Tuesday, 13 February 2018

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு


அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு
-
அன்னை ஸ்ரீசாரதாதேவி கல்கத்தாவில் ஜெயராம்பாடி என்ற கிராமத்தில் 1853 டிசம்பர் 22 ஆம் நாள் ராமசந்திர முகர்ஜிக்கும் சியாமா சுந்தரி தேவிக்கும் முதற்குழந்தையாகப் பிறந்தார். நாட்டுப்புறத்தில் வளரும் மற்ற பெண் குழந்தைகளைப்போன்று இளைய குழந்தைகளை கவனித்துக்கொள்ளுதல்,மாடுகளைப்பேணுதல்,வயலில் வேலை செய்யும் தந்தைக்கும் மற்றவர்களுக்கும் உணவு கொண்டு செல்லுதல் போன்ற வீட்டு காரியங்களில் இவருடைய இளமை பருவம் கழிந்தது. இவர் பள்ளி சென்று படித்ததில்லை.ஆனால் பிற்காலத்தில் தம் சொந்த முயற்சியால் சிறிது படிக்கவும் எழுதவும் கற்றுக்கொண்டார்.
-
அந்த காலத்தில் இளமை திருமணங்களை சமுதாயம் ஆதரித்தது. சிலவேளைகளில் பெண் சிறியவளாகவும் ஆண், வயது முதிர்ந்தவராகவும் இருப்பதுண்டு. ஆண்கள் மறுமணம் செய்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர்,பெண்களுக்கு அந்த உரிமை இல்லை. சாதராவுக்கு ஐந்து வயதாக இருக்கும்போது திருமணம் நடந்தது.அப்போது ஸ்ரீராமகிருஷ்ணருக்கு வயது 23. பெண் பெரியவளாக வளர்ந்த பிறகுதான் மாப்பிள்ளைவீட்டிற்கு செல்வது வழக்கம். சாரதாதேவி தமது 19வது வயதிற்கு பிறகே ராமகிருஷ்ணருடன் சேர்ந்து வாழ தட்சிணேஷ்வரம் சென்றார். அதற்கு முன்பு ஓரிருமுறை அவரை பார்த்திருக்கிறார்.
-
1872 முதல் 1885 வரை உள்ள பதிமூன்று ஆண்டுகள் அவர் தட்சிணேசுரக் காளி கோயிலில் குருதேவருடன் வாழ்ந்தார். இந்த நாட்கள் அன்னை ஆனந்தத்தில் திளைத்த நாட்கள்.குருதேவருக்கு சேவை,குருதேவருக்கும் அவரை காண வருகின்ற பக்தர்களுக்கும் சமையல்,அவரது வழிகாட்டுதலில் ஆன்மீக சாதனைகள் என்று அன்னையின் நாட்கள் கழிந்தன
-
தட்சிணேசுவரக் காளி கோவிலில் ஓர் அறை குருதேவருக்காக ஒதுக்கப்பட்டிருந்தது. அங்கிருந்து சுமார் 75 அடி தொலைவில் வாத்திய மண்டபமான நகபத் என்ற சிறிய கட்டிடம் இருக்கிறது. பார்ப்பதற்கு ஒரு மாளிகைபோன்று தெரிந்தாலும் உள்ளே உள்ள அறை மிகச்சிறியதாகும். ஒருவர் காலை நேராக நீட்டி படுக்க முடியாது.அந்த அளவுக்கு குறுகலானது. அந்த அறையில்தான் சாரதாதேவி வசித்தார். அந்த சிறிய அறை அன்னை வசிப்பதற்கு மட்டுமின்றி,சாமான்கள் வைப்பதற்கும்.சமையல் செய்வதற்கும்,சமையல் பொருட்களை வைப்பதற்கும்,அவரை காண வருபவர்களுடன் பேசுவதற்கும் மற்ற அனைத்திற்கும் உபயோகப்படுத்தப்பட்டது.
-
அந்த நாட்களில் அன்னை அகலமான சிவப்புக் கரையுடன் கூடிய புடவை அணிந்திருப்பார். தலை வகிட்டில் குங்குமம் இட்டுக்கொண்டிருப்பார். அவருடைய நீண்ட கருங்கூந்தல் ஏறக்குறைய பாதத்தைத் தொடும் அளவுக்கு வளர்ந்திருக்கும். தங்க அட்டிகையும்,மூக்கில் பெரிய தங்க வளையம் ஒன்றும், கைகளில் வளையல்களும் காதுகளில் கம்மலும் அணிந்திருப்பார்
-
அன்னை தினமும் காலை 3 மணிக்கு எழுந்திருப்பார். சூரியோதயத்திற்கு முன்பே, மக்கள் நடமாட்டத்திற்கு முன்பே,குளிப்பது போன்ற தினசரிக் கடன்களை முடித்துக்கொள்வார். பின்னர் பொழுது விடியும்வரை ஜெபதியானம் செய்வார். பிற்பகல் 1 மணிவரை வெளியே வரமாட்டார். அதன்பிறகு மக்கள் நடமாட்டமே இருக்காது.அப்போது வெளியே வந்து தம்முடைய அழகிய நீண்ட கூந்தலை வெயிலில் உலர்த்திக்கொள்வார். ஒருமுறை கோவில் அதிகாரி ஒருவர் சாரதாதேவி இங்கு வசிப்பதாக கேள்விப்பட்டுள்ளோம்,ஆனால் ஒருமுறைகூட அவரை நாங்கள் பார்த்ததில்லையே என்று கூறினார். அந்த அளவுக்கு பிறர் கண்களில் படாமல் தம்மை மறைத்துக்கொண்டு வாழ்ந்தார்
-
குருதேவரைப் பார்க்ககூட,அன்னை பிறர் இருக்கும்போது போகமாட்டார். குருதேவரின் அறை எப்போதும் ஆடல்,பாடல்,ஆனந்த பரவசம் என்று அமர்க்களப்படும். அன்னை அவற்றையெல்லாம் நகபத் வராந்தாவிலுள்ள தட்டியின் பின்னால் நின்றபடியே கண்டுகளிப்பார். தொடர்ந்து நீண்டநேரம் நின்று கொண்டிருந்ததாலும் வசதியற்ற இடத்தில் வசித்ததாலும் காலில் கீல்வாத நோய் ஏற்பட்டது. அதன்பிறகு குருதேவர் ஓரிடத்தில் அதிக நேரம் இருக்காதே தெரிந்த சில பெண்களை பார்த்துவா என்று கூறினார். அது அன்னைக்கு சற்று நடப்பதற்கு வாய்ப்பாக இருந்தது
-
குருதேவருக்கும் அவருடைய பக்தர்களுக்கும் உணவு சமைப்பதிலேயே அன்னையின் பெரும் பொழுது கழிந்தது. குருதேவரின் வயிறு மென்மையானது. காளிகோவில் பிரசாதத்தை சாப்பிடுவது அவருக்கு மிகவும் சிரமமாக இருந்தது. அதனால் அன்னை பக்குவமாக உணவு தயாரித்து தாமே பரிமாறுவார்,அவர் தேவையான அளவு சாப்பிடுமாறு பார்த்துக்கொள்வார். குருதேவரின் அறையை சுத்தப்படுத்துவது,அவருடைய துணிகளை துவைப்பது போன்ற காரியங்களையும் அவர் கவனித்துக்கொண்டார். குருதேவரின் தாய் தமது இறுதிக் காலத்தை தட்சிணேசுவரத்தில் அதே நகபத்தின் மேல் அறையில் கழித்தார். அவருக்கான பணிவிடைகளையும் குறைவின்றிச் செய்தார் அன்னை. பக்தர் கூட்டம் அதிகரிக்க அதிகரிக்க சமையல் வேலையும் அதிகரித்துக்கொண்டே வந்தது. பக்தர்களில் பலர் இரவு தங்குவார்கள் அல்லது முழுநாளுமே தங்குவார்கள்.அவர்களுக்குச் சமையல் செய்யும் பொறுப்பையும் அன்னை ஏற்றுக்கொண்டார். தினமும் சுமார் 4 கிலோ மாவு பிசைந்து சப்பாத்தியும் அதற்கு வேண்டிய பருப்பும் தயார் செய்வார். ஏராளம் வெற்றிலைச் சுருள்களும் மடிப்பார்
-
குருதேவரைக் காண்பதற்காக பக்தைகளும் வருவார்கள் அவர்கள் நகபத்தில் அன்னையுடன் தங்குவார்கள். வருபவர்களை உபசரிப்பதும்,தங்குபவர்களுக்கு இடவசதி செய்து தருவதும் அன்னையின் கடமைகளாக அமைந்தன. இவர்களில் சிலர் அன்னையுடன் நெருங்கிப்பழகியதுடன் அவரது பிற்கால வாழ்க்கையிலும் சிறப்பாகப் பங்கு பெற்றனர்.கோலாப்மா,யோகின்மா ஆகிய இருவரும் அதில் குறிப்பிடத்தக்கவர்கள்.
-
1874-இல் அன்னையின் தந்தை காலமானார். தாயும் சகோதரர்களும் வறுமையில் உழன்றனர். குடும்பப்பொறுப்பு முழுவதும் சாரதாவின் தாயின் தலையில் விழுந்தது. குடும்ப வருமானத்திற்காக நெல் குத்திப் புடைத்து ஊதியம் பெற்றார் சியாமாசுந்தரி. அங்கும் தமது சேவையைத் தொடர்ந்தார் அன்னை. ஜெயராம்பாடியில் இருக்கம் பொழுதெல்லாம் தாய்க்குத்துணையாக நெல் குத்துவார் அவர். குடும்பத்தில் ஜெகதாத்ரி பூஜையைத் துவக்கிய பின்னர் நிலைமை சீரடைந்தது
-
பிறரை நேசிப்பதும் சேவை செய்வதும் மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரின் கடமையாகும்.அதனையே,பிரதிபலனை எதிர்பாராமல் இறைவனுக்காகச் செய்யும்போது அது ஓர் ஆன்மீக சாதனையாகிறது. தமக்கென்று வாய்த்த வேலைகளை,அதாவது சேவை-தர்மத்தை இவ்வாறு சேவை சாதனையாக செய்து,மனித குலத்திற்கே ஒரு லட்சியமாகத் திகழ்கிறார் அன்னை
-
சேவை சாதனையைத் தவிர அன்னையின் மற்ற ஆன்மீக சாதனைகள்பற்றி விரிவான விவரங்கள் நமக்குக்கிடைக்கவில்லை.ஆனால் தினமும் காலை மற்றும் இரவில் ஜபமும் ஆழ்ந்த தியானமும் செய்தார். அவருடைய தம்பி மகளான நளினியிடம் ஒருமுறை, உன் வயதிருக்கும்பொழுது நான் எவ்வளவு வேலைகள் செய்தேன்! இருப்பினும் தினமும் ஒரு லட்சம் நாமஜபம் செய்வதற்கான நேரத்தையும் ஒதுக்கிக்கொள்வேன் என்று கூறியுள்ளார்
-
இதனை எப்படி சாதித்தார் அன்னை? அவரே பின்னாளில் சுவாமி மாதவானந்தரிடம், என்ன செய்வது மகனே! நாங்கள் பெண்கள்,வீட்டு வேலைகள் எப்பொழுதும் இருக்கின்றன.இவற்றை விடுத்து தனியாக ஜபம் செய்ய முடியாதே! சமைப்பதற்காக உலை வைக்கிறேன,அரிசி கொத்தித்து சாதம் ஆகும்வரை ஜபம் செய்கிறேன். பிறகு குழம்பு தயாரிக்கவேண்டும்.அது பக்குவமாகும்வரை மீண்டும் ஜபம் செய்கிறேன். சமையல் முடிந்ததும்,மறுபடியும் ஜபம் செய்கிறேன்.இவ்வளவுதான் என்னால் செய்ய முடியும். நான் வேறு பெரிதாக என்ன சாதனை செய்துவிட முடியும் என்று கூறினார்.
-
இது தவிர யோகப்பயிற்சியிலும் அன்னை ஈடுபட்டிருந்தார். ஆறு சக்கரங்கள். குண்டலினி போன்றவற்றைத் தாமே வரைந்து காட்டி, அன்னைக்குப் பயிற்சி அளித்தார் குருதேவர். எனவே மிக அதிக அளவில் அன்னை சாதனைகள் செய்துள்ளார் என்பது உறுதி. அதுபோலவே சமாதிநிலை போன்ற மிக உயர்ந்த ஆன்மீக அனுபவங்களையும் பெற்றிருந்தார் அவர். தட்சிணேசுவர நாட்களில்தான் அன்னை குருதேவரின் கொள்கைகளைத் தன்மயமாக்கிக் கொண்டார். குருதேவரிடம் பெற்ற பயிற்சியாலும் ஆன்மீக சாதனைகளாலும் அவரிடம் பொதிந்துகிடந்த தாய்மைப் பண்பு வெளிப்பட்டது. குருதேவரால் ஆரம்பிக்கப்பட இருக்கும் இயக்கத்தின் பொறுப்பை ஏற்று நடத்துவதற்குரிய பக்குவம் வளர்ந்தது. புனிதமே உருவானவராக, பொறுமையின் அவதாரமாக, அமைதியே வடிவெடுத்தவராக, தெய்வீக கம்பீரம் பொருந்தியவராக ஆனால் மிகவும் எளியவராக,அடக்கமானவராக, நண்பன்-பகைவன் என்று வேறுபடுத்த இயலாத அன்பின் சிகரமாக. அனைவரையும் அணைக்கும் தாயாக அன்னை உருவெடுத்தாள்
-
1886 ஆகஸ்ட் 16 ல் குருதேவர் மறைந்தார். ஓர் இந்து விதவையைப்போன்று அன்னையும் மங்கல அணிகளாகிய தங்க வளையல்களைக் கழற்றிவிட்டு தாம் அணிந்திருந்த புடவையின் சிவப்புக்கரையைக் கிழிக்க முற்பட்டார்.அப்போது குருதேவர் அன்னையின் முன்பு தோன்றினார், என்ன செய்கிறாய்? நான் எங்கே போய்விட்டேன்? ஓர் அறையிலிருந்து மற்றோர் அறைக்குப்போவது போன்று போய் இருக்கிறேன். அவ்வளவுதான் என்று கூறினார். பிறப்பு இறப்பு ஆகியவற்றைக் கடந்தவர் குருதேவர் என்பதை இந்த அனுபவத்தின் வாயிலாக உணர்ந்தார் அன்னை. தாம் நித்திய சுமங்கலி என்பதை அறிந்து நமது இறுதிக்காலம்வரை தங்க வளையல்களையும் மெல்லிய கரையுடன் கூடிய புடவையையும் அணிந்துவந்தார்
-
குருதேவரின் சமாதிக்குப்பிறகு அன்னை பிருந்தாவனத்திற்குப் புனித யாத்திரை மேற்கொண்டார். குருதேவரின் சீடர்கள் சிலரும்,குருதேவரின் அண்ணன் மகள் லட்சுமி,கோலாப்மா முதலியவர்களும் அன்னையுடன் சென்றனர். காசி,அயோத்தி போன்ற இடங்களுக்குச் சென்ற பின் பிருந்தாவனத்திற்கு வந்து ஓராண்டுகாலம் தங்கினர். ஏற்கனவே பிருந்தாவனத்திற்குச் சென்றிருந்த யோகின்மாவும் அவர்களுடன் சேர்ந்துகொண்டார்
-
அன்னையின் பிருந்தாவன வாழ்க்கை பூஜை,தியானம்,ஆன்மீக அனுபவம் ஆகியவை நிறைந்ததாக அமைந்தது. ஈக்களும்,கொசுக்களும் முகம் முழுவதையும் கடித்துப் புண்ணாக்குவதைக்கூட உணராமல் அந்த நாட்களில் அன்னையும் யோகின்மாவும் தியானத்தில் முழ்கியிருப்பார்கள்
-
பிருந்தாவனத்தில் அமைந்திருந்த பல கோவில்களுக்கு அன்னை சென்று வழிபட்டார். பல மைல்கள் சுற்றளவுள்ள பிருந்தாவனத்தை நடந்தே வலம் வந்தார். ராதா ரமணரின் கோவிலுக்குச் சென்று உள்ளமுருகி, எம்பெருமானே, மற்றவர்களின் குறையைக் காணும் வழக்கத்தை என்னிடமிருந்து நீக்கிவிடு.நான் என்றுமே பிறரிடம் குற்றம் காணாமல் இருக்க அருள் செய் என்று வேண்டிக்கொண்டார். அன்னையின் வாழ்க்கையில் இந்த குணம்.அவருடைய மற்ற அனைத்து தற்பண்புகளுக்கும் சிகரம் வைத்தாற்போல் அமைந்தது. குறை காணுதல் ஒருவனை இழிந்த நிலைக்கு இட்டுச்செல்லுமே தவிர உயர்த்தாது என்று அன்னை கூறுவது வழக்கம்
-
குருதேவர் தமது இறுதிக்காலத்தில் அன்னையிடம் ’என் காலத்திற்குப்பிறகு நீ காமார்புகூர் செல். சாதமும் கீரையும் மட்டுமே கிடைத்தாலும் அதை உண்டு வாழ்க்கையை நடத்தி வா. இறைவனின் திருநாமத்தை ஜெபித்துக்கொண்டு உன் நேரத்தை செலவிடு என்று கூறியிருந்தார். எனவே பிருந்தாவன யாத்திரைக்குப்பிறகு அன்னை காமார்புகூர் சென்றார். உணவுக்கென்று சிறிது நெல் மட்டுமே இருந்தது. அந்த நெல்லைக்குத்தி அரிசியாக்கினார்.தாமே தோட்டத்தை கொத்தி,கீரை விதைகளை விதைத்து பயிராக்கினார். சாதத்துடன்,கீரையும் சமைத்துச் சாப்பிட்டார். உப்பு வாங்குவதற்குக்கூட அன்னையிடம் பணம் இல்லை. எனவே உப்பில்லாமலே அவர் சாப்பிடவேண்டியிருந்தது
-
அன்னையைப் பாதுகாக்க வேண்யவர்களான குருதேவரின் குடும்பத்தினர் அன்னையைக் கவனிக்கவில்லை. குருதேவருக்கு உதவிப்பணமாக தட்சிவேணசுவர கோவிலிலிருந்து மாதம் ஏழு ரூபாய் கொடுத்து வந்தனர். குருதேவரின் மறைவிற்குப்பிறகு இந்த தொகை அன்னைக்கு வழங்கப்பட்டது. ஆனால் குருதேவரின் அண்ணன் மகனான ராம்லால் அந்த உதவிப்பணத்தை அன்னைக்கு கொடுக்கவிடாமல் தடுத்துவிட்டான். வீட்டிலும் தடுப்புவைத்து,குருதேவரின் பங்காகிய குடிசையை மட்டும் அன்னைக்கு கொடுத்துவிட்டு அனைத்து பொறுப்பிலிருந்தும் விலகிக்கொண்டான். குடும்பத்தில் உள்ள மற்ற உறுப்பினர்களாகிய சிவராம்,லட்சுமி போன்றவர்கள் அன்னைக்கு எவ்வித உதவியும் செய்ய முடியாத நிலமையில் இருந்தனர். ஏனெனில் அவர்கள் தட்சிணேசுவரத்தில் ராம்லாலுடன் தங்கியருந்தனர்.அதனால் அன்னை தன்னந்தனியாக குடிசையில் வசிக்க நேர்ந்தது
-
-இவ்வாறு அன்னை உற்றாரால் கைவிடப்பட்டு தனிமையில் வாடுவது போதாது என்று கிராமத்தினரின் எதிர்ப்பிற்கும் கேலிக்கும் தூற்றலுக்கும் ஆளாக நேர்ந்தது.கணவனை இழந்த பெண் சிவப்புக்கரையுள்ள புடவை அணிவது, தங்க வளையல் அணிவது என்பதெல்லாம் அன்றைய சமுதாயம் ஏற்றுக்கொள்ளாதவை. எனவே அவர் கிராமத்தின் தூற்றுதலுக்கு ஆளானதில் வியப்பொன்றும் இல்லை
-
ஆனால் அனைத்தையும் அப்படியே ஏற்றுக்கொண்டார் அன்னை. தம் நிலைமைக்காக அவர் யாரையும் குறைகூறவில்லை.விதியை நொந்துகொள்ளவில்லை,ஆண்டவன்மீது பழிபோடவில்லை,தமது ஆதரவற்ற நிலையை யாரிடமும் தெரிவிக்கவில்லை.இறைவனிடம் நம்பிக்கையை இழக்காமல் பொறுமையுடன் சகிப்புத்தன்மையுடனும் வாழ்ந்து,தமது வாழ்வையே ஒரு தவ வாழ்வாக மாற்றிக்கொண்டார் .
-
குருதேவர் சிறுவனாக இருந்தபோது அவரை அன்புடன் பாராட்டியவர் பிரசன்னமயி.அவர் மட்டுமே அன்னைக்கு ஆறுதலாகவும் துணையாகவும் இருந்தார். அன்னைக்கு வேதனையும் கஷ்டங்களும் ஏற்படும்போதெல்லாம் குருதேவரின் காட்சி கிடைத்தது. பிரசன்னாவின் அன்பும் குருதேவரின் காட்சியுமே கிராமத்தினரின் எதிர்ப்பிற்கு இடையே அன்னைக்கு ஆறுதலாக அமைந்தன
-
-
இந்த நிலையை வெகுநாள் நீடிக்கவில்லை. அன்னையின் தாய் சியாமா சுந்தரிதேவி தன் மகள் படும்பாட்டை அறிந்து,மகன் பிரசன்ன குமாருக்குத் தெரிவித்தார். பிரசன்ன குமார் மூலம் நிலைமையை அறிந்த கோலாப்மா உடனடியாக அன்னையை கவனிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். குருதேவரின் சீடர்களிடம் அன்னையின் துயரநிலையை கூறிப் பணம் திரட்டினார். அன்னையைக் கல்கத்தாவில் வசிக்கும்படி குருதேவரது பக்தர்களின் சார்பில் வேண்டிக்கொண்டார்.ஆனால் இளம்விதவையாகிய தாம் அன்னியரின் மத்தியில்போய்த் தங்கினால் ஊர்மக்கள் என்ன பேசுவார்களோ என்று பயந்தார். சிறிது தயக்கத்திற்கு பின் குருதேவரின் சீடர்களின் மனம் மகிழ்ச்சி அடையும்படி 1888 ஏப்ரல் மாதம் கல்கத்தா சென்றார்
-
குருதேவர் உயிருடன் இருந்த காலத்திலேயே அன்னையின் ஆன்மீகப்பணி ஆரம்பித்துவிட்டது எனலாம். குருதேவரை நாடி வந்த பல பெண்கள் அன்னையைச் சுற்றி கூடினர். அவர்கள் அன்னையால் நன்கு ஊக்குவிக்கப்பட்டனர்.தமது சீடரான சாரதா(திரிகுணாதீதானந்தர்) என்பவை அன்னையிடம் மந்திரதீட்சை வாங்கிக்கொள்ளும்படி குருதேவரே கூறினார். தீட்சை அளிப்பதை ஓர் முக்கியமான ஆன்மீகப் பணியாக தமது வாழ்க்கைப் பணியாக செய்தார் அன்னை. நான் இந்த மந்திரங்களை குருதேவரிடமிருந்து பெற்றுள்ளேன்.இந்த மந்திரங்களின் வாயிலாக ஒருவர் நிச்சயமாக நிறைநிலையை எய்தமுடியும் என்பார் அவர்
-
குருதேவரின் புகழும் உபதேசங்களும் பரவப்பரவ அன்னையிடம் வரும் மக்கள்கூட்டமும் அதிகரிக்க ஆரம்பித்தது.
தீட்சை வழங்குவதில் அன்னை சம்பிரதாயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை.முன்கூட்டியே தீட்சைபெற ஏற்பாடு செய்யப்பட்டவர்களுக்குப் பொதுவாக குருதேவரின் தினசரி பூஜை முடிந்த பிறகு தீட்சை தருவார். ஆனால் பல சமயங்களில் எந்த சூழ்நிலையிலும் எந்த நேரத்திலும் தீட்சை கொடுப்பதும் உண்டு
-
படத்தில்கூட அன்னையைப் பார்க்காத சிலர் அவரை கனவில் தெய்வமாக கண்டுள்ளனர். மற்றும் சிலர் தங்களுடைய கனவுகளில் அவரிடமிருந்து மந்திர தீட்சை பெற்றுள்ளனர். அவர்கள் அன்னையை சந்தித்து அவரிடமிருந்து தீட்சை பெறும்போது கனவில் அவரிடமிருந்து எந்த மந்திரத்தை பெற்றார்களோ அதே மந்திரத்தையே நேரிலும் அளிப்பதைக் கண்டனர்
-
பொதுவாக, அன்னை தீட்சை தருவதற்கு ஓரிரு நிமிடங்களே ஆகும். அன்னை ஆன்மீகத்தில் மிக உயர்ந்த நிலையில் இருந்ததால் தீட்சைக்கு உரிய மந்திரம் அவரது மனத்தில் உடனடியாகத் தோன்றிவிடுவதுதான் அதற்கான காரணமாகும். இதைப்பற்றி அன்னை ஒருமுறை ”சிலருக்கு நான் மந்திரத்தை உபதேசிக்க நினைத்த உடனே என் மனத்தில் இதைச்சொல்,அதைச் சொல் என்று தோன்றும்.சிலருக்கு உபதேசம் செய்யும் நேரங்களில் என் மனத்தில் எந்த எண்ணமும் தோன்றாது. பேசாமல் அப்படியே உட்கார்ந்திருப்பேன். நெடுநேரம் ஆழந்த்து சிந்தித்தபின் அவர்களுடைய மந்திரம் என் மனக்கண் முன் தோன்றுவதை நான் காண்பேன் என்று கூறியுள்ளார்
-
துறவியருக்கும் இல்லறத்தாருக்கும் மந்திர தீட்சை வழங்கி ஆன்மீக வழிகாட்டியதுடன் மற்றொரு முக்கிய பொறுப்பையும் அன்னை ஏற்றுக்கொண்டார்.இன்று உலகளாவப் பரந்து நிற்கின்ற ராமகிருஷ்ண இயக்கத்தின் பொறுப்புதான் அது.
1888 ஏப்பரம் மாதம் அன்னை கயைக்கு சென்றார் அங்கே இந்து சன்னியாசிகளுக்கான மடம் ஒன்றைக் கண்டார். சன்னியாசிகள் தங்குவதற்கும் உணவிற்கும் அங்கே தகுந்த ஏற்பாடுகள் இருந்தன.ஆனால் அப்போது குருதேவரின் துறவிச் சீடர்கள் தங்குவதற்குச் சரியான இடவசதி இன்றி ஏழ்மையில் வாடிக்கொண்டிருந்தனர். அந்த தமது குழந்தைகளின் ஏழ்மை நிலையை இந்த சாதுக்களின் நிலைமையுடன் ஒப்பிட்டுப் பார்த்து அன்னையின் மனம் சொல்லொணா வேதனை அடைந்தது
-
இதைப்பற்றி அன்னை குறிப்பிட்டதாவது, ஓ! இதற்கான நான் குருதேவரிடம் எவ்வளவு கண்ணீர் விட்டுப் பிரார்த்தனை செய்தேன் தெரியுமா? அதன் பிறகுதான் அவரது அருளால் இந்த பேலூர் மடம் தோன்றியது. குருதேவர் மறைந்த பின்னர் அவரது துறவிச்சீடர்கள் தங்கள் வீடு வாசல் அனைத்தையும் துறந்து ஒரு வாடகை வீட்டில் தங்கினார்கள். பின்னர் தவ வாழ்க்கையில் ஈடுபட்டவாறு,தனித்தனியாக இங்கும் அங்கும் அலைந்து திரிந்தார்கள்.இது என்னை மிகுந்த வேதனைக்கு உள்ளாக்கியது. நான் குருதேவரிடம், பகவானே நீர் வந்தீர்,இவர்கள் சிலருடன் விளையாடல்புரிந்தீர்.பிறகு மறைந்துவிட்டீர்.அதனுடன் எல்லாம் முடிந்துவிடவேண்டிதுதானா? அதுதான் முடிவு என்னால் நீர் பூமிக்கு வந்து ஏன் இத்தனை வேதனைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும்! தெருக்களில் பிச்சை எடுத்து சாப்பிட்டு,மரத்தடியில் படுத்துக்கிடக்கும் துறவியர் எத்தனையோ பேரை பிருந்தாவனத்திலும் காசியிலும் பார்த்திருக்கிறேன்! அத்தகைய சாதுக்களுக்கு இந்த நாட்டில் குறைவே கிடையாதே! உமது பெயரில் அனைத்தையும் துறந்த என் பிள்ளைகள் உணவுக்காகப்பிச்சையெடுப்பதை என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. உம்மிடம் எனது பிரார்த்தனை இதுதான்.உமது பெயரை சொல்லிக்கொண்டு உலகத்தை துறப்பவர்களுக்குச் சாதாரண உணவும் உடையும் கிடைக்க வேண்டும். அவர்கள் உமது உபதேசங்களை மையமாக்கொண்டு ஓரிடத்தில் ஒன்றுகூடி வசிக்கவேண்டும். உலக வாழ்க்கையில் துன்புற்ற மக்கள்,அவர்களிடம் வந்து உமது அமுதமொழிகளைக் கேட்டு ஆறுதல் பெற வேண்டும். அதற்காகவே அல்லவா நீர் வந்தீர்! அவர்கள் அலைந்து திரிவதைக் காண என்னால் சகிக்க முடியவில்லை என்று பிரார்த்தித்தேன். அதன்பின்னரே நரேன்(விவேகானந்தர்) படிப்படியாக இதையெல்லாம் உருவாக்கினான்.
-
குருதேவரின் இளம்சீடர்கள் வராக நகரில் ஆரம்பித்த ராமகிருஷ்ண மடத்திற்கு தமது பிரார்த்தனைமூலம் இவ்வாறு முதல் விதையை இட்டது அன்னை. அதன் காரணமாகவே சங்க த்தை தோற்றுவித்தவர் என்று போற்றப்படுகிறார்.ராமகிருஷ்ண இயக்கத்தின் வளர்ச்சியில் அன்னையின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. ஆரம்ப நாட்களில் அன்னையின் வழிகாட்டுதலிலேயே குருதேவரின் சீடர்கள் செயல்பட்டனர்.
-
-
காமார்புகூரை விட்டு வந்த பிறகு,தாய்வழிக் குடும்பத்துடன் நெருங்கிய உறவு கொண்டிருந்தார் அன்னை. வீட்டில் மூத்தவர் அன்னை. எனவே குடும்பப்பொறுப்பை தாமாகவே ஏற்றுக்கொண்டார். தாயார் சியாமாசுந்தரி தேவி மற்றும் பிரசன்ன குமார்,வரதபிரசாத்,காளிகுமார்,அபயசரண் என்ற நான்கு தம்பிகள்,அவர்களின் குடும்பம் ஆகியவை அடங்கியது அந்தக் குடும்பம்,அன்னையின் சகோதரர்கள் உலகப் பற்றுமிக்கவர்களாக இருந்தனர். அன்னையின் ஆதரவைப் பெறுவதில் ஒருவருக்கொருவர் போட்டியிட்டனர்
-
பணத்திற்காக சண்டையிடும் மகிழ்ச்சியற்ற குடும்ப சூழ்நிலை ஒருபுறம்.அனைத்தையும் துறந்த சன்னியாசக் குழந்தைகளும் அன்னையிடம் மிகுந்த பக்திகொண்ட பக்தர்களும் மறுபுறம். இப்படி ஒன்றுக்கொன்று முற்றிலும் முரண்பட்ட சூழ்நிலையில் அன்னையின் வாழ்க்கை அமைந்திருந்தது
-
அன்னையின் சகோதரர்களில் கடைசித் தம்பியான அபயசரண் நல்ல அறிவாளி.மருத்துவப் படிப்பு படித்துக்கொண்டிருந்த அவர் திடீரென இறந்தார்.அப்போது அவரது மனைவியான சுரபாலா கர்பிணியாக இருந்தாள்.அவள் சிறிது சித்தப்பிரமை உள்ளவள்.மரணதருவாயில் அபயசரண் பிறக்கப்போகும் குழந்தையையும் கவனித்துக்கொள்ளவேண்டும் என்று அன்னையிடம் வாக்குறுதி பெற்றுக்கொண்டார்.அன்னையும் அதற்கு சம்மதித்தார்.சுரபாலாவுக்கு பிறந்த குழந்தை ராது.இயல்பாகவே பிடிவாதமும் கோணல் புத்தியும் கொண்ட இவள் அன்னைக்கு வாழ்நாள் முழுவதும் வேதனைமிக்க ஒரு சுமையாக இருந்தாள் என்றால் அது மிகையாகாது
-
அன்னையின் மற்றொரு தம்பியான பிரசன்ன குமாருக்கு நளினி,மாக்கு என்ற இரண்டு பெண்கள் இருந்தனர்.ராது அவளுடைய தாயார் ஆகிய இருவருடன் இந்த நளினி,மாக்கு இருவரும் அன்னையையே சார்ந்திருந்தனர்
தம்பிகளின் சுயநலமும்.தம்பி மக்கள் ஒருவர் மற்றவர்களிடம் கொண்ட பொறாமையும், சம்பிரதாயமான ஆசாரத்தோடு இருக்கவேண்டும் என்ற நளினியின் வெறியும்,ராதுவின் கோணலானபுத்தியும்,சுரபாலாவின் பைத்தியமும் சேர்ந்து அன்னைக்கு சொல்லமுடியாத வேதனையை நல்கின. இந்தச் சகிக்க முடியாத சூழ்நிலையிலும் அன்னைதாமே ஏற்றுக்கொண்ட கடமைகளைப் பொறுமையுடனும் மனக்கசப்பு அடையாமலும் ஆற்றினார்
-
இத்தகைய அசாதாரணமான குடும்பச் சூழலில்தான் அன்னையின் பிற்கால வாழ்க்கை கழிந்தது.இந்த சூழலிலும் அன்னை பொறுமையுடனும்.கலக்கம் இன்றியும்,பற்றற்றும் வாழ்ந்த விதம் எல்லோருக்கும் எடுத்துக்காட்டாக திகழ்வதாகும்
-
அன்னையின் பொதுவான வாழ்க்கை முறை பற்றி பார்ப்போம்
-
அன்னையின் வாழ்க்கையில் முக்கியமாக இடம்பெறுகின்ற இடங்கள் நான்கு.அவை தட்சிணேசுவரம்,உத்போதன்,ஜெயராம்பாடி,கோயல்பாரா
தட்சிணேசுவர நாட்களில் அன்னையை வெளியுலகம் அறியவில்லை. குருதேவரின் நெருங்கிய சிஷ்யைகள் சிலர் மட்டுமே அவரது வாழ்க்கையுடன் தொடர்புகொண்டிருந்தார்கள்
ஆரம்ப நாட்களில் அன்னை கல்கத்தாவிற்கு வரும்போது பக்தர்களின் வீட்டிலோ வாடகை வீட்டிலோ தங்குவார். அவர் தங்குவதற்காகக் கட்டப்பட்டது உத்போதன். அன்னையின் சேவகர்களுள் ஒருவரும் ராமகிருஷ்ணமிஷனின் செயலாளருமாக இருந்த சுவாமி சாரதானந்தர் 1909-இல் உத்போதனைக் கட்டினார்.மடத்தின் வங்கமொழிப் பத்திரிக்கை உத்போதன் என்றே அழைக்கப்பட்டது.இந்த பெயரின் காரணமாக வீடும் உத்போதன் என்றே அழைக்கப்பட்டது. மாடியில் அன்னையும், அன்னையின் குடும்பத்தினரும் பக்தைகளும் தங்கினர். கீழே துறவியர் தங்கினர்,பத்திரிக்கை அலுவலகமாகவும் அது செயல்பட்டது
உத்போதனில் அன்னையை சந்திக்க குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.அப்போதும் அவர் தம்மை முற்றிலும் மறைத்துக்கொண்டு அமர்ந்திருப்பார். எனவே அவருடன் சற்று நெருக்கமாகப்பழகவும் சேவைகள் செய்யவும் விரும்பியவர்கள் ஜெயராம்பாடியில் சென்று அவரை தரிசிப்பது வழக்கம்
-
ஜெயராம்பாடியில் அன்னையைச் சுலபமாக அணுகமுடிந்தது. எப்போதும் அவர் முகத்திரை இட்டுக்கொள்வதும் இல்லை. அங்கு அவர் தமது தம்பியரின் வீட்டில் தங்கினார். அவை வீடு என்று சொல்வதைவிட குடிசை என்றே சொல்வது பொருத்தமாக இருக்கும். பின்னாளில் அன்னைக்காக ஒருவீடு கட்டப்பட்டது.இந்த புதிய வீட்டில் 1916-மே மாதம் அன்னை குடிபுகுந்தார்
-
அடுத்த இடம் கோயல்பாரா.இது ஜெயராம்பாடியிலிருந்து கல்கத்தாவிற்கு வரும் வழியில் சுமார் 7 கி.மீ தொலைவில் உள்ள இடம்.ஆரம்ப நாட்களில் அன்னை கேதார்நாத் சர்க்கார் என்ற பக்தரின் வீட்டில் தங்கினார்.இதுவே பின்னாளில் மடமாக உருவெடுத்தது.
-
ராதுவின் உடல்நிலை சரியில்லாமல்,சற்று ஏகாந்தமான இடம் தேவைப்பட்டபோது அங்கிருந்து சுமார் ஒரு கி.மீ தொலையில் ஒரு சிறிய அறை கட்டப்பட்டது இதுவே ஜகதம்பா ஆசிரமம். இங்கும் அன்னை தங்கினார்,பக்தர்களை சந்தித்தார்
-
அன்னை ஜெயராம்பாடி,உத்போதன்,அல்லது வேறு எங்கே இருந்தாலும் தட்சிணேசுவர நாட்களைப்போலவே அதிகாலை 3 மணிக்கே எழுந்துவிடுவார். எழுந்ததும் முதலில் குருதேவரின் படத்தைப் பார்ப்பார்.அன்னை பூஜையறையில்தான் தூங்குவார். ஏனெனில் அவர் ஒருபோதும் குருதேவரைப் பிரிந்திருக்க விரும்பவில்லை. பிறகு மற்ற காரியங்களை செய்வதற்காக.தம்மை அங்கிருந்து செல்ல அனுமதிக்குமாறு அவரிடம் பிரார்த்தனை செய்வார்.காலை ஆறு மணிவரை படுக்கையில் அமர்ந்தபடியே ஜபமாலை கொண்டு ஜபம் செய்வார். பிறகு குருதேவரைப் பீடத்தில் அமர்த்தி அவருக்குக் காலை நைவேத்தியம் படைப்பார்.அதன்பின் ஜெயராம்பாடியில் இருந்தாரானால் வீட்டைச் சுத்தம் செய்வார். சமையலுக்கு வேண்டிய காய்கறிகளை நறுக்குவார். அப்போது உடனிருப்பவர்களிடம் உரையாடுவார்.அதோடு.உடல்நிலை நன்றாக இருந்ததுவரை பாத்திரம் துலக்குவது,குளத்திலிருந்து தண்ணீர் கொண்டுவருவது,நெல் குத்துவது, போன்ற கடினமான வேலைகளையும் செய்து வந்தார். பூஜைக்கு வேண்டிய மலர்களைச் சேகரிப்பதையும்,பழங்களை நறுக்குவதையும் பொதுவாக அவரே செய்வார்.சிலநேரங்களில் அவருடைய தம்பி மகள்களோ பக்தர்களோ இதில் உதவி செய்வார்கள்.ஒவ்வொருநாளும் குருதேவருக்குப் படைக்கவும்,பக்தர்களுக்குத் தரவும் நூறு வெற்றிலைச்சுருளுக்கு மேல் மடிப்பார்
-
காலை எட்டு மணியிலிருந்து ஒன்பது மணிக்குள் குருதேவரின் வழிபாட்டைச் செய்து முடிப்பார். யாராவது தீட்சை பெற வந்திருந்தால் அவர்களுக்கு தீட்சை தருவார்.அதன்பிறகு,குருதேவருக்குப் படைத்த பழங்களையும்.இனிப்புகளையும் பக்தர்களுக்கும் வீட்டில் உள்ளவர்களுக்கும் வழங்குவார். பத்துமணிக்குள் பூஜையை முடித்துவிட வேண்டும் என்பதில் அன்னை கண்டிப்பாக இருப்பார்.பூஜைக்கு பொறுப்பேற்கும் துறவிச்சீடர்கள் இதற்குமேல் காலம் தாழ்த்துவதை அவர் விரும்புவதில்லை.ஏனென்றால் பூஜை முடித்து பிரசாதம் பெற்ற பிறகே அனைவரும் காலை உணவு உட்கொள்ள வேண்டியிருந்தது. பூஜைக்கு பிறகு குருதேவரின் பிரசாதத்தில் மிதமான பழங்களை உண்டு காலை உணவை முடித்துக்கொள்வார்
-
அதன்பிறகு சமையல்கட்டில் சென்று சமையல்வேலையை கவனிப்பார்.அன்னைக்கு உதவி செய்ய சமையல்காரியும் உண்டு. வீட்டில் என்ன சமையல் செய்யப்படுகிறதோ,அவற்றையே குருதேவருக்குப் படைப்பார். குருதேவருக்கு விருப்பமான காய்கறிகள் சமைக்கப்பட்டால் பெரிதும் மகிழ்ச்சி அடைவார். குருதேவருக்கு தனிப்பட்ட முறையில் சமைக்கும்போது உப்பு,லவங்கம் முதலான வாசனைப்பொருட்களும்,காரமும் குறைவாகப் பயன்படுத்துவார். பகல் பதினொரு மணிக்கு குளியலை முடித்துவிட்டு குருதேவருக்கு உணவு படைப்பார்.அதன் பிறகு வீட்டில் உள்ள அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவார்கள்.
-
அன்னை குறைந்த அளவே உணவும் உறக்கமும் கொள்வார். இரவு பதினொரு மணிக்குப் படுக்கச் செல்வார். காலை மூன்று மணிக்கு விழித்துக்கொள்வார். நிலவு காய்கின்ற இரவுகளில் இதற்கு முன்பேகூட எழுந்து கொள்வார். ஒருநாளில் அன்னை மூன்று முறை சாப்பிடுவார். அதில் காலை உணவும்,இரவு உணவும் குறைவாக இருக்கும். கீல்வாத நோயால் துன்புற்று வந்ததால்,குளிர்ச்சிதரும் பொருட்களை எப்போதாவது ஒருமுறைதான் கொஞ்சம் சாப்பிடுவார்.இனிப்பு பண்டங்களை விரும்பி உண்பார்.மாம்பழங்கள்,அதுவும் சிறிது புளிப்பான மாம்பழங்கள் அவருக்கு மிகவும் பிடிக்கும்
-
-
கல்கத்தாவிலும் அன்னையின் வாழ்க்கை கடினமாகவே இருந்தது. தீட்சைக்காகவும்,அன்றாட வாழ்வில் ஏற்படுகின்ற துயரங்களைக்கூறி ஆறுதல் பெறவும் மக்கள் வந்தபடியே இருந்தனர். பகல் இரண்டு மணிக்கு ஓய்விற்காக சிறிது படுக்க முயல்வார்.அப்போதுகூட,மாலையில் வீடு திரும்பவேண்டிய பக்தைகள் அவரைச் சுற்றி அமர்ந்து ஏதாவது கேட்பார்கள்.அன்னை படுத்தபடியே பதில் சொல்வார்
-
மாலை ஐந்தரை மணிக்குமேல் ஆண் பக்தர்கள் அன்னைய தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள்.அப்போது பக்தைகள் அடுத்துள்ள அறைக்குள் போய்விடுவார்கள். பக்தர்கள் வரும்போது அன்னை கட்டில் ஒன்றின்மேல் அமர்ந்து கால்களை தொங்கவிட்டபடி,உடல் முழுவதையும் போர்த்திக்கொண்டு அமர்ந்திருப்பார். எந்த பக்தராவது அன்னையில் உடல்நலத்தைப் பற்றியோ வேறு ஏதாவது குறித்தோ கேட்டால் பதில் சொல்வார். ஏதாவது குறித்து விரிவாக பேச வேண்டுமானால் அவர்கள் மற்றவர்கள் போகும்வரை காத்திருப்பார்கள். அந்த பக்தர் பழகியவராக இருந்தால் அவரது கேள்விகளுக்கு அன்னை நேராக பதில் சொல்வார். இல்லாவிட்டால் அவர் தாழ்ந்த குரலில் சொல்வதை சீடர்கள் உரக்க எடுத்து சொல்வார்கள். செவ்வாய்,சனி நாட்களிலும் விழா நாட்களிலும் பொதுமக்கள் அன்னையை தரிசிக்க வருவார்கள். அந்த நாட்களில் அன்னைக்கு மிகவும் கடினமான நாட்களாகும். சில வேளைகளில் மணிக்கணக்கில் அவர் காத்திருக்க நேரும்
-
உடை அணிவதில் அன்னை மிகமிக எளிமையானவர் பழங்கால வங்காள முறைப்படி,ஒரே புடவையை உடல் ழுமுவதும் சுற்றி அணிந்திருப்பார். ரவிக்கையோ,தைத்த வேறு ஆடைகளோ,செருப்போ அணிந்ததில்லை.குடை பயன்படுத்தியதும் இல்லை. மழையாக இருந்தால்கூட நனைந்தபடியே வந்து.பின்னர் துணியை மாற்றிக்கொள்வார்.குழந்தை போன்று எளிமையாக இருந்த அவர்,உடையிலும் உணவிலும் மற்ற பழக்க வழக்கங்களிலும்கூட அதுபோலவே எளிமையாகவும் ஆடம்பரமில்லாமலும் வாழ்ந்தார்.
-
1919 இறுதியிலிருந்து அன்னையின் உடல் ஆரோக்கியம் குன்றியது. விட்டுவிட்டு காய்ச்சல் தொடர்ந்தது இருந்த வந்தது. முதலில் கிராமத்தில் கிடைக்கக் கூடிய அனைத்து வைத்தியங்களையும் செய்தார்கள். ஆனால் எவ்விதப் பயனும் இல்லாததால் மிகவும் மோசமான நிலையில் அன்னையைக் கல்கத்தாவிற்கு கூட்டி வந்தார்கள். அவரது நோய் கடுமையான காய்ச்சல் (காலரா) என்று கண்டுபிடிக்கப்பட்டது. அக்காலத்தில் இந்த நோய்க்கான மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை
-
1920 ஜுலை 20 வரை அதாவது இறுதி நாள்வரை அன்னை இந்த நோயால் அவதியுற்றார். இந்த நாட்களில் ஒருநாள் அன்னை சுவாமி சாரதானந்தரை அழைத்து “சரத் நான் போகிறேன். யோகேன் (யோகின்மா),கோலப் மற்ற எல்லோரும் இருக்கிறார்கள். அவர்களை எல்லாம் பார்த்துக் கொள்” என்றார்.
-
அன்னையில் மறைவுக்கு ஐந்து நாட்களுக்கு முன்பு அன்னபூர்ணாவின் தாய் என்கின்ற பக்தை அன்னையை காண வந்திருந்தார். அன்னை இல்லாத எதிர்காலத்தை எண்ணி கண்ணீர்விட்டு அவர் அழுதபோது அன்னை,“ நீ குருதேவரைப்பார்த்திருக்கிறாய், பிறகு ஏன் பயப்படுகிறாய்?
உனக்கு ஒன்று சொல்கிறேன் மகளே! உனக்கு மனஅமைதி வேண்டுமானால் பிறரது குற்றங்களைப்பார்க்காதே. அதற்குப் பதிலாக உன் குற்றங்களையே பார். உலகம் முழுவதையும் உனது சொந்தமாக்கக் கற்றுக்கொள். மகளே! இந்த உலகில் யாரும் அன்னியர் இல்லை. இந்த உலகம் முழுவதும் உன் சொந்தம்தான்”
-
அன்னை இந்த உலகத்தைவிட்டு செல்வதற்கு முன் கூறிய கடைசி வார்த்தை இது
-
அன்னைக்கு மூச்சுவாங்கியது. சிறிதுநேரம் கழித்து மெல்லிய குரலில் கூறினார். “மகளே. யாரெல்லாம் வந்திருக்கிறார்களோ, யாரெல்லாம் வரவில்லையோ,இனி யாரெல்லாம் வரப்போகிறார்களோ,அந்த என் பிள்ளைகளுக்கெல்லாம் என் அன்பைத் தெரிவி. என் நல்லாசிகள் அவர்களுக்கு எப்போதும் உண்டு.”
-
இதுவே அன்னை உலகிற்குத் தந்த கடைசி உபதேநமாகும். 1920 ஜுலை 20 நள்ளிரவு 1.30 மணிக்கு மகாசமாதியில் ஆழ்ந்தார்.மறுநாள் அவரது திருவுடல் ஊர்வலமாக பேலூர் மடத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு கங்கைக் கரையில் தகனம் செய்யப்பட்டது. அந்த இடத்தில் இப்பொழுது ஓர் அழகிய சிறு கோவில் எழுப்பப்பட்டுள்ளது
-

1 comment: