Saturday, 22 June 2019

ஸ்ரீராமகிருஷ்ணரின் விரிவான வாழ்க்கை வரலாறு

ஸ்ரீராமகிருஷ்ணரின் விரிவான வாழ்க்கை வரலாறு
-
பாகம்-3

ஆவணி மாதத்தில் ஒருநாள் .பூர்சுபோ கிராமத்தில் ஒரு வீட்டில் கோஜாகரி பூஜை செய்வதற்காக ராம்குமார் சென்றிருந்தார்.

நள்ளிரவு ஆகியும் அவர் வீடு திரும்பவில்லை. சந்திரா வீட்டிற்கு வெளியே வந்து அவர் வருகின்ற திசையைக் கவலையுடன் பார்த்தபடி நின்று கொண்டிருந்தாள்.

அப்போது பூர்சுபோவிலிருந்து காமார்புகூர் வரும் ஒற்றையடிப் பாதையில் தனியாக யாரோ வருவது தெரிந்தது.
அது தன் மகன் தான் என்று எண்ணிய சந்திரா ஆவலுடன் சற்று முன்னே சென்றாள். அருகில் சென்றபோது அது ராம்குமார் இல்லையென்பது தெரிந்தது. வந்தது ஓர் அழகிய பெண். பட்டாடையும் பலவித ஆபரணங்களுமாக அவளது பேரெழில் ஈடிணையற்று விளங்கியது.
மகனுக்கு ஏதாவது நேர்ந்திருக்குமோ  என்ற அச்சத்தில் மனம் வெதும்பிக் கொண்டிருந்த சந்திராவின் கண்களில்  அந்த எழிலோ வடிவோ தென்படவில்லை. நள்ளிரவில் இத்தகைய பேரழகி ஒருத்தி தன்னந்தனியாகச் செல்வதும் புதுமையாகப்படவில்லை.

அவளது அருகில் சென்றாள் சந்திரா.
அவளிடம்.. குழந்தாய், நீ எங்கிருந்து வருகிறாய்? என்று கேட்டாள்.
பூர்சுபோவிலிருந்து என்று பதிலளித்தாள் அந்தப்பெண்.
நீ ராம்குமாரைப் பார்த்தாயா? திரும்பி வருகிறானா அவன்? என்று வினவினாள்.
முற்றிலும் பதியவளான இந்தப்பெண்ணுக்கு எப்படி ராம்குமாரைத் தெரிந்திருக்க முடியும் என்ற எண்ணம் சந்திராவின் மனத்தில் சிறிதும் எழவில்லை.
சந்திராவின் கேள்வியைச் செவியுற்ற அவள் மென்மையாகப் புன்முறுவலித்தவாறே, அம்மா, உங்கள் மகன் பூஜை செய்கின்ற அதே வீட்டிலிருந்து தான் நான் வருகிறேன். கவலைப்படாதீர்கள்,அவன் விரைவில் வந்து விடுவான் என்றுஅன்புடன் கூறினாள்.

சந்திராவின் கலக்கம் நீங்கியது. அப்போது தான் அந்தப் பெண்ணின் எழில் கொஞ்சம் திருவுருவும்,அவள் அணிந்துள்ள ஆபரணங்களும்,அவளது இனிமையான மென்குரலும் சந்திராவின் கவனத்தில் பட்டது. வியப்புடன் அவள் அந்தப் பெண்ணிடம்
குழந்தாய் வயதில் மிகவும் இளையவளாக இருக்கிறாய் நீ! இந்த நள்ளிரவு வேளையில் இவ்வளவு அழகான ஆடை அணிகலன்களுடன் எங்கு செல்கிறாய்? ஆமாம், நீ காதில் அணிந்துள்ள இந்தப் புதுமையான நகையின் பெயர் என்ன? என்று ஒவ்வொன்றாகக்கேட்கத் தொடங்கினாள். வந்தவளும் புன்னகை மாறாமலேயே இதுவா,இது குண்டலம், என்று கூறிவிட்டு, அம்மா நான் இன்னும்  நெடுந்தொலைவு செல்லவேண்டும்.நான் புறப்படுகிறேன் என்று கூறினாள்.

பாவம்  இவளுக்கு ஏதோ பிரச்சனை இருக்க வேண்டும். அதனால் தான் இந்த  இரவில் தனியாகச் செல்கிறாள் என்று எண்ணிய சந்திரா அன்புடன், வா குழந்தாய்! இன்று இரவு எங்கள் வீட்டில் தங்கலாம். நாளை உன் வசதி போலச் செல்லலாம் என்று அவளை அழைத்தாள். அழுத்தமாகச் சிரித்தாள் வந்தவள். இல்லையம்மா நான் இப்பொழுதே போக வேண்டும். இன்னொரு சமயம் உங்கள் வீட்டிற்கு வருகிறேன் என்று கூறியபடியே நடக்கத் தொடங்கினாள்.
ஆனால் போகின்றவள் சரியான பாதையில் செல்லாமல் லாஹா வீட்டு வைக்கோற்போரை நோக்கி  ச் செல்வதைக்கண்ட சந்திரா அவள் வழி தவறியிருக்க வேண்டும் என்று எண்ணினாள். அவளுக்கு வழிகாட்டுவதற்காக அவளைப்பின்தொடர்ந்தாள்.
ஆனால் அவள் கண்களிலிருந்து மறைந்துவிட்டாள்,எங்கு தேடியும் காணவில்லை.

திகைப்புற்ற சந்திரா நிகழ்ந்ததை எல்லாம் முதலிலிருந்தே ஒரு கணம் நினைத்துப்பார்த்தாள். திடீரென ஒரு திரை விலகியதுபோலிருந்தது. அன்று லட்சுமி பூஜை என்பது அவளது கவனத்திற்கு வந்தது.

இத்தனை நேரம் தன்னிடம் பேசியது திருமகளே என்பதை அறிந்து கொண்டாள். ஆனந்தமும் ஆச்சரியமும் மேலிட தன் கணவனிடம் விரைந்து சென்று எல்லாவற்றையும் விளக்கமாகக்கூறினாள்.
எல்லாவற்றையும் கேட்ட கூதிராம் வந்தது திருமகள் தாம் என்பதை உறுதிப்படுத்தினார்.

ராம்குமார் விரைவில் வீடு திரும்பினார். நடந்தவற்றைக்கேட்டு மகாலட்சுமியின் கருணைப்பெருக்கை எண்ணி ப் புளகாங்கிதம் அடைந்தார்.

நாட்கள் கழிந்தன. அது கி.பி 1835 தீர்த்த யாத்திரை செல்ல வேண்டும் என்ற ஆவல் மீண்டும் ’ கூதிராமிடம் எழுந்தது. இம்முறை கயைக்குச் சென்று முன்னோர்களுக்கு நீத்தார்கடன் செய்ய விரும்பினார் அவர்.

அப்போது அவருக்கு வயது அறுபது.

மகாவிஷ்ணுவின் திருத்தலத்திற்குச் செல்வதற்கு அவருக்கு வயது ஒரு தடையாக இருக்கவில்லை.இந்தத் தீர்த்த யாத்திரைக்கு கூதிராமின் ஆவல் மட்டுமின்றி வேறொரு காரணமும் இருந்ததாக ஹிருதயராம் கூறினார்.அந்த வியத்தகு நிகழ்ச்சி பின்வருமாறு.

ஒருமுறை தன் மகளான காத்யாயனி உடல்நலம் குன்றியிருப்பதைப் பற்றிக் கேள்வியுற்று அவளைப் பார்ப்பதற்காக ஆனூர் சென்றார் கூதிராம். அப்போது அவளுக்கு இருபத்தைந்து வயதிருக்கும்.அங்கு சென்று பார்த்தபோது காத்யாயனி உடல் நோயால் மட்டும் அவதிப்படவில்லை என்பதை கூதிராம் அறிந்துகொண்டார். அவளது செய்கைகளும்  பேச்சு முறைகளும்,ஆவி ஒன்று அவளைப்பிடித்திருப்பதைக் காட்டியது.

உடனே அதனை வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டார். நெஞ்சம் கனிய ஒரு முறை இறைவனைப் பிரார்த்தித்தார். பின்னர் அந்த ஆவியை முன்னிட்டு, தேவதையோ பிசாசோ நீயாராக இருந்தாலும் என் மகளை ஏன் துன்புறுத்துகிறாய்? இக்கணமே அவளை விட்டுவிலகி உன் வழியே செல் என்று கூறினார்.

அதைக் கேட்ட அந்த ஆவி பயந்து காத்யாயனியின் உடலிலிருந்தபடியே நான் போய் விடுகிறேன்.
ஆனால்  எனக்காக கயையில் பிண்டதர்ப்பணம் செய்து எனது இந்த சோகமான நிலைக்கு முடிவு கொண்டு வருவதாக வாக்களித்தால் இப்போதே உன் மகளின் உடலை விட்டு விடுகிறேன். நீ கயைக்குப் புறப்படுகின்ற அந்தக் கணமே இவள் எல்லா துன்பங்களிலிருந்தும் விடுபடுவாள். இது சத்தியம் என்று கூறியது.
அந்த ஆவியின் துன்பத்தைக்கண்டு மனம் இரங்கிய கூதிராம் என்னால் முடிந்த அளவு விரைவில் கயை சென்று உன் வேண்டுகோளைப் பூர்த்தி செய்கிறேன்.
ஆனால் என் தர்ப்பணத்தால் நீ விடுதலை பெற்றாய் என்பதற்கு அறிகுறியாக எனக்கு ஏதாவது அடையாளம் காட்டினால் எனக்கு ஆறுதலாக இருக்கும் என்று கூறினார். 
கண்டிப்பாகக் காட்டுகிறேன். எனக்கு இந்த நிலையிலிருந்து விடுதலை கிடைத்துவிட்டால் நான்போகும் போது,அதோ அங்கே நிற்கின்ற வேப்பமரத்தின் பெரிய கிளையை முறித்துவிட்டுச் செல்கிறேன் என்று அந்த ஆவி கூறியது.

இந்த நிகழ்ச்சி தான் ’ கூதிராம் கயைக்குப்போகும் படிச் செய்தது என்பது ஹிருதயராமின்  கூற்று.

சில நாட்களுக்குப் பின் அந்த ஆவி கூறிய வேப்ப மரத்தின் கிளை திடீரென ஒடிந்து விழுந்தது. அந்த ஆவிக்கு விடுதலை  கிடைத்துவிட்டது என்று அனைவரும் அறிந்து கொண்டனர்.
காத்யாயனியும் உடல்நலம் பெற்றுவிட்டாள்

தொடரும்..
-

No comments:

Post a Comment