Sunday, 16 June 2019

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு-பாகம்-58

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு-பாகம்-58

பிற்காலத்தில் அன்னை கூறினார். தன்னிந்தனியாகக் காமார்புகூரில் துணையோ ஆதரவோ இல்லாமல் இருந்த அந்தக்காலத்தில் எனக்குப்பிள்ளைகள் இல்லை. சொந்தம் என்று உரிமையோடு அழைப்பதற்கு இந்த உலகத்தில் ஒருவரும் இல்லை. என்கதி தான் என்ன?என்று ஒருநாள் எண்ணம் எழுந்தது.உடனே குருதேவர் என் முன் தோன்றி உனக்கு ஒரு மகனா வேண்டும்.? மணிமணியாக எத்தனையோ மகன்களைக் கொடுத்திருக்கிறேனே! காலப்போக்கில் உன்னை அம்மா என்றழைக்க இன்னும் எத்தனையோ பிள்ளைகள் வருவார்கள் என்று கூறினார். இதன் பிறகு அன்னையின் காமார்புகூர் வாழ்க்கையில் சிறிது மாற்றம் ஏற்பட்டது.இத்தகைய கடினமான தவவாழ்வு தேவையில்லை என்று குருதேவரும் நினைத்திருப்பாரோ என்னவோ? அன்னை தம் நிலைமை குறித்து யாரிடமும் வாயைத் திறக்கவில்லை. என்றாலும்  கல்கத்தாவில் உள்ள குருதேவரது சீடர்களின் காதுகளுக்கு அது எட்டியது.
ஒரு முறை அன்னை பிரசன்னா மாமியிடம் இரவில் தமக்குத்துணையாக இருப்பதற்கு ஒரு வேலைக்காரியை அனுப்புமாறுக்கேட்டார். அன்னையுடன் வந்து தங்கிய இந்த வேலைக்காரி அவர் உப்புக்கும் உணவுக்கும் படுகின்ற வேதனைகளையும் மற்ற துன்பங்களையும்  வெளியே சொல்ல ஆரம்பித்தாள். இது கொஞ்ச நாட்களில் ஜெயம்பாடியில்  அன்னையின் தாயான சியாமா சுந்தரியின் காதுகளை எட்டியது. அவர் துடித்துப் போய்விட்டார். அவர் வீட்டு நிலைமையும் ஏறக்குறைய வறுமைதான். இருப்பினும் தன் சாரதை வறுமையில் வாடுவதை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. உடனே அன்னையை அழைத்து வருமாறு காளிகுமாரை அனுப்பினார். ஆனால் அப்போது அன்னை போக மறுத்து விட்டார். பின்னர் ஒரு நாள்  அன்னையே ஜெயம்பாடி  சென்றார். மகளின் நிலை கண்ட சியாமாவால் தாங்க முடியவில்லை. ஓவென்று அழுதுவிட்டார்.இனி காமார்புகூருக்கு ப் போக வேண்டாம் என்றும் ஜெயராம்பாடியிலேயே தங்கும்படியும் கூறினார். ஆனால் அன்னை அதனை ஏற்றுக் கொள்ளாமல், இப்போது நான் காமார்புகூருக்கே திரும்பிப்போகிறேன். பின்னர் எப்படியோ அவர் விட்டவழிபோல் நடக்கட்டும். என்று சொல்லிவிட்டு வந்தார். பின்னர் எப்போதாவது ஒரு முறை ஜெயராம்பாடி சென்று வருவார்.
ஆனால் சியாமா விஷயத்தை இத்துடன் விடவில்லை. கல்கத்தா புரோகிதராக வேலை செய்து கொண்டிருக்கும் தன் மகன் பிரசன்ன குமாருக்கு இது பற்றிச் சொல்லி  அனுப்பினார்.
இந்தச் செய்தியைக்கேட்ட பிரசன்ன குமார் மிகுந்த கோபத்துடன் தட்சிணேசுவரத்தில் ராம்லாலிடம்  சென்றார். குடும்பத்தலைவன் என்ற முறையில் அன்னையைக்காப்பாற்ற வேண்டிய பொறுப்பை அவனுக்கு எடுத்துக்கூறினார். தன் சகோதரியை வறுமையிலும் தனிமையிலும் வாழவிட்ட கொடுமைக்காக அவனோடு சண்டையிட்டார்.பிறகு கோலாப்மாவைச்சந்தித்து, ஸ்ரீராமகிருஷ்ணரின் சீடர்களாகிய நீங்கள் கல்கத்தாவில் இருந்து கொண்டு எப்படி அன்னையை உப்பு கூட இல்லாத வெறும் கீரையைச்சாப்பிடும் படி விட்டுவிட்டீர்கள்? என்று கூறி வருந்தினார்.
கோலாப்மா உடனடியாக அன்னையைக்கவனிக்கும் பொறுப்பை மேற்கொண்டார். கல்கத்தாவில் இருந்த குருதேவரின் துறவிச்சீடர்களிடமும் பக்தர்களிடமும் சென்று அன்னையின் நிலைமையைக்கூறி அவருக்கு எப்படியாவது உதவி செய்ய வேண்டும் என்று வேண்டினார். அதற்காகப்பணமும் திரட்டினார். ஸ்ரீராமகிருஷ்ணரின் பக்தர்கள் என்ற பெயரில் அன்னைக்கு மிகவும் உருக்கமான ஒரு கடிதம் எழுதி அவரைக் கல்கத்தாவிற்கு வருமாறு வேண்டினார்.
-
தொடரும்...
-




No comments:

Post a Comment