Friday, 21 June 2019

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு-பாகம்-70

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு-பாகம்-70

அன்னை பொதுவாக ஆண் பக்தர்களுடன் நேருக்குநேர் பேசுவதில்லை.முகத்தைத்  திரையிட்டு மறைத்தபடி, சற்றுத் தொலைவில் நின்று மிக மெல்லிய குரலிலேயே பேசுவார். அப்போதெல்லாம் கோலாப்மா தான் அன்னையின் ஆசிகளையும் பக்தர்களின் கேள்விக்கான விடைகளையும்  அந்த பக்தர்களுக்குக்  கூறுவார். அன்னையின் வயதான காலத்தில் வண்டியில் ஏற இறங்க அவரே உதவி செய்தார்.நடந்து செல்லும் போது அன்னை கோலாப்மாவின் பின்னால் தான் செல்வார்.பக்தர்களின் வீட்டிற்குப்போவது என்றால் கோலாப்மாவைத் தவறாமல் உடன் அழைத்துச் செல்வார். அவர் இல்லைஎன்றால் போக தயங்குவார்.அவள் இல்லை யென்றால்  நான் எப்படிப் போவேன்.? அவள் உடனிருந்தால் எனக்கு ஒருவகையான தைரியமே வந்துவிடுகிறது என்பார் அன்னை.
 கோலாப்மா சிறந்த ஆன்மீக சாதகி, உயர்ந்த ஆன்மீக அனுபவங்கள் பெற்றவர்.காலையிலும் மாலையிலும் பல மணிநேரங்கள் தியானத்தில் கழிப்பார். அன்னை அவரது மனத்தூய்மையைப்பற்றி மிகவும் புகழ்ந்து பேசுவார்.ஜபம் செய்வதில் பூரண நிலையை அவர் அடைந்துவிட்டதாகக் கூறுவார்.சில பெண்களிடம் காணப்படுகின்ற அளவுக்கதிகமான நாணம் அவரிடம் இல்லை. இதனால் நாணமே உருவான அன்னைக்கும் பக்தர்களுக்கும் இடையே ஒருபாலமாக இருப்பதற்கு அவர் மிகவும் பொருத்தமானவராக இருந்தார்.
 எதையும் வெளிப்படையாகப்பேசும் இயல்புள்ளவர் கோலாப்மா. யாராக இருந்தாலும் சொல்ல வேண்டியதை நறுக்கென்று அவர் எதிரிலேயே சொல்லிவிடுவார்.இதற்காக அன்னை அவரைச் சிலநேரங்களில் கண்டிப்பதும் உண்டு.கோலாப்மா சொல்வது உண்மையென்றாலும் பிறர் மனம் புண்படுகின்ற உண்மைகளைப்பேசக்கூடாது. அப்படிப்பட்ட உண்மைகளைப்பேசுவது சில நேரங்களில் பாவமாகவே மாறிவிடும் என்றும் வலியுறுத்துவார் அன்னை. கோலாப்மா நறுக்கென்று பேசுவார்.  அனைவரையும் அதிகாரம் செய்வார். ஆனால் அவரது இதயம் மிகவும் இளகியது என்பதை அனைவரும் அறிந்திருந்தார்கள். அவரது சேவை மனப்பான்மை அற்புதமானது. குளிக்கும் படித்துறையில் யாராவது அசிங்கம் செய்திருப்பதை க் கண்டால் உடனே அந்த இடத்தைக்கழுவி சுத்தம் செய்வார்.
கோலாப்மா தன் பேரனிடமிருந்து மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை உதவியாகப் பெற்று வந்தார். அதில் பாதியைத் தமது செலவிற்காக உத்போதன் அலுவலகத்தில் செலுத்துவார். மீதியை ஏழைகளுக்கு அளித்து உதவுவார். அன்னையின் பக்தர்களான மருத்துவர்களை ஏழை நோயாளிகளின்  வீடுகளுக்கு அழைத்துச்சென்று இலவசமாகச் சிகிச்சை செய்வார்.
உத்போதனில் அவரது அன்றாட வாழ்க்கை இவ்வாறு ஒரு பெரும் சேவையாகக் கழிந்தது.வீட்டின் எல்லா காரியங்களையும் அவர் கவனித்துக் கொள்வார். பக்தர்களுக்குப் பிரசாதம் வழங்குவார்.அன்னையுடன் தங்கியிருக்கும் துறவியருக்குஒரு தாய் பொல் வேண்டியதைச் செய்வார். அன்னையுடன் பேரன்பு கொண்டு அவருக்காகவே வாழ்ந்த  அவர், அன்னை மறைந்து நான்கு ஆண்டுகளுக்குப் பின் 1924 டிசம்பரில்  காலமானார்.
அன்னையின்  துணையாக  வாழ்ந்தவர்களுள்  நெருக்க மான  மற்றொருவர்  யோகின்மா . இவரும் ஆரம்பகாலத்தில்  இருந்தே அன்னையுடன் வாழ்ந்தார். யோகினும்  கோலாப்பும் என் வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையையும் அறிவார்கள் என்று அன்னை கூறுவதுண்டு.அன்னையின் துணைவியருள்  யோகின்மா மிக கம்பீரமானவர். ஆன்மீகத்தில் மிகவும் உயர்ந்தவர். பெண்களுள் யோகின் ஞானி,கணநேரத்தில் மலர்ந்து  கருகிவிடுகின்ற சாதாரண மலரல்ல. அவள் நிதானமாக மலர்ந்து நெடுங்காலம் மணம் வீசும் ஆயிரம் இதழ்களைக் கொண்ட தாமரை என்று அவரைப்பற்றி குருதேவர் கூறியுள்ளனர். பிருந்தாவனத்தில் அன்னையுடன் வசித்தபோது அடிக்கடி அவருக்கு சமாதி அனுபவம் உண்டாயிற்று. ஒரு நாள் பிருந்தாவனத்தில்  லாலாபாபுவின்  கோயிலில் தியானத்தில்  அமர்ந்தபொழுது ஆழ்ந்த சமாதி நிலையை அடைந்துவிட்டார். இரவில் பூஜாரி வந்து கோயிலை மூட ஆரம்பித்த பிறகுகூட அவருக்குச் சுயநினைவு வரவில்லை.பிறகு இந்த அனுபவத்தைப்பற்றி அவர்,அந்த நிலையில் உலகம் என்ற ஒன்று இருக்கின்ற  உணர்வே என்னிடமிருந்து மறைந்துவிட்டது என்று கூறினார்.இன்னொரு முறை  தனது அனுபவத்தைப்பற்றி  அப்போது நான் என்னைச் சுற்றியிருந்த எல்லா பொருட்களிலும் என் இஷ்டதெய்வத்தைக் கண்டேன். இந்த நிலை மூன்று நாட்கள் நீடித்தது என்றார்.
அவர் ஒருஜமீன்தாருக்கு வாழ்க்கைப்பட்டவர்.ஆனால் அவரது திருமணவாழ்க்கை மகிழ்ச்சிகரமாக அமையவில்லை. எனவே இளமையிலிருந்து துன்பகரமான சூழ்நிலையில்  பொதுவாகத் தன் பெற்றோருடனே வசித்து வந்தார். பலராம்போஸ் அவரை குருதேவரிடம் அழைத்து வந்தார். அன்னையின் சமவயதுடையவராக இருந்தாலும் அப்போதிலிருந்து அன்னையின் நம்பிக்கைக்குரிய தோழியாகி விட்டார். தட்சிணேசுவரநாட்களில் அன்னையின் கூந்தலைப்பின்னிவிடுவது யோகின்மாதான்.அன்னைக்கு அவரது பின்னல் மிகவும் பிடிக்கும்.
அன்னையின் தீர்த்த யாத்திரைகளில் யோகின்மாவும் கலந்து கொண்டார். தம்முடைய வயது முதிர்ந்த தாயையும் பேரக்குழந்தைகளையும் கவனித்துக் கொள்ள வேண்டியிருந்ததால் அவர் பாக்பஜாரில் இருந்த தன் வீட்டிலேயே வசித்துவந்தார். ஆனால் நாள்தோறும் காலையில் அன்னையிடம் வருவார்.சமையலுக்கு வேண்டிய காய்கறிகளை நறுக்கித் தருவார். மற்ற சிறிய வேலைகளைக் கவனிப்பார்.அதன் பிறகு வீடு சென்று தாய்க்கும் பேரன்களுக்கும் சமையல் செய்வார். மீண்டும் அன்னையிடம் வந்து தம்மாலான சேவை செய்து விட்டு இரவில் வீடு திரும்புவார்.
 யோகின்மா குடும்பத்துடன் தங்கியிருந்தாலும் தந்திர சாஸ்திரம் கூறுகின்ற பூரணாபி’ஷேகம் மற்றும் வேதங்கள் கூறுகின்ற விரஜா ஹோமம் முதலிய சடங் குகளை நிறைவேற்றி முறைப்படி சன்னியாசம் பெற்றுக் கொண்டார். ஒவ்வொரு நாளும் கங்கையில் குளித்த பிறகு புனிதமான அதன் கரையில் இரண்டு மணிநேரம் அமர்ந்து மழையானாலும்,வெயிலானாலும் தன்னை மறந்து தியானத்தில் மூழ்குவார். சாஸ்திரமுறைப்படிச் செய்கின்ற பூஜையில் அவர் மிகுந்த திறன் பெற்றிருந்தார். அத்துடன் மனங்கசிந்து உருகும் பக்தியையும் இணைத்துப்பூஜை செய்வார். நேரத்தைக் கழிக்கமாட்டார்.ஓய்வுநேரத்தில் கீதை,பாகவதம்,சைதன்ய சரித்திரம் குருதேவரைப்பற்றிய நூல்கள் முதலானவற்றைப் படித்தபடியே இருப்பார். அவருடைய நினைவாற்றல் மிகவும் கூர்மையானது. புராணக் கதைகளைச் சிறிதுகூடத் தவறில்லாமல்  கூறுவார். சைதன்ய சரிதாமிருதத்திலிருந்து  பல பகுதிகளை வரிக்கு வரி ஒப்பிப்பார். அவரும் 1924-ஆம் ஆண்டுதனது  எழுபத்து மூன்றாம் வயதில் காலமானார்.
-
தொடரும்...
-

No comments:

Post a Comment