Saturday, 22 June 2019

ஸ்ரீராமகிருஷ்ணரின் விரிவான வாழ்க்கை வரலாறு

ஸ்ரீராமகிருஷ்ணரின் விரிவான வாழ்க்கை வரலாறு
-
பாகம்-12

திருமணமாகி நீண்ட நாளாகியும் கருத்தரிக்காமல்  இருந்ததால் ராம்குமாரின் மனைவியை மலடி என்றே எல்லோரும் எண்ணியிருந்தனர்.
ஆனால் அதிசயமாக இப்போது அவள் கருவுற்றாள். அது மகிழ்ச்சிக்குரிய செய்தியாக இருந்தாலும் அவள் கருவுற்றால் இறந்து விடுவாள் என்று ராம்குமார் ஆரூடம் கூறியிருந்தது
இது தெரிந்திருந்ததால் எல்லோரும் கவலை கொண்டனர். அதற்கேற்றாற் போன்ற பல நிகழ்ச்சிகளும் அந்த வீட்டில் நடைபெற்றன.
ராம்குமாரின் மனைவி கருவுற்றதன் பின்னர் திடீரென ராம்குமாரின் வருமானம் குறையத் தொடங்கியது. உடல் நலம் வேகமாகக் குன்றத் தொடங்கியது. முன்னைப்போல் சுறுசுறுப்பாக அவரால் எந்த வேலையையும் செய்ய முடியவில்லை. ராம்குமாரின் மனைவியின் நடைமுறைகள் முற்றிலும் விபரீதமாயின.
கூதிராமின்  காலத்திலிருந்தே அந்தக் குடும்பத்தில் நியதி ஒன்று இருந்து வந்தது.
உபநயனம் ஆகாதவர்கள் , நோயாளிகள் ஆகியோரைத் தவிர வேறு யாரும் ஸ்ரீரகுவீரரின் பூஜை முடியும் வரை எதுவும் உண்ணக்கூடாது என்பதே அந்த நியதி.
ராம்குமாரின் மனைவி இப்போது அந்த நியதியை மீறினாள். இதனால் ஏதாவது தீங்கு நேரலாம் என்று அஞ்சி குடும்பத்தினர் கூறிய மறுப்புகளை அவள் பொருட்படுத்த வில்லை.
சிறு விஷயங்களுக்கும் வீட்டிலுள்ள அனைவரிடமும் சண்டையிட்டாள். கடும்பத்தில் மனக்கசப்பு வளர்ந்தது. சந்திராவும், ராம்குமாரும் எவ்வளவோ எடுத்துக்கூறியும் அவள் தனது குணத்தை மாற்றிக்கொள்ளவில்லை.
கருவுற்றப் பெண்ணிடம் இயல்பாகத் தோன்றும் மாறுதல் இது என நினைத்து அவர்களும் அவளை அவள் போக்கில் விட்டு விட்டனர். அந்த தெய்வீகக் குடும்பத்தில் இருந்து வந்த அமைதி நீங்கி ஒற்றுமை குலையலாயிற்று.

ராமேசுவரர் நன்கு படித்திருந்தும் அவரால் அதிகம் சம்பாதிக்க இயலவில்லை.குடும்பத்தில் உள்ளோரின் எண்ணிக்கை கூடியது. ஆனால் வருமானம் குறைந்தது. முன்பிருந்த வசதியான வாழ்க்கை ஒரு முடிவுக்கு வந்துவிட்டது. ராம்குமார் மிகவும் கவலையுற்றார். எவ்வளவோ முயன்றும் அவரால் இதற்கு ஒரு தீர்வு காண முடியவில்லை.
ஏதோ ஓர் ஆற்றலால் தடுக்கப்படுவது போன்று அவரால் முயற்சிகள் அனைத்தும் பயனற்றுப்போயின.தொடர்ச்சியான கவலைகள் குடும்பத்தை ஒரு சுமையாக்கிவிட்டது. இத்தகைய கவலைகளுடன் நாட்களும் மாதங்களும் நகர்ந்தன. அவரது மனைவியின் மகப்பேறு காலம் நெருங்கியது. அவளது விதியை நினைத்து மனம் நோவதைத் தவிர வேறெதுவும்  செய்ய முடியாமல் திகைத்தார் ராம்குமார்.

1849-ஆம் ஆண்டில் ராம்குமாரின் மனைவி அழகிய ஆண்மகவு ஒன்றை ஈன்றாள். ஈன்ற மறுகணம் அதன் முகத்தைப் பார்த்தவாறு அந்த அறையிலேயே அவள் தன்  உயிரை நீத்தாள். அந்த தெய்வீகக் குடும்பத்தை ஏழ்மையும் துயரமும் சூழ்ந்து கொண்டன.

வாலிபத்தின் வாசலில்

 மனைவியின் மறைவிற்கு ப் பிறகும் ராம்குமாரின் துரதிர்ஷ்டம் தொடர்ந்தது. நாளுக்கு நாள் வறுமையும் துயரமும் அவரை வாட்டின.பிற வீடுகளில் அவர்  செய்து வந்த பூஜை மற்றும் சடங்குகளுக்கான  காணிக்கையும் அன்பளிப்புகளும் படிப்படியாகக்குறைந்தன.
லட்சுமி ஜாலாவிலுள்ள சிறிய வயலில் போதுமான நெல் விளைந்ததால் உணவுப் பிரச்சனை இல்லை.
ஆனால் துணி முதலிய அத்தியாவசியத்தேவைகளைப் பூர்த்தி செய்வதில் சிரமம் அதிகமாகியது.
வயோதிகத் தாய்க்கும், தாயை இழந்த குழந்தையான அட்சயனுக்கும் தினமும் பால் தேவைப்பட்டது. பாலுக்கும் பிற தேவைகளுக்குமாவது கடன் வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
ராம்குமார் கடனில்மூழ்கத் தொடங்கினார் .நிலைமையைச் சீராக்க எவ்வளவு முயன்றும் அவரால்  எதுவும் செய்ய முடியவில்லை.
அப்போது அவரது நண்பர்கள் பலர், கிராமத்தை விட்டு எங்காவது நகரங்களுக்குச் சென்றால் அதிகமாகப் பொருளீட்ட முடியும் என்று ஆலோசனை கூறினர்.
அதன் படி காமார்புகூரிலிருந்து கிளம்ப அவர் முடிவு செய்தார். அவரது இந்த முடிவிற்கு பணப்பிரச்சனைமட்டும்  தான் என்று சொல்லி விட முடியாது.
முப்பது ஆண்டுகள் தன் வாழ்க்கையில் துணையாக இருந்த மனைவியின்  நினைவுகளிலிருந்து விடுபடவும் அவர் விரும்பினார். அவளது நினைவுகள் நிறைந்திருந்த இந்த வீட்டிலிருந்து நீங்கினால் தனக்கு அமைதி கிட்டும் என்று நம்பினார்.
காமார்புகூரை விட்டுப் புறப்பட முடிவு பின்னர் கல்கத்தா, பர்த்வான்ஆகிய இரு நகரங்களில் எங்கு அதிகம் சம்பாதிக்க முடியும் என்ற கேள்வி எழுந்தது. ராம்குமாருக்குத் தெரிந்தவர்களும்  சிகோரைச்சேர்ந்தவர்களுமான ராம்தன்கோஷ் மற்றும் பலர் கல்கத்தா சென்று தங்கள் பொருளாதார நிலையை உயர்த்திக்கொண்டதாக ராம்குமாரின் நண்பர்கள் கூறினர்.
கல்வி, அறிவுத்திறம்,சீலம் என்று எல்லாவிதத்திலும் ராம்குமார்  அவர்களை மிஞ்சியவர். ஆகவே ராம்குமாருக்கு கல்கத்தாவில் நல்லவாய்ப்புகள் அதிகம் என்று அனைவரும் கூறினர்.
அதன் பின் கல்கத்தா செல்ல முடிவு செய்தார் ராம்குமார்.
 சில நாட்களுக்குப் பின்னர் குடும்பப்பொறுப்பை ராமேசுவரரிடம் ஒப்படைத்து விட்டுக் கல்கத்தா சென்றார்.
அங்கு ஜாமாபுகூர் என்னுமிடத்தில் சமஸ்கிருத பாடசாலை ஒன்றைத்தொடங்கி சிறுவர்களுக்குக் கல்வி கற்பிக்கலானார்.
ராம்குமாரின் மனைவியின் மறைவுக்குப் பின்னர் குடும்பத்தில் பல மாற்றங்கள் நிகழ்ந்தன. சந்திராவின் வேலைப்பளு அதிகமாகியது. ராம்குமாரின் சிறுகுழந்தை அட்சயனைக் கவனிப்பதிலிருந்து வீட்டின் எல்லா வேலைகளையும் அவளே செய்ய வேண்டியிருந்தது.
ராமேசுவரரின் மனைவி தன்னால் முடிந்த அளவு உதவ முயன்றாள். அவள் மிகவும் சிறிய வயதினளாக இருந்ததால் பெரிதாக எதையும் செய்ய முடியவில்லை.
ஸ்ரீரகுவீரர் சேவை, அட்சயனைக் கவனித்துக் கொள்ளல் சமையல் வீட்டு வேலைகள் என்று நாள் முழுவதம் சந்திரா உழைத்தாள். ஒரு நிமிட ஓய்வு கூடக் கிடைக்கவில்லை. வயதுவேறு ஐம்பத்தெட்டு ஆகிவிட்டிருந்ததால் அதிகக் களைப்பை உணரலானாள். ஆனாலும் ஸ்ரீரகுவீரரின் திருவுளம் இது தான் என்பதை எண்ணி எதையும் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் வேலைகளைச் செய்துவந்தாள்.
குடும்பத்தின் வரவுசெலவுகளை இப்போது ராமேசுவரர் கவனித்தார். வரவு செலவுகளைச் சீராக்கி, குடும்பத்தை வசதியாக வாழச் செய்வது பற்றி அவர் சிந்தித்தார்.
வசதியான வாழ்க்கை வாழ அவரது படிப்பு உதவவே இல்லை. இத்தனைக்கும் அவர் முன்பை விட அதிகம் சம்பாதித்தார். ஆனால் எதையும் திட்டமிட்டுச் செயவதில்லை.
சாதுக்களையோ சாதகர்களையோ சந்திக்க நேர்ந்தால் நேரம் போவதே தெரியாமல் அவர்களுடன் பேசிக்கொண்டிருப்பார். அவர்களுக்குத்தேவையான பொருட்களைத் தயக்கமின்றிக் கொடுத்து விடுவார். எனவே அவரால் தமது வருமானத்தில் எதையும் சேமிக்கவோ குடும்பக் கடனை அடைக்கவோ முடியவில்லை.
குடும்பத்தின் இன்றியமையாத தேவைகளைச் சமாளித்து வந்தார். எப்படியும் ஸ்ரீரகுவீரர் குடும்பத்தைக் காப்பாற்றுவார் என்று கூறிய படியே வரவுக்கு  மேல் செலவு செய்து கொண்டு கவலையற்று வாழ்ந்தார்.

ராமேசுவரர் கதாதரனை மிகவும் நேசித்தார். ஆனால் அவனது படிப்பைப் பற்றி மட்டும் அவர் எந்தக் கவலையும் படவில்லை.
அவருடைய இயல்பே அது தான் .மேலும் பல இடங்களுக்குச் சென்று வேலை செய்து சம்பாதிக்க வேண்டியிருந்ததால் அதற்கான நேரமும் கிடைக்கவில்லை. கதாதரன் தவறான பததையில் செல்லமாட்டான் என்பதில் அவருக்கு உறுதியான நம்பிக்கை இருந்தது. அதற்குக் காரணம் அந்த இளம் வயதிலேயே கதாதரனிடம் குடிகொண்டிருந்த ஆன்மீகச் சிந்தனைகளும்  நன்னெறியும் தான். கிராமத்து ஆண்களும், பெண்களும் தன் தம்பியிடம்முழுநம்பிக்கை வைத்து அவனை நேசித்ததை க் கண்ட போது ராமேசுவரரின் நம்பிக்கை உறுதியாயிற்று.
உண்மையிலேயே  நல்லவனாகவும் ஒழுக்க சீலனாகவும் இருந்தாலன்றி எல்லோருடைய மனங்களிலும் இவ்வளவு தூரம்  அவன் இடம் பெற முடியாத என்பதை ராமேசுவரர் உணர்ந்திருந்தார்.
எனவே கதாதரனை அவன் போக்கிலே விட்டுவிட்டு, சிறப்பாக அமையப்போகின்ற அவனது எதிர்காலத்தைப் பற்றிய கற்பனையில் மகிழ்ச்சியுடன் நிம்மதியாக இருந்தார். அவனைப்பற்றி எவ்வித கவலையும் அவருக்கு இல்லை. ராமேசுவரர் இப்படி இருந்தது கதாதரனுக்கு விருப்பம்  போல எங்கு வேண்டுமானாலும் செல்லும் சுதந்திரத்தை அளித்தது.

இப்போது கதாதரனுக்கு வயது பதின்மூன்றாகி விட்டிருந்தது.

தொடரும்

No comments:

Post a Comment