Saturday, 22 June 2019

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு-பாகம்-84

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு-பாகம்-84

பலமுறை ஜெயராம்பாடிக்கு அன்னையைக் காணச் செல்வார் கிரீஷ்.அவர் வரும்போதெல்லாம்  அன்னையே அவரது தேவைகளைக் கவனிப்பார். கிரீஷ் தூங்கி எழுந்ததும் தேனீர் குடிக்கும் பழக்கம்  உள்ளவர். இதையறிந்த அன்னை தாமே அண்டை அயலாரிடம்  சென்று பால் வாங்கி வந்து அவருக்கு அந்த நேரத்தில் தேனீர் கொடுப்பார்.கிரீஷீக்குத்  தெரியாமல் அவரது படுக்கைவிரிப்பை நாள்தோறும் தாமே துவைத்து வைப்பார். சுவையான பதார்த்தங்கள் சமைத்து கிரீஷின் அருகில் அமர்ந்து பரிமாறவும் செய்வார்.
அன்னை கல்கத்தாவிலிருக்கும் போது கிரீஷ் அடிக்கடி வந்து  அவரை தரிசிப்பார். ஒரு முறை கல்கத்தாவிலிருந்து ஜெயராம்பாடிக்கு அன்னை புறப்பட்டபோது அவர் வழியனுப்ப வந்தார். அப்போது அன்னையிடம் அம்மா நான் உங்களிடம்  வரும்போது ஒரு குழந்தையைப்போல் ஆகிவிடுகிறேன். நான் மட்டும்       இளைஞனாக இருந்தால் உங்களுக்கு ஓடியாடி எல்லாவிதமான சேவைகளையும் செய்வேன். ஆனால் எனக்கோ வயதாகிவிட்டது. நீங்கள் எங்களுக்குச் சேவை செய்கிறீர்கள்,நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். ஜெயராம்பாடி மக்களுக்குச் சேவை செய்ய இப்போத அங்கு போகிறீர்கள். அவர்களுக்காகச் சமையற்கட்டில் நின்று சமையலும் செய்யப்போகிறீர்கள்.நான் எப்படித் தங்களுக்குச் சேவை செய்ய முடியும்? சேவை என்பது என்ன என்பது பற்றித் தான் எனக்கு என்ன தெரியும்? என்று கூறினார். பிறகு அன்னையைச் சுற்றியிருந்த கூட்டத்தைப் பார்த்து உணர்ச்சியால் குரல் தழுதழுக்க,கடவுள் மனித வடிவில் வருகிறார் என்பதை நம்மைப்போன்ற மனிதர்கள் நம்புவது கடினம். ஒரு நாட்டுப்புறப் பெண்ணின் வடிவில் அண்ட சராசரங்களின் தாயான பராசக்தி இதோ நம்முன் நிற்கிறாள். அவளது சன்னிதியில் நாம் நிற்கிறோம் என்பதை உணர முடிகிறதா? உருவம் தான் நாட்டுப்புற பெண்.ஆனால் உண்மையில் அன்னை இந்தப்புவனங்களின் ஈசுவரியான புவனேசுவரி,மகாமாயை .மகாசக்தி, . மனிதர்கள் நல்ல கதியை அடையவும்              அதே நேரத்தில் பெண்மை லட்சியத்தை உலகம் உணர்ந்து கொள்ளவும் அவர் அவதரித்திருக்கிறார் என்றார்.
தெய்வீகக் காட்சி மூலம் அன்னை அருள் புரிந்ததை சுவாமி ராமகிருஷ்ணானந்தரின் வாழ்வில்  காண்கிறோம். அன்னையின் திருப்பாதங்கள் தென்னகத்தில் படுவதற்கு சவாமிகளே முக்கியக் காரணமாக  இருந்தார்.இடையறாத உழைப்பின் காரணமாக இளவயதிலேயே நோயுற்று உத்போதனில் படுத்தபடுக்கையாக ஆனார்.அது 1911 ஆகஸ்டு. இறுதி நாட்களில் அவருக்கு அன்னையைக் காண வேண்டும் என்ற ஆவல் எழுந்தது. அன்னை அப்போது ஜெயராம்பாடியில் இருந்தார். சுவாமிகளின் ஆவலை அன்னை அறிந்தாலும் அவரால் உடனடியாக வர முடியவில்லை. ஆனால் கருணைக்கடலான அவர் நேரில் வந்து நிறைவேற்ற முடியாத ஆவலை  தெய்வீகக்காட்சியின்  மூலம் பூர்த்தி செய்தார். சுவாமிகள் பூவுலகில் வாழ்ந்த கடைசி இரவன்று இந்தக்காட்சி அவருக்குக் கிடைத்தது.தமது அனுபவத்தை மறுநாளே ஓர்  அன்பர் மூலம் கிரீஷீக்குத் தெரிவித்து ஒரு பாடலாக எழுதச் செய்தார்.அந்தப்பாடல் வருமாறு-
துக்க இரவு கழித்து விட்டது.
நான் எனது என்ற கோரமான
கனவு கலைத்து விட்டது.
வாழ்வு,சாவு என்ற பிரமை இனி இல்லை.
ஞான சூரியன் உதிக்கிறான்.
அன்னை புன்முறுவல் புரிகிறாள்.
வரம் ,அபயம் இரண்டையும் தாங்கிய கரங்களுடன்
அவள் காட்சி தருகிறாள்.
உரத்த குரல் எழுப்பி துந்துபி முழங்க ஜெயகோஷம் செய்யுங்கள்.
மரணத்தை வெல்வதான அவளது
திருநாமம் புவி முழுவதும் நிறைந்துள்ளது.
கலங்காதே மகளே
குருதேவரின் திருப்பாதங்களை இதோ பார்.
தொல்லைகள் யாவும் போய்விடும். வேதனைகள் அனைத்தும் தீர்ந்து விடும்.என்று அன்பு மொழி கூறுகின்றாள் அவள்.இரு கண்களிலும் கரணை பொங்க
என் அருகில் நிற்கிறாள்.
மங்கலமயமான அவள் மக்களைக்
காக்கும் தேவியல்லவா
அதே நாள் பிற்பகலில்  மகா சமாதியில் ஆழ்ந்தார் சுவாமிகள். அன்னை இந்தச் செய்தியைக் கேட்டபொது என் இதயமே வெடித்துவிட்டது என்று கூறி அழுது புலம்பினார். பல நாட்கள் அவரைப்பற்றியே கண்ணீருடன் பேசிக் கொண்டிருந்தார்.
-
தொடரும்...
-
ஸ்ரீராமகிருஷ்ணரின் ஆன்மீகக் குழுவில் இணைய 9789374109 என்ற எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலம் ரிக்கொஸ்ட் மெசேஜ் அனுப்பவும்




No comments:

Post a Comment