Saturday, 22 June 2019

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு-பாகம்-111

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு-பாகம்-111

சில நாட்கள் கழிந்தன. ராதுவின் நிலையில் எந்த மாற்றமும் இல்லை. வசதியான  கல்கத்தாவிலிருந்து பிள்ளைப்பேறு வேளையில் ராதுவை அந்தக் குக்கிராமத்திற்கு அழைத்து வந்ததற்காக அன்னையைத் திட்டினாள் சுரபாலா. அங்கே இருந்திருந்தால் என் மகள் நன்றாக இருந்திருப்பாள், இங்கே பார், எவ்வளவு பயங்கரமான வெயில், அதனால் இப்படி இருக்கிறாள். எங்கிருந்தாவது ஐஸ்கட்டி கொண்டுவந்து அவள் தலையில் கட்டு, அப்போது தான் அவள் உடம்பு சரியாகும் என்று கத்தினாள். அன்னையும் நெடுந்தொலைவிற்கு ஆளனுப்பி ஐஸ் கொண்டு வரச்சொல்லி ராதுவின் தலையில்  கட்டினார். அதைக் கண்ட காளி பைத்திக்காரியின் பேச்சைக்கேட்டு பிள்ளைத்தாய்ச்சியின் தலையில் ஐஸ்கட்டியைக் கட்டுவதற்காக அன்னையைக் கடிந்து கொண்டார். இதனால் ராதுவிற்கு ஜன்னி கூட வரக்கூடும் என்று கூறி அந்த வைத்தியத்தைக் கைவிடச் செய்தார். பிறகுஅவர் அன்னையிடம் அக்கா, இது நோயே அல்ல,ஏதோ ஆவியோ பூதமோ அவளைப்பிடித்திருக்கிறது. அதன் வேலைதான் இது. எனக்குத் தெரிந்த ஒரு மந்திரவாதி இருக்கிறான். அவனை அழைத்து வரலாம், என்று கூறினார். காளியும் பிரம்மசாரி வரதரும் சென்று அந்த மந்திரவாதியை அழைத்து வந்தனர். அன்னை அவனை வரவேற்று,ராதுவின் உடல் நிலையைப்பற்றிக் கூறி அவளைக் காப்பாற்றும்படி வேண்டினார். மந்திரவாதியும் எல்லாம் புரிந்து கொண்டவன் போல் உடனடியாக அதற்கு மருந்து சொன்னான்.மருந்தைக் கேட்டதும் அன்னைக்கு நடுக்கமே  ஏற்பட்டுவிட்டது. பிறருக்கோ மூச்சு நின்றுவிடும் போலிருந்தது அவன் கூறியதைக்கேட்டு ஒன்றும் ஆகாமல் இருந்த ஒரே ஆள் காளி தான்.அந்த மந்திரவாதி சொன்ன வைத்தியம் இது தான். ரோஹித மீனின் ஈரலை வாட்டி சுமார் இருபது கிலோ எண்ணெய் எடுக்க வேண்டும். மரச்செக்கில் ஆட்டிய நல்லெண்ணையோடு அதைச் சேர்க்க வேண்டும். இதோடு பல்வேறு வாசனைப் பொருட்களையும் காட்டில், மனிதர்களின் காலடி படாத இடத்திற்குச் சென்று அங்கேயிருந்து பல்வேறு மிருகங்களின் சாணத்தையும் வேறு சில பொருட்களையும் இட்டு நன்றாகக் கொதிக்க வைக்க வேண்டும். அதிலிருந்து கிடைக்கும் களிம்பை ராதுவின் உடம்பில் தடவ வேண்டும். அதோடு அவன் மந்திரித்துக்கொடுக்கும் தாயத்தையும் அவள் கட்டிக் கொள்ள வேண்டும். காட்டிற்குப்போய்ச் சேகரித்து வர வேண்டிய பொருட்களின் நீண்ட பட்டியலைக்கேட்டவர்கள் யாருக்கும்  இந்த  மருந்தைத் தயார் செய்யலாம் என்று சொல்வதற்கான தைரியமே வரவில்லை. ஓர் ஆவியை வரவழைத்து மருந்து கேட்டனர். அது கூறிய மருந்திலும் பயனில்லை.
 தெய்வாதீனமாக அன்னையின் கூட்டத்தில் கொஞ்சம் தெளிந்த புத்தியோடு ஒருவர் இருந்தார். அவர் அன்னையிடம் அம்மா, இது மாதிரி வைத்தியமெல்லாம் வேண்டாம். நல்ல டாக்டரை் ஒருவரை வரவழையுங்கள் என்று கூறினார். இது வரை எல்லா வினோதங்களையும் கேட்டுவிட்ட அன்னை மிகுந்த சலிப்போடு, ஒரு சாதாரண பிள்ளைப்பேற்றுக்கு  என்ன அமர்களம்.காட்டில் யாருமே இல்லாத இடத்தில் நாய் நரிகள் குட்டி போடுவதில்லையா? என்று கூறி டாக்டரை வரவழைக்க மறுத்துவிட்டார். அதற்குள் சவாமி சாரதானந்தர் அனுப்பிய டாக்டர் ஒருவரும் ஒரு தாதியும் ஆசிரமம் வந்து சேர்ந்தனர். மே மாதம் 9-ஆம் நாள் எந்த விதத் துன்பமும் இல்லாமல் ராது நல்லபடியாக  ஆண் குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்தாள். ராதுவின் சுகமான குழந்தை ப் பேற்றால் அன்னையும் பிறரும் நிம்மதி அடைந்தனர். அந்தக் குழந்தைக்கு வனவிஹாரி என்று பெயரிடப்பட்டது. அந்தக் குழந்தையையும் அன்னையே பராமரிக்க நேர்ந்தது. உலகிலிருந்து மறைய இரண்டு ஆண்டுகளே எஞ்சிய இந்த அறுபத்தைந்து வயதில் கூட அலைச்சலும் பரபரப்பும் மிக்க நாட்களை அவர் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அன்னையின் சீடர் ஒருவரது நாட்குறிப்பு அந்த நாட்களைப்பற்றி நமக்குத் தெரிவிக்கின்றன.
ராதுவின் குழந்தைக்கு அப்போது ஆறுமாதம்.பலவீனத்தின் காரணமாக ராதுவால் எழுந்து நிற்கவே முடியவில்லை. எங்குச் சென்றாலும் தரையில் தவழ்ந்தபடியே சென்றாள். அன்னைக்கு அப்போது உடல் நிலை சரியில்லை. அடிக்கடி காய்ச்சல் வந்து கொண்டிருந்தது.
ஒரு நாள் காலையில் அன்னை காய்கறி நறுக்கிக் கொண்டிருந்தார். ராது  அன்னையிடம் அபினுக்கு வந்தாள். அவள் வந்த நோக்கத்தைப் புரிந்து கொண்ட அன்னை அவளைப்பார்த்து ராதி, அதெல்லம் வேண்டிய அளவிற்கு நீ சாப்பிட்டாகிவிட்டது. நீ ஏன் எழுந்து நடக்கக் கூடாது?இனியும் உன்னைக்கவனித்துக் கொள்வது என்னால் முடியாத காரியம். உன்னைப் பார்த்துக் கொள்வதில் என் பக்தி மற்றும் எல்லாவற்றையும் விட்டுவிட்டேன். உனக்காக எவ்வளவு செலவாகிறது? இதற்கெல்லாம் நான் எங்கே போவேன்? என்றார். அன்னை இவ்வாறு சொன்னது தான் தாமதம் ராது ஆத்திரத்துடன் அங்கிருந்த கத்திரிக்காயை எடுத்து அன்னையின் மீது வீசி எறிந்தாள். அது வேகத்துடன் சென்று அன்னையின் முதுகைத்தாக்கியது. வலி தாங்க மடியாமல் அன்னை ஓவென்று அலறியவாறே முன்னால் சாய்ந்தார் அடிப்பட்ட இடம் வீங்கிவிட்டது.
வலியால் துடித்த அன்னை நிமிர்ந்தார். பரபரப்புடன் குருதேவரின்  படத்தை நோக்கி இரண்டு கைகளையும் கூப்பியவராய் பகவானே!அவளுடைய குற்றத்தை மன்னித்து விடுங்கள். அவள் சுய புத்தி இல்லாதவள். அவளை மன்னித்து விடுங்கள். என்று வேண்டியபடியே மிகுந்த வேதனையோடு தம் பாத தூசியை எடுத்து ராதுவின் தலையில் தேய்த்து ராதி  குருதேவர் இந்த உடம்பைப் பார்த்துக் கடுமையாக ஒரு வாத்தைக்கூட பேசியது இல்லை.

No comments:

Post a Comment