Saturday, 22 June 2019

ஸ்ரீராமகிருஷ்ணரின் விரிவான வாழ்க்கை வரலாறு

ஸ்ரீராமகிருஷ்ணரின் விரிவான வாழ்க்கை வரலாறு
-
பாகம்-13


இளம் வயதிலேயே தனது கூரிய அறிவினால் பிறர் செயல்களுக்கான அடிப்படை நோக்கத்தை அவனால் அறிந்து கொள்ள மடிந்ததாகக் கண்டோம். பள்ளியில் படிப்பதும் தேர்ச்சி பெற்று பட்டங்களைப் பெறுவதும் பணம் சம்பாதிப்பதற்காக மட்டுமே என்பதை அவன் கண்டு கொண்டான். உலகியல் இன்பங்களுக்காக இத்தகைய பயிற்சிகளைிலும் முயற்சிகளிலும் தங்கள் சக்தியைச் செலவிடுகின்ற யாரும் தன் தந்தையைப்போல் சக்திவாதியாகவோ ஒழுக்கசீலராகவோ தர்மநிதிஷ்டராகவோ இருக்க முடியாது என்பதில் உறுதியாக இருந்தான்.
தன்னலம் கண்ணை மறைக்க மண்ணுக்கும் பொன்னுக்கும் அடித்துக்கொண்டு சில குடும்பங்கள் தங்களுக்கள் வீடு, நிலம் முதலியவற்றை அளந்து பிரித்து, இந்தப்பக்கம் என்னுடையது, அந்தப்பக்கம் உன்னுடையது என்றெல்லாம் சண்டையிட்டுப் பகைவர்களாவர். ஒரு வேளை ஓரிருநாட்கள் அவற்றை அனுபவித்து விடுவர்.
ஆனால் அந்தோ! சாவு அவர்களைக் கொண்டு போய்விடும். இவற்றையெல்லாம் கண்முன் கண்டிருக்கிறான் கதாதரன். எல்லா துன்பங்களுக்கம் அடிப்படைக்காரணம் பணமும் புலனின்ப ஆசையுமே என்பது அவனுக்குத் தெள்ளத்தெளிவாகப் புரிந்திருந்தது.
அத்தகைய பணத்தைச் சம்பாதிப்பதற்கான கல்வியை அவன் வெறுத்து ஒதுக்கியதில் என்ன வியப்பு இருக்கிறது? பக்தியையே வாழ்க்கையின் தலையாய குறிக்கோளாகக் கருதினால் அவன் தந்தையைப்போல் வாழ்க்கையின் அடிப்படைத்தேவைகளான சாதாரண உடை, எளிய உணவு இவற்றில் திருப்தி கண்டான். எனினும் நாள்தோறும் சிறிதுநேரம் பள்ளி சென்று வரத்தவறவில்லை. பிற மாணவர்கள் மீது அவன் வைத்திருந்த அன்பே அதற்குக்காரணம்   .
ஸ்ரீரகுவீரரின் பூஜையிலும் வீட்டுவேலைகளில் தன் தாய்க்கு உதவுவதிலும் நீண்ட நேரத்தைக் கழித்தான்.
கதாதரன் இவ்வாறு வெகுநேரத்தை வீட்டில் கழித்ததால் கிராமத்துப் பெண்களுக்கு அடிக்கடி அவனைச் சந்திக்கும் நல்வாய்ப்பு கிடைத்தது.
 வீட்டுவேலைகள் முடிந்ததும் பெண்கள் வந்து, அவனிடம் பாடவோ பக்தி நூல்களைப் படிக்கவோ சொல்வார்கள். கதாதரனும் தன்னால் முடிந்த அளவு அவர்களின் ஆவலை நிறைவேற்றுவான். தாய்க்கு உதவுவதில் கதாதரன் மும்முரமாக இருந்தால், புராணங்கள் வாசித்துக் காண்பிக்கவோ பாடவோ அவனுக்கு நேரம் கிடைக்கவேண்டும். என்பதற்காக அந்தப்பெண்களே அந்த வேலைகளை எல்லாம் செய்வதும் உண்டு. இது ஓர் அன்றாட நிகழ்ச்சியாகி விட்டிருந்தது.
கதாதரனின் பாடல்களையும் வாசிப்பையும் நீண்ட நேரம் கேட்க வேண்டும் என்பதற்காக வீட்டு வேலைகளை வேகவேகமாக முடிப்பார்களாம் கிராமப்பெண்கள்! அந்த அளவுக்கு அவர்களைக் கவர்ந்திருந்தான் கதாதரன்.

காமார்புகூரில் வைணவர்கள் அதிகம். ஒவ்வொரு நாளும் மாலை வேளைகளில் யாராவது ஒருவரின் வீட்டில் பாகவத பாராயணம் ,நாம சங்கீர்த்தனம்  போன்ற ஏதாவதொரு நிகழ்ச்சி நடைபெற்ற வண்ணம் இருக்கும். இவற்றையே தொழிலாகக்கொண்ட மூன்று யாத்ரா குழுவினரும் ஒரு பவுல் குழுவும் ஓரிரு கவி குழுவினரும் அந்த கிராமத்தில் வாழ்ந்து வந்தனர். அவர்களின் நிகழ்ச்சி எங்கு நடைபெற்றாலும் தவறாமல் அங்கு சென்று விடுவான் கதாதரன். அங்கு நிகழ்பவற்றை அப்படியே மனத்தில் பதித்துக்கொள்வான். அவனது அபாரமான நினைவாற்றலைப்பற்றி ஏற்கனவே கூறியிருந்தோம். அந்த நாடகங்களை, பாடல்களை அப்படியே இந்தப்பெண்களிடம் நடித்துக் காட்டுவான்.  பாத்திரங்களுக்கு ஏற்றவாறு குரலை ஏற்றி இறக்கி, பல்வேறு பாத்திரங்களைத் தான் ஒருவனே நடித்து எல்லோரையும் மகிழவைப்பான். எப்போதாவது தாயோ வேறு யாராவதோ கவலையுற்றிருப்பதைக் கண்டால் போதும், உடனே ஒரு நகைச்சுவைப் பாத்திரமாகி விடுவான். ஏதாவதொரு நாடகத்திலுள்ள நகைச்சுவைப்  பகுதியை நடித்துக் காண்பிப்பான். அல்லது கிராமத்திலுள்ள யாராவது ஒருவரின் நடை உடை பாவனைகளை அப்படியே நடித்துக்காட்டி அனைவரையும் வயிறு வெடிக்கச் சிரிக்க வைப்பான்.
கதாதரன் கிராமப்பெண்களின் வாழ்வில் நிறைந்திருந்தான். அவனது பிறப்பின் போது கூதிராமுக்கும் சந்திராதேவிக்கும் ஏற்பட்ட அற்புதக்காட்சிகளைப் பற்றியும் கனவுகளைப் பற்றியும் அந்தப் பெண்கள் கேள்விப்பட்டிருந்தனர். பரவச நிலைகளில் திளைக்கும்போது அவனிடம் ஏற்படுகின்ற வியக்கத்தக்க மாறுதல்களை நேரடியாகக் கண்டிருக்கின்றனர்.அவனது ஆழ்ந்த பக்தி, தன்னையே மறந்துஅவன் கதைகள் கூறும் லயம், இனிய குரல், எளிமை போன்ற பண்புகள் அவர்களை அவன் மீது அன்பும் பாசமும்கொள்ளச் செய்தது இயல்பு தான். தர்மதாஸ் ராஹாவின் மகளான பிரசன்னமயியும் பிற முதிய பெண்களும் கதாதரனிடம் பாலகோபாலனையே கண்டதாகவும் அதனால் அவனைத் தங்கள் குழந்தைகளை விட அதிகமாக நேசித்ததாகவும் நாங்கள் கேள்விப்பட்டுள்ளோம்.
இளைய பெண்கள் அவனை பகவான் ஸ்ரீராமர் ஸ்ரீகிருஷ்ணரின் அம்சாவதாரமாகக் கருதி தங்கள் ஆத்ம நண்பனாகக் கொண்டாடினர்.
இந்தப்பெண்களுள் பலர் வைணவக் குடும்பத்தினர். நம்பிக்கையே அவர்களது சமயவாழ்க்கையின் அடிப்படை. எனவே உயர்ந்த பல குணங்களையும் தோற்றத்தையும் உடைய கதாதரனைக் கடவுளாக அவர்கள் நம்பியதில் வியப்பில்லை. அந்த நம்பிக்கையின் விளைவாகத் தங்கள் அந்தரங்க எண்ணங்களைக்கூட அவனிடம் எவ்விதத் தயக்கமுமின்றி கூறி அவர்கள் அறிவுரை கேட்பதுண்டு. அதன் படி நடக்கவும் முயற்சி செய்தனர்.
அப்போதெல்லாம் கதாதரனும் அவர்களில் ஒருவனாகவே நடந்து கொள்வான். அந்தப்பெண்களும் அவனை ஒரு பெண்ணாகவே கருதினர்.
சில நேரங்களில் பெண்களைப்போல வே்டணிந்து கொண்டு அவர்களைப்போல் நடித்துக் காட்டுவான் கதாதரன். இவ்வாறு கிராமப்பெண்களின் வேண்டுகோளுக்கு இணங்கி ராதை, அவளது தோழி பிருந்தை போன்றோராகத்தோன்றி நடிப்பதுண்டு. அந்தச் சமயத்தில் நடை உடை பாவனைகளில் அப்படியே ஒரு பெண்ணைப்போலத் தோன்றுவான். மிகவும் நெருங்கியவர்கள் கூட அந்த வேளையில் அவனை அடையாளம் கண்டு கொள்ள முடியாது  என கிராமப்பெண்கள் கூறினர்.
சில நேரங்களில் பெண்களைப்போல் வேடமிட்டுக்கொண்டு இடுப்பில் ஒரு குடத்துடன் ஹல்தார்புகூரிலிருந்து தண்ணீர் கொண்டு வருவதற்காகச் செல்வது போல ஆண்கள் முன்னால் அவன் ஆடி அசைந்து நடந்து செல்லும் போது அவனை யாரும் கதாதரன்  என்று கூறவே முடியாது.அப்போது ஒரு பெண்ணாகவே மாறிவிடுவான். பெண்களின் பல்வேறு பாவனைகள் அவன் எந்த அளவிற்கு நுணுக்கமாக கவனித்துள்ளான் என்பது இதிலிருந்து தெரிய வருகிறது.

காமார்புகூரில் வாழ்ந்த சீதாநாத் பைன் என்னும் செல்வந்தரைப்பற்றி முன்பே கூறியுள்ளோம். அவருக்கு ஏழு பிள்ளைகளும் எட்டு பெண்களும் இருந்தனர். திருமணத்திற்குப் பிறகும் பெண்கள் சீதாநாத் வீட்டில் கூட்டுக்குடும்பமாக வாழ்ந்தனர். அன்றாட ச் சமையலுக்கு அவர்கள் வீட்டில் பத்து அம்மிகளில் மசாலா அரைப்பார்களாம்.
சீதாநாதரின் தூரத்து உறவினர்கள் பலரும் அவரது வீட்டிற்கு அண்மையில் வாழ்ந்து வந்தனர். வணிகர்களாகிய அவர்கள் வாழ்ந்து வந்த அந்தப்பகுதி வணிகர் குடியிருப்பு என்று அழைக்கப்பட்டு வந்தது.
 சீதாநாதரின் வீடு கூதிராமின் வீட்டிற்கு அருகில்  இருந்ததால்  சீதாநாதரின் மனைவியும் புதல்விகளும் அந்தக்குடும்பத்தின் பிற பெண்களும் ஓய்வு நேரங்களில் சந்திராதேவியின் வீட்டிற்கு வந்து கதாதரனின் ஆடல்பாடல்களை ரசிப்பதுண்டு. அவனைத்தங்கள் வீட்டிற்கு அடிக்கடி அழைத்துச்சென்று பெண்வேடமிட்டு நடிக்கச்செய்தும் மகிழ்வார்கள்.
சீதாநாதரின் உறவுப்பெண்கள் பலர் பிறந்தகத்தைத்தவிர வேறு எங்கும் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. எனவே அவர்கள்  சந்திரா தேவியின் வீட்டில் அன்றாடம் நிகழ்கின்ற ஆடல் பாடல்களைக்காணவோ கேட்கவோ முடிவதில்லை. ஒரு வேளை அதற்காகத்தான் கதாதரனைத் தங்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்றனர் போலும்.சந்திராதேவியின் வீட்டிற்குச் செல்ல இயலாத பலரும் சீதாநாதரின் வீட்டில் வந்து கதாதரனின் நடிப்பையும் புராணங்களை அவன் படிப்பதையும் கண்டு ரசிப்பர்.
சீதாநாத் பைனும் கதாதரனை மிகவும் நேசித்தார். அவர் வீட்டு ஆண்கள் அனைவரும் கதாதரனின் ஒழுக்கத்தை நன்றாக அறிந்திருந்தனர். எனவே தங்கள் வீட்டுப்பெண்கள் அவனுடன் பழகுவதற்கு எவ்வித மறுப்பும் தெரிவிக்கவில்லை.
ஆனால் ஒருவருக்கு மட்டும் கதாதரனின் இந்த ஆட்டமும் பாட்டும் அவனைச்சுற்றிப்பெண்கள் கூடுவதும் சிறிதும் பிடிக்கவில்லை. அவர் துர்க்காதாஸ் பைன். அவரும் வணிகர் குடியிருப்பைச்சேர்ந்தவர் தாம்.
 கதாதரனை அவர் உயர்வாக எண்ணியிருந்தார். அவனை நேசிக்கவும் செய்தார். ஆனால் எக்காரணத்தை முன்னிட்டும் பெண்கள் பர்தா முறையைத் தளர்த்துவதை அவர் சிறிதும் விரும்பவில்லை.
எனவே தன்வீட்டுப்பெண்கள் இதில் எல்லாம் கலந்து கொள்ள அவர் அனுமதிக்கவில்லை. இதை அவர் ஒரு பெருமையாகக் கருதினார்.
 தன் வீட்டுப் பெண்களையோ தன் வீட்டின் உட்பகுதியையோ பிறர் கண்டதில்லை என்று சீதாநாதரிடமும் பிறரிடமும் பெருமையாகக் கூறிக்கொள்வார். வீட்டுப்பெண்கள் பர்தா முறையைத் தளர்த்துவதைக் கண்டு கொள்ளாமல் இருக்கின்ற சீதாநாதரையும் பிறரையும் தாழ்வாகப்பேசுவார்.

ஒரு நாள் துர்க்காதாஸ் இவ்வாறு தன்  உறவினர் ஒருவரிடம் கூறிப்பெருமையடித்துக்கொண்டிருந்த போது தற்செயலாக கதாதரன் அங்கு வந்தான். அவர் கூறியது அவனுக்கு ஒரு சவாலாக அமைந்துவிட்டது.
உடனே அவன்.”ஐயாநீங்கள் என்ன சொல்கிறீர்கள்? பெண்களைப் பர்தா முறையினால் மட்டும் பாதுகாத்துவிட முடியுமா? ஒழுக்கத்தினாலும் பக்தியினாலுமே அவர்கள் தூயவர்களாள வாழ  முடியும். அது போகட்டும், நான் விரும்பினால் உங்கள் வீட்டின் உட்பகுதிக்குச் சென்று பெண்களுடன் பழக என்னால் முடியும்” என்று கூறினான்.
துர்க்காதாஸ் மேலும் செருக்குடன் அதையும் தான் பார்ப்போமே” என்றார். கதாதரனும் விடாமல், சரி” பார்த்துவிடலாம்” என்று கூறிவிட்டுச்சென்றான்.
சில நாட்கள் கழிந்தன.ஒரு நாள் மாலை நேரம் யாருக்கும் தெரியாமல் தன்னை ஓர் ஏழை நெசவாளிப்பெண்ணாக வேடமிட்டுக்கொண்டான் கதாதரன். தழையத்தழைய சாதாரணச்சேலை ஒன்றை உடுத்திக்கொண்டான். ஓரிரு சாதாரண ஆபரணங்களையும் கையில் வெள்ளிக்காப்புகளையும் அணிந்து கொண்டான். கையில் ஒரு கூடையையும் எடுத்துக்கொண்டான். முக்காடிட்டிருந்த புடவையை, முகத்தைச்சற்று மறைக்கும்படி இழுத்துவிட்டுக்கொண்டான். சந்தைப் பக்கத்திலிருந்து தயங்கிய நடையுடன் துர்க்காதாஸ் வீட்டிற்கு முன் வந்து சேர்ந்தான்.
அப்போது இருள் கவியத் தொடங்கியிருந்தது. துர்க்காதாஸ் தன் நண்பர்களுடன் வீட்டின் வரவேற்பு அறையில் உட்கார்ந்திருந்தார். கதாதரன் அவரிடம் நேராகச் சென்று தன்னை ஒரு நெசவாளிப்பெண் என்று அறிமுகம் செய்து கொண்டான்.
நூல் விற்பதற்காகப் பிற பெண்களுடன் சந்தைக்கு வந்ததாகவும், அவர்கள் தன்னை விட்டுவிட்டுச் சென்று விட்டதாகவும் , அன்றிரவு மட்டும் அவர் வீட்டில் தங்க அனுமதி அளிக்கும் படியும் மிகவும் பணிவுடன் கேட்டான்.
துர்க்கா தாஸ் அவனை நம்பிவிட்டார். இருப்பினும் சொந்த கிராமம் எது என்பவை போன்ற ஓரிரு கேள்விகளைக்கேட்டார். அதற்கெல்லாம் கச்சிதமாகப் பதிலளித்தான் கதாதரன். திருப்தியடைந்த துர்க்காதாஸ்,  அவனிடம் ,”சரியம்மா கலங்க வேண்டாம், உள்ளே போ, அங்கிருக்கின்ற பெண்கள் உனக்குத் தங்க இடம் தருவார்கள். என்று கூறினார். கதாதரனும் நன்றியுடன் அவரை வணங்கிவிட்டு வீட்டின் உட்புறத்திற்குச் சென்றான்.
துர்க்காதாஸின் வீட்டின் உட்புறத்திற்குச் சென்ற கதாதரன் அந்தப்பெண்கனிடமும் அதே கதையைத் திரும்பக்கூறி அவர்களையும் நம்பச் செய்து விட்டான். அவனது இனிய பேச்சும் இளம் வயதும் அந்தப்பெண்களை மிகவும் கவர்ந்தன. அந்தப்பெண்களும் அவனைத் தங்களுடன் தங்க அனுமதித்தனர். உண்பதற்கு அவலும் இனிப்புப் பொரியும் அளித்தனர். படுப்பதற்கும் ஓரிடத்தைக் காட்டினர்.
கதாதரனும் அவர்கள் குறிப்பிட்ட இடத்தில் அமர்ந்து கொண்டான். பொரியை சாப்பிட்டவாறே அங்கிருந்த பெண்களையும் அறைகளையும் கூர்ந்து கவனித்தான். அவர்களின் உரையாடல்களைக்கேட்டு அதில் பங்குகொள்ளவும் செய்தான். இவ்வாறு பேச்சும் சிரிப்புமாக இரவுவெகுநேரமாகி விட்டிருந்தது.
-
தொடரும்
-

No comments:

Post a Comment