Saturday, 22 June 2019

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு-பாகம்-117

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு-பாகம்-117

யாராவது இறந்துவிட்டால் அன்னை பிழியப்பிழிய அழுவது ஒன்றும் புதியவிஷயம் அல்லவே!அனைவரையும்ஆச்சரியத்தில் ஆழ்த்தியது அன்னை தமது தம்பியான வரத பிரசாதரின் மரணச்செய்தியை ஏற்றுக்கொண்ட விதம் தான். அவர் நிமோனியாவின் காரணமாக ஜெயராம்பாடியில் படுத்தபடுக்கையாக இருந்தார். இது அன்னைக்குத்தெரியும்.அவ்வப்போது, வரதன் எப்படி இருக்கிறான்? என்று விசாரித்தும் வந்தார்.ராமகிருஷ்ணபோஸ் மறைந்த ஒரு வாரத்திற்குப் பின் வரதர் காலமானார். இந்த விவரமும் அன்னைக்குத் தெரிவிக்கப்படவில்லை.ஆனால் அதிசயத்திலும் அதிசயமாக வரதர் இறந்த மறுநாள் அன்னையின் கேள்வியே வேறுவிதமாக இருந்தது. என்ன, வரதன் போய்விட்டான் போலிருக்கிறதே! அந்த வராந்தாவில் நின்று என்னை உற்று நோக்கிக் கொண்டிருப்பதாக கண்டேன்” என்று மிகச் சாதாரணமாகச் சொன்னார். அதன் பின்னரும் உண்மையை மறைக்க முடியவில்லை. விவரத்தைக்கூறினார். அன்னை சிறிதுநேரம் அழுதார். அவ்வளவு தான். அதன் பின் அதைப்பற்றிக் கவலைப்பட்டதாகவே தெரியவில்லை. ஓரிருநாட்களுக்குப் பின் பிரம்மசாரி கோபேஷிடம் ஓ கோபேஷ், சேதி தெரியுமா? வரதன் போய்விட்டான் என்று யாரோ மூன்றாம் மனிதனைப் பற்றிய விஷயம் போல் கூறினார். கோபேஷ் குழம்பிப்போய் நின்றார். தம் அன்பிற்குரிய தம்பியின் மரணச்செய்தியை இவ்வாறு எந்தப் பற்றுமின்றி அன்னையால் சொல்ல முடியும் என்பதை அவரால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. எனவே கேள்விக்குறியுடன் அன்னையின் முகத்தையே பார்த்துக்கொண்டு நின்றார். உடனே அன்னை இன்னும் சற்று அழுத்தமாக புரியவில்லையா? அவன் தான், ஷேதியின் தகப்பன் தான். இறந்து விட்டான். என்று சொன்னார். மரணச்செய்தி அளித்த கவலையைவிட என்னைப் பெருங்கவலையில் ஆழ்த்தியது அன்னையின் குரலில் சோகமோ வருத்தமோ காணப்படாததுதான் என்று எழுதுகிறார் கோபேஷ்.அன்னை தம் மனத்தை உலகிலிருந்து பிரிக்கத்தொடங்கி விட்டார். என்பதற்கு இந்த நிகழ்ச்சி ஓர் ஆரம்பமாக அமைந்தது. இதன் பிறகு அவரது சொல்லும் செயலும் இந்த மனநிலையைப் பிரதிபலிப்பதாக அமைந்தது.
கௌரிமா கங்கையில் குளித்துவிட்டுச் செல்லும் வழியில் தினமும் வந்து அன்னையைக்காண்பது வழக்கம். அவரது அருகில் சிறிதுநேரம் அமர்ந்து நலம் விசாரித்து விட்டுச் செல்வார். அது போல இப்போதும் வந்தார். ஆனால் அன்று அவர் நுழைந்ததம் அன்னை தினமும் இங்கு வந்து ஏன் தொந்தரவு கொடுக்கிறாய்? எதற்கு வருகிறாய்? எதைப்பார்க்க வருகிறாய்? என்று நறுக்கென்று கேட்டார். அன்னையின் இந்த க்கேள்விகளால் அதிர்ந்து போன கௌரிமா, அம்மா, நீங்கள்படுத்தபடுக்கையாக இருக்கிறீர்கள் எங்களால் நிம்மதியாக இருக்க முடியுமா? எப்போதும் உங்கள் அருகிலேயே  இருக்க மனம் விழைகிறது. ஆனால் நேரம் கிடைப்பதில்லை..அதனால்  தினமும் ஒரு தடவையாவது வந்து போகிறோம் என்று தாழ்ந்த குரலில் கூறினார். ஆனால் அன்னை அதே தொனியிலேயே என்னிடம் வருவதால் என்ன லாபம்? யாருடைய பிரச்சனைகளையும் இனி என்னால் கேட்க முடியாது? என்று விறைப்பாக கூறினார். பின்னர் சிறிது அமைதியாகி, அப்படியே வந்தாலும் என் அறையினுள் வராதே. வாசலிலிருந்தே பார்த்துவிட்டுப்போய்விடு. என்னைப்பேச வைக்காதே” என்றார். கௌரிமா என்ன சொல்வார்! கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியாமல் அழுதபடியே கனத்த மனத்துடன் சென்றார். அதன் பிறகும் அவர் தினமும் வந்தார். அன்னை கூறியது போலவே வாசலுக்கு வெளியில் அமர்ந்து கொள்வார். மனத்துயரைக் கண்ணீர் மொழியில் தெரிவித்தவாறு ஒரு மணி நேரம் வரை இருந்துவிட்டு எழுந்து செல்வார். அன்னை தினமும் இதைக் கண்டார். ஆனால் ஒரு வார்த்தைகூட பேசவும் இல்லை. அவரது நிலையில் எந்த மாற்றமும் இல்லை. 
இவ்வாறு ஒன்றன் பின் ஒன்றாகச் சம்பவங்கள் தொடர்ந்தன.ஆனால் ராதுவையும் விலக்கிவிடுவார் என்பதை யார்தாம் நினைத்திருக்க முடியும்? அதுவும் நடக்கவே செய்தது. ஒரு நாள் பக்தர் ஒருவர் அன்னையிடம் அம்மா உங்கள் உடல்நிலை இப்படியாகிவிட்டதே, இவ்வளவு பலவீனமாக   நான் உங்களைக் கண்டதே இல்லை, அதற்கு அன்னை ஆம், மகனே, உடம்பு மிகவும் பலவீனமாகி விட்டது. இந்த உடம்பின் மூலம் குருதேவரின் பணிகள் என்னென்ன நடைபெற வேண்டுமோ அவை முடிந்து விட்டதென்று தோன்றுகிறது. இப்போது என் மனம் அவரையே நாடுகிறது. வேறெதையும் விரும்பவில்லை. பாரேன் ராதுவை எவ்வளவு நேசித்தேன், அவளது மகிழ்ச்சிக்காகவும் வசதிக்காகவும் எவ்வளவு பாடுபட்டிருப்பேன், ஆனால் இப்போது எல்லாம் மாறிவிட்டது. அவள் என் அருகில் வந்தால் என்னவோ போலிருக்கிறது., இவள் ஏன் இங்கு வரவேண்டும்? என் மனத்தைக் கீழே இழுக்க ஏன் முயலவேண்டும். என்ற எண்ணம் தோன்றுகிறது. தமது பணிகளுக்காக குருதேவர் என் மனத்தை இவற்றால்  எல்லாம் கட்டி வைத்திருந்தார். இல்லாவிடில் அவர்போனபிறகு என்னால் வாழ முடிந்திருக்குமா என்ன! என்றார். சொன்னது மட்டும் அல்ல, அப்படியே செய்தும் விட்டார். ஒரு நாள் ராதுவை அழைத்து, நீ இனிமேல் இங்கேயிருக்கவேண்டாம், ஜெயராம்பாடிக்குப்போய் விடு என்றார். அருகிலிருந்த சரளா, அம்மா என்ன சொல்கிறீர்கள்? ராது இல்லாமல் உங்களால் இருக்க முடியாதே, என்றாள். அதற்கு அன்னை உறுதியான குரலில், நிச்சயமாக முடியும், என் மனத்தை அவளிடமிருந்து விலக்கிக்கொண்டு விட்டேன் என்றார்.

No comments:

Post a Comment