Saturday, 22 June 2019

ஸ்ரீராமகிருஷ்ணரின் விரிவான வாழ்க்கை வரலாறு

ஸ்ரீராமகிருஷ்ணரின் விரிவான வாழ்க்கை வரலாறு
-
பாகம்-14


இருட்டி நெடுநேரமாகியும்  கதாதரன்  வீடு திரும்பாததைக் கண்ட சந்திராதேவி அவனைத்தேடுவதற்காக ராமேசுவரரை அனுப்பினாள். அவன் வழக்கமாக செல்லும்  வணிகர் குடியிருப்புக்கு வந்த ராமேசுவரர் முதலில் சீதாநாத் வீட்டிற்குச் சென்றார். அங்கு அவன் இல்லையென அறிந்ததும் துர்க்காதாஸ் வீட்டிற்கு அருகில் வந்து, கதாயீ, கதாயீ என்று உரத்த குரலில் அழைத்தார்.
அண்ணனின் குரலைக் கேட்டதும் கதாதரன் வெகுநேரமாகி விட்டதை உணர்ந்தான். வீட்டின் உட்பகுதியிலிருந்த படியே,இதோ வருகிறேன் அண்ணா” என்று கூவிக் கொண்டே வெளியே ஓடினான். முதலில் துர்க்கா தாஸிற்கு எதுவும் புரியவில்லை.
புரிந்த போது இந்தச் சிறுவன் தன்னையும் தன் குடும்பத்தையும்  முட்டாளாக்கி விட்டானே எனற அவமானமும் கோபமும் அவரை ஒரு கணம் ஆட்கொண்டன.
ஆனால் அடுத்த வினாடியே கதாதரனின் நடிப்புத் திறமையை எண்ணிச் சிரித்து விட்டார். நடந்ததை எல்லாம் மறுநாள் அறிந்த சீதாநாதரும் மற்ற உறவினர்களும் கதாதரன் துர்க்காதாஸின்  தற்பெருமைக்கு அடி கொடுத்ததை எண்ணி மகிழ்ந்தனர்.
அன்று முதல் துர்க்காதாஸ் வீட்டுப்பெண்களும் சீதாநாதரின் வீட்டிற்கு கதாதரன் வந்தபோதெல்லாம் அங்குச்சென்று ஆடல் பாடல்களைக் கண்டு மகிழலாயினர்.
சீதாநாதர் வீட்டுப்பெண்களும் மற்ற வணிகர் பெண்களும் கதாதரன் மீது ஆழ்ந்த பற்றும் பாசமும் கொண்டிருந்தனர். சில நாட்கள் தொடர்ந்து அவன் வரவில்லை என்றால் உடனே அவனை அழைத்துவர ஆளனுப்பி விடுவார்கள். சில வேளைகளில்  சீதாநாதரின் வீட்டில் பாடும்போதோ கதைகளைப் படிக்கும்போதோ அவன் பரவச நிலையில் மூழ்கி விடுவதுண்டு.இது அந்தப் பெண்களுக்கு கதாதரன் மீது பாசத்துடன் பக்தியையும் வளர்த்தது. இவ்வாறு அவன் பரவச நிலைகளில் ஆழ்ந்திருந்த போது அவனை ஸ்ரீசைதன்யராகவே ஸ்ரீகிருஷ்ணராகவோ எண்ணி பல பெண்கள் வழிபட்டதாகவும் தெரியவருகிறது.
ஆண், பெண்களுக்கான ஆடை அணிகலன்கள் மற்றும் ஒரு தங்க ப் புல்லாங்குழல் இவற்றை எல்லாம் கூட அவனது வேடங்களுக்காக அவர்கள் வாங்கி வைத்திருந்தனர்.
நல்லொழுக்கம் .புனிதம்,அறிவுக்கூர்மை,சமயோசித புத்தி, அன்பு, எளிமை,பணிவு போன்ற நற்பண்புகளின் உறைவிடமாகத் திகழ்ந்த கதாதரன்

சுவாமி ராமகிருஷ்ணானந்தரும் எங்களில் வேறு சிலரும் 1893-ஆம் ஆண்டு காமார்புகூர் சென்றிருந்தோம். அப்போது சீதாநாத் பைனின் மகளான ருக்மிணியைச் சந்திக்க முடிந்தது. அப்போது அவருக்கு அறுபது வயதாகி விட்டிருந்தது. அவர் சொன்னதைக்கேட்டால் அவர்கள் வாழ்வில் கதாதரன் கொண்டிருந்த இடத்தைப்பற்றி வாசகர்கள் உணர முடியும். அவர் கூறினார்.

எங்கள் பழைய வீடுஇதோ வடக்கில் இருக்கிறது. எங்களுள் பலர் இப்போது உயிருடன் இல்லாததால் அந்த வீடு பராமரிக்கப்படாமல் பாழடைந்து கிடக்கிறது. எனக்குப் பதினேழு பதினெட்டு வயதிருக்கும்போது அது ஒரு செல்வச்செழிப்புமிக்க மாளிகையாகக் காட்சியளித்தது. என் தந்தை சீதாநாத் பைன், அவரது மூத்த, இளைய சகோதரர்களின் மகள்களையும் சேர்த்து நாங்கள், பதினேழு பதினெட்டு பெண்கள் அந்த வீட்டில் இருந்தோம். சிறுவனாக இருக்கும் போதே கதாதரன் எங்களுடன் விளையாடுவதுண்டு.
நாங்கள்  நெருங்கிய நண்பர்கள். நாங்கள் வளர்ந்த பிறகும் கதாதரன் எங்கள் விட்டிற்கு வந்து போய் கொண்ருந்தான். அந்தச் சமயத்தில் சிறிது வளர்ந்தவனாக இருந்தும் வீட்டின் உட்பகுதிகளுக்கு வந்து செல்ல அவனுக்கு ச் சுதந்திரம் இருந்தது.
அப்பா அவனை மிகவும் நேசித்தார்.அது மட்டுமல்ல. அவனை அவர் தன் இஷ்டதெய்வமாகவே கருதி அவன் மீது பக்தியும்,மரியாதையும் செலுத்தினார். யாராவது அவரிடம், இப்போது கதாதரன் சிறுவனல்ல, அவன் வளர்ந்துவிட்டான்.
உங்கள் வீட்டில் வயது வந்த பெண்கள் பலர் உள்ளனர், இன்னும் அவனை ஏன் உள்ளே அனுமதிக்கிறீர்கள்? என்று வினவினால் என் தந்தை, நீங்கள் அதைப்பற்றிக் கவலைப்படவேண்டாம்,எனக்கு அவனைப்பற்றி நன்றாகத் தெரியும்,  என்று சட்டென்று கூறிவிடுவார். அவ்வளவு மதிப்பு அவருக்கு கதாதரனிடம் இருந்தது. அவர்களும் மேலும் எதுவும் சொல்வதற்கு அஞ்சி அகன்று விடுவார்கள்.ஆ! எத்தனை எத்தனை புராணக்கதைகள்  அவன் எங்களுக்குக் கூறியிருக்கிறான்,!
என்னென்ன வேடிக்கைகள் !என்னென்ன வினோதங்கள்! அவன் சொல்கின்ற கதைகளைக்கேட்டுக் கொண்டே நாங்கள் வீட்டு வேலைகளைச் செய்வோம். அவன் எங்களுடன் இருந்தபோது நாங்கள் பெற்ற இன்பத்தை எப்படி வார்த்தைகளால் விளக்க இயலும்? அவன் வரவில்லை  என்றால் என்னவோ ஏதோவென்று கவலைப்படுவோம். அவனைப்பற்றிய விவரம், அறிய உள்ளம் துடிக்கும். உடனே எங்களுள் ஒருவர், தண்ணீர் கொண்டு வருவதையோ, வேறு ஏதோ ஒரு வேலையையோ சாக்குப்போக்காக வைத்துக்கொண்டு சந்திரா, வீட்டிற்குச் சென்று விஷயம், அறிந்து வருவோம்.
போனவள் செய்தி கொண்டு வரும்வரை எங்களுக்கு அமைதியே இருக்காது. அவனது ஒவ்வொரு சொல்லும் எங்களுக்கு அமுதமாக இனித்தது. அவன் வராத போதெல்லாம் அவனைப்பற்றி ப் பேசிக்கொண்டே நாள் முழுவதையும் கழிப்போம்,என்றெல்லாம் கூறிப்பரவசப்பட்டார் அந்த முதிய பெண்மணி.
பெண்கள் என்றல்ல. ஆண்கள், குழந்தைகள், என்று கிராமத்திலுள்ள அனைவரையும்  கதாதரனின்  இனிய இயல்பும் பல்வேறு திறமைகளும் கவர்ந்திருந்தன.
புராணங்களைப் படிப்பதைக்கேட்டு ரசிப்பதற்காகவோ நாம சங்கீர்த்தனம், கேட்பதற்காகவோ மக்கள் எங்குக் கூடியிருந்தாலும் அங்கெல்லாம் கதாதரன் சென்று விடுவான். அவன் சென்று விட்டால் அந்த இடம் ஆனந்தச் சந்தையாகி விடும். அவன் புராணக்கதைகளைப் படித்துக்காட்டுவது போல் வேறு யாராலும் முடியாது. இறைவனின் பெருமை கூறும் பாடல்களை அவன் பாடத்தொடங்கி விட்டால் பக்திப்பேருணர்வில் அலைகள் பொங்கிப்பொங்கி அனைவரையும் மூழ்கடித்துவிடும்.
பக்தியில் தோய்ந்து குழைகின்ற அந்த இனிய குரல் வேறு யாருக்கும் கிடையாது என்றே கூறலாம். தாள  இசைவுடன் வேறு யாரால் இப்படி நடனமாட முடியும்? நாடகம்  என்று எடுத்துக்கொண்டால், ஆண், பெண், என்று அந்தப் பாத்திரங்களாகவே மாறி விடுவான். நகைச்சுவையானால் சூழ்ந்திருப்பவர்கள் சிரித்துச் சிரித்து வயிறு புண்ணாக வேண்டியது தான். சூழ்நிலைக்கு ஏற்றவாறு பாடல்களைப்புனைந்து பாடவோ, கதைகளைச் சொல்லவோ அவனைப்போல வேறு யாராலும் முடியாது. மாலையானதும் இளைஞர், முதியவர் என்ற பாகுபாடின்றி எல்லோரும் அவன் வரவை எதிர்நோக்கினர். கதாதரனும் மக்களைச் சந்திப்பதில் அவர்களை மகிழ்விப்பதிலும் ஆனந்தமடைந்தான்.
கதாதரனின் வேறோர் அபூர்வமான திறமும் மக்களை அவனிடம் ஈர்த்தது. அந்தச் சிறிய வயதிலேயே எந்தச் சிக்கலான வழக்கையும் பிரச்சனையையும் ஆராய்ந்து , தகுந்த நீதி வழங்கும் ஆற்றல் அவனிடம் இருந்தது.
எனவே உலகியல் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்கு ஊரார் அவனது அறிவுரையை நாடி வருவர். அது போல, அவனது புனித வாழ்வினால் கவரப்பட்டும், கடவுள் புகழைப்பாடும் போது அல்லது இறைநாமத்தைக்கேட்கும் போது அவன் பாவ சமாதியில் ஆழ்வதைக் கண்டும் ஆன்மீகத்தில் நாட்டம் உடையவர்கள் அவனை நாடினர். அவனது அறிவுரைகளைப்பின்பற்றி அவர்கள் தங்கள் ஆன்மீக வாழ்வில் முன்னேறினர்.
இதெல்லாம் ஒரு புறமிருக்க , கதாதரனை முற்றிலும் தவிர்த்தவர்களும் அந்த கிராமத்தில் இருந்தனர். கபடர்களும், வஞ்சகர்களும் அவனது அருகில் வர அஞ்சினர்.
ஏனெனில் கதாதரனின் கூரிய உட்பார்வை அவர்களது வெளிவேடத்தைக் கிழித்து அவர்களின் மனத்தில் குடிகொண்டிருக்கின்ற தீய வஞ்சக எண்ணங்களைக் கணத்தில் கண்டு விடும்.ஒளிவு மறைவு என்பது சிறிதுமற்ற அவன் இத்தகைய போலி வாழ்வு வாழ்வோரைக்கண்டால் உடனே அவர்களின் துர்நடத்தைகளை அம்பலப்படுத்தி விடுவான். எந்தக்கூட்டமாயினும்  அவற்றைக்கூறத் தயங்கமாட்டான். சில வேளைகளில் அவர்களின் போலி நடவடிக்கைகளை  பிறர் முன்னால் நகைச்சுவையுடன் நடித்துக்காட்டி அவர்களைத் தலைகுனியச் செய்து விடுவான். அவர்களுக்கு எவ்வளவு தான் கோபம் வந்தாலும்  அதை கதாதரன் மீது காட்ட முடியாது. ஏனெனில் கிராமமே அவன் பக்கம் அல்லவா இருந்தது. அவர்களுக்கு இருந்த ஒரே வழி அவனிடம் பணிந்து போவது தான். ஏனெனில் பணிவாக இருப்பவர்களிடம் அவன் எப்போதும் அன்பு காட்டி வந்தான் என்பதை அவர்கள் அறிந்திருந்தனர்.
-
தொடரும்..

No comments:

Post a Comment