அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு-பாகம்-37

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு-பாகம்-37

பிற்காலத்தில் அன்னை கூறினார், ஓர் இரவில் எங்களுக்குள் மிகுந்த நெருக்கமும் ஈடுபாடும் ஏற்பட்டுவிட்டது. விடைபெறும் போது கண்ணீர்  விட்டு அழுதேன். வாய்ப்புக் கிடைக்கும் போது தட்சிணேசுவரத்திற்கு வந்து போகும் படி திரும்பத்திரும்பக் கூறி அவர்கள் சம்மதித்த பின்னரே அவர்களை விட்டு மிகவும் வேதனையுடன்  பிரிந்தேன். அவர்களும் எங்களுடன் நீண்ட தூரம் வந்தார்கள். அந்தப்பெண்  அருகிலிருந்த வயலிலிருந்து சிறிது பச்சைப்ப பட்டாணியைப் பறித்து என் முந்தானையில் முடிந்துவிட்டு. அழுதவாறே என்னிடம் சாரதா என் மகளே இரவு பொரி சாப்பிடும் போது இதையும் சேர்த்துக்கொள் என்று கூறினாள். கொடுத்த வாக்கையும் அவர்கள் காப்பாற்றினர். என்னைப்பார்க்க பல முறை இனிப்பு போன்ற பண்டங்களுடன் தட்சிணேசுவரத்திற்கு வந்தனர். அவரும்(குருதேவர்) என்னிடமிருந்து எல்லா விஷயங்களையும் கேள்விப்பட்டு அவர்கள் வரும்போது, அன்புடன் அவர்களை வரவேற்று உபசரித்து ஒரு மருமகனைப்போன்றே நடந்து கொண்டனர்.
இப்போது எளிமையானவர்களாகவும் நல்லவர்களாகவும் இருந்தாலும் என் கொள்ளைக்காரத் தந்தை ஒரு காலத்தில் பல கொள்ளைகளைத் செய்திருக்க வேண்டும் என்று தான்  நினைக்கிறேன்.
 அன்பின் ஆற்றல் இத்தகையது. அன்பில் நிலைபெற்ற ஒருவரது முன்னிலையில் பகையுணர்வுகள் ஒழிந்து விடுவதாக யோகசூத்திரம் கூறுகிறது. அவ்வாறே அன்பின் திருவுருவான அன்னையின் திருமுன்னர் கொள்ளையர் தங்கள் கொடுமை ஒழிந்து திருந்தினர்.
 இந்த நிகழ்ச்சியைப்பற்றிப் மற்றவர்களிடம் பேசுவதை அன்னை தவிர்த்தார். அதன் காரணம்தான் எத்தனை உயர்வானது. பின்னாளில் ஒரு நாள் யாரோ இந்த நிகழ்ச்சியைப்பற்றிக் கேட்ட போது அன்னை கூறினார். இந்த நிகழ்ச்சியை மீண்டும் மீண்டும் சொல்லி எப்படிப் பெரிதாக்குகின்றனர் பார் . அது பற்றி நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை. அப்போது என்னுடன் லட்சுமி, சிவராம் மற்றும் பலர் இருந்தனர். இந்த நிகழ்ச்சியைச் சொன்னால்  அவர்கள் என்னைத் தனியாக விட்டுச் சென்றதையும் சொல்ல வேண்டிவரும். அப்போது அவர்களின் மனம் எவ்வளவு வேதனையுறும்! என்ன இருந்தாலும்,அவர்களும் என் பிள்ளைகள். அவர்களைச் சிறுமைப்படுத்துவது நியாமமாகுமா?அதனால் தான் இந்த நிகழ்ச்சியைப் பற்றிச் சொல்வதை நான் தவிர்க்கிறேன். இதை யாரும் புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள். பிறர் மனம் புண்படாமல் இருப்பதில் அன்னையின் கவனம் தான் எத்தகைய சிறப்பாக அமைந்திருக்கிறது.
 அன்னையின் வாழ்வில் இந்தப் பதின்மூன்று வருடங்களிலும் நடைபெற்ற நிகழ்ச்சிகளை முடிந்த அளவு தொகுத்துக் கூறினோம். மீண்டும் அவரது வாழ்வைத் தொடர்வோம்.
-
அன்னையின் ஆயத்தமும்
 குருதேவரின் ஆயத்தமும்.
-
குருதேவரின் மூன்று பரிமாணங்களையும் அவற்றின் லட்சிய நிறைவுக்காக அன்னையின் வாழ்க்கை அவருடன் இணைந்தது என்பதையும் கண்டோம்.குருதேவருக்கு ஒரு உத்தம பத்தினியாக வாழ்ந்து, அவரது லட்சியங்களை ஏற்றுக்கொண்டு இல்லற லட்சியத்தை வாழ்ந்து காட்டியதன் மூலம்  அவரது நிறைமனித பரிமாணத்தை நிறைவு செய்தார் அன்னை. குருதேவரின் அடுத்த பரிமாணம் குருவரர்-தலை சிறந்த குரு.
இந்த ப்பரிமாணத்தை நிறைவு செய்ய அன்னை குருதேவியாக வேண்டும்.
“ஞானத்தை வழங்க பிறந்தவள்” ஆகிய அன்னை அதனைப் பிறருக்கு வழங்க வேண்டும். குருதேவரின் அவதார வசிஷ்டர்” என்ற மற்றொரு பரிமாணத்தை நிறைவு செய்ய  அன்னை அவரது அருளின் வடிவாக பிரபஞ்சம்” தழுவிய தாய்மையின் பொலிவாக விளங்க வேண்டும். அவற்றிற்கு ஏற்றாற் போல்  இந்தக் காலக்கட்டத்தில், அதாவது தட்சிணேசுவர நாட்களின் இறுதிப் பகுதியில் அன்னையிடம் மூன்று முக்கிய வெளிப்பாட்டை க் காண்கிறோம்.1) பிராத்தனை வாழ்வு.2) குரு நிலை.3) தாய்மையின் பொலிவு அன்னையின் அவதார ப்பணிக்கு வித்தாக அமைந்த இந்த மூன்றையும் விளக்குகின்ற  சில நிகழ்ச்சிகளை  இப்போது காண்போம்.
-
தொடரும்...
-



Comments

Popular posts from this blog

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு

விவேகானந்தரின் மரணத்தில் உள்ள ரகசியம் என்ன?

Gemini AI and I Scientific Research Papers-6