Sunday, 16 June 2019

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு-பாகம்-52

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு-பாகம்-52

தவவாழ்வு
 இந்த உலகில் துன்பம் ஏன் உள்ளது? உலகின் சிந்தனைச் சிற்பிகளையும் தத்துவ ஞானியரையும் இதைவிட ஒரு கேள்வி ஆக்கிரமித்திருக்க முடியாது.ஆனால் விடை மட்டும் என்னவோ அனைவரின் சிந்தனைத் திறத்தையும் கடந்தே நிற்கிறது. ஒரு வேளை சுவாமி விவேகானந்தர் கூறுவதுபோல், இந்து ” எனக்குத் தெரியாது” என்று  கூறுகிறானே, அதற்கு மேல் எதுவும் சொல்ல முடியாது என்பது தான் மிகச் சிறந்த விடை போலும். ஆனால் துன்பம் என்ற ஒன்று  இருப்பது நிதரிசனமான அனுபவம். அதை யாரும் மறுக்க முடியாது. எனவே தான் சான்றோர்கள் துன்பத்தை வாழ்க்கையின் மறுபக்கமாக ஏற்றுக் கொள்கின்றனர். அவர்கள் துன்பத்தில் துவள்வதில்லை. அங்குமிங்கும் ஓடி, மனிதர்களை நாடி சூழ்நிலையை மாற்றி  துன்பத்தை விலக்க முயற்சிப்பதில்லை. வருகின்ற துன்பங்களை அப்படியே ஏற்றுக்கொண்டு,அவற்றைத் தங்கள் வாழ்க்கை முன்னேற்றத்திற்கான ஒரு படிக்கல்லாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர். இந்த உலகம் என்னும் மாபெரும் நாடக அரங்கில் நம் ஒவ்வொருவருக்கும்  பாத்திரங்கள் தரப்பட்டுள்ளன. இன்பமும், துன்பமும் நமக்கு ஆசிரியர்கள். இதில் இன்ப அனுபவங்களை விட துன்ப நிழல்கள் தரும் பயிற்சியே, நாம் நமது பாத்திரத்தை நன்றாக உணர்ந்து கொள்ளச் செய்கிறது. அதனால் தான் குந்தி,”இறைவா” எங்களுக்கு மேலும் மேலும் துன்பங்கள் வரட்டும். துன்பச் சூழல் தான் நாங்கள் உன்னை நினைக்கும் படிச் செய்கிறது என்று பிராத்தனை செய்தாள். எனவே துன்பத்தை ஏற்றுக் கொள்வதற்கான மனநிலையை உருவாக்கிக் கொள்வது இன்றியமையாதது.
உண்மை என்னவென்றால்,வாழ்க்கையில் வரும் சிரமங்களையும் துன்பங்களையும் அமைதியாகத் தாங்கி, அது தரும் பாடங்களை நாம் ஏற்றுக் கொள்ளும்போது,அது நமது மன ஆற்றலை வளர்க்கிறது. ஆன்மீக சக்தியைத் தந்து பிறர் பணிகின்ற உயர்நிலையை நமக்கு அளிக்கிறது.எனவே பொறுமையுடன் துன்பங்களை ஏற்றுக்கொள்வது என்பது ஒரு மாபெரும் தவமாகும். துறவியர் உலக இன்பங்களைத்துறந்து செய்கின்ற தவத்தை விட இந்தத் தவ வாழ்வை உயர்ந்த இடத்தில் வைக்கிறார் திருவள்ளுவர்.
குருதேவியாக, உலகின்  அன்னையாகப் பரிணமிக்க இருந்த அன்னைக்கு ஆன்மீக ஆற்றல் தேவைப்பட்டது. அதற்காகத் தான் பிருந்தாவனத்திலிருந்து1887 ஆகஸ்டில் திரும்பி வந்த அவர் இத்தகைய தவ வாழ்வில் ஈடுபட்டார். பெண் குலத்திற்கு ஒளி காட்டும் பெரு விளக்காகத் தோன்றியவர் அன்னை. எனவே சாதாரணப் பெண்களும் ஈடுபடத்தக்க, அதே வேளையில் மற்ற தவங்களை விட மேலானதுமான இந்த துன்ப வாழ்க்கை என்னும் தவத்தை மேற்கொண்டார். இன்றைய ஒரு பெண் தன் வாழ்வில் சந்திக்க வேண்டிய, எதிர்கொள்ள வேண்டிய எந்தப் பிரச்சனையும் இந்தக் காலக்கட்டத்தில் அன்னையின் வாழ்வில் இல்லாமல் இல்லை. இன்றைய சாதாரணப்பெண்ணின் நிலையைவிட எந்த விதத்திலும்  மேம்பட்டதாகவும் இருக்கவில்லை. ஆனால் இத்தனைக்கும் அவர் தன் நிலையை எடுத்துக் கூறி யாருடைய  உதவியையாவது நாடியிருக்க வேண்டுமே,யாரையாவது குற்றம் சாட்டவேண்டுமே,ஒரு கண்டனச் சொல்லாவது அவர் வாயிலிருந்து வர வேண்டுமே, இல்லவே இல்லை. ஏனெனில் இது தமக்குத்தேவை என்பதைத் தெரிந்துகொண்டு தன்னுணர்வு பூர்வமாக அவர் இந்தத் தவ வாழ்வில் ஈடுபட்டார். இது பெண்ணினத்திற்கு ஓர் எடுத்துக்காட்டாக அமைந்ததுடன்,தமது அவதாரப்பணியை நிறைவேற்றுவதற்கான ஆற்றலையும் அவருக்கு அளித்தது.
-
-
தொடரும்...
-





No comments:

Post a Comment