்தத் தண்ணீரைக் கைகளில் அள்ளி ஜெய் ஸ்ரீராமகிருஷ்ணா! என்று சொல்லியபடி எண்ணற்ற மக்கள் மீது தெளித்தார். இந்தக்காட்சி அன்னையின் மனத்தில் ஆழ்ந்த பதிவை ஏற்படுத்தியது. இந்தக்காட்சிக்குப் பிறகு நெடுங்காலம் வரைக்கும் அவர் கங்கையைக் காணும் போதெல்லாம் அதற்குள் கால்வைப்பது குருதேவரின் திருமேனியில்  கால்வைப்பது போல்  அல்லவா என்றெண்ணி தயங்கிக் கரையிலேயே நின்று கொண்டிருப்பார்.
குருதேவர் கங்கை நீரோடு கரைந்து அதை நரேந்திரர் மக்கள் மீது தெளிக்கும் இந்தக்காட்சி குருதேவரின் உபதேசங்களையும் லட்சியங்களையும் நரேந்திரர் பரப்பப்போகிற காரியத்தின் துவக்கமாக அமைந்தது. அன்னையைப் பொறுத்த வரை குருதேவியாக அவரது பணி உலகின் கண்களுக்கு அதிகம் தெரியாமல்  அடக்கமாக நடக்கப்போகிறது என்பதும் தெரிந்தது. அன்னை எங்கும் செல்லவில்லை. அதற்கு ப் பதிலாக நாலாதிசைகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் உபதேசத்திற்கும் மந்திர தீட்சைக்கும் கூட்டம்கூட்டமாக அவர் இருக்கும் இடத்தை நாடி வந்தனர்.
இந்தக்காட்சியின் உண்மையை நிரூபிப்பதுபோல் நரேந்திரரிடமிருந்து அன்னைக்கு விரைவில் கடிதம் ஒன்று வந்தது..தாம் அமெரிக்காவில் நடக்க இருக்கின்ற சர்வமத மகா சபையில் கலந்து  கொள்ளப்போவதாகவும் அன்னையின் கருத்தை அறிய விழைவதாகவும் அதில் கண்டிருந்தது.அவர் ஏற்கனவே ஒரு தெய்வீகக் காட்சி மூலம் குருதேவரின் அருளாணையைப் பெற்றிருந்தார். அதை உறுதி செய்து கொள்வதற்காகத் தான் அன்னைக்கு எழுதினார். இதற்குப் பதில் எழுத அன்னை சிறிதும் யோசிக்கவோ, தாமதிக்கவோ இல்லை. நரேந்திரர் எடுத்து வைக்கின்ற ஒவ்வோர்  அடியிலும் குருதேவரின் திருக்கரங்களைத்தானே கண்டார் அவர். எனவே ஆசி கூறி வாழ்த்தினார்.
மேலை நாடுகளில்  வேதாந்தத்தின் வெற்றிக் கொடியை நாட்டிவிட்டு சுவாமிஜி1897  பிப்ரவரியில்  தாயகம் திரும்பினார். ஓரிரு மாதங்களை டார்ஜிலிங்கில் கழித்த அவர் ஏப்ரலில் அன்னை கல்கத்தா வந்த போது அவரைக் காணச் சென்றார். தம் மகனான அவரைச் சந்திக்கும்போது நாணத்திரையிலிருந்து அன்னை வெளிவரவில்லை. உடல் முழுவதும் போர்த்திக் கொண்டுஅறையில் நின்றிருந்தார். அவரிடம் நேராகப்பேசாமல் கோலாப்மா மூலமே பேசவும் செய்தார். அதாவது அன்னை மெல்லிய குரலில் சொல்வார் .அதை உரத்த குரலில் கோலாப்மா சுவாமிஜியிடம் தெரிவிப்பார்.
சுவாமிஜியுடன் அவரது மேலைநாட்டுச் சீடர்களும் ஓரிருவர் வந்திருந்தனர். முதலில் சுவாமிஜி சாஷ்டாங்கமாகவீழ்ந்து அன்னையைப் பணிந்தார். ஆனால் அன்னையின் திருப்பாதங்களைத் தொடவில்லை.உடன் வந்தவர்களையும் அவரது பாதங்களை த் தொடவேண்டாம் என்று தடுத்துவிட்டு சுவாமிஜி சொன்னார், யாராவது தமது பாதங்களைத்தொட்டு விட்டால் அன்னை தம் எல்லையற்ற கருணையால் அவர்களின் பாவங்களை ஏற்றுக்கொண்டு தாம் அதற்காகத் துன்புறுவார். வார்த்தைகளும் வேண்டாம்,உங்கள் இதயங்களைத் திறந்து வையுங்கள், உங்கள் பிராத்தனைகளை மௌனமாகவே அவரிடம் சமர்ப்பியுங்கள், அவரது ஆசிகளை நாடுங்கள். அது போதும், ஏனெனில் உங்கள் உள்ளத்தின் ஆழங்களை அவர் அறிவார், பின்னர் அன்னை கோலாப்மா மூலம் பேசலானார்.
அன்னை-டார்ஜிலிங்கில் உன் உடல்நிலை எவ்வாறு இருந்தது?ஏதாவது முன்னேற்றம் உண்டா?
சுவாமிஜி- ஆம், அம்மா
அன்னை- குருதேவர் எப்போதும் உன்னுடன் இருக்கிறார். உலக நன்மைக்காக நீ இன்னும் பல காரியங்களைச் செய்ய வேண்டியுள்ளது.
சுவாமிஜி-குருதேவரின் கைகளில் நான் வெறும் ஒரு  கருவியாக இருப்பதைக்காண்கிறேன். மேலை நாடுகளில் பல மகோன்னதமான நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நூற்றக்கணக்கான ஆண்களும் பெண்களும் குருதேவரின் உபதேசங்களை ஏற்றுக்கொண்டு எனது பணியில் உதவினர். இதையெல்லாம் பார்க்கும்போது என்னால் ஆச்சரியப்படாமல்  இருக்க முடியவில்லை.உங்கள் ஆசிகளுடனேயே நான் அமெரிக்கா சென்றேன். நிகழாதவற்றையும்  நிகழ்த்திக் காட்ட வல்லது உங்கள் அருள் என்பதையே எனது வெற்றி, எனக்குக் கிடைத்த மரியாதை எல்லாம்  உணர்த்தின. குருதேவர் அம்மா” என்று யாரை அழைத்தாரோ அந்த தெய்வீக சக்தியே நான் அமெரிக்காவில் தனிமையில் துவண்டபோது என்னை வழிநடத்தியது.
அன்னை-அந்த தெய்வீக சக்தியும்  குருதேவரும் வேறல்ல.உன் மூலம் குருதேவரே இந்தப்பணிகளை எல்லாம் செய்கிறார். நீ அவரது தனி அன்பிற்குரிய சீடனும் மகனும் அல்லவா? அவர் தாம் உன்னை எவ்வளவு நேசித்தார்! நீ உலகிற்கு உபதேசிப்பாய் என்பதைக்கூட அவர் ஏற்கனவே கூறியிருந்தார்.
சுவாமிஜி-குருதேவரின் செய்தியைப் பரப்புவதே என் பணி. அதற்காக நிலையான இயக்கம் ஒன்றை ஆரம்பிக்க எண்ணுகிறேன். ஆனால் நான் நினைக்கின்ற  வேகத்தில் அது நடைபெறாதபோது மனம் சஞ்சலப்படுகிறது.
சுவாமிஜி இதைக்கூறி  முடித்ததும் அன்னை நேரடியாகவே அவரிடம் சொன்னார்., கலங்காதே நீ செய்பவையும் செய்யப்போகின்றவையும் என்றென்றும் நிலைத்துநிற்கும்.இதைச் செய்வதற்காகவே நீபிறந்துள்ளாய். தெய்வீக ஞானத்தை வழங்குகின்ற குருவாக உன்னை ஆயிரக்கணக்கானோர்  போற்றுவர். உனது ஆவலை விரைவிலேயே குருதேவர் நிறைவேற்றி வைப்பார். இது உறுதி. நீ செய்ய விரும்புகின்ற பணி மிக விரைவாக நடைபெறப்போவதை நீ காண்பாய்?
அன்னையின் இந்த ஆசிகள்  சுவாமிஜியின்  கண்களை ஈரமாக்கியது.அவர் சொன்னார் அம்மா,நான்,இந்த முறை ஒரே தாவலில் கடலைத் தாண்டவில்லை. மேலை நாட்டினர்  செய்த கப்பலில் தான் சென்றேன் குருதேவரின் மகிமையைத்தான் அங்கு கண்டேன்.
-
தொடரும்...

No comments:

Post a Comment