Sunday, 23 June 2019

ஸ்ரீராமகிருஷ்ணரின் விரிவான வாழ்க்கை வரலாறு பாகம்-31

ஸ்ரீராமகிருஷ்ணரின் விரிவான வாழ்க்கை வரலாறு
பாகம்-31
-
நாட்கள் செல்லச்செல்ல அவரால் அன்றாட பூஜைப் பணிகளைக்கூட முறையாகச் செய்ய இயலவில்லை.
ஒருவர் ஆன்மீக நிலைகளில் முன்னேற முன்னேற சடங்குகளும், சம்பிரதாயங்களும் தானாகவே அவரை விட்டு விலகிவிடுவதை குருதேவர் ஓர் உதாரணத்தால் விளக்குவதுண்டு.
மருமகள் கருவுறும் வரை , அவள் வேண்டுவதை எல்லாம் உண்ணவும், எல்லா வேலைகளைச் செய்யவும் மாமியார் அனுமதிக்கிறாள். கருவுற்றபின் அவற்றில் சில கட்டுப்பாடுகளை விதிக்கிறாள். பேறுகாலம் நெருங்கும் போது கட்டுப்பாடுகள் அதிகரிக்கின்றன. கடினமான வேலைகளில் ஈடுபட்டால் கருவில் உள்ள குழந்தை பாதிக்கப்படும் என்பதால் எந்த வேலையும் செய்ய அனுமதிப்பதில்லை.குழந்தையை ஈன்றெடுத்து விட்டாலோ, அந்தக் குழந்தையைப் பராமரிப்பதிலேயே அவளுடைய நேரம் முழுவதும் கழிகின்றது? அதுபோல குருதேவரின் பூஜையும்,புறச்சடங்குகளும் இயல்பாகவே குறையத் தொடங்கின.
குறித்த நேரத்தில் பூஜைப் பணிகளை அவர் செய்வது  நின்றுவிட்டால் எப்போதும் ஆனந்தப் பரவசத்தில் மூழ்கித் திளைத்த வண்ணம் தாம் விரும்பும் போது விரும்பும் வகையில் பூஜைப் பணிகளைச் செய்தார்.
அவர் சிலவேளைகளில் பூஜை செய்வதற்கு முன்பே நைவேத்தியம் செய்து விடுவார். தியானத்தில் மூழ்கி தாம் வேறு அன்னை வேறு என்ற நினைப்பையே மறந்து மலர்களாலும் சந்தனத்தாலும் தம்மையே அலங்கரித்துக் கொள்வார். உள்ளும் புறமும் அன்னையின் காட்சியைத் தொடர்ந்து கண்டதே இத்தகைய செயல்களுக்குக் காரணம் என்று அவர் எங்களிடம் கூறியதுண்டு.
அந்தத் தொடர்ந்த காட்சி இடையில் ஒரு கணம் தடைப்பட்டாலே் கூட அவரால் தாங்க முடியாது. விரகதாபம் மேலிட தரையில் விழுந்து புரண்டு, முகத்தை மண்ணில் தேய்த்துக்கொண்டு அலறி அழுது புலம்புவார்.
அவரது அழுகையொலி அந்தப் பகுதி முழுவதையும் நிரப்பும் .மூச்சே நின்றுபொய் உயிருக்காகப் போராடுவார்.கீழே விழுந்து புரள்வதால் உடலில் காயங்கள் ஏற்பட்டு ரத்தம் வடிவதைக்கூட அவர் உணர்வதில்லை. விழுந்தது நெருப்பிலா இல்லை, நீரிலா என்பதையும் அறியவில்லை. இந்தப்போராட்டங்கள் எல்லாம் அன்னையின் காட்சி மீண்டும் கிடைத்த உடனேயே மாறிவிடும். அவரது திருமுகம் மீண்டும் அற்புத ஒளியுடன் துலங்கும், ஏதோ முற்றிலும் மாறுபட்ட ஒரு மனிதராக அவர் மாறிவிடுவது போலவே இருக்கும்!
இதுவரை எப்படியோ குருதேவர் பூஜையைச் செய்துவர மதுர்பாபு அனுமதித்து வந்தார்.
இனியும் அது நடைமுறையில் இயலாது என்பதை உணர்ந்து மாற்று ஏற்பாடு செய்தார். அதைப்பற்றி ஹிருதயர் கூறினார், மதுர்பாபுவின் இந்த முடிவிற்கு முக்கியமான காரணம் ஒன்று உண்டு.
ஒரு நாள் குருதேவர் பரசவ நிலையில் ஆசனத்திலிருந்து திடீரென்று எழுந்து, கோயிலுள் நின்றிருந்த மதுர்பாபுவையும் என்னையும் பார்த்தார். பின்னர் என்கைகளைப் பிடித்து அழைத்துச் சென்று என்னை ஆசனத்தில் அமரச்செய்து மதுர்பாபுவிடம், இன்றிலிருந்து ஹிருதயன் பூஜை செய்வான்.என் பூஜையை ஏற்றுக்கொண்டது போன்றே அவனது பூஜையையும் ஏற்றுக்கொள்வதாக அன்னை கூறுகிறாள். என்றார்.
குருதேவரின் வாக்கை அன்னையின் ஆணையாகவே மதுர்பாபு ஏற்றுக்கொண்டார். ஹிருதயரின் கூற்று எந்த அளவுக்கு உண்மை யானது என்பது நமக்குத் தெரியாது. ஆனால் குருதேவர் இருந்த மனநிலையில் அவரால் முறையாகப் பூஜைப் பணிகளைச் செய்ய இயலாது என்பதை மதுர்பாபு நன்றாக அறிந்திருந்தது உண்மை.
குருதேவரை முதன்முதல் கண்டதிலிருந்தே மதுர்பாபுவின்  மனம் அவர்பால் ஈர்க்கப்பட்டிருந்தது. அவருக்கு அனைத்து சவதிகளையும் செய்து கொடுத்து தட்சிணேசுவரத்தில் வைத்துக்கொள்ள மதுர்பாபு தீவிரமாக முயன்றார்.
குருதேவரின் அற்புதமான பண்புகளை அறிய அறிய மதுர்பாபுவிற்கு அவரிடம் ஈடுபாடு அதிகரித்தது. குருதேவரின் தேவைகளை எல்லாம் பூர்த்தி செய்தார். அவர் மீது அன்பைப் பொழிந்தார்.காரணமின்றி மற்றவர்கள் கொடுக்கும் தொல்லைகளிலிருந்து அவரைப்பாதுகாத்தார். இதற்கு ஓரிரு நிகழ்ச்சிகளை உதாரணமாகக் கூறலாம்.  குருதேவருக்கு இருந்த வாய்வுத் தொல்லையை நீக்குவதற்காக நாள்தோறும் கற்கண்டு பானம் கொடுக்க ஏற்பாடு செய்தார்.
குருதேவர் ராகாத்மிக பக்தியின் விளைவால் வழக்கத்திற்கு மாறான முறையில் பூஜை செய்தபோது சிந்தனைத் திறனற்ற மற்றவர்கள் அவரைக்குறைச்சொல்லி அவரது                              செயல்களில் தலையிட முயன்றனர். அப்போது குருதேவரைப் பாதுகாத்தது மதுர்பாபு தான்.
மேலும் சில நிகழ்ச்சிகளை வேறொரு பகுதியில் கூறியுள்ளோம். ஆனால் புத்தி புகட்டுவதற்காக என்று ராணியை குருதேவர் அடித்த சம்பவத்திற்குப் பிறகு அவரைப்பற்றி மதுர்பாபுவுக்கும் ஐயம் தோன்றியது.
குருதேவரிடம் ஆன்மீகமும் பைத்தியமும் கலந்துள்ளன என்ற முடிவுக்கு அவர் வந்தார் என்று தோன்றியது.ஆனால் கல்கத்தாவில் புகழ்பெற்ற மருத்துவர் கங்காபிரசாத் சேன் என்பவரின் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தார்.
சிகிச்சை ஏற்பாட்டுடன் மதுர்பாபு நின்றுவிடவில்லை.
மனத்தைக் கட்டுப்படுத்தி சாதனைகளில் ஈடுபடவேண்டும் என்று சொல்லியும், யுக்திபூர்வமான காரணங்களைக் காட்டியும் தான் உண்மை என்று அறிந்ததை குருதேவருக்கு உணர்த்த தன்னாலான முயற்சிகளைச் செய்தார்.

மதுர்பாபுவின் மாற்று ஏற்பாட்டின்படி,குருதேவரின் ஒன்றுவிட்ட சகோதரரான ராம் தாரக் சட்டோபாத்யாயர் அர்ச்சகராக அமர்த்தப்பட்டார்.
வேலை நிமித்தமாக தட்சிணேசுவரக்கோயிலுக்கு வந்த அவர், குருதேவர் குணமடையும் வரை கோயில் பூஜை செய்வதற்காக நியமிக்கப்பட்டார். இந்த நிகழ்ச்சி 1858-ஆம் ஆண்டில் நடந்தது.
ராம்தாரக்கை ஹலதாரி என்று குருதேவர் அழைப்பது வழக்கம். அவரைப்பற்றிய பல விஷயங்களை குருதேவர் எங்களுக்குக் கூறியிருந்தார்.
 ஹலதாரி ஒரு நல்ல பண்டிதரும் சாதகரும் ஆவார். பாகவதம், அத்யாத்ம ராமாயணம் போன்ற நூல்களை நாள்தோறும் படிப்பார். அவருக்கு மகாவிஷ்ணுவிடம் அதிக பக்தி இருந்தது. அன்னை பராசக்தியையும் அவர் வெறுக்கவில்லை. எனவே மதுர்பாபுவின் வேண்டுகோளின்படி அன்னைக்குப் பூஜை செய்யும் பணியை ஏற்றுக்கொண்டார்.தானே சமைத்து உண்ண விரும்புவதாகவும் உணவுப்பொருட்களை மட்டும் கொடுத்தால் போதும் என்றும் மதுர்பாபுவிடம் கேட்டார். முதலில் இதனை மறுத்த மதுர்பாபு,ஏன்? உமது சகோதரர் ராமகிருஷ்ணரும் மருமகன் ஹிருதயனும் கோயில் பிரசாதத்தை உண்ண வில்லையா? என்று கேட்டார்.
மதிநுட்பம் வாய்ந்த ஹலதாரி அதற்கு ”என் சகோதரன் மிகவும் உயர்ந்த ஆன்மீக நிலையில் இருக்கிறான். அவனுக்கு எந்த விதத்திலும் இது ஊறுவிளைவிக்காது. நான் அந்த நிலையில் இல்லை. நான் உணவு விஷயத்தில் அவனைப்போல் நடந்து கொள்வது குற்றமாகும் என்று சொன்னார்.இதனைக்கேட்டு மதுர்பாபு மிகவும் மகிழ்ச்சியுற்றார். உணவுப்பொருட்களைக்கொடுக்கவும் ஏற்பாடு செய்தார். நாள்தோறும் சமையலுக்கு வேண்டிய பொருட்களைப்பெற்று  அவற்றை பஞ்சவடியின் கீழ் சமைத்து உண்டார் ஹலதாரி.
அன்னை காளியிடம் ஹலதாரிக்கு எந்த விதமான வெறுப்பும்  இல்லையெனினும் மிருகபலி கொடுப்பதை அவர் விரும்பவில்லை.
விழாக்களின் போது மிருகபலி கொடுப்பது தட்சிணேசுவர ஆலயத்தில் வழக்கமாக இருந்தாலும் அந்த  சமயங்களில் உண்மையான ஈடுபாட்டுடனும், ஆர்வத்துடனும் ஹலதாரியால் பூஜை செய்ய இயலவில்லை.
அவர் சுமார் ஒருமாத காலம் பூஜை செய்தார். அதன்பின் ஒரு துயர நிகழ்ச்சி நடைபெற்றதாகக்கூறப்படுகிறது. ஒரு நாள் அவர் சந்தியா வந்தனம் செய்து கொண்டிருந்தபோது அன்னை பயங்கர வடிவுடன் ஹலதாரியின் முன்தோன்றி, நீ எனது பூஜையைத் தொடராதே. தொடர்ந்து செய்வாயானால் உரிய முறையில் பூஜை செய்யாத குற்றத்திற்காக உன் மகனை இழக்கநேரிடும் என்று கூறினாள்.
இது ஏதோ பிரமை என்று எண்ணிய ஹலதாரி அன்னையின் வாக்கைப் பொருட்படுத்தவில்லை.
சில நாட்களில் மகன் இறந்துவிட்ட செய்தி ஹலதாரிக்கு எட்டியது.அப்போது தான் உண்மையை உணர்ந்த ஹலதாரி நடந்த நிகழ்ச்சிகள் அனைத்தையும் குருதேவரிடம் சொல்லி அன்னைக்குப் பூஜை செய்வதிலிருந்து விலகிக்கெண்டார். அதன்பின் ஹிருதயர் பூஜைப்பணிகளை ஏற்றுக்கொண்டார். ஹலதாரி ராதாகாந்தர் ஆலயத்தில் பூஜை செய்தார்.
.
தொடரும்..

No comments:

Post a Comment