Saturday, 22 June 2019

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு-பாகம்-119

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு-பாகம்-119

இந்தக் கடுமையான நோயிலும் அன்னை எந்தப்பொருளையும் குருதேவருக்குப் படைத்தபிறகே உட்கொண்டார். முடியாத வேளைகளில் மனத்தாலேனும் நிவேதித்த பின்னர் உண்டார். ஒவ்வொரு வினாடியும் தம்மை குருதேவரிடம் அர்ப்பணித்தார். எல்லாம்  அவர் விருப்பம். எல்லாம் அவர் செயல். அவரது விருப்பம் மட்டுமே நிறைவேறும் என்று கூறியபடியே இருந்தார். யாராவது அம்மா தங்கள் நோய் எப்போது குணமாகும்? என்று கேட்டால், குருதேவர் எப்போது நினைக்கிறாரோ அப்போது குணமாகும். ஆனால் குருதேவரின் திருவுள்ளம் வேறு என்று தோன்றுகிறது. உங்கள் நன்மைக்காக இந்த உடல் குணமடைய வேண்டும் என்று நான் அவரிடம் பிராத்தனை செய்யவில்லை என்றா நினைக்கிறீர்கள்? முன்பெல்லாம்  என் உடல்நலத்திற்காக வேண்டினால் உடனே அவர் என் என்முன் தோன்றுவார். ஆனால் இப்போது அவர் வருவதில்லை. இந்தவுடல் இன்னும் நிலைக்க வேண்டும் என்பது அவரது விருப்பம் அல்ல, என்றே தோன்றுகிறது.  அதனால் என்ன? சரத்தை நான் விட்டுச் செல்கிறேன் என்றார்.
ஜீலை மாதம் தொடங்கியபோது அன்னையின் உடல்நிலை வேகமாகச் சீர்குலையலாயிற்று. ரத்தக்குறைவின் காரணமாக கால்கள் பெரிதாக வீங்கின. எழுந்து உட்காரவும் அவரால் முடியவில்லை.நிவேதிதை பள்ளியின் மாணவியர் அன்னைக்கு விசிறுவது போன்ற பணிகளை ஒருவர்பின் ஒருவராக செய்து வந்தனர். ஜீலை பத்தாம் தேதி வாக்கில் ஒருநாள் அன்னை திடீரென சாரதானந்தரை அழைத்தார். அவர் வந்து அன்னைக்கு அருகே முழங்காலிட்டு அமர்ந்தார். அன்னை தமது இடது கையால் அவரது வலது கையைப் பற்றிக்கொண்டு மகனே, கோலாப், யோகின் எல்லோரும் உள்ளனர். அனைவரையும் கவனித்துக்கொள் என்றார். பின்னர் தமது கையை விலக்கிக்கொண்டு விட்டார். சுவாமிகள் கனத்த இதயத்துடன் அன்னையைப் பார்த்தவாறே பின்புறமாக நடந்து அறையை விட்டு வெளியேறினார்.
சுவாமி ஹரிபிரேமானந்தர் ஜெயராம்பாடியிலிருந்து வந்திருந்தார். புதிதாக வெட்டப்பட்ட கிணற்றிலிருந்து கொண்டு வந்த நீரில் ஓரிரு துளிகளை அன்னை பருகுமாறு செய்தார். பின்னர் அன்னையிடம் அம்மா, கிசோரி மஹராஜ் உங்கள் அறைக்கு சிமெண்ட் போட்டிருக்கிறார். இனி அங்கே வரும்போது உங்களுக்குச் சிரமமே இருக்காது என்றார். அதற்கு அன்னை ஏன் சிமென்ட் போட வேண்டும்? மண்தரை தான் நல்லது ஆனால் இவற்றால் என்ன பயன்? நான் மீண்டும் அங்கே போவேன் என்றா கிசோரி நினைக்கிறான்? நான் இனி அங்கே போகப்போவதில்லை? என்றார்.
 தம் மனத்தை உலகிலிருந்து பிரித்து, உற்றார் உறவினரிலிருந்து பிரித்து , ராதுவிடமிருந்தும் பிரித்துவிட்ட அன்னை இப்போது உடம்பிலிருந்தும் பிரித்து விடுவதற்கான வேளை நெருங்கியது. பெரிய மகான்களின் வாழ்க்கையில் இது ஒரு முக்கியமான கட்டமாகும். இறைவனின் ஆணையினாலோ கருணைவசப்பட்டோ அவர்கள் மனித குலத்தின் நன்மைக்கான பணிகளில் ஈடுபடுகிறார்கள். இதற்காக ஆன்ம சுதந்திரத்தைத் தற்காலிகமாக  அவர்கள் ஒதுக்கி வைக்க வேண்டியிருக்கிறது. தங்கள் பணி நிறைவுற்றதும் உடம்பை உதறிவிட்டு, எல்லையற்ற ஆனந்த வெளியில் பறந்து, மரணமிலாப் பெருநிலையில் ஆன்ம சுதந்திரத்தை அனுபவிக்கிறார்கள். அன்னையும் அதற்கான உறுதிபூண்டு விட்டார்.
ஜீலை 15-ஆம் தேதி வாக்கில் ஒருநாள்  பக்தையான அன்னபூர்ணாவின் தாய் வந்திருந்தார். யாரும் அப்போது அன்னையின் அறைக்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை.ஆதலால் அவர் கதவருகில் உட்கார்ந்து கண்களில் நீர் வழிய அன்னையைப் பார்த்துக் கொண்டிருந்தார். அன்னையின் பார்வை அன்னபூர்ணாவின் தாய் மீது விழுந்தது. அவரை அருகே வரும்படி தலையசைத்தார். உள்ளே வந்த அன்னபூர்ணாவின் தாய், அன்னையின் காலடியில் வீழ்ந்து, அம்மா எங்கள் கதி என்ன? என்று கூறித் தேம்பித்தேம்பி அழுதார். அன்னை மெல்லிய குரலில் ”குருதேவரை நீ பார்த்திருக்கிறாய் பிறகு ஏன் பயப்படுகிறாய் என்றார். சிறிது நேரம் கழிந்தது.
மீண்டும் அவளிடம் ”ஒன்று சொல்கிறேன் மகளே, உனக்கு அமைதி வேண்டுமானால் பிறர் குற்றங்களைப் பார்க்காதே.அதற்குப் பதிலாக உன் குறைகளைப்பார்! உலகம் முழுவதையுமே உனது சொந்தமாக்கக் கற்றுக்கொள்! யாரும் அன்னியர் அல்ல மகளே! உலகம் முழுவதுமே உன் சொந்தம் தான்! என்றார். அன்னைக்கு மூச்சு வாங்கியது. இன்னும் சிறிது நேரம் கழிந்தது.மெல்லிய குரலில் மீண்டும் கூறினார், மகளே யாரெல்லாம் வந்திருக்கிறார்களோ, யாரெல்லாம் வர வில்லையோ, இனி யாரெல்லாம் வரப்போகிறார்களோ, அந்தப் பிள்ளைகளுக்கெல்லாம் என் அன்பைத்தெரிவித்துவிடு.என் நல்லாசிகள் அவர்களுக்கு எப்போதும் உண்டு என்று கூறினார். கருணைக்கடலான அன்னையின் திருவாயிலிருந்து வந்த கடைசி அன்பு மொழிகள் இவை. செய்திக்குச்செய்தி! அன்புக்கு அன்பு!ஆசிக்கு ஆசி! அனைத்திலும் அன்னை அன்னைதான். இறுதியிலும்  இத்தகையதோர் அற்புத உபதேசத்தையும் ஆசியையும் செய்தியையும் நல்கிவிட்டார்.
கடைசி மூன்று நாட்களில் நடைமுறையில் பேச்சு என்று எதுவுமே இல்லை.அளவற்ற உடல் தளர்ச்சியாலும், மனம் எப்போதும்   இடையீடு இல்லாமல் மிக உயர்ந்தபிரம்ம நிலையில் மூழ்கியிருந்ததாலும் பேசுவது என்பது அன்னையால் முடியக்கூடிய காரியமாக இல்லை. கண்களை  மூடியவாறே படுத்திருந்தார். யாராவது அவரிடம் பேச விரும்பினாலும் அன்னை அதனை வரவேற்கவில்லை. ஒரு முறை சுவாமி சாரதானந்தரை அழைத்து ஏதோ சொல்ல முயன்றார். ஆனால் ஒன்றிரண்டு வார்த்தைகளுக்கு மேல் பேச முடியவில்லை.
ஜீலை 19-ஆம் நாள் அன்னைக்கு மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டது. மிகுந்த சிரமத்தின்  பேரிலேயே மூச்சுவிட முடிந்தது. முதல் மாடியில் தங்கியிருந்தார் அன்னை. இழுத்து அவர் விட்ட மூச்சு மொட்டைமாடி கீழ்ப்பகுதி என்று கட்டிடம் முழுவதுமே கேட்டது. அவரது கண்கள் பிதுங்கி வெளியே வந்து விடுவது போல் தோன்றின. பக்தர்கள் சீடர்கள் என்று அனைவரின் நெஞ்சங்களையும் பிழிந்த காட்சி அது. சுதீராவும் சரளாவும் அருகிலேயே இருந்தனர். ஒவ்வொரு முறை மூச்சு விடும்போதும் சரளா கங்கைநீரைத் துளித்துளியாக அன்னையின் திருவாயில் விட்டுக்கொண்டிருந்தாள்.இவ்வாறு ஒரு நாள் கழிந்தது.
ஜீலை 20 மாலை வேளையாகிய போது மூச்சு மென்மையாகத் தொடங்கியது.மென்மை மேலும் மென்மையாகி இன்னும் மெலிதாகி இரவு 1.30 மணிக்கு எல்லாம் அடங்கியது. அன்னையின் உயிர் பிரிந்தபின் அவரது திருவுடலில் ஆச்சரியப்படத்தக்க சில மாறுதல்கள் ஏற்பட்டன. அவரது உடலின் சுருக்கங்கள் நீங்கி புதுப்பொலிவு வந்தது. கண்கள் சாந்தமாகி ஒரு தெய்வீக ஒளியும் அதிலிருந்து வீசலாயிற்று.
மறுநாள் காலையில் அவரது திருவுடல் நான்கு மைல்களுக்கு அப்பால் உள்ள பேலூர் மடத்திற்கு ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டது. கங்கையில் நீராட்டப்பட்டு மலரும் சந்தனமும் புத்தாடைகளும் அணிவிக்கப்பட்டன.சீடர்களின் தோள்கள், நீராட்டி அலங்கரிக்கப்பட்ட அன்னையின் பொன்னுடலைச்சுமந்து சென்றன. சுவாமி சிவானந்தரும் சுவாமி சாரதானந்தரும் மற்றும் எண்ணற்ற பக்தர்களும் சீடர்களும் ராமநாம சங்கீர்த்தனம் பாடியவாறே உடன் நடந்து சென்றனர். இவர்களுடன் கல்கத்தா நகரப் பிரமுகர்களும் சாதாரணபொதுமக்களும் பெரும் கூட்டமாக உடன்  நடந்தனர். ஆரம்பத்தில் சில நூறாக இருந்த கூட்டம் வரவர ஆயிரம் ஆயிரமாகப்பெருகியது. பேலூர் மடத்தில் கங்கைக் கரையில் சந்தனக்கட்டைகளால் ஆகிய சிதைமீது அன்னையின் திருவுடல் வைக்கப்பட்டு தீமூட்டப்பட்டது.அப்போது பிற்பகல் மணி இரண்டிற்கு மேல் இருக்கும்.
இதற்குள் வானம், இருண்டு கங்கையாற்றின் மறுகரையில் மேகங்கள் திரண்டு கறுத்தது. தூறலும் போட ஆரம்பித்தது. மழையால் இடையூறு நேருமோ என்று பக்தர்கள் அஞ்சினர். ஆனால் அன்னையின் திருவுடல் எரிந்து கொண்டிருந்தது வரை மழை தொலைவிலேயே பெய்து கொண்டிருந்தது. அந்தப்பகுதிக்கு வரவே இல்லை. இருள் கவியத் துவங்கியது. சந்தனக் கட்டைகள் எரிந்து அடங்கின. சாரதானந்தர் கமண்டலம் நிறைய நீரை எடுத்து வந்து சாம்பல் மீது முதன்முதலில் தெளித்தார். பின்னர் அங்கேயும் மழை பெய்ய, மனித முயற்சி இன்றியே அன்னையின் சிதைக்கு நீர் வார்க்கப்பட்டது. ஆம், பக்தர்களும் சீடர்களும் மட்டுமல்ல, இயற்கையும் தன் தலைவிக்கு அஞ்சலி செய்வது போல் மேகம் பொழிந்த நீராலே நெருப்பு அணைந்தது.
அன்னையின் பூவுடல் மறைந்துவிட்டது. அன்னை? அவர் எப்படி மறைய முடியும்? மகனே, ஓய்வு என்பதே கிடையாது. என் பிள்ளைகள் அனைவருக்காகவும் நான் உழைத்துக்கொண்டே இருப்பேன். என் உடல் மறைந்த பின்னும் அவர்களின் நலனை நான் கவனித்தேயாக வேண்டும். என்ற அன்பு மொழிகளை உதிர்த்தவர் அல்லவா அவர், அவர் எங்கு போக முடியும்? ஆனால் பக்தர்கள்? இந்த வரலாற்றைத் தொடர்ந்து வருகின்ற நம் இதயமே கனக்கிறது என்றால் அன்பு, அன்பு, அன்பு என்று அல்லும் பகலும் அனவரதமும் அன்பு மழை பொழிந்த அவரது பாச மழையில் நனைந்திருந்த அவர்களால் அவர் பிரிவை எப்படித்தாங்க முடியும்? அவ்வாறு கலங்கி நின்ற ஒருவரிடம் சுபோதானந்தர் கூறினார்.
மகனே, ஏன் கலங்குகிறாய்,? அன்னை இதுவரை ஓர் உடம்பில் மட்டுமே வாழ்ந்தார். இப்போது எங்கும் நிறைந்து விட்டார். ஏன் உங்கள் ஒவ்வொருவரின் இதயங்களிலும் நிறைந்துள்ளார். இனி நீங்கள் அன்னையைக்காண எங்கும் போகவேண்டாம்.
இருந்த இடத்தில் இருந்தபடியே உள்ளம் உருகி அழைத்தால் அவர் உங்கள் முன்வருவார், எவ்வளவு உண்மையான வார்த்தைகள்! எத்தனையோ அன்பர்களின் வாழ்வில் இந்த வார்த்தைகளை நிரூபித்தவாறு இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறாரே அன்னை!
--
End...

No comments:

Post a Comment