Sunday, 23 June 2019

ஸ்ரீராமகிருஷ்ணரின் விரிவான வாழ்க்கை வரலாறு பாகம்-25

ஸ்ரீராமகிருஷ்ணரின் விரிவான வாழ்க்கை வரலாறு
பாகம்-25

உயர் குடிப்பிறப்பு என்ற கர்வத்திலிருந்து விடுபடுவதற்காக அசுத்தமான இடங்கள் என்று மற்றவர்களால் ஒதுக்கப்பட்ட இடங்களை குருதேவர் தம் கைகளாலேயே சுத்தம் செய்தார்.
மண்ணையும் பொன்னையும் ஒன்றாகக் கருதாவிடில் அதாவது பொன் போன்ற விலை உயர்ந்த பொருட்கள் கூட மண்ணுக்குச் சமமானவையே என்ற அறிவு தோன்றாவிட்டால் உலகியல் இன்ப நாட்டத்திலிருந்து விடுபடுவது கடினம். யோக சாதனைகளில் வெற்றி பெற முடியாது.
எனவே குருதேவர் ஒரு கையில் சில நாணயங்களையும், மற்றொரு கையில் மண்ணையும்  வைத்துக்கொண்டு ”பணமே மண், மண்ணே  பணம்” என்று சொல்லியபடியே அவற்றை கங்கையில் எறிந்தார்.
எல்லா உயிர்களிலும் ஒரே இறைவன் தான் உறைகிறான் என்ற தம் அறிவை உறுதிப்படுத்துவதற்காக காளிகோயிலில் ஏழைகள் சாப்பிட்ட எச்சில் இலைகளில் இருந்து உணவை எடுத்துபிரசாதமாக உண்டதுடன், தலையிலும் வைத்துக்கொண்டார். பின்னர் அந்த எச்சில் இலைகளையும் அப்புறப் படுத்தி கங்கைக் கரையில் போட்டுவிட்டு, சாப்பிட்ட இடத்தையும் தம் கைகளாலேயே பெருக்கி சுத்தம் செய்து கழுவிவிட்டார். அழியக்கூடிய தம் உடலால் ஏதோ ஒரு சிறு தெய்வப்பணி  செய்ய முடிந்ததே என்றெண்ணி மகிழ்ந்தார்.
இது போன்ற வேறு பல நிகழ்ச்சிகளையும்  இங்குக்குறிப்பிடலாம்.
ஆன்மீக வாழ்க்கைக்குத்தடையாக இருக்கும் பொருட்களை மனத்தளவில் துறப்பதுடன் நின்றுவிடாமல் உடலும் புலன்களும் கூட அவற்றிலிருந்து விலகியிருக்கும்படிச் செய்தார் குருதேவர். அவ்வாறு செய்ததன் மூலம் உடலும் புலன்களும் தங்கள் இயல்பான வழிகளில் செல்லாமல் தடுத்தார்.
இதனால் அவரது மனத்தில் ஏற்பட்டிருந்த பழைய சம்ஸ்காரங்கள்  முற்றிலுமாக அழிந்து புதிய சம்ஸ்காரங்கள் உண்டாயின. அவற்றிற்கு எதிராக மனம் செயல்பட முடியாத அளவுக்கு அவை உறுதியாக இருந்தன.
புதிய சம்ஸ்காரங்களை உடலும் புலன்களும் சிறிதளவாவது கடைபிடிக்கும் படிச் செய்யாத வரையில், பழைய சம்ஸ்காரங்கள் அழிக்கப்பட்டுவிட்டன என்பதை ஒப்புக்கொள்ள மறுத்தார் அவர்.
பழைய நினைவுகளைக் களைய வேண்டும் என்பதையே விரும்பாத நாம், குருதேவரின் இத்தகைய செயல்களுக்கு அவசியம் இல்லையென்று நினைக்கிறோம். இதைப்பற்றிச் சிலர் கீழ்கண்ட வாறு கூறியதுண்டு.
அசுத்தமான இடங்களைச் சுத்தம் செய்வதும், நாணயங்களையும் மண்ணையும் ஒன்றாகக் கருதி கங்கையில் எறிந்து பணமே மண்ணே பணம்  என்று சொல்வதும் போன்ற செயல்கள் தேவையற்றவை.
அத்தகைய அசாதாரணமான செயல்களால் பெற்ற மனக்கட்டுப்பாட்டை வேறு எளிய வழிகளில் சுலபமாகப் பெற்றிருக்கலாம். இதற்கு எங்கள் பதில்,
இப்படிச் சொல்வது சரியாக இருப்பது போல் தோன்றுகிறது.ஆனால் எத்தனை பேர் இவ்வாறு வெற்றி பெற்றிருக்கிறார்கள்.
உலகியல் இன்பங்களை உடலளவில் விலக்காமல் மனத்தளவில் மட்டும் துறந்து விட்டு, நீங்கள் கூறியது போன்ற எளிய வழிகளைப் பின்பற்றி. இதுவரை எத்தனைபேரால் மனத்தைக் கடவுள் பால்  செலுத்த முடிந்திருக்கிறது?
இது முடியாத ஒன்று.
மனம் ஓர் எண்ணத்தைப் பற்றிக்கொண்டு ஒரு புறம் செல்ல, உடல் அதற்கு மாறாகச் செயல்பட்டு வேறு திசையில் செல்லுமானால் எந்த அரிய காரியத்தைச் சாதிக்க முடியும்? கடவுள் காட்சி பற்றி நினைத்துப் பார்க்கவே முடியாதே. புலனின்பங்களை நுகர வேண்டும் என்று ஏங்கி நிற்கும் மனிதன் இந்தக்கோட்பாட்டின் உண்மையை உணர்வதில்லை.
உடலாலும் புலன்களாலும் உலகியல் பொருட்களைத்துறப்பது நல்லது என்று அவன் அறிந்தாலும் பழைய சம்ஸ்காரங்களின் பிடியில் சிக்கியிருக்கின்ற அவனால் விட முடிவதில்லை.
உடல் என்ன செய்தாலும் என் மனம் தூயவற்றைத்தானே நாடுகிறது. என்று எண்ணியபடியே அவன் தன் வழியில் தொடர்ந்து செல்கிறான்.
யோகத்தையும் போகத்தையும் ஒரே சமயத்தில் பெற விரும்பி அவன் தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்கிறான். இருளும் ஒளியும் போல இவைஇரண்டும் ஒரு போதும் சேர்ந்திருக்க முடியாது.
கடவுளையும், உலகத்தையும், காசையும் காமத்தையும் ஒரே நேரத்தில் வழிபடக்கூடிய சுலபமான வழியை ஆன்மீக உலகத்தில் இது வரை யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை.
எவற்றையெல்லாம் துறக்கவேண்டுமோ அவற்றை மனம், வாக்கு, உடல் ஆகிய மூன்றாலும் துறக்க வேண்டும். எவற்றையெல்லாம் ஏற்றுக்கொள்ள வேண்டுமோ அவற்றையும் இவ்வாறே மனம் , வாக்கு உடல் ஆகிய மூன்றாலும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.அப்போது தான் சாதகன் கடவுளை உணர்தற்குரிய தகுதியைப்பெறுகிறான்.

மூத்த சகோதரர் காலமானதற்குப்பின் கதாதரர் அன்னையின் வழிபாட்டில் தீவிரமாக மூழ்கினார் என்று கூறினோம். ஆழ்ந்த நம்பிக்கையுடன்அவர் தமக்குத் தெரிந்த வழிகளிலெல்லாம் ஈடுபட்டு ஆர்வத்துடன் அன்னையின் தரிசனத்திற்காக முயன்றார்.
ராமபிரசாதர் போன்ற சிறந்த பக்தர்களின் பாடல்களை அன்னையின் முன்பாடுவது தமது அன்றாட வழிபாட்டின் ஓர் அங்கமாகத் திகழ்ந்தது என்று பின்னாளில் குருதேவர் கூறினார்.
இதயம் நிறைந்த பக்திப்பெருக்கால் அந்தப் பாடல்களைப் பாடும்போது அவரது உள்ளம் பேரானந்தத்தால் விம்மியது. ராமபிரசாதர் போன்ற பக்தர்கள் அன்னையின் தரிசனம் பெற்றிருக்கிறார்கள். ஆகவே அன்னையைக் காணமுடியும் என்பது நிச்சயம். எனக்கு மட்டும் ஏன் அன்னையின் தரிசனம் கிடைக்கவில்லை? என்று தவித்தார். ஏக்கம் நிறைந்த உள்ளத்துடன், அம்மா நீ ராமபிரசாதருக்குக் காட்சி தந்தாய், என்னிடம் மட்டும் ஏன் வரமறுக்கிறாய்?
பணம், உற்றார் உறவினர், சுகபோகங்கள் போன்ற எதுவும் எனக்கு வேண்டாம். எனக்கு உன் திவ்ய வடிவை மட்டும் காட்டி அருள்வாய் என்று கதறி அழுது பிராத்தனை செய்வார்.
அவரது கண்களிலிருந்து நீர் பெருகி, மார்பில் வழியும் . அழுவதால் இதயச்சுமை சற்று குறையும்.
மீண்டும் நம்பிக்கையால் உந்தப்பட்டு ஒரு குழந்தையைப்போல அன்னையை மகிழ்விப்பதற்காகப் பாடல் களைப் பாடுவார். இவ்வாறு பூஜை தியானம், பாட்டு என்று நாட்களைக் கழித்தார். அன்னையைக் காண வேண்டுமென்ற அவரது ஆவலும் ஏக்கமும் நாளுக்குநாள் வளர்ந்தன.
அற்புத பக்தரான கதாதரரின் பூஜை மற்றும் சேவை நேரங்கள்  நாள்தோறும் அதிகரிக்கலாயிற்று.
மலரைத் தலை மீது வைத்துக்கொண்டு இரண்டு மணிநேரம் அசையாமல் தியானத்தில் அமர்ந்திருப்பார். அன்னைக்கு உணவு படைத்துவிட்டு அன்னை அதனை உட்கொள்வதற்காக நெடுநேரம் காத்திருப்பார்.
தினமும் காலையில் மலர்கொய்து, மாலை தொடுத்து அன்னையை  நெடுநேரம் அலங்கரிப்பார். பக்தி பொங்கும் இதயத்துடன் மாலை தீபாதாரனையில் நீண்ட நேரம் செலவிடுவார். சில நாட்களில் பிற்பகல் வேளையில் அன்னையின் முன் அமர்ந்து பாடத் தொடங்குவார்.நேரம் சென்று கொண்டிருக்குமே தவிர பாடல் முடிவடையாது. தம்மை மறந்து நெடுநேரம் பாடிக்கொண்டிருப்பார். அப்போதெல்லாம் தீபாராதணை மற்றும் பிற சேவைகளை அவருக்கு மற்றவர்கள் மீண்டும் மீண்டும் நினைவுபடுத்த வேண்டியிருக்கும். சில காலம் இவ்வாறாகபூஜை நடைபெற்றது.

கதாதரரின் இத்தகைய பக்தி, ஆர்வம், ஆன்மதாகம் எல்லாம் கோயிலில் உள்ளவர்களின் கவனத்தை ஈர்த்தன. நியமங்களிலிருந்து மாறுபட்டு தம் விருப்பத்திற்கு ஏற்பப் புதுவழியில் பூஜை செய்கின்ற ஒருவரைப் பிறர் கடுமையாக விமர்சிப்பதும் கேலிசெய்வதும், புதுமையல்ல. நாளுக்கு நாள் அவர் தனது வழியில் தொடர்ந்து உறுதியாக முன்னேறிச் செல்வதைக் காணும் போது அவர்களும் உண்மையை உணர்ந்து மரியாதை அளிப்பார்கள்.
கதாதரரின் விஷயத்தில் இவ்வாறேநடைபெற்றது.
அவர்  மரபை மீறிய பூஜை செய்யத் தொடங்கிய போது  பலர் அவரைத் தூற்றினர்.ஆனால் சிறிது நாட்களிலேயே ஓரிருவர் அவரைப்போற்றத் தொடங்கினர்.
கதாதரரின் பூஜை முறை மதுர்பாபுவுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது.
அவர் ராணி ராசமணியிடம் . நமக்கு ஒர் அசாதாரணமான பூஜாரி கிடைத்துள்ளார். அன்னை காளி விரைவிலேயே விழிப்புற்று அருளொளி பரப்பத்தொடங்கி விடுவாள். என்று சொன்னார்
மற்றவர்களின் எண்ணத்திற்கேற்ப குருதேவர் தம் வழியை மாற்றிக்கொள்ளவில்லை.
பொங்கும் கடலை நோக்கிப் பாய்ந்து செல்லும் நதியைப்போல அவரது மனம் அகிலாண்டேசுவரியான அன்னை காளியின் திருவடிகளை நாடி ஆர்வத்துடன் சென்றது.

தொடரும்..

No comments:

Post a Comment