Saturday, 22 June 2019

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு-பாகம்-99

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு-பாகம்-99
-
லட்சியம் என்னும் வார்த்தை இருபொருளில் பயன் படுத்தப்படுகிறது.1) சென்று சேர வேண்டிய இடம்.2) அந்த இடத்தைச் சென்றடைவதற்குப் பின்பற்ற வேண்டிய வாழ்க்கை முறை. துறவியரின்  லட்சியம் குருதேவர் என்னும் போது அன்னை இந்த இரண்டையுமே குறிப்பிட்டார். குருதேவரிடம் பிராத்தனை செய்ய வேண்டும், அவரையே சார்ந்து வாழ வேண்டும்.அதே வேளையில் குருதேவர்,நான் அச்சை வார்த்து விட்டேன். நீங்கள் உங்கள் வாழ்வை அதில் வார்த்துக்கொள்ளுங்கள், என்பாரே,அப்படி  வார்த்துக் கொள்வதிலும்  துறவியரைத்தூண்டுவார். குருதேவரின் இந்த உபதேசம் பல பரிமாணங்களை உடையது. துறவியரைப் பொறுத்தவரை இந்த உபதேசத்தின் பொருளைச்சுருக்கமாகக் கூறுவதானால் காமினி-காஞ்சன தியாகம், அதாவது காமம், பணத்தில் பற்று இரண்டையும் விடுவது. துறவின் இலக்கணத்தைக் காலத்திற்கு ஏற்ப வடிவமைத்தவர் குருதேவர். அனைத்து ஆசைகளுக்கும் ஆணிவேராக இருப்பவை.இந்த இரண்டும் எனபதைச்சுட்டிக்காட்டி அவற்றை விலக்குமாறு கூறினார். அவர் அவரது அருள் சக்தியாகிய அன்னையும் இந்த இரண்டைப்பொறுத்த வரையில் துறவிப் பிள்ளைகளிடம் மிகவும் கண்டிப்பாக இருப்பார். அன்னை தமது எளிய  மொழியில் இதனை விளக்குவார்-பணம் இருக்கிறதே, அதனுடன் நீ அதிகமாகப் புழங்கினால் அதன் கவர்ச்சிக்கு அடிமைப்பட்டு விடுவாய்.பணமா,எந்தக்கணம் வேண்டுமானாலும் அதனை விட்டுவிட என்னால் முடியும். என்று நீ நினைக்கலாம். முடியாது மகனே,அத்தனை முட்டாள் தனமான எண்ணங்களுக்கு ஒரு போதும் இடம் கொடுக்காதே. என் மனத்தில் எங்கோ மூலையில் ஓர் ஓட்டை இருக்கும்.அதன் வழியாக நீ அறியாமலே அது மெதுவாக உள்ளே புகுந்து உன்னைப் படுகுழியில் ஆழ்த்திவிடும்.பணத்தின் மீதுள்ள உன்னைப்படுகுழியில் ஆழ்த்திவிடும். பணத்தின் மீதுள்ள பற்று மெள்ள மெள்ள உன்னை வேறு பலவற்றின் மீதும் ஆசை கொள்ளச் செய்து விடும்.
காமம் என்பதைப்பற்றிச் சொல்லும் போது, ஒரு துறவி துறவின் லட்சியத்தை ஒரு போதும் தாழ்த்தக்கூடாது. அவன் செல்லும் வழியில் ஒரு பெண் வடிவ பொம்மை கிடப்பதாக வைத்துக்கொள்வோம்,.அதன் முகத்தைப் பார்க்க வேண்டும். என்று அவன் தன் காலால் கூட அந்தப்பொம்மையைத் திருப்பக்கூடாது என்பார்.
காமம்,பணத்தாசை என்ற இரண்டுடன் அன்னை வலியுறுத்திச் சொல்கின்ற மற்றொன்று ஆணவம். காவி உடுப்பது பல நேரங்களில் அகங்காரத்திற்கு வழிவகுத்து விடுகிறது. இவன் என்னை வணங்கவில்லை அவன் என்னை மதிக்கவில்லை, எனக்குரிய மரியாதை தரப்படவில்லை என்றெல்லாம் துறவியரின் ஆணவம் வளர்ந்து விடுகிறது. அவற்றையெல்லாம் எண்ணிப்பார்க்கும் போது என்னைப்போல் வெள்ளை ஆடையில் இருப்பது எவ்வளவோ மேல் என்று தோன்றுகிறது  எனபார் அன்னை.
இறையனுபூதி ஒன்றையே லட்சியமாகக் கொண்டு குருதேவரிடம்  தஞ்சம் அடைந்துள்ள துறவியர் ஒருபோதும் தங்கள் குறிக்கோளை மறக்க க் கூடாது. என்பதில் மிகவும் கவனம் செலுத்தினார் அன்னை. அப்படி மறக்காமல் இருக்க வேண்டுமானால் இடையீடற்ற சாதனைகள் அவசியம். அவர்கள் ஒரு கணமும் சாதனை வாழ்விலிருந்து தவறிவிடக்கூடாது. துறவி என்பவன் வெள்ளைத்துணி போல, இல்லறத்தார் கறுப்புத்துணி போல.கறுப்புத்துணியில் கறை படிந்தால்  அது யார் கண்ணுக்கும் எளிதாகப்படுவதில்லை. ஆனால் வெள்ளைத்துணியில் ஒரு துளி மை விழுந்தால் போதும்,பளிச்சென்று எல்லோருக்கும் தெரிந்து விடும். துறவியின் வாழ்க்கை அபாயங்கள் நிறைந்தது. காமமும் பணத்தாசையும் நிறைந்தது இந்த உலகம்.  எனவே துறவி இடையீடின்றி விவேக வைராக்கியங்களைப் பழக வேண்டும்  என்பார்.
துறவியர் என்போர் சமுதாயத்தின் ஒட்டுண்ணி கள் என்ற கருத்து நீங்கி, அவர்களுக்கும் ஓர் அந்தஸ்து கிடைப்பதைச் சமய வரலாற்றில் முதன்முதலில் ராமகிருஷ்ண சங்கத்தின் தோற்றத்திற்குப் பின்னர் தான் நாம் காண்கிறோம்.அதன் முக்கியக்காரணம் சுவாமிஜி அறிமுகப்படுத்திய கர்மயோகம்.இதன் மூலம் துறவி தன் வாழ்க்கைக்கான இன்றியமையாத தேவைகளைத்தானே உழைத்துப் பெறுவதடன் மனித குலத்திற்கும் உதவியாக அமைகிறான். செய்யும் வேலையை இறைவனுக்கு அர்ப்பணித்து இறைவனுக்காகவே அதனைச்செய்யும் போது அது ஓர் ஆன்மீக சாதனையாகிறது.ஜபதப சாதனைகளில் முழுமையாக ஈடுபடமுடியாத துறவியருக்கும் வாழ்க்கை முறையாகக் கர்மயோகம் அமைகிறது. ஆனால் துறவி என்றால்  சமுதாயத்திலிருந்து விலகியே வாழ வேண்டும் என்ற நெடுங்காலக் கருத்தை,மடத்தில் சேர்ந்த பிறகும் பலரால் விட முடியவில்லை. அம்மா, நிவாரணப்பணிகள் போன்ற வேலைகள் எல்லாம் உண்மையிலேயே குருதேவரின் பணிகள் தாமா? என்று துறவிச் சீடர் ஒருவர் ஒரு முறை தமது ஐயத்தை அன்னையிடம் வெளியிட்டார். ஆம், மகனே,இவையெல்லாம்  குருதேவரின் பணிகள் தாம். இந்த வேலைகளின் மூலம் உன் உணவை நீயே உழைத்துத்தேடிக் கொள்கிறாய். வேலை செய்யாவிடில் யார் உனக்கு உணவு தருவார்கள்? வீட்டுக்கு வீடு சென்று பிச்சையேற்பது மன உளைச்சலுக்கே வழி வகுக்கும்.நல்ல உணவு இல்லையென்றால் உடல் நோயுறும்.யார் சொல்வதையும் பொருட்படுத்தாதே. நன்றாக வேலை செய், நன்றாக சாப்பிடு,நன்றாகச் சாதனைகள் செய், என்று அதற்குப் பதிலளித்தார் அன்னை.

--
தொடரும்...
-
ஸ்ரீராமகிருஷ்ணரின் ஆன்மீகக் குழுவில் இணைய 9789374109 என்ற எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலம் ரிக்கொஸ்ட் மெசேஜ் அனுப்பவும்


No comments:

Post a Comment