Saturday, 22 June 2019

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு-பாகம்-89

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு-பாகம்-89

தடைகள் இல்லாத ஒரு வாழ்வு கிடையாது.ஆன்மீக வாழ்வில் அவை எண்ணற்றவை. உண்மை குரு ஒருவரால் மட்டுமே சீடனுக்கு ஏற்பட்டுள்ள தடையின் உண்மைப் பரிமாணத்தை உணர்ந்து அவனுக்கு உதவ முடியும். தீட்சையளிப்பதும் சீடர்களின் சாதனை முறைகளில் எழும் வடைகளை விலக்கி அவர்களுக்கு வழிகாட்டுவதும் அன்னையின் வாழ்வில் அன்றாட நிகழ்ச்சிகள். ஓரிரு நிகழ்ச்சிகளை மட்டும் இங்கே காண்போம்.
தீட்சை பெற்ற பின் முறையான பயிற்சியின்மையாலும் வேறு பல காரணங்களாலும் பலர் மந்திரத்தை மறந்துவிடுவர். இன்னும் சிலருக்கு மந்திரத்தைச் சரியாகப் புரிந்து கொண்டோமா இல்லையா என்ற சந்தேகம் அடிக்கடி வந்துவிடும். அதைத் தெளிவு படுத்திக்கொள்ள அன்னையிடம் வருவார்கள். ஒரு பெண், தான் தீட்சை பெற்ற மூன்று ஆண்டுகளுக்குப்பிறகு இத்தகைய சந்தேகத்தோடு அன்னையிடம் வந்தாள். அவளது சந்தேகத்தைக் கேட்டதும் அன்னை,அப்படியா! எனக்கு நான் தீட்சை தந்து வெகுநாளாகிறதே.இன்னும் அந்த மந்திரம் எப்படி என் நினைவில் இருக்கும்? சரி கொஞ்சம் இரு வருகிறேன் என்று கூறி விட்டு பூஜையறைக்குள் சென்றார்.சிறிது நேரம் கழித்துத் திரும்பி வந்ததும், மகளே! இந்த மந்திரத்தைத் தானே உனக்குத் தந்தேன் என்று ஒரு மந்திரத்தைக்கூறினார். அந்த சிஷ்யையும் அதே மந்திரம் தான் என்று கூறி,தானும் அதையே ஜபித்து வருவதாகச் சொன்னாள்.
அடுத்து நாம் காணப்போகின்ற நிகழ்ச்சி பொதுவாக இன்றும் நாம் பரவலாகக் காண்கின்ற குழப்பத்தை அடிப்படையாகக் கொண்டது.ராஜயோகம் போன்ற நூல்களைப் படித்ததும் அதில் காணப்படுகின்ற பயிற்சிகளைச் செய்ய வேண்டும் என்ற ஆவல் இயல்பாக எழுவது தான் . ஏனெனில் அது கூறுகின்ற ஒளிக் காட்சிகளும் ஒலி அனுபவங்களும் எந்த மனத்தையும் கவர்ந்திழுக்க கூடியவை.ஆனால் பயிற்சி செய்பவருக்குரிய தகுதிகளாக அந்த நூல்கள் கூறுபவற்றை மட்டும் நாம் விட்டுவிடுகிறோம்.  அந்தத் தகுதிகளை அடைந்த பின் பயிற்சிகளில் ஈடுபட வேண்டும் என்பது நம் மனத்தில் உறைப்பதில்லை. எடுத்ததும் பயிற்சிதான்! விளைவு? தீராத நோய்கள்,மூளைக்கோளாறு இவையே.ரங்கூனில் வாழ்ந்த சியாமா சரண் என்பவரும் சுவாமிவிவேகானந்தரின் ராஜயோகம் என்னும் நூலைப்படித்தார். பின்னர் ஒரு நாளைக்கு சுமார் மூன்று மணிநேரம் பிராணாயாமம் பழகத் தொடங்கினார்.அதன் காரணமாக,அவர் காதுகளில் ”உஸ்” என்னும் பெரும் ஓசை எப்போதும் கேட்கத் துவங்கியது. இந்தச் சத்தம் அவருக்குப் பெரும் இடையூறாக இருந்தது. அலுவலக வேலைகளில் மனம் ஒன்றி அவரால் வேலை செய்ய முடியவில்லை. பல மருத்துவர்களிடம் சிகிச்சை செய்து பார்த்தார். பலனேதும் ஏற்படவில்லை.இறுதியில் விடுப்பு எடுத்துக்கொண்டு கல்கத்தா வந்தார். பேலூர் மடத்திற்குச் சென்றபோது அன்னையைப்பற்றிக்கேள்விப்பட்டார். உடனே ஜெயராம்பாடி சென்றார்.
ஜெயராம்பாடியின் புனிதமான சூழ்நிலையே அவருக்கு அமைதியைத் தந்தது.இவ்வளவு காலம் பல்வேறு வழிகளில் துன்புறுத்தி அவரை அலைகழித்து வந்த அந்த ஓசையும் நின்று விட்டது. பிறகு அன்னையைச் சந்தித்த அவர்.தனக்கு பிராணாயாமத்திலும் மற்ற யோகப் பயிற்சிகளிலும் உள்ள ஆர்வத்தைத் தெரிவித்தார். இதைக்கேட்ட அன்னை,அத்தகைய கடுமையான பயிற்சிகளைச் செய்யும் அளவிற்கு உன் உடம்பிலும் மனத்திலும் சக்தியைச்சேமித்து வைத்திருக்கிறாயா? என்று கேட்டார். அதற்கு சியாமா சரண்.அப்படியானால் வேறு என்னதான் வழி? என்று கேட்டார். அப்போது அன்னை நீ செய்ய வேண்டியவற்றை நான் சொல்கிறேன் என்று  கூறி அவருக்கு தீட்சை தந்து,ஒரு நாளைக்கு இரண்டு முறை ஜபம் மட்டும் செய்யும்படி கூறினார். ஆனால் கடுமையான பயிற்சிகளில் நாட்டம் கொண்ட சியாமா சரணுக்கு அன்னை கூறிய எளிய வழி திருப்தி அளிக்கவில்லை.ஒரு நாளைக்கு மூன்றுமுறை ஜபம் செய்ய விரும்புவதாகக்கூறி வேறு ஏதாவது பயிற்சிகளைச் சொல்லித் தரும்படியும் வேண்டினார். அன்னையோ ஒரு நாளைக்கு இரண்டுமுறை மட்டுமே ஜபம் செய்ய வேண்டும் என்று மறுபடியும் கூறி.உன் உடம்பும் மனமும் தாங்கக் கூடியது இவ்வளவு தான் என்றார். எப்படி அன்னையால் சீடர்களின் மனத்தையும் அதன் தகுதியையும் புரிந்து செயல்பட முடிகிறது என்று வியப்பாக இருக்கிறது அல்லவா!
-
-
தொடரும்...
-
ஸ்ரீராமகிருஷ்ணரின் ஆன்மீகக் குழுவில் இணைய 9789374109 என்ற எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலம் ரிக்கொஸ்ட் மெசேஜ் அனுப்பவும்


No comments:

Post a Comment