Sunday, 23 June 2019

ஸ்ரீராமகிருஷ்ணரின் விரிவான வாழ்க்கை வரலாறு பாகம்-32

ஸ்ரீராமகிருஷ்ணரின் விரிவான வாழ்க்கை வரலாறு
பாகம்-32


முதல் நான்கு ஆண்டு சாதனைகளின் நிறைவு

 குருதேவரின் சாதனைக் காலத்தைப்பற்றி அறிய அவரே அதனைப்பற்றிக்கூறியிருப்பதைக் கருத்தில் கொள்ளவேண்டும்.
குருதேவரின் சாதனைக்காலம்(தவ வாழ்க்கை) 1856-1867 ஆம் ஆண்டு வரை நீடித்தது. இந்தக் காலகட்டத்தை குருதேவரின் சாதனைக்காலம் என்று நாம் குறிப்பிடுகிறோம்.
இப்படி நாம் வரையறுத்தாலும் இந்தக் காலகட்டத்தின் நிறைவுப் பகுதியில் தீர்த்த யாத்திரை மேற்கொண்டு அந்த இடங்களிலும், தட்சிணேசுவரத்திற்குத்  திரும்பிய பின்னரும் அவர் தமது சாதனைகளைத் தொடர்ந்தார் என்பதையும் நாம் பார்க்கப்போகிறோம். இந்தப் பன்னிரண்டு ஆண்டு காலத்தையும் நாம் மூன்று பகுதிகளாகப் பிரித்துக்கொண்டு ஒவ்வொன்றைப் பற்றியும் தனித்தனியாக அறிய முற்படுவோம்.
முதல் நான்கு ஆண்டு காலத்தின்
(1856-1859) முக்கிய நிகழ்ச்சிகளை நாம் முன்னரே பார்த்தோம்.
அடுத்த பகுதி 1860 முதல் 1863 முடிய உள்ளதாகும்.
இப்பகுதியில் கடைசி இரண்டு ஆண்டுகளில் கோகுல விரதத்தில் தொடங்கி வங்கநாட்டின் புகழ்மிக்க அறுபத்துநான்கு தந்திரங்கள் கூறுகின்ற சாதனைகளையும் விதிப்படிச் செய்தார்
குருதேவர். 1864முதல் 1867 முடிய உள்ள மூன்றாவது பகுதியில் கீழ்காணும் சாதனைகளைப்புரிந்தார்.ராமாயத் பிரிவைச்சேர்ந்த ஜடாதாரி என்ற துறவியிடமிருந்து ராம மந்திர தீட்சையும், ராம்லாலா விக்கிரகமும் பெற்றார். பெண்ணுடை தரித்து ஆறு மாதகாலம் வைணவ நூல்கள் கூறுகின்ற மதுர பாவனை சாதனை செய்தார். தோதாபுரியிடமிருந்து துறவறம் ஏற்று நிர்விகல்ப சமாதி அனுபவம் பெற்றார். இறுதியாக கோவிந்தரிடமிருந்து இஸ்லாமிய சமய உபதேசம் பெற்றார். இந்தப் பன்னிரண்டு ஆண்டுகளில் தான் வைணவ தந்திரங்கள் கூறுகின்ற சக பாவனை சாதனைகள் புரிந்தார். வைணவத்தின் துணைப் பிரிவுகளான கர்த்தாபஜா, நவரசிக் போன்றவற்றுடனும் இந்தக்காலத்தில் தான் தொடர்பு கொண்டார்.வைணவத்தின் எல்லா  பிரிவுகளுடனும் குருதேவர் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார் என்பது, அந்தப் பிரிவுகளைச் சார்ந்த வைஷ்ணவகரண் கோசுவாமி போன்ற சாதகர்கள் தங்கள் ஆன்மீக முன்னேற்றத்திற்காக அவரை நாடியதிலிருந்து தெரியவருகிறது.
சாதனைக்காலத்தை இவ்வாறு மூன்று பிரிவுகளாகப் பிரித்து அவற்றை ஆராயும் போது ஒவ்வொரு பிரிவும் ஒன்றுக்கொன்று வேறுபட்ட தொகுதியாக அமைந்திருப்பதைக் காணலாம்.
குருதேவர் தம் சாதனையின் ஆரம்பகாலத்தில் வெளியிலிருந்து பெற்ற ஒரே உதவி ஸ்ரீகேனாராம் பட்டாச்சாரியரிடம்  இருந்து மந்திரோபதேசம்  பெற்றதாகும்.
கடவுளைக் காணவேண்டும் என்ற தீவிரமான ஆன்மதாகமே இந்தக் காலகட்டத்தில் அவருக்கு ஊன்று கோலாக இருந்தது.
இந்த தாகம் விரைவில் அதிகமாகிக்கொண்டே போய் அவரது உடலிலும் மனத்திலும் பல மாற்றங்களை ஏற்படுத்தியது. இஷ்ட தெய்வத்திடம் எல்லையற்ற அன்பை உண்டாக்கியது. வைதீபக்தியைக் கடந்து ராகாத்மிக பக்திப்பாதையில் முன்னேற வைத்தது. எல்லாவற்றிற்கும் மேலாக அன்னையின் ஒப்பற்ற அருட்காட்சியை நல்கி அவரை யோக சக்தி பெற்றவராக்கியது.
அப்படியானால் இனி சாதனைகள் எதற்கு? கடவுள் காட்சியும் யோக சித்தியும் பெற்றுவிட்ட குருதேவருக்கு வேறு சாதனைகள் எதற்கு? என்று ஒரு வேளை வாசகர்கள் கேட்கக் கூடும்.
இது ஒரு விதத்தில் உண்மையே. ஆயினும் மேற்கொண்டு அவருக்கு சாதனைகள் ஏன் தேவைப்பட்டது. என்பதை வாசகர்களுக்குக்கூற விரும்புகிறோம்.
இயற்கையின் நியதிப்படி மரங்களும் செடிகளும் முதலில் பூத்து பின்னர் காய்க்கின்றன. ஆனால் சில தாவரங்கள் முதலில்  காய்த்து பின்னர் பூக்கின்றன என்று குருதேவர் சொல்வதுண்டு. சாதனைகளைப்பொறுத்தவரை குருதேவரின் முன்னேற்றம் இரண்டாவதாகக்குறிப்பிட்டதான, முதலில் காய்த்து பின்னர் பூக்கின்ற தாவரங்களைப்போன்றதாகும்.
சாதனையின் ஆரம்பத்தில் குருதேவர் கடவுட்காட்சி போன்ற அனுபவங்களைப் பெற்றிருந்தாலும், தாம் கண்டவை உண்மையா, தமது குறிக்கோள் நிறைவேறியதா, என்பதைப் பற்றித் தெளிவான எந்த முடிவுக்கும் அவரால் வர இயலவில்லை. தமக்கு ஏற்பட்ட அனுபவங்களை சாஸ்திரங்களில் குறித்து வைக்கப்பட்டுள்ள மற்ற சாதகர்களின் அனுபவங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்த பின்னரே தெளிவான முடிவுக்கு வர முடியும் என்று அவர் கருதினார்.
தீவிர ஆன்ம தாகம் ஒன்றினால் மட்டுமே எந்த உண்மையைக் கண்டறிந்தாரோ, அதே உண்மையை சாஸ்திரங்கள் காட்டுகின்ற வழிகளைப் பின்பற்றியும் அதாவது சாஸ்திரங்கள் கூறுகின்ற சாதனைகளைச் செய்தும் கண்டறியவேண்டும். இந்தக் காரணத்திற்காகவும் குருதேவருக்கு சாதனைகள் அவசியமாயிற்று, குருவிடமிருந்து கேட்ட அனுபவங்கள் காலம் காலமாக சாஸ்திரங்களில் குறித்து வைக்கப்பட்டுள்ள  எண்ணற்ற சாதகர்களின் அனுபவங்கள், இவற்றுடன் சொந்த அனுபவங்களையும் தெய்வீகக் காட்சிகளையும் ஒப்பிட்டுப் பார்க்காதவரை ஒரு சாதகன் தனது அனுபவங்களின் உண்மையை அறுதியிட்டுச் சொல்ல முடியாது என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.
இவ்வாறு ஒப்புநோக்கி, அவை ஒன்றையொன்று ஒத்திருக்கின்றன என்று கண்ட மாத்திரத்தில் அவனது ஐயங்கள் யாவும் அகன்று மனம் எல்லையற்ற அமைதியை அடைகிறது.
எடுத்துக்காட்டாக வியாசரின் புதல்வரும் பரமஹம்சர்களுள் மிக உயர்ந்தவருமான சுகதேவரின் வாழ்க்கை நிகழ்ச்சி ஒன்றைக்குறிப்பிடலாம். மாயையின் கட்டுக்குள் அகப்படாதவராக இருந்த அவர் பிறப்பிலிருந்தே பல தெய்வீகக் காட்சிகளையும் அனுபவங்களையும் பெற்றார்.பூரண ஞானம் பெற்றதால் தான் தமக்கு இத்தகைய அனுபவங்கள் உண்டாகின்றன என்பது அவருக்குப் புரியவில்லை. அதனால் வேதங்களை நன்கு கற்றுணர்ந்த தம் தந்தை வியாசரின்  துணையுடன் வேதங்களையும் பிற சாஸ்திரங்களையும் கற்றார். பின்னர் வியாசரிடம் அப்பா” பிறந்ததிலிருந்தே சாஸ்திரங்களில் சொல்லப்பட்டுள்ள எல்லா ஆன்மீக நிலைகளையும் அனுபவித்து வருகிறேன். ஆனால் இவைதான் இறுதியான ஆன்மீக உண்மைகளா என்பது எனக்கு உறுதியாகத் தெரியவில்லை. இது பற்றித் தாங்கள் அறிந்தவற்றை எனக்குக்கூறுங்கள் என்று கேட்டுக்கொண்டார். பேரறிவாளரான வியாசர் தமக்குள், நான் ஆன்மீக வாழ்வின்  அனுபவங்களையும்முடிவான உண்மைகளையும் இவனுக்கு நன்றாகக் கற்பித்திருக்கிறேன் . ஆனாலும் இவனது மனத்தில் இன்னமும் ஐயங்கள் நீங்கவில்லை. பூரண ஞானம் கிட்டிவிட்டால் உலகியல் வாழ்வைத் துறந்துவிடுவான் என்ற புத்திரபாசத்தினால் அல்லது வேறு ஏதோ காரணத்தினால் நான் அவனுக்கு முழு உண்மையையும் கற்பிக்கவில்லை என்று என் மகன் நினைக்கிறான். வேறொரு மகானிடமிருந்து இது பற்றி அவன் அறிந்து கொள்வது நல்லது என்று எண்ணினார். எனவே சுகரிடம், என்னால் உனது ஐயங்களைப்போக்க இயலாது. மிதிலை மாமன்னராகிய ஜனகர் சிறந்த ஞானி என்பது உனக்குத் தெரிந்தது தான். அவரிடம்  சென்று உன் ஐயங்களைப்போக்கிக்கொள் என்று சொன்னார். சுகதேவரும் தந்தையின் அறிவுரைப்படி உடனே மிதிலைக்குச் சென்று ராஜரிஷியாகிய ஜனகரைச் சந்தித்தார். அவர் சுகருக்கு பிரம்ம ஞானிகளின் அனுபவத்தை எடுத்துக்கூறினார். குருவின் போதனை, சாஸ்திரங்களில்கூறப்பட்டுள்ள கருத்துக்கள், சொந்த அனுபவம் ஆகியவற்றுக்கிடையே முழு ஒருமைப்பாடு இருப்பதை அறிந்து தெளிவும் அமைதியும் பெற்றார் சுகதேவர்.
குருதெவர் மீண்டும் சாதனைகளில் ஈடுபட்டதற்கு முக்கியமான வேறு சில காரணங்களும் உண்டு.
அவற்றை  இங்கு மிகச் சுருக்கமாகக்கூறுவோம். தமது வாழ்வில் அமைதியைப்பெறுவது மட்டும் குருதேவரது சாதனையின்நோக்கம் அன்று. அன்னை பராசக்தி குருதேவரை உலகநன்மைக்காக உடல்தரிசிக்கும் படிச் செய்திருக்கிறாள். அதற்காகத் தான் ஒன்றுக்கொன்று மாறுபட்ட பல்வேறு சமயநெறிகளின் சாதனைகளை மேற்கொண்டு அவற்றுள் உண்மை எது, போலி எது என்பதைக் காட்டுவதற்கான பெருமுயற்சி அவரது வாழ்வில் நடைபெற்றது.
எல்லா சமய நெறிகளையும் அவை கூறும் சாதனை முறைகளையும் அவற்றின் முடிவுகளையும் தாமே கண்டறிந்தால் மட்டும் தான் உலக குருவாகப் பரிணமிக்க முடியும். எனவே பல்வேறு சமய சாதனைகளை மேற்கொள்வது அவருக்கு அவசியமாயிற்று.
அது மட்டுமன்று களங்கம் சிறிதும் அற்ற, பரந்த மனப்பான்மை  உடைய குருதேவரின் சாதனைகள் வாயிலாக சாஸ்திரங்களில் கூறப்பட்ட ஆன்மீக நிலைகளை வெளிக்கொணர்ந்து, இந்த நவீன யுகத்திற்கு வேதங்கள், புராணங்கள், பைபிள், குரான் போன்ற சமய நூல்களில் உள்ள உண்மைகைளை நிரூபித்துக் காட்டினாள். அன்னை!
ஆன்மீக அனுபூதி பெற்ற பின்னரும் குருதேவர் சாதனைகளைத் தொடர்ந்து செய்ய முயன்றதன் காரணம் இதுதான்.
மேற்சொன்ன நோக்கங்களை நிறைவேற்றவே உரிய காலத்தில் பல்வேறு சமயப் பிரிவுகளைச்சேர்ந்த ஞானிகளையும் பண்டிதர்களையும் கொண்டுவந்து சேர்த்து, அந்தப் பிரிவுகளின் சாதனைகளைப் பற்றிய கருத்துக்களை அவர்களிடமிருந்தே நேரடியாகக்கேட்டு குருதேவரை அறிய வைத்தாள்.
இந்த அற்புதமான வாழ்க்கையைத் தொடர்ந்து படிக்கும்போது இந்த உண்மைகளை நாம் புரிந்து கொள்வோம்.

தொடரும்

No comments:

Post a Comment