Saturday, 22 June 2019

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு-பாகம்-108

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு-பாகம்-108

பிற்கால வாழ்க்கை
அன்னையின் கிராம வாழ்க்கை உழைப்பு மிகுந்ததாகும். வீட்டு வேலைகளை அவரே செய்ய வேண்டியிருந்தது. உறவினர்களும் பக்தர்களுமாக ப் பலர் அவருடன்  தங்கியிருந்ததால் வேலைகள் நாளுக்கு நாள் அதிகரித்தன. கல்கத்தாவில் வாழும் போது இவ்வளவு வேலைச் சுமை இல்லை. அது மட்டுமின்றி அங்கு குறிப்பிட்ட நேரத்தில் அல்லாமல் ஆண்பக்தர்கள் யாரும் அவரைக்காண அனுமதிக்கப்படுவதில்லை. அதனால் அங்கே அன்னைக்குச் சற்று ஓய்வு கிடைத்தது. கிராமத்திலோ அவர் சுதந்திரமாக நடமாடுவார். எந்த நேரத்திலும் பக்தர்கள் அவரைக்காண முடியும்.இதனால் அன்னையை நெருக்கமாகக் காண  விரும்பிய பக்தர்கள் வழி எவ்வளவு கடினமாக இருந்தாலும் வசதி இல்லாத கிராமமான ஜெயராம்பாடிக்கே செல்வார்கள். கல்கத்தாவில் இந்த பக்தர்கள் வாழும் வசதியான வாழ்க்கையைக் கண்டிருந்த அன்னை,கிராமத்திலும் அந்த அளவிற்கு வசதிசெய்து கொடுப்பதற்காகக் கடினமாக உழைப்பார். ஜெயராம்பாடியில் பால் அதிகமாகக் கிடைக்காது.எனவே  அன்னை நாள்தோறும் தாமே பல வீடுகளுக்குச் சென்று பாலும் காய்கறிகளும் வாங்கி வருவார். உணவைத்தாமே சமைப்பார். பரிமாறவும் செய்வார். உடல்நிலை சரியில்லாதவர்களின் அருகே இருந்து சேவை செய்வார்.  தாங்கள் வருவதால் அன்னை படும் சிரமங்களைக் கண்டு பக்தர்கள் வருந்தும்  போது,அவரோ அத்தகைய சேவை செய்வதற்கு வாய்ப்பு கிடைத்ததாகக் கூறி மகிழ்ச்சி அடைவார். ஜெயராம் பாடியில் அமைதியும், சுதந்திரமும் கிராம வாழ்க்கைக்கே உரியதான சில பழக்கவழக்கங்களும் அன்னைக்கு மிகவும் பிடித்திருந்தது. இதனால் சில வேளை ஓராண்டிற்கும் மேலாகவும் கூட அவர் கிராமத்திலேயே தங்கினார். ஆனால் கிராமத்து வீட்டில் இருந்த கடினமான வேலைகளும்,வங்காள கிராமங்களில் அந்தக்காலத்தில்  பரவியிருந்த மலேரியாவும் ,மருத்துவ வசதி இல்லாத நிலையும்  அவரை உத்போதனில் வசிக்கும்படிச் செய்தன. அங்கே அவரது சுதந்திர வாழ்வு சற்று பாதிக்கப்பட்டாலும் பணப்பொறுப்போ வேலைப்பளுவோ  இல்லை.
கல்கத்தாவில் சுவாமி சாரதானந்தர் உத்போதன் வீட்டைக்கட்டியது பற்றியும் அதில் அன்னை 1909 மே-23 ஆம் நாள் முதன்முதலாகக் குடியேறியது பற்றியும் ஏற்கனவே கண்டோம்.1909 டிசம்பரில்இந்த வீட்டோடு சேர்ந்த  நூறு அடி மனையை வாங்கி ,அதனை மேலும் விரிவு படுத்தினார் சவாமிகள். 1915-இல் மேலும் ஓரிரு அறைகள் கட்டப்பட்டன. மாடியில் வடக்குப்பக்கத்தில் இருந்த கூடம் அன்னையின் அறையாகவும் பூஜையறையாகவும்  அமைக்கப்பட்டது. இந்த வீட்டில் அன்னை தமது உறவினர்,துறவிச் சீடர்கள் மற்றும் குருதேவரின் சிஷ்யைகளும் தமது துணைவிகளுமான பக்தைகளுடன் வாழ்ந்தார்.
 அன்னை உத்போதன் வீட்டில் வாழ்ந்த போதெல்லாம் சுவாமி சாரதானந்தர் அவரது செலவுகளை ஏற்றுக்கொண்டார். ஜெயராம்பாடியில் வாழும் போது அவ்வப்போது அவர் கொஞ்சம் பணம் அனுப்பினாலும் தம் குடும்பத்திற்கான செலவை அன்னையே சமாளித்துக் கொள்வார். தீட்சை தரும் போது சீடர்கள்  கொடுக்கும் காணிக்கையும் நெருங்கிய பக்தர்கள் தரும் அன்பளிப்பும் தான் அன்னையின் குடும்பத்திற்கான  வருமானமாக இருந்தது. அன்னையின் சீடர்கள் பெரும்பாலும் மாணவர்களாகவும் நடுத்தர வகுப்பினராகவும் இருந்ததால் ,அவர்கள் தரும் காணிக்கை அதிகமாகவோ தொடர்ந்தோ இருக்காது. சுவாமி விவேகானந்தரின் சிஷ்யை யான மிசஸ் ஓலிபுல் மதந்தோறும் அமெரிக்காவிலிருந்து இருபத்தைந்து ரூபாய் அனுப்பி வந்தார். பிற்காலத்தில் அன்னைக்கு மாதம் நூறு ரூபாய்க் குறையாமல் செலவழிந்தது. அன்னையின் தேவை மிகக் குறைவு தான். ஆனால் குறைந்தது பத்து பதினைந்து பக்தர்களாவது எப்போதும் அவருடன் தங்கியிருப்பார்கள். அதோடு அன்னையை எதிர்பார்த்து வாழ்ந்த ராது,அவளுடைய தாய், ஆதரவில்லாத வேறு பல உறவினர்கள் மற்றும் ஊராருக்காகவும் தான் அதிக பணம் தேவைப்பட்டது. அன்னையின் கடைசிக் காலத்தில் ராதுவின் தீராத நோயின் காரணமாகவும் அன்னையின்  செலவு அதிகரித்தது.
கோயால்பாரா ஆசிரமத்தைப்பற்றி அங்கங்கே குறிப்பிட்டோம். ஜெயராம்பாடியிலிருந்து விஷ்ணுபூர் செல்லும் போது அன்னை இந்தக் கிராமத்தில் தங்கி இளைப்பாறிச் செல்வார். எனது வரவேற்பைறை என்று அதனைக்கூறுவார். நாளடைவில் அது ராமகிருஷ்ணமடத்தின் ஒரு கிளையாக உருவெடுத்தது.1911-ஆம் ஆண்டில் அங்கு அன்னையே குருதேவரின் படத்தையும் தமது படத்தையும் பிரதிஷ்டை செய்தார். அன்னை தங்குவதற்கென்று அந்த ஆசிரமத்தின் ஒரு பகுதியில் குடிசை ஒன்று கட்டப்பட்டது. ராதுவின் உடல்நலத்திற்காக ஓய்வு தேவைப்படும் போது, அன்னை அந்தக் குடிசையில் தான் தங்குவார்.
 இந்த ஆசிரமத்தில் வாழ்ந்தவர்கள், கிராமத்தில் அன்னை வாழும்போது அவரைப் பாதுகாக்கவும்,அவருக்குச் சேவை செய்வதற்குமான சேவகர்களாகவே தங்களைக் கருதினர். அன்னையின் வீட்டில்  விழாக்களோ, வீட்டைப்பழுதுபார்ப்பது போன்ற வேலைகளோ இருந்தால் இந்த ஆசிரமத்தின் பிரம்மசாரிகளே அவற்றை எல்லாம் செய்தனர். அன்னையின் வீட்டிற்கு வேண்டிய காய்கறிகளை வாங்கி வரவும்,அன்னை கூப்பிட்டக் குரலுக்கு ஓடிவரவும் அவர்கள் தயாராகக் காத்திருந்தனர். அன்னைக்கு இந்தச் சீடர்களிடம், மற்றயாரிடமும் இல்லாத பரிவும் பாசமும் இருந்தது.

No comments:

Post a Comment