அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு-பாகம்-39

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு-பாகம்-39

ஒரு சமயம் குருதேவரின் பக்தர்கள்  யாருக்குமே அறிமுகமில்லாத ஒரு புதிய பெண், குருதேவரைக் காண அடிக்கடி வரத் தொடங்கினாள். பார்க்க பைத்தியம் போல இருந்தாள். ஆனால் பிறகுதான், அவள் மதுரபாவனையைக் கடைபிடிக்கின்ற பக்தை என்பது தெரியவந்தது.
ஒரு நாள் அவள் குருதேவர் தனித்து இருந்த போது அவரிடம் சென்று தன் நிலையைக் கூறி அவரையே தன் தலைவனாக ஏற்க அனுமதி வேண்டும் என்று கேட்டாள். அவ்வளவு தான், மனைவி உட்பட பெண்கள் அனைவரையும் தாயாக நினைத்து வணங்குகின்ற குருதேவருக்கு அந்தப் பெண்ணின் பேச்சு அளவற்ற கோபத்தை உண்டாக்கியது. எனவே உரத்த குரலில் அவளை ஏச ஆரம்பித்தார்.
குருதேவரின் இந்தக் கூச்சல் நகபத்தில் இருந்த அன்னையின் காதில் விழுந்தது.தன் மகள் தன்முன்னாலேயே கேவலமாகப் பேசப்பட்டால் ஒரு தாய் எத்தகைய வேதனை அடைவாளோ அத்தகைய கடும் வேதனை அன்னையின் முகத்தில் தெரிந்தது. அருகிலிருந்த கோலாப்மாவிடம் கேட்டாயா? அவர் திட்டுகிறார். அவரால் பொறுத்துக் கொள்ள முடியாத படி அவள் ஏதாவது சொல்லியிருந்தாலும் இப்படி ஏசுவதை விட்டுவிட்டு அவளை நேராக இங்கே என்னிடம் அனுப்பி, இருக்கலாமே. என்று கூறியபடியே கோலாப்மாவை அனுப்பி, அந்தப் பெண்ணை அழைத்து வரும்படிச் சொன்னார். அவள் வந்ததும் அன்புடன் மகளே, அவர் உன்னைப் பார்க்க எரிச்சலடைந்து திட்டினால் அங்கே நிற்காதே, இங்கே என்னிடம் வந்துவிடு, என்று கூறினார்.
 மேற்கண்ட இரு நிகழ்ச்சிகளிலும் அன்னையின் தாய்மை வெளிப்பாட்டுடன், ஓர் இல்லத்தலைவியிடம்  இருக்க வேண்டிய இல்லற வாழ்விற்கு வேண்டிய ஒரு முக்கியப் பண்பைக் காண்கிறோம். அது தான் கொள்கையில் உறுதி,அதே வேளையில் அதை வெளிப்படுத்துவதில் மென்மை.
குருதேவர் அன்னைக்குக் கணவர் மட்டுமல்ல, குருவும் ஆனவர். ஆனாலும் அவர் சொன்னார் என்பதற்காக, எதையும் அப்படியே அன்னை ஏற்றுக் கொள்ளவில்லை.அதே வேளையில் வரிந்துக் கட்டிக் கொண்டு, தான் ஏன் அப்படி செய்தேன் என்பதை விளக்கவும் முயலவில்லை.ஆனால் மென்மை என்னும் உபகரணத்தின் மூலமே தம் நிலையை குருதேவருக்குப் புரிய வைத்துவிட்டார்.
இந்த நிகழ்ச்சிகளில் அன்னையிடம் தாய்மையின் வெளிப்பாட்டைக் கண்டாலும் அடுத்து நாம் காணப்போகும் நிகழ்ச்சியில்தான் அதன் முழுப் பரிமாணமும் பொங்கிப் பொலிகிறது.
ஒரு நாள் அன்னை உணவை எடுத்துக்கொண்டு நகபத்திலிருந்து குருதேவரின் அறைக்கு வந்து கொண்டிருந்தார். வழியில் திடீரென்று ஒரு பெண் அவர் எதிரே வந்து ”அம்மா” குருதேவருக்கு உணவு எடுத்துச்செல்கின்ற பேற்றை இன்று ஒரு நாள் மட்டுமாவது எனக்குத்தாருங்கள் என்று ஆவலோடு கேட்டாள். அம்மா என்ற சொல்லைக்கேட்டதும் அன்னையின் மனம் இளகிவிட்டது. வேறு எதைப்பற்றியும் யோசிக்காமல் உணவுத்தட்டை அவளிடம் கொடுத்துத் தம்முடன் அழைத்துச்சென்றார். அந்தப்பெண் குருதேவரின் அறையில் உணவுத்தட்டை வைத்துவிட்டு வெளியில் சென்றதும், குருதேவருக்கு உணவு பரிமாறிவிட்டு அவருக்கு விசிறியபடி அருகில் நின்றார்.
வேறு ஒரு பெண் உணவு கொண்டு வந்து வைத்ததைக் கவனித்த குருதேவர் அன்னையிடம் அந்தப்பெண் ஒழுக்கம் குலைந்தவள் என்பது உனக்குத்தெரியாதா? அவள் கைபட்ட உணவை நான் எப்படி உண்பேன்? என்று கேட்டார். அதற்கு அன்னை ” உங்கள் நிலை எனக்குத் தெரியும், ஆனால் என்னை செய்வேன், தயவு செய்து இன்று மட்டும் எனக்காக எப்படியாவது சாப்பிட்டு விடுங்கள், என்று கெஞ்சிக் கேட்டார்.
அதற்து குருதேவர், சரி. ஆனால் இனிமேல் எனக்குக் கொண்டுவரும் உணவை இது போல் கண்டவர்களிடம் கொடுப்பதில்லை” என்று நீ எனக்கு உறுதி மொழி தர வேண்டும். என்றார்.குருதேவர் இப்படிச் சொன்னது தான் தாமதம், அன்னை தமது கையிலிருந்த விசிறியைக் கீழே வைத்துவிட்டு இரண்டு கைகளையும் கூப்பியபடி, என்னை மன்னித்து விடுங்கள்,அந்த ஒன்று மட்டும் என்னால் செய்ய முடியாது. கூடியவரையில் யாரிடமும் கொடுக்காமல் நானே கொண்டு வர முயற்சி செய்கிறேன். என்னை” அம்மா” என்று அழைத்து யாராவது எதையாவது கேட்டால், அதனை மறுக்க என்னால் இயலாது. அது மட்டுமின்றி நீங்கள் எனக்கு மட்டும் குரு என்பது அல்லவே. எல்லோருக்கும் குருதேவர் அல்லவா? என்று கேட்டார். அன்னையின் இந்தப் பதிலில் பொலிந்த தாய்மைப் பெருக்கை குருதேவர் கவனிக்கத் தவறவில்லை. ஒரு வேளை இதைத்தான் அவர் எதிர் பார்த்திருக்கவும் வேண்டும். பிள்ளை கெட்டவனாக இருக்கலாம். ஆனால் கெட்ட அன்னை என்று ஒருத்தி இருக்கவே முடியாது அல்லவா! நல்லவன்-கெட்டவன் என்று பாகுபடுத்தாது இருவரையும் ஒரு போல பிள்ளையாகக் காண்கின்ற நிலை என்பது தாய்மையின் உன்னத நிலை அல்லவா?
அன்னையின் இந்தத் தாயன்பின் வெளிப்பாட்டிலிருந்து அன்பின் ஒரு முக்கியப்பரிமாணத்தைின் செயல்முறை விளக்கத்தை நாம் காண முடிகிறது.
-
தொடரும்...
-


Comments

Popular posts from this blog

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு

விவேகானந்தரின் மரணத்தில் உள்ள ரகசியம் என்ன?

Gemini AI and I Scientific Research Papers-6