Sunday, 16 June 2019

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு-பாகம்-48


அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு-பாகம்-48

அன்னை பிருந்தாவனம் செல்வதென்று முடிவாகியது.குருதேவரின் பிரிவில்  துடிப்பவரான அன்னை கண்ணனின் பிரிவில் துடித்தவளான ராதையின் தலத்திற்குச் செல்வதும் பொருத்தமே. குருதேவர் மறைந்து பதினைந்து நாட்களுக்குப்பிறகு அதாவது 1886 ஆகஸ்ட் 30-ஆம் நாள் அன்னை  புறப்பட்டார். அன்னையுடன்  கோலாப்மா, லட்சுமி. மகேந்திரரின் மனைவி, யோகின்,காளி,லாட்டு ஆகியோர் சென்றனர்.

பிருந்தாவனத்திற்குச் செல்லும் வழியில் முதலில் தேவ்கரில் வைத்தியநாத  சிவனை தரிசித்து, பின்னர் பொன்நகரம் என்று புராணங்கள் புகழ்கின்ற காசி மாநகரை அடைந்தனர். சுமார் பத்து நாட்கள் அங்கு தங்கி விசுவநாதரையும் அன்னபூரணியையும் வழிபட்டு மகிழ்ந்தனர். பிற கோயில்களுக்கும் சென்று வழிபாடுகளை் செய்தனர்.வேணி மாதவர் கோயிலின் கோபுரத்தின் மீது ஏறி காசி மாநகரின் முழுஅழகையும் கண்டு ரசித்தார் அன்னை. தீர்த்த யாத்திரை நாட்களில் அன்னையிடம் மிக உயர்ந்த ஆன்மீக நிலைகளைக் காண முடிந்தது. பொதுவாக பரவச நிலைகளிலேயே அவர் திளைத்தார். ஒருநாள் காசி விசுவநாதர் கோயிலில் மாலை ஆரதியை தரிசித்துக் கொண்டிருக்கும் போது மிகவுயர்ந்த பரவச நிலையில் ஆழ்ந்தார். திரும்பி வரும் போது வழக்கத்திற்கு மாறாக மிகுந்த வேகத்துடன் அடியெடுத்து வைத்து நடந்தார். பின்னர் அதற்கான காரணம் கேட்டபோது கோயிலிலிருந்து நான் திரும்பி வரும்போது குருதேவர் என் கையைப்பிடித்து அழைத்து வந்தார் என்று கூறினார்.

ஒருநாள் அனைவருமாக. காசியில் வாழ்ந்து வந்த மகானாகிய பாஸ்கரானந்தரைச் சென்று தரிசித்தனர். அதைப்பற்றி அன்னை கூறினார்.பிருந்தாவனத்திற்குச் செல்லும் வழியில் பாஸ்கரானந்தரைச் சந்தித்தேன். குருதேவர் மறைந்த துயரத்தில் நான் மூழ்கிக் கிடந்த நாட்கள் அவை. நான் பார்த்தபோது அவர் ஆடையேதுமின்றி இருந்தார். ஆனால்  அது அவரிடம் எத்தகைய உடலுணர்வையும் தோற்றுவிக்கவில்லை.எங்களைப் பார்த்த உடனே,ஓ! அன்னையரே! சங்கடப்படாதீர்கள் . நான் உங்களிடம் அந்த  அகிலாண்ட நாயகியையே காண்கிறேன்.என்று சொன்னார். ஆகா! எவ்வளவு பெரிய மகான்!உலக நினைவுகள் அனைத்தையும் கடந்த நிலையில் இருந்தார் அவர். சூட்டிலும், குளிரிலும் ஆடைகள் இன்றிச் சமநிலையிலேயே வாழ்ந்தார்.

பின்னர் அனைவரும் ஸ்ரீராமன் பிறந்த அயோத்தி மாநகருக்குச் சென்று விட்டு, பிருந்தாவனத்திற்குப் பயணமாயினார்.வழியில் அன்னை திடீரென்று குருதேவரின் காட்சியைப் பெற்றார். குருதேவர்  மறைவதற்குச்சில நாட்களுக்கு முன்பு இஷ்டதெய்வ மந்திரம் எழுதப்பட்ட தமது தங்கத் தாயத்தை அவர் அன்னையிடம் கொடுத்திருந்தார்.அன்னை நாள் தோறும் அதைப்பூஜையில் வைத்து வழிபட்ட பிறகு தம் கையில் கட்டிக்கொள்வார். பிருந்தாவனத்திற்குச் செல்லும் போது புகைவண்டி ஜன்னலுக்கு அருகே அமர்ந்தபடி அன்னை உறங்கிக் கொண்டிருந்தார். தாயத்து கட்டப்பட்ட கையை ஜன்னலில் வைத்து அதன்மீது தலையைச் சாய்த்திருந்தார்.அப்போது குருதேவர் தோன்றி என் தாயத்து உன்னிடம் உள்ளது. அது தொலைந்துவிடாமல் கவனித்துக்கொள், என்று கூறினார்.அன்னை உடனே விழித்து தாயத்தைக் கழற்றி தாம் நாள்தோறும் வழிபடுவதற்காக உடன் கொண்டு செல்லும் குருதேவரின் புகைபடம் வைத்துள்ள சிறிய பெட்டிக்குள் வைத்துக்கொண்டார். அதன்பின்னர் அவர் அதை அணிய பேலூர் மடத்திற்குக் கொடுத்தார்.

-

தொடரும்...

-




No comments:

Post a Comment