Saturday, 22 June 2019

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு-பாகம்-107

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு-பாகம்-107

காசியில் இருந்த சிறந்த கோயில்கள் பலவற்றிற்கும் சென்று அன்னை தரிசித்தார்.அங்குள்ள வைத்தியநாதேசுவரர், தில பாண்டேசுவரர் போன்ற மூர்த்திகள் மண்ணிலிருந்து சுயம்புவாகத் தாமே தோன்றி வந்தவை என்று கூறினார். கேதார நாதர் கோயிலுக்குச் சென்ற போது,இமய மலையில் உள்ள கேதார நாதர் ஆலயமும் காசியில் இருக்கின்ற இந்தக் கேதார நாதர் ஆலயமும் ஒன்றுக்கொன்று உறவானது. இங்குள்ளவரை தரிசிப்பவர்கள் இமயத்தில் உள்ளவரை தரிசித்தவர்கள் ஆவார்கள். இங்கே சிவபெருமான் உயிருணர்வுடன் பொலிகிறார் என்று கூறினார்.
காசிக்கு அருகில் உள்ள சாரநாத்திற்கும் அன்னை சென்றார். முற்காலத்தில் இது புத்த சமயத்தின் மையத்தலமாக விளங்கியது. அன்னை சென்றிருந்த போது மேலை நாட்டினர் சிலர் அங்கே இருந்த புத்தரின் நினைவுச் சின்னங்களையும் சிலையையும் பார்த்து,அதன் அழகிலும் கம்பீரத்திலும் தங்களை மறந்து நின்றிருந்தனர். அவர்களைக் கண்ட அன்னை, இதோ இந்த மனிதர்கள் தாம் முற்பிறவியில் இந்த புத்த விகாரங்களையெல்லாம் கட்டினார்கள். தாங்கள்  கட்டியவற்றையே பார்த்து இப்போது ஆச்சரியப்பட்டு நிற்கிறார்கள் என்றார்.
 சாரநாத்திலிருந்து காசி திரும்பும் வழியில் ஒரு பெரிய விபத்திலிருந்து அன்னை தப்பினார். அன்னையுடன் சென்றிருந்த  பிரம்மானந்தர் அங்கிருந்து திரும்பும் போது அன்னை ஏறி வந்த வண்டியில் செல்லுமாறு கேட்டுக்கொண்டார். வண்டிகள் புறப்பட்டன. சிறிது நேரத்திற்குள் பிரம்மானந்தர் அமர்ந்திருந்த வண்டிகள் கட்டப்பட்டிருந்த குதிரை வெறிபிடித்தாற்போல் ஓடி,ஓர் இடத்தில் மோதியது. வண்டி உடைந்து சுவாமி பரம்மானந்தருக்கும், சிறிது காயம் ஏற்பட்டது. இந்த நிகழ்ச்சிகளைப்பற்றி அன்னை கூறிய போது நான் விபத்தில் சிக்கியிருக்க வேண்டும். இதை ராக்கால் முன்னதாகவே உணர்ந்து அதனைத் தானே ஏற்றுக்கொண்டான் என்று கூறினார்.
காசியில் மிகவும் புகழ்பெற்ற இரண்டு மகான்களை அன்னை தரிசித்தார். அவர்களுள் ஒருவர் கங்கைக்கரையில் வாழ்ந்துவந்த நானக் துறவி. மற்றொருவர் சமேலி புரி.இரண்டாமவர் குருதேவரின் அத்வைத குருவான தோதாபுரியின் சம்பிரதாயத்தையும் மடத்தையும் சேர்ந்தவர். அவரிடம் கோலாப்மா, உங்களுக்கு யார் உணவு தருகிறார்கள்,  என்று கேட்டார்.அதற்கு அந்த சாது,யார் தருகிறார்கள்? என் தாயான அன்னபூரணி தான் தருகிறாள்! வேறு யார் எனக்குச் சோறு போடுவார்கள்? என்றார். இந்தப் பதிலை க்கேட்ட அன்னை அளவற்ற ஆனந்தம் அடைந்தார். வீடு திரும்பியதும் தம், சீடர்களிடம்,முதியவரான  அந்தத் துறவியின் முகம் என் கண்களில் அப்படியே நிற்கிறது. கள்ளங்கபடமற்ற சின்னஞ்சிறு குழந்தைபோல் என்ன அற்புதமான முகம்! என்றார். மறுநாள் சமேலி புரிக்கு இனிப்பும் ஆரஞ்சுப் பழங்களும் ஒரு போர்வையும்  அனுப்பிவைத்தார். காசியில் உள்ள மற்ற மகான்களையும் தரிசிக்கும் படி அன்னையின் சீடர்கள் கூறினார்கள். அதற்கு அன்னை, நான் சமேலி புரியை தரிசித்துவிட்டேன். மற்றவர்களை தரிசிக்க வேண்டிய அவசியம், என்ன இருக்கிறது? வேறு எந்த மகான் தான் இங்கு உள்ளார்? என்றார்.
1913 ஜனவரி 16-ஆம் நாள் காசியிலிருந்து கல்கத்தா திரும்பினார்.

No comments:

Post a Comment