Saturday, 22 June 2019

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு-பாகம்-90

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு-பாகம்-90

இனி நாம் காணப்போகின்ற நிகழ்ச்சிதான்  அன்னையின் தடை நீக்கும் ஆற்றலுக்கு ஈடிணையற்ற எடுத்துக்காட்டாகும். இதுவும் காளிகிருஷ்ணரின் வாழ்வில் நடைபெற்றது தான். இவர் பின்னாளில் சுவாமி விரஜானந்தர்  என்ற பெயரில் துறவியாகி ,சுவாமிஜியின் அருளாணைப்படி பணிகளில் ஈடுபட்டுவந்தார். சுவாமிஜி 1902-ஆம் ஆண்டு மறைந்தார்.இந்தப்பிரிவை விரஜானந்தரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. எனவே சுமார் ஒன்றரையாண்டு காலம் மாயாவதியின் அருகில் ஏகாந்தமாக குடில் ஒன்றில் தவ வாழ்க்கையில் ஈடுபட்டார். முழுமையான மௌன விரதம் அனுசரித்து ஒரு நாளில் பதினைந்து மணிநேரம் ஜபத்திலும் தியானத்திலும் கழித்தார்.
இந்தக் கடுமையான தவம் அவரது நரம்புமண்டலத்தைப்பாதித்தது.உடம்பெல்லாம் மோசமாகத் தாக்கியது.நாளாக நாளாக தன் மனம் எந்த வேலைகளிலும் ஈடுபடவிரும்பாதது போல் அவருக்குத் தோன்றியது. மனம் அப்படியே வெறுமை   யாகி விட்டதாக அவர் உணர்ந்தார். உடனே தீவிரசாதனைகளை விட்டுவிட்டு சாஸ்திரங்களைப் படிக்கத் துவங்கினார். அப்போதும் அவரது நிலையில் மாறுதல் ஏற்படவில்லை. அது மட்டுமின்றி உடல்நிலையும் கவலைக்கிடமாகியது. எனவே பேலூர் மடத்திற்குத் திரும்பினார். அவரது நிலைமையைக் கண்டு அதிர்ச்சியுற்ற மூத்த துறவியர் அவரைப் பிரபல மருத்துவர்களிடம் அழைத்துச் சென்றனர். தீவிர சிகிச்சை அளித்தும் பயனேதும் ஏற்படவில்லை.
இப்படி சுமார் ஆறு மாதங்கள் கழிந்தன. ஒரு நாள் அவருக்கு அன்னையிடம் செல்ல வேண்டுமென்று தோன்றியது.உடனே ஜெயராம்பாடிக்குப் புறப்பட்டுச் சென்றார்.ஐந்து வருடங்களுக்குப் பிறகு அவர் அன்னையைச் சந்திக்கிறார். எலும்பும் தோலுமாக வந்த அவரைக் கண்டதும் அன்னை திடுக்கிட்டு விட்டார். என்ன கோலமாக இருக்கிறான், என்று அவரது தாயுள்ளம் பதறியது.விரஜானந்தரின் நிலைமைக்குக் காரணம் உடல் நோய் அல்ல என்பது அவரைப் பார்த்ததுமே அன்னைக்குத் தெரிந்தது. உடனே அவரிடம் மகனே! நீ உன் மனத்தை எங்கே ஒருமைப்படுத்துகிறாய்? தலையிலா,இதயத்திலா? என்று கேட்டார். அதற்கு விரஜானந்தர்,தலையில் தான் அம்மா,ஏனெனில் அங்கு மனத்தை ஒருமைப்படுத்தி  தியானிப்பது இதமாக இருக்கிறது. மிகுந்த ஆனந்தத்தை அளிக்கிறது, என்றார். பதறிவிட்டார் அன்னை.மகனே நீ என்ன செய்து விட்டாய்! அது இறுதிநிலையில் செய்ய வேண்டியதாயிற்றே! திடீரென்று மனத்தை அவ்வளவு உயரத்திற்குக் கொண்டு போக முடியுமா? முதலில் தலையில் மனத்தை ஒருமைப்படுத்திவிட்டு பின்னர் இதயத்திற்குக் கொண்டுவர வேண்டும். அங்கு தான் இஷ்டதெய்வத்தை தியானிக்க வேண்டும் என்று கூறினார்.
என்ன ஆச்சரியம்! எவ்வளவோ சிகிச்சைகளும் மருந்துகளும் உணவுக் கட்டுப்பாடுகளும் சாதிக்க முடியாததை அன்னையின் அறிவுரை சாதித்தது. அன்னை கூறியது போல் தியான முறையை மாற்றியதும் விரஜானந்தரின் உடல்  மற்றும் மனநிலைகளில் பிரமிக்கத்தக்க மாறுதல் உண்டாகியது. மிகக்குறுகிய காலத்தில் அவரது பழைய நிலைமைதிரும்பியது. இதற்காகத் தான் பூரண குரு ஒருவர் வேண்டும்.அன்னை மட்டும் எனக்கு வழிகாட்டியிராவிட்டால்  என் வாழ்வே நாசமாகியிருக்கும்  என்று விரஜானந்தர் பின்னாளில் நினைவு கூர்ந்தார். உடம்பைப் பற்றிய அனைத்தையும் அறிந்திருக்கின்ற கைதேர்ந்த மருத்துவரால் மட்டுமே வியாதி எதுவானாலும் அதற்குச் சிகிச்சை அளிக்க முடியும், அது போல் மனித மனத்தின் செயல்பாடுகள் அமைப்பு அனைத்தும் அறிந்த ஒரு குருவால் மட்டுமே சீடனின் வாழ்வில் வருகின்ற இது போன்ற தடைகளை நொடியில் விலக்க முடியும்
-
-
தொடரும்...
-
ஸ்ரீராமகிருஷ்ணரின் ஆன்மீகக் குழுவில் இணைய 9789374109 என்ற எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலம் ரிக்கொஸ்ட் மெசேஜ் அனுப்பவும்


No comments:

Post a Comment