Saturday, 22 June 2019

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு-பாகம்-95

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு-பாகம்-95

சங்க குரு
சமுதாயக் கடமைகளை வலியுறுத்தி இந்திய வரலாற்றில் எழுந்த முதல் துறவியர் சங்கம். என்று ராமகிருஷ்ண துறவியர் சங்கத்தைப்பற்றி பின்னாளில் நிவேதிதை எழுதினாள். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இத்தகைய  ஓர் இயக்கத்தை வழிநடத்தியவராக ஒரு பெண் போற்றப்படுவது பெண்குலத்திற்கு ப் பெருமை தருகின்ற செய்தி அல்லவா! அன்னையை சங்க ஜனனியாக ஏற்கனவே பார்த்தோம். இந்த அத்தியாயத்தில் அவர் எவ்வாறு ராமகிருஷ்ண துறவியர் சங்கத்தை வழிநடத்தினார் என்பதைப்பார்ப்போம். தனிமனித வளர்ச்சியிலும் சரி, சமுதாய வளர்ச்சியிலும் சரி, இந்தச்சங்கத்தின் பங்கு மகத்தானதாக இருக்கப்போகிறது என்பதை உணர்ந்திருந்த அன்னை அதன் வளர்ச்சியில் மிகுந்த கவனம் செலுத்தினார். வரலாற்றில் அது எவ்வளவு முக்கியமான இடத்தை வகிக்கப் போகிறது என்று அன்னை கருதியிருந்தார் என்பதைக் கீழ் வரும் நிகழ்ச்சியால் அறியலாம்.
கல்கத்தாவில் பிளேக் நோய் பரவிய போது சுவாமி விவேகானந்தர் சகோதரி நிவேதிதையின் தலைமையில் நிவாரணப்பணியை ஆரம்பித்தார். ஆனால் அவர் எதிர்பார்த்த அளவிற்கு அந்தப்பணிக்கான நிதி வந்து சேரவில்லை. எனவே தேவைப்பட்டால் பேலூர் மடத்தையே விற்று நிவாரணப்பணிக்குப்  பயன்படுத்த வேண்டியது தான், என்று தமது சகோதரத்துறவியரிடம் தெரிவித்தார் அவர். இது அன்னையின் காதுகளை எட்டியது. சுவாமிஜி இந்தக்கருத்தைச் சற்று உணர்ச்சி வசப்பட்ட நேரத்தில் கூறியிருந்தார். ஒருவேளை அவருக்கு அந்த நோக்கம் உண்மையிலேயே இருந்திருக்காது.ஆனாலும் அத்தகைய எண்ணத்தையே அன்னை வரவேற்கவில்லை. இது என்ன பேச்சு! பேலூர் மடத்தை விற்கப் போகிறானா! அந்த மடம் என் பெயரில் சங்கல்பம் செய்யப்பட்டுள்ளது. குருதேவரின் பெயரில் நிறுவப்பட்டுள்ளது. இதில் விற்பனை செய்யும் உரிமை அவனுக்கு எங்கிருந்து வந்தது! ஒரு நிவாரணப்பணியிலேயே பேலூர் மடத்தின்  லட்சியங்கள் முடிந்து போக வேண்டியதுதானா? என்னென்ன லட்சியங்களுக்காக அது நிறுவப்பட்டுள்ளது தெரியுமா? குருதேவர் எண்ணற்ற கருத்துகளின் இருப்பிடமாக இருந்தார். அவை இந்த மடத்தின் மூலமே உலகெங்கும் பரவப்போகிறது.யுகயுகமாக இவ்வாறே இது நடைபெறப்போகிறது என்றாராம் அவர். ராமகிருஷ்ண சங்கத்தின் இத்தகைய முக்கியத்துவத்தை உணர்ந்திருந்தால் அதன் வளர்ச்சியில் தீவிர ஆர்வம் காட்டினார் அன்னை. தகுதி உடைய இளைஞர்களுக்கு எந்த எதிர்ப்பையும் பற்றிக் கவலைப்படாமல் சன்னியாச தீட்சை அளித்து, அவர்களை ராமகிருஷ்ண துறவியர் பரம்பரையில் சேர்த்தார்.
மடத்தில் இளைஞர்கள் சேர்வதற்கு பெற்றோரின் எதிர்ப்பும் ஒரு பக்கம் இருக்கவே செய்தது. ஆனால் அரசாங்கமும் சமுதாயமும் தந்த எதிர்ப்பு கவலையுறத்தக்கதாக இருந்தது. அந்த நாட்களில் நாடெங்கிலும் தேசிய விடுதலை இயக்கங்கள் எழுந்து இளைஞர்கள் அவற்றில் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர். அவர்களுள் சிலர் விவேகானந்தரின் வீர முழக்கத்தால் கவரப்பட்டு ராமகிருஷ்ண மடத்தில் சேர்ந்தார்கள். ஆன்மீக லட்சியத்தை ஏற்றுக்கொண்டு மடத்தில் சேர்ந்த பின்னர் அவர்கள் தங்கள் பழைய தொடர்புகளை விலக்கிவிட்டனர். ஆனாலும் ஆங்கிலேய அரசாங்கம் அவர்களைச் சந்தேகக் கண்ணுடன்  பார்த்தது.இதனால் பேலூர் மடம், கோயால்பாரா ஆசிரமம், ஜெயராம் பாடியில் அன்னையின் வீடு எல்லாம் தீவிரமான போலீஸ் கண்காணிப்புக்கு உள்ளாயின.அங்கு வருவோர் போவோரின்  பெயர்கள் பதிவு செய்யப்பட்டன. ஆனால் அன்னை எதையும் பொருட்படுத்தவில்லை, தம்மை நாடிவந்த அனைவருக்கும் அடைக்கலம் கொடுத்தார். தீட்சை அளித்தார். சில வேளை  களில்  மிகுந்த சிரமத்தின் பேரில்  அவர்களை ஓர் இரவு மட்டும் ஜெயராம்பாடியில் தங்க வைத்து,மறுநாள் தீட்சை அளித்து யாருக்கும் தெரியாமல் பிற இடங்களுக்கு அனுப்பி வைப்பார். ஒரு முறை போலீஸ் தீவிரமாகத் தேடிய ஒருவர் அன்னையைத் தஞ்சமடைந்தார். அவரை அங்கேதங்க வைக்க யாருக்கும் சம்மதம் இல்லை. அன்னையோ மிகவும் பிடிவாதமாக நடக்க வேண்டியது குருதேவரின் திருவுளம் போல் நடக்கத்தான் செய்யும்.என் மகன் என்னோடு தங்குவான் என்று கூறிவிட்டார்.மற்றவர்கள் உண்மையை விளக்கி, போலீஸினால் வரக்கூடிய சிரமங்களை எடுத்துக்கூறி அவரை அங்கே தங்க வைக்க வேண்டாம், என்று தடுத்த போது அவர் மீது கொண்ட கருணையின் காரணமாக அன்னையின் கண்களில் நீர் பெருகி விட்டது. எனவே அதன் பின் யாரும் எதுவும் சொல்லவில்லை.பின்னர் அந்த பக்தர் வந்து,தானும் தன் நண்பரும் போலீசால் பட்ட கஷ்டங்களைக்கூறிய போது அன்னை தேம்பி  த்தேம்பி அழவே தொடங்கிவிட்டார்.ராமகிருஷ்ணசங்கத்தின் ஆரம்பக்கால துறவியருள் பலர் அன்னையின் இத்தகைய  கருணைப் பெருக்கினால் மட்டுமே மடத்தில் சேர முடிந்தது.
--
தொடரும்...
-
ஸ்ரீராமகிருஷ்ணரின் ஆன்மீகக் குழுவில் இணைய 9789374109 என்ற எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலம் ரிக்கொஸ்ட் மெசேஜ் அனுப்பவும்


No comments:

Post a Comment