Saturday, 22 June 2019

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு-பாகம்-88

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு-பாகம்-88

மற்றொரு நிகழ்ச்சி,ரசிக்லால் ராய் என்பவருக்கு அன்னை தீட்சை தந்தார். அவருடைய குல தெய்வம் என்னவென்பதை அறிந்து கொள்ள அன்னை விரும்பினார். ஆனால் ரசிக்லாலுக்கு அது தெரியவில்லை. உடனே தியானத்தில் ஆழ்ந்தார் அன்னை. சிறிது நேரத்திற்குப்பிறகு இது தான் உன் குல தெய்வம் என்று தெய்வத்தைக்கூறி உரிய மந்திரத்தை அளித்து தீட்சையும் தந்தார். வீடு சென்ற ரசிக்லால் தன் வீட்டிலுள்ள பெரியவர்களிடம் விசாரித்தபோது அன்னை கூறியது முற்றிலும் சரியாக இருப்பதைக் கண்டார். இத்தகைய நிகழ்ச்சிகள் எத்தனையோ பக்தர்களின் வாழ்க்கையில் நடைபெற்றுள்ளன.
ஏற்கனவே வேறொரு குருவிடம் தீட்சை பெற்றவர்கள் மறுபடியும் தீட்சை பெறுவதற்காகச் சில வேளைகளில் அன்னையிடம் வருவார்கள். பொதுவாக அன்னை இப்படிப்பட்டவர்களுக்கு தீட்சை தருவதில்லை என்றாலும் சிலர் மிகுந்த ஆர்வத்தோடு வேண்டிக்கண்ணீர் வடிப்பார்கள். அவர்களுக்கு மட்டும் தீட்சை தருவார். இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளைப்பற்றி அன்னை சொல்லும் போது என்னால் யாருடைய கண்ணீரையும் பார்க்க முடிவதில்லை.ஆதனால் அத்தகையவர்களுக்கு தீட்சை தருமுன்,அவர்களுக்கு நான் தரப்போகும் மந்திரத்தில் ஆழ்ந்த நம்பிக்கையை ஏற்படுத்துமாறு குருதேவரை வேண்டிக் கொள்வேன்.பிறகு அவரது கட்டளைப்படி ஏற்கனவே அவர்கள் பெற்றிருக்கும் மந்திரத்துடன் மற்றொரு மந்திரத்தையும் சேர்த்து தீட்சை அளிப்பேன். இப்படி நான் கூடுதலாகத் தருகின்ற மந்திரம் அவர்களுக்கு இறைவனிடமும் அவரது திருநாமத்திலும் புதிய நம்பிக்கையையும் வலிமையையும் அளிக்கும் என்று கூறியுள்ளார்.
இப்படி ஏற்கனவே குல குருவிடம் தீட்சை வாங்கிய ஒருவர் அன்னையிடம் மறுபடியும் தீட்சை பெற்றார். இதையறிந்த அந்த குரு கோபம் கொண்டு,சீடரைச் சபித்து அழித்துவிடப் போவதாகக் கூறினார். சீடர் மிகுந்த கலவரத்தோடு அன்னையிடம் வந்தார். அதற்கு அன்னை யாருடைய சாபமும் உன்னை ஒன்றும் செய்யாது என்று அவரைத் தேற்றினார். அந்த குரு கூறியது போல் எதுவும் நடக்கவும் இல்லை. ஆனால் தம்மிடம் இவ்வாறு தீட்சை பெறுபவர்கள் தங்கள்  குலகுருவிற்கு ஆண்டு தோறும் தர வேண்டிய காணிக்கையை நிறுத்தாமல்  கொடுக்குமாறு பார்த்துக் கொள்வார். அன்னை.
அன்னை வங்கமொழி மட்டுமே தெரியும். அவர் தென்னிந்தியாவில்  பயணம்  செய்த போது பக்தர்களோடு பேசமுடியவில்லை. அவரிடம் வந்தவர்கள் அம்மா மந்திரம் , அம்மா தீட்சை என்ற வார்த்தைகளை மட்டுமே கூறினார்கள். அவர்களோடு எந்த வித பேச்சும் இல்லாமலே அவர்களுக்கு ஏற்ற,அதே வேளையில் அவர்கள் பின்பற்றி வந்த சம்பிரதாயத்திற்கும் உகந்த இஷ்டதெய்வத்தையும் மந்திரத்தையும் மிகப்பொருத்தமாக அன்னை அவர்களுக்குத்தந்தார். இது அவரால் எப்படி முடிந்தது என்பதைக்கேட்டபோது அன்னை சிலருக்கு நான் தீட்சையளிக்க ஆரம்பித்தவுடனே என் மனத்தில் இதைச் சொல்” அதைச் சொல் என்று தோன்றும்.சிலருக்கு உபதேசம் செய்யும் போதோ எனக்கு எதுவுமே தெரியாதது போலிருக்கும்.மனத்திலும் எந்த நினைவும் தோன்றாது. பேசாமல் அப்படியே உட்கார்ந்திருப்பேன்.நெடுநேரம் ஆழ்ந்த சிந்தனைக்குப்பிறகு அவர்களுடைய மந்திரம் என் மனக்கண் முன் தோன்றும்,நல்ல சாதகர்களுக்கு தீட்சை தரும்போது ,உடனடியாகவும் தானாகவும்அவர்களுக்குரிய மந்திரம் என் மனத்தில் தோன்றிவிடும் என்று கூறியுள்ளார்.
 அன்னைக்கு மந்திரங்களில் எவ்வளவு ஆழ்ந்த ஞானம் இருந்தது என்பதைக் கீழ் வரும் நிகழ்ச்சி விளக்குகிறது. ஒரு முறை உத்போதனில் அன்னை ஒருவருக்கு சக்தி மந்திர தீட்சை அளித்தார். பின்னர் கிழே சுவாமி சாரதானந்தரிடம் சென்று ஜபம் செய்யும் முறையைத் தெரிந்து கொள்ளுமாறு அவரிடம் கூறினார். பக்தர் சென்று கேட்டபோது சுவாமிகளும் அவற்றைத் தெளிவாக விளக்கினார். பேச்சுவாக்கில் அந்த பக்தர் தம்மையறியாமல் மந்திரத்தை உச்சரித்து விட்டார். சவாமிகள் மந்திர சாஸ்திரங்களைப்பற்றி நன்றாக அறிந்தவர்.  இந்த மந்திரத்தைக்கேட்டபோது அதில் ஏதோ தவறு இருப்பது போல் அவருக்கு ப் பட்டது. எனவே அன்னையிடம்  சென்று அதனைத் தெளிவுபடுத்தி வருமாறு அனுப்பினார். அன்னை மந்திரத்தைக்கேட்ட பிறகு,அது சரி தான் என்று கூறி அனுப்பினார்.சுவாமிகளுக்கு சந்தேகம் தீரவில்லை எனவே பக்தரை மீண்டும் மேலே அனுப்பினார். இந்த முறையும் முன்பு தெரிவித்ததையே அன்னை கூறினார். ஆனாலும் சுவாமிகளுக்கு  அந்த மந்திரத்தில் ஏதோ தவறு இருப்பதாக தோன்றியது. எனவே அந்த பக்தரிடம் மீண்டும் மேலே சென்று அன்னையிடம் நன்றாக உச்சரித்துக்காட்டி உறுதி பெறுமாறு கூறி,அனுப்பினார். இந்த முறை அன்னை மந்திரத்தைக் கேட்டுவிட்டு சற்று உறுதியான குரலில், இது சரியான மந்திரம் தான் .ஜபம் செய்கின்ற முறையை மட்டும் உனக்குக் கற்றுத்தருமாறு சரத்திடம் சொல் என்று கூறினார். சுவாமிகளும் மௌனமானார். காலம் கடந்தது . அன்னையின் மகா சமாதிக்குப்பிறகு ஒரு நாள் சுவாமிகள்  சக்தி வழிபாடு பற்றிய ஓர் அரிய நூலைப்படிக்க  நேர்ந்தது. அதில் அன்னை அந்த பக்தருக்கு அளித்த மந்திரம் அப்படியே இருந்தது. திகைத்துவிட்டார் சவாமிகள். தாம் எவ்வளவோ கற்றிருந்தும் அன்னையின்  ஆழ்ந்த ஞானத்திற்கு முன் தமது அறிவு எதுவுமே இல்லை என்பதைக் கண்டார் அவர்.
-
தொடரும்...
-
ஸ்ரீராமகிருஷ்ணரின் ஆன்மீகக் குழுவில் இணைய 9789374109 என்ற எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலம் ரிக்கொஸ்ட் மெசேஜ் அனுப்பவும்


No comments:

Post a Comment