Sunday, 23 June 2019

ஸ்ரீராமகிருஷ்ணரின் விரிவான வாழ்க்கை வரலாறு பாகம்-30

ஸ்ரீராமகிருஷ்ணரின் விரிவான வாழ்க்கை வரலாறு
பாகம்-30

வாழ்க்கையில் எதிர்பாராத வகையில் ஆன்மீகப்பெருவெள்ளம் வேகத்துடன் பாயும்போது, அதை எந்த சக்தியாலும் மறைக்கவோ அடக்கவோ முடியாது.என்று குருதேவர் கூறுவதுண்டு. அது மட்டும்அல்ல, அந்த ஆன்மீக எழுச்சியை சாதாரணமனிதனின் உடலால் தாங்க முடியாது.அவை உடலைச் சிதைத்துச் சின்னாபின்னப் படுத்தி விடுகின்றன. பல சாதகர்கள் மரணத்தையே தழுவும்படி ஆகிவிடுகிறது.
பூரண ஞானம் அல்லது பூரண பக்தியின் வேகத்தைத் தாங்க தகுதியான உடல் வேண்டும். கடவுளின் அவதாரம் என்று கருதப்படும் உயர்ந்த சாதகர்களின் உடல்கள் மட்டுமே இத்தகைய எழுச்சியைத் தாங்கும் ஆற்றல் பெற்றவையாக இருக்கின்றன. அவர்களின் உடலை சுத்த சத்வ உடல் என்று பக்தி நூல்கள் வர்யிக்கின்றன. இத்தகைய உடலுடன் பிறப்பதால் தான்  அவர்களால் ஆன்மீகப்பேருணர்வுகளின் முழுவேகத்தையும் தாங்கிக்கொள்ள முடிகிறது.
இருந்தும் சிலவேளைகளில் அவர்கள் கூட உணர்ச்சி வேகங்களால் பாதிக்கப்படுகின்றனர்.
முக்கியமாக பக்தி நெறியில் செல்பவர்களிடம் இது நிகழ்கிறது. பக்திப்பேருணர்ச்சியின் காரணமாக சைதன்யரின் உடல்மூட்டுகள் நெகிழ்ந்து போனதாகவும் உடலில் இருந்து வியர்வையைப்போல் ரத்தத்துளிகள் வெளிவந்தன என்றும் வரலாறுகளிலிருந்து அறிகிறோம். உடலின் இத்தகைய மாற்றங்கள் அவர்களுக்கு மிகுந்தவேதனையைக் கொடத்திருக்கும் என்பதில் ஐயமில்லை.
இருப்பினும் இத்தகைய மாற்றங்களினால் தான் அவர்களின் உடல்கள் அளவுகடந்த ஆன்மீக எழுச்சியினைத் தாங்கிக்கொள்ள முடிந்தது. நாட்கள் செல்லச்செல்ல இத்தகைய மாற்றங்கள் அவர்களின் உடலுக்குப் பழக்கமாகிவிடுகின்றன. அவற்றால் அவர்களின் உடல்கள் பாதிக்கப்படுவது குறைந்துவிடுகிறது.
இந்த நாட்களிலிருந்து அளவு கடந்த பக்திப்பெருக்கால் குருதேவரின் உடலில் அசாதாரணமான மாற்றங்கள் ஏற்பட்டன.
சாதனையின் ஆரம்ப நாட்களில் அவரது உடலில் ஏற்பட்ட எரிச்சலைப்பற்றி ஏற்கனவே குறிப்பிட்டோம். பல நேரங்களில் எரிச்சல் தாங்க முடியாமல் அவர் வேதனைப் பட்டிருக்கிறார்.
அதற்கான காரணத்தையும் அவர் கூறியுள்ளார்.
சந்தியாவந்தனம், பூஜை போன்றவற்றைச் செய்யும்  நேரங்களில் சாஸ்திரங்களில் கூறியுள்ளபடி. என்னுள் இருக்கும் பாவ புருஷன் எரிந்து விட்டதாக நான் நினைப்பதுண்டு. ஆனால் உண்மையிலேயே அப்படி ஒரு பாவ புருஷன் இருக்கிறான், அவனை எரித்து அழிக்க முடியும் என்பதையெல்லாம் யார் அறிந்தார்கள்.
சாதனையின் ஆரம்ப காலத்திலிருந்து உடலில் ஓர் எரிச்சல் இருந்து கொண்டிருந்தது. இது என்ன நோய் என்று நான்  குழம்பினேன். எரிச்சல் படிப்படியாக அதிகரித்து தாங்க முடியாததாகிவிட்டது.
வைத்தியர்கள் கூறிய எத்தனையோ தைலங்களைப் பூசியும் கட்டுப்படவில்லை. ஒரு நாள் பஞ்சவடியில் அமர்ந்திருந்தேன். அப்போது(தம் உடலைக்காட்டி) இதிலிருந்து சிவந்த கண்களுடன் அச்சமூட்டக்கூடிய விகாரமான தோற்றம் கொண்ட கன்னங்கரேலென்ற மனிதன் ஒருவன் வெளியே , மது அருந்தியவன் போல தள்ளாடித் தள்ளாடி நடக்க ஆரம்பித்தான்.
மறுகணமே (தன் உடலைக் காட்டி) இதிலிருந்துகாவியுடை அணிந்து திரிசூலம் தாங்கிய கம்பீரமான ஒருவர் வெளிவந்தார். இவர் முன்னவனை உக்கிரமாகத் தாக்கிக் கொன்றுவிட்டார்.
அதன் பின் என் உடலில் எரிச்சல் குறைந்துவிட்டது.
அதற்கு முன் ஆறு மாதங்கள் நான் இந்த எரிச்சலால் அவதிப்பட்டேன்.
பாவ புருஷன் அழிக்கப்பட்ட சிறிது காலத்திற்குப் பின் தம் உடலில் இத்தகைய எரிச்சல் மீண்டும் தோன்றியதாக குருதேவர் கூறினார்.
அப்போது அவர் விதிமுறைகளுக்கு உட்பட்ட சாதாரண பக்தியான வைதீ பக்தி நிலையைக் கடந்து ராகாத்மிக பக்தியின் மூலம் அன்னைக்கு, நாம் முன்னர் கண்டது போல், பூஜை செய்வதில் ஈடுபட்டிருந்தார்.
நாட்கள் செல்லச்செல்ல அவரது உடல் எரிச்சல் அதிகரித்து தலையின் மீது ஈரத்துணியைப் போட்டுக்கொண்டு தொடர்ந்து மூன்று  நான்கு மணி நேரம் கங்கை நீரினுள் நின்ற போதிலும் எரிச்சல் அடங்கவில்லை.
கனன்று கொண்டிருக்கும் தணலை மார்பின் மீது வைத்தது போன்ற வேதனையை அவர் அனுபவித்தார். அவரது இந்த வேதனை நீண்ட நாட்கள் தொடர்ந்தது.
சாதனைகள் நிறைவுற்ற சில ஆண்டுகளுக்குப் பின் அவர் பாராசாத்தைச் சேர்ந்த ராம்கனை கோஷால் என்ற வழக்கறிஞரைச் சந்திக்க நேர்ந்தது. ராம்கனை ஒரு தீவிர சக்தி உபாசகர். குருதேவரின் உடல் எரிச்சலைப் பற்றிக்கேள்விப்பட்ட அவர் இஷ்டதெய்வத்தின் மந்திரம் அடங்கிய ஒரு தாயத்தை அணிந்து கொள்வது பலனளிக்கும் என்று யோசனை கூறினார். அவ்வாறே குருதேவரும் அணிந்து கொண்டு நலம் பெற்றார்.
அதன் பின்னர் இத்தகைய உடல் எரிச்சல் ஏற்படவில்லை.
மதுர்பாபு ஜான்பஜாருக்குத் திரும்பிச் சென்று குருதேவரின் அசாதாரண  பூஜை முறையைப் பற்றி ராணியிடம் கூறினார்..
 ராணி இதனைக்கேள்விப்பட்டு மிகவும் மகிழ்ந்தார். குருதேவர் பாடும் பாடல்களைக்கேட்டு ஏற்கனவே அவர் மீது அன்பு கொண்டிருந்தார்.
கோவிந்த விக்கிரகம் உடைந்த போது குருதேவர் பரவச நிலையில் கூறிய நுண்ணறிவு மிக்க தீர்வால் ராணிக்கு அவர் மீதுள்ள மதிப்பும் அன்பும் மேலும் வளர்ந்தது. தூய உள்ளம் கொண்ட இத்தகைய அர்ச்சகர் அன்னை காளியின் அருளுக்குப் பாத்திரமாகி விட்டார் என்பதை உணர ராணிக்கு வெகுநேரமாக வில்லை.
ஆனால் ராணி மதுர்பாபு ஆகியோரின் நம்பிக்கையைக்குலைத்து விடுவது போல் ஒரு சம்பவம் சில நாட்களுள் நிகழ்ந்தது. ஒரு நாள் ராணி காளிகோயிலுக்குச் சென்றிருந்தார். அவர் கேட்டுக்கொண்டதற்கிணங்க குருதேவர் அன்னை மீது சில பாடல்களை பாடினார். ராணி அங்கேயிருந்த போதும் அவரது மனம் அன்னையிடம்ஈடுபடவில்லை. நீதிமன்றத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்த ஒரு வழக்கில் தமக்கு வெற்றி கிட்டுமா? கிட்டாதா? என்ற எண்ணமே அவர் மனத்தில் நிறைந்திருந்தது. ராணியின் மனநிலையைத் தமது தெய்வீக ஆற்றலால் உணர்ந்த குருதேவர், இங்குமா அந்த எண்ணம்? என்று கேட்டபடியே ராணியின் கன்னத்தில் அறைந்து அத்தகைய எண்ணத்தை அகற்றுமாறு பாடம் புகட்டினார்.
அன்னை காளியின் அருள் பெற்றிருந்த ராணியும் தம் தவற்றை உணர்ந்து வருந்தினார். இந்த நிகழ்ச்சியால் ராணிக்கு குருதேவரிடம் இருந்த பக்தி மேலும் அதிகரித்தது..
 அன்னை காளியின் மீது பக்தியில் ஆழ்ந்து , மிக உயர்ந்த உணர்வு நிலைகளில் திளைத்து வந்த குருதேவரின் ஆனந்தப் பரவசநிலைகள் அளவு கடந்தாயிற்று.
தொடரும்..

No comments:

Post a Comment