Friday, 21 June 2019

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு-பாகம்-72

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு-பாகம்-72

லட்சுமி தேவி குருதேவரின் அண்ணனான ராமேசுவரரின் மகள். இவரைப் பல இடங்களில் நாம் கண்டு வருகிறோம். இவர் பருவம் எய்தும் முன்னரே விதவையாகி விட்டார். அன்னையை விட வயதில் இளையவர். அன்னை தட்சிணேசுவரத்தில் தங்கியிருந்தபோது,அவருடன் நீண்டகாலம் அவருக்குத் துணையாகவும் ஆன்மீக சாதனைகள் பழகியவாறும் வாழ்ந்தார். பிற்காலத்தில் அன்னை கல்கத்தாவில் வாழத்தொடங்கிய போது அவர் பெரும்பாலும் தன் உறவினரோடு தட்சிணேசுவரத்திலோஅவருடைய கிராமத்திலோ புண்ணியத்தலங்களிலோ வாழ்ந்தார். அவர் பேச்சாற்றல் மிக்கவர். கேட்போர் தங்களை மறந்து கேட்கும் படி குருதேவரின் வரலாற்றைக் கூறுவார். அவரைப்போலவே பேச்சையும் சிரிப்பையும் நடையுடை பாவனைகளையும் நடித்துக் காட்டுவார்.தெய்வீகப் பாடல்களைப் பாடியபடி அற்புதமாக ஆடவும் செய்வார்.அவ்வாறு பாடும் போதும்  ஆடும் போதும் பரவச நிலையை அடைவார். நல்ல நினைவாற்றலும் புராணக் கதைகளைத் திறம்படச்  சொல்லும் ஆற்றலும் பெற்றிருந்தார். பிற்காலத்தில் அவர் பலருக்கு தீட்சை தந்தார். இறுதிநாட்களில் புரியில் தங்கியிருந்து அங்கேயே காலமானார்.
கோபாலேர்மா வயதில் அன்னையைவிடப் பல ஆண்டுகள் மூத்தவர்.இவரும் ஒரு விதவை. பாலகோபாலனைத் தம் இஷ்ட தெய்வமாக வழிபட்டு வந்தார்.உன்னதமான தெய்வீக அனுபவங்கள் பெற்றவர். குருதேவரை பாலகோபாலனாகவும் ,தம்மை அவரது தாயாகவும் பாவித்தார். எனவே அன்னையை மருமகளாகப் போற்றினார்.தட்சிணேசுவரத்திற்கு வரும்போதுஅன்னையுடன் தங்குவார். அன்னை கல்கத்தாவில் தங்கும்போது அங்கே சென்று தரிசிப்பார்.இவர்களைத் தவிர குருதேவரின் இல்லறச் சீடர்களான பலராம் போஸ்,மகேந்திரநாத் குப்தா போன்றோரின் மனைவியருடனும் அன்னை நெருக்கமான உறவு கொண்டிருந்தார்.
இவர்கள் ஒவ்வொருவரும் அன்னையை தேவியாகவே கண்டனர்.அன்னையிடம் பக்தி செலுத்தினார். அன்னைக்காக எதையும் செய்யச் சித்தமாக இருந்தனர். அவரது அருளால் தங்கள் ஆன்மீக வாழ்க்கையில்  முன்னேறினர். சுருங்கச் சொன்னால் அன்னையெனும் மாபெரும் ஜோதியின் அருகில் சிறுசிறு தீபங்களாக விளங்கினர். ஆனால் இருளில் பின்னணியில் அல்லவா.ஒளியின் அழகு நம் கண்ணைக் கவர முடியும்! அன்னை என்னும் ஆன்மீகப் பெரும் ஜோதிக்கு அத்தகையதொரு லௌதீக இருட்பின்னணியாகத் திகழ்ந்தார்.அவரது குடும்பத்தினர் பணத்தையே குறியாக க்  கொண்டிருந்த அவர்கள் அனைவரையும் அனுசரித்துக் கொண்டு ஓர் அன்புச் சகோதரியாக, அத்தையாக, தாயாக அன்னை வாழ்ந்த பாங்கினை இப்போதுகாண்போம்.
21-குடும்பத்தலைவி
அன்னைக்கு இயற்கையின் மீதும் அதன் வனப்பிலும் இருந்த ஈடுபாடு நமக்குத் தெரிந்ததே.சிறு வயதிலிருந்தே ஜெயராம்பாடியின் பரந்த வயல்வெளிகளிலும்  ஆற்றங்கரைகளிலும் பறந்து திரிந்தவர்.அவர் கல்கத்தாவின் சந்தடியிலும் நெருக்கடியிலும் வாழ்வது என்பது அவரைப் பொறுத்த வரைஒரு சிறைவாசம் போல் தான்.பக்தர்களுக்காக அவ்வப்போது சென்றாலும் விரைவில்  கிராமத்திற்குத் திரும்பிவிடுவார்.பொதுவாக கிராமத்தில் அவர் முற்றிலும் தம்மைத் துணியால் போர்த்திக் கொள்வதோ  அவ்வளவு ஒதுங்கியிருப்பதோ கிடையாது. கல்கத்தா வாழ்க்கையிலிருந்து ஒரு மாறுபட்ட பெண்ணாகவே அவர் கிராமத்தில் வாழ்ந்தார். ஒரு முறை பக்தர் ஒருவர் அன்னை கோயால்பாராவிலிருந்து  ஜெயராம்பாடி செல்வதற்குப்  பல்லக்கு ஏற்பாடு செய்தார். அதற்கு அன்னை இதோ பாரப்பா,இது கிராமம், இங்கே நான் சுதந்திரமாக வாழ விரும்புகிறேன். கல்கத்தாவின்  சிறைக் கூண்டிலிருந்து  மீண்டு இங்கே வரும்போது தான்  நிம்மதிப் பெருமூச்சு விடுகிறேன்.அங்கே நான் எச்சரிக்கை யுடன் என்னை ஒடுக்கிக்கொண்டு வாழ வேண்டியுள்ளது.இங்கேயும் உங்கள் இஷ்டம்போல் கடிகாரத்தின் பின்னால் ஓட என்னால் முடியாது.நீ   வேண்டுமானால் சரத்திற்கு இதை எழுதிவிடுஎன்று கூறினார். கிராமத்தின் எளிய வாழ்வை அன்னை அவ்வளவு நேசித்தார். இத்தனைக்கும் அந்தக்காலத்தில் அங்கெல்லாம் மலேரியா ஒரு நிரத்தரமான நோயாக இருந்தது. அதையும் அன்னை பொருட்படுத்தவில்லை.
அன்னை தங்களுடன் கிராமத்தில் வாழ்வது அந்த மக்களுக்கு ஓர் இனிய அனுபவமாக இருந்தது.அத்துடன்  அன்னையைக் காண பக்தர்கள் வருவதால்  பழம், காய்கறி,பால்,மீன் முதலியவற்றின்  வியாபாரம் பெருகியது. இது கிராம மக்களின் ஏழ்மை வாழ்வில் வளம் சேர்த்தது. கருணைக்கடலான அன்னை இந்தக் காரணத்திற்காகவும் ஒரு வேளை கிராமத்தில் வாழ எண்ணியிருக்கலாம்.
கிராமம் என்று நாம் குறிப்பிடுவது ஜெயராம்பாடியையே.அன்னை காமார்புகூரில் தங்கவில்லை.குருதேவர் அவதரித்த அந்த கிராமத்தின் மீது அன்னைக்கு மிகுந்த மதிப்பு இருந்தது. அங்கே குருதேவரின் நினைவாக ஓர் ஆலயம் எழுப்ப வேண்டும் என்றும் அவர் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். கணவரின் ஊர் என்ற முறையில் அவருக்கு வாழ்க்கைப்பட்டு அந்த ஊரில் வாழ்ந்தவர் என்ற வகையிலும் அவர் காமார்புகூரையே தம் சொந்த ஊராக நினைத்தார். ஒரு முறை காசிக்கு ச் சென்ற போது சம்பிரதாயப்படி ஒரு சடங்கைச் செய்தார். அப்போது புரோகிதர்கள் ஊரின் பெயைரைக் கேட்டதற்கு அன்னை    காமார்புகூர் என்றே கூறினார். தமக்கு குருதேவரின் பங்காகக் கிடைத்த அந்த ச் சின்னஞ்சிறு குடிசையில் வேறு யாரையும் அனுமதிக்காமல்,தம் சொந்தப் பணத்திலேயே அவ்வப்போது அதைப் பழுதுபார்த்தும்,நாள்தோறும் பெருக்கி விளக்கேற்றித் தூய்மையாக வைத்துக் கொள்ளும் படியும் பார்த்துக்கொண்டார்.
இப்படி இருந்தும் அவர் நிலையாக வந்து தங்குகின்ற இடமாக காமார்புகூர் அமையவில்லை. ஜெயராம்பாடியே அந்தப் பேற்றினைப் பெற்றது. காமார்புகூரில் உறவினர்களும் ஊர் மக்களும் ஆன்மீக வாழ்க்கைக்குப் பிரதிகூலமான ஒரு சூழ்நிலையை உருவாக்கியது தான் இதற்கு முக்கிய காரணம் என்றாலும் அதற்கு வேறொரு காரணமும் இருந்தது.அது அன்னையின் கடமையுணர்வும் கருணையும் தாம் குடும்பத்தில் வாழ்வதையும் தம்பியர் மற்றும் உறவினரிடம் பாசத்துடன் பழகுவதையும் யாராவது குறை கூறும் போது அன்னை, அவர்கள் என்னை எப்படிப் புரிந்து கொள்வார்கள்? பிறந்த குடும்பத்தை நான் கவனித்தேயாக வேண்டும்.அதனால் தான் பெற்றோர்,தம்பியர், நாத்தனார்கள்,மருமக்கள் என்று குடும்பத்தினர் ஒவ்வொருவருக்காகவும் துடிக்கிறேன்.அவர்களிடம் பட்ட கடனை அடைத்தே தீர வேண்டும். இல்லாவிடில் அவர்களைப் பற்றி நான் ஏன் கவலைப்படுகிறேன்? குருதேவர் கூட தமது தாயைப் பராமரித்தார். அண்ணன் பையனானராம்லாலுக்கு தட்சிணேசுவரக்கோயிலில் வேலை வாங்கிக் கொடுத்தார் என்று பதில் கூறுவார்.
-
தொடரும்...
-


No comments:

Post a Comment