Sunday, 23 June 2019

ஸ்ரீராமகிருஷ்ணரின் விரிவான வாழ்க்கை வரலாறு பாகம்-42

ஸ்ரீராமகிருஷ்ணரின் விரிவான வாழ்க்கை வரலாறு
பாகம்-42

குருதேவருக்குக் கிடைத்த ஆன்மீக அனுபவங்கள் மற்றும் காட்சிகளைப் பற்றிக்கேட்டறிந்த பிராம்மணி இத்தகைய நிலைகள் அசாதாரணமான பக்தியால் மட்டுமே தோன்றும் என்ற உறுதியான முடிவுக்கு வந்தார்.
கடவுளின் ஆனந்த பரவசத்தில் ஆழ்வதையும் கடவுளைப் பற்றிய  உரையாடல்களின் போது அடிக்கடி பாவ சமாதியில் மூழ்கி தன்னினைவு இழப்பதையும் கண்டபைரவிக்கு குருதேவர் சாதாரண சாதகர் அல்லர்  என்பது உறுதியாயிற்று. சைதன்ய சரிதாமிருதம், பாகவதம் போன்ற நூல்களில் பல இடங்களில் சைதன்ய மகாபிரபு மக்களை உய்விக்க மறுபடியும் அவதரிப்பார் என்று கூறப்பட்டுள்ளதுடன் அதற்கான பல அறிகுறிகளும் குறிக்கப்பட்டுள்ளன. அவை  குருதேவரைக் கண்ட பின் பிரம்மணியின் மனத்தில் அடிக்கடி எழுந்தன. இந்த நூல்களில் சைதன்யர், நித்யானந்தர் ஆகியோரின் தொடர்பாகக் கூறப்பட்டுள்ளவற்றுடன் குருதேவரின் நடைமுறைகள், அவர் பெற்ற காட்சிகள்  முதலியவற்றை ஒப்பு நோக்கி அவை ஒத்திருப்பதைக் கண்டார் அவர். சைதன்ய தேவரைப்போன்று பாவ சமாதியின் போது யாரையாவது தொட்ட மாத்திரத்திலேயே அவரிடம் ஆன்ம எழுச்சியைத்தோற்றுவிக்க வல்ல ஆற்றல் குருதேவரிடம் இருப்பதைக்கண்டார். கண்ணனின் விரக தாபத்தில் துடித்த வேளைகளில் எல்லாம் சைதன்யரின், உடலில் எரிச்சல் ஏற்பட்டது. அப்போது மலர் மாலைகள் சந்தனக்குழம்பு போன்றவற்றைப் பயன்படுத்தி அந்த எரிச்சல் தணிக்கப்பட்டது.
குருதேவருக்கு உடல் எரிச்சல் ஏற்படுகின்ற போது அதனைத் தணிக்க அதே வழிமுறைகளைக் கையாண்டு தக்க பலனைக் கண்டார் பைரவி. ஆகவே சைதன்யரும் நித்யானந்தரும் மக்களைக் கடைத்தேற்றுவதற்காக குருதேவரின் உடல், உள்ளம், ஆகியவற்றைப் பற்றிக்கொண்டு மறுபடியும் உலகில் அவதரித்துள்ளனர் என்ற திடநம்பிக்கை பைரவியின் மனத்தில் உண்டாயிற்ற.
சிகோர் கிராமத்திற்கு ஒருநாள் குருதேவர் சென்று கொண்டிருந்த போது அவரது உடலிலிருந்து இரு சிறுவர்கள் தோன்றிய காட்சிகளைப் பற்றி முன்னரே சொல்லியிருக்கிறோம்.
இந்தக் காட்சியைப் பற்றி குருதேவரிடமிருந்து கேட்ட பிரம்மணியின் நம்பிக்கை மேலும் திடமாயிற்று. இந்த முறை சைதன்யர், நித்யானந்தரின் உடலில் அவதரித்துள்ளார். என்று உறுதிபடக்கூறினார்.
இவ்வுலகில் யாரிடமிருந்தும் எதையும் பிராம்மணி எதிர்பார்த்ததில்லை. தான் உண்மையென்று உணர்ந்ததை எடுத்துச் சொல்வதால் பிறர் தன்னை நிந்திக்கவோ ஏளனம் செய்யவோ கூடும்  என்பது பற்றியும் அவர் கவலைகொள்ளவில்லை. எனவே ஸ்ரீராமகிருஷ்ணரைப்பற்றிய தனது கருத்தை எல்லோரிடமும் சொன்னார்.
ஒரு நாள் பஞ்சவடியில் குருதேவர் மதுர்பாபுவுடன் அமர்ந்திருந்தார்ஹிருதயரும் அருகில் இருந்தார். உரையாடலின் போது தம்மைக்குறித்து பிராம்மணி கொண்டுள்ள எண்ணம் பற்றி குருதேவருக்கு மதுரிடம் கூறினார். அவதார புருஷருக்குரிய அடையாளங்கள் யாவும் இந்த உடலிலும் மனத்திலும் (தம்மைச்சுட்டிக்காட்டி) இருப்பதாக பிராம்மணி கூறுகிறார். அவர் ஏராளமான சாஸ்திரங்களைப் படித்தவர். கைசவம் பல நூல்களையும் வைத்துள்ளார். அதற்குமதுர் சிரித்துக்கொண்டே அவர் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும் அவதாரங்கள் பத்துக்குமேல் இல்லையே‘ அப்படியிருக்க அவர் சொல்வது எப்படி உண்மையாகும்? ஆனால் அன்னைகாளியின் அருள் உங்களிடம் பரிபூரணமாக உள்ளது .இது உண்மை என்று கூறினார்.
இவவாறு பேசிக்கொண்டிருந்த போது அவர்களை நோக்கி சன்னியாசி ஒருவர் வருவதை மதுர் கண்டார்.
உடனே குருதேவரிடம் தாங்கள் குறிப்பிட்டது இவரைத் தானா? என்று கேட்டார். ஆம்  என்றார் குருதேவர். பிராம்மணி ஒரு தட்டு நிறைய இனிப்புப் பண்டங்களுடன் வந்து கொண்டிருந்தார். தம்மையும் சூழ்நிலையையும் மறந்து, அகமுகப்பட்ட ஓர் அசாதாரணமான நிலையில் அவர் காணப்பட்டார். கண்ணனுக்கு உணவூட்டச் செல்லும் யசோதையைப்போல் உள்ளத்தில் தாயன்பு பெருக குருதேவரை நோக்கி வந்து கொண்டிருந்தார்.
அருகில் வந்தபோது அங்கு மதுர்பாபு இருந்ததால் தம்மைக் கட்டுப்படுத்திக்கொண்டு ஹிருதயரிடம் அந்தத் தட்டைத் தந்து, இனிப்புகளை குருதேவருக்குக் கொடுக்குமாறு கூறினார். குருதேவர் மதுர்பாபுவைச்சுட்டிக்காட்டி பிராம்மணியிடம் தாயே! என்னைப்பற்றி நீங்கள் சொன்னவற்றை இவரிடம் சொன்னேன்.இவரோ அவதாரங்கள் பத்துக்கு மேல் இல்லையென்று சொல்கிறார் என்றார்.
மதுரும் பைரவியை வணங்கி தாம் அவ்வாறு கூறியது உண்மையே என்றார். வணங்கியவரை ஆசீர்வதித்துவிட்டு ஏன் பாகவதத்தில் மகாவிஷ்ணுவின் இருபத்துநான்கு அவதாரங்களைப்பற்றியும் மேலும் எண்ணற்ற அவதாரங்களைப்பற்றியும் வியாசர் கூறவில்லையா? அது மட்டுமன்றி சைதன்யர் மீண்டும் அவதரிப்பது பற்றி வைணவ நூல்கள் கூறுகின்றன.இவரிடம்( குருதேவரைச்சுட்டிக்காட்டி) தோன்றுகின்ற பல அறிகுறிகள் சைதன்ய தேவரிடம் வெளிப்பட்டிருந்தது என்று தம் கருத்தைக்கூறினார்.
பிராம்மணி மெலும் பாகவதத்தையும் கௌடீய வைணவ ஆசாரியர்களின்  நூல்களையும் படித்த பண்டிதர்கள் இதனை ஏற்றுக்கொண்டேயாக வேண்டும், எந்த அறிஞரின் முன்னிலையிலும் வாதிட்டு தனது முடிவை விளக்கவும் தயார் என்றும் சொன்னார். பிராம்மணியின் பேச்சுக்கு என்ன சொல்வதென்று மதுர்பாபு மௌனமானார்.
குருதேவரைப் பற்றி பைரவி கூறிய அசாதாரணமான கருத்தை காளி கோயிலிலுள்ள அனைவரும் அறிந்தனர். அந்தச் செய்தி அவர்களிடையே ஒரு சலசலப்பை ஏற்படுத்தியது. அது பற்றி வேறு பகுதிகளில் விரிவாகக்கூறியுள்ளோம். தம்மைத்திடீரென்று கடவுளின் நிலைக்கு உயர்த்தி பணிவையும் பக்தியையும் பிராம்மணி காட்டிய போதும், குருதேவரின் மனத்தில் எவ்வித மாற்றமும்ஏற்படவில்லை. ஆனால் அவரது கருத்தைக்கேட்டு பண்டிதர்கள் என்ன சொல்லப்போகிறார்கள் என்பதை அறிவதில் ஒரு சிறுவனைப்போல் ஆர்வம் கொண்டு பண்டிதர்களின் சபை ஒன்றைக்கூட்டுமாறு மதுரிடம் கேட்டுக்கொண்டார்.
அந்த சபையில் கலந்து கொள்வதற்காகவே வைஷ்ணவசரண் முதலான பண்டிதர்கள் காளி கோயிலுக்கு வந்தனர். அவர்களிடம் பிராம்மணி எவ்வாறு தம் கருத்தை வலியுறுத்தினார் என்பதை வேறு பகுதியில் தந்துள்ளோம்.


குருதேவரின் தாந்திரிகசாதனை.
பிராம்மணி தனது அறிவுக்கூர்மையாலும் விவாதத் திறமையினாலும் மட்டுமே குருதேவர் ஓர் அவதார புருஷர் என்ற முடிவுக்கு வந்துவிடவில்லை. குருதேவர் உட்பட மூவரைச் சந்தித்து, அவர்களின் ஆன்மீக வாழ்க்கைக்கு உதவ வேண்டும் என்ற அருளாணையை அன்னையிடம் பெற்றது பற்றி தமது முதல் சந்திப்பின் போது அவர் குருதேவரிடம் கூறியது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம்.
ஆகவே ஆன்மீக சாதனைகள் வாயிலாக பைரவி பெற்ற உள்ளுணர்வே அவரை தட்சிணேசுவரத்திற்கு வரவழைத்து, குருதேவரை இவ்வாறு புரிந்து கொள்ள உதவியது என்பதில் ஐயமில்லை. தட்சிணேசுவரத்திற்கு வந்து அவருடன் நெருங்கிப் பழகிய போது தாம் எந்த அளவுக்கு, எந்த வகையில் குருதேவரின் சாதனைகளுக்குத் துணை நிற்கவேண்டும். என்பது குறித்து அவர் நிர்ணயித்துக்கொண்டார்.
 எனவே பிறருக்கு குருதேவரைப்பற்றி ஏற்பட்ட தவறான எண்ணத்தை மாற்றுவதுடன் மட்டும் அவர் நின்றுவிடவில்லை.சாஸ்திரங்களில் கூறியுள்ள பல்வேறு ஆன்மீக சாதனைகளில் குருதேவரை ஈடுபடுத்தி, அன்னையின் பரிபூரணக் கருணைக்கு ஆளாக்கி திவ்ய நிலையில் நிலைபெறச்செய்வதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டார்.
குருபரம்பரையில் வந்ததும்,சாஸ்திரங்களில் காணப்படுவதுமாகிய சாதனைகளைக் கடைப்பிடிக்காமல் தீவிர பக்தி ஒன்றின் துணையால் மட்டுமே இறைக்காட்சி பெற்றதால் தான் குருதேவரால் தமது உயர்ந்த ஆன்மீக நிலையை அறிந்துகொள்ள முடியவில்லை என்பதை அனுபவம் மிக்க சாதகியான பிராம்மணி புரிந்து கொண்டார். தாம் பெற்ற அற்புதமான காட்சிகளை மூளைக்கோளாறின்  விளைவுகள் என்றும், உடலில் ஏற்பட்டமாறுதல்கள் யாவும் நோயின் காரணமாகத்தோன்றியவை என்றும் அவ்வப்போது குருதேவரிடம் எழுந்த ஐயங்களைப்போக்குவதற்காக, அவரைத் தாந்திரிக சாதனைகளில்  ஈடுபடும்படி பிராம்மணி கேட்டுக்கொண்டார்.
எந்த சாதனைகளுக்கு என்ன பலன் கிட்டும் என்ற விவரங்கள் தந்திர சாஸ்திர நூல்களில் விளக்கப் பட்டுள்ளன. அந்த சாதனைகளைச் செய்து உரிய பலன்களைப்பெறும்போது சாதகனின் நம்பிக்கை திடமாகிறது. சாதனைகளின் உதவியால் உள்ளுலகின் உயர்ந்த நிலைகளை அடைகின்ற ஒருவன் சாதாரண மக்களிலிருந்து வேறுபட்ட உடலையும் மனத்தையும் பெறுகிறான் என்பதை அவன் புரிந்து கொள்ள முடிகிறது. குருதேவரைத் தாந்திரிக சாதனைகளில் ஈடுபடும்படி பிராம்மணி கூறியதற்கு இதுவே காரணம். எதிர்காலத்தில் எத்தகைய அசாதாரணமான அனுபவங்கள்  ஏற்பட்டாலும் மனம் கலங்காமல், அவை உண்மையானவை, சாதனைகளின் விளைவால் உண்டானவை  என்பதை அறிந்தால், தான் தாம் அடைய வேண்டிய இலக்கை நோக்கி அமைதியாக குருதேவரால் செல்ல முடியும், என்பதை பிராம்மணி உணர்ந்திருந்தார்.
அது மட்டுமின்றி ஒரு சாதகன் தனது அனுபவங்களை சாஸ்திரங்களுடனும் குரு வாக்கியத்துடனும்  ஒப்பிட்டு அவற்றின் உண்மையை உணரும்படி சாஸ்திரங்கள் கூறுவதன் காரணமும் இதுதான் என்பதும் அவருக்குத் தெரிந்தே இருந்தது.
இங்கே ஐயம் ஒன்று எழலாம். குருதேவர் அவதார புருஷர் என்று தெரிந்திருந்தும் சாதனைகள் செய்யுமாறு அவரை பைரவி ஏன் தூண்ட வேண்டும்? இத்தகைய மகிமை பொருந்திய அவதார புருஷரை எல்லா நிலையிலும் முழுமையானவராகக்கொண்டு அவரைஏற்றுக்கொள்வது அல்லவா நியாயம்? இத்தகைய ஒருவர் சாதனைகளில் ஈடுபடுவது தேவையற்றது என்பது சொல்லாமலேயே விளங்கக்கூடியது அல்லவா? இதற்கான பதில்-

தொடரும்..

No comments:

Post a Comment

பித்ருக்களுக்கு தினமும் உணவிட வேண்டும்

  பித்ருக்களுக்கு தினமும் உணவிட வேண்டும் .. துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும் இல்வாழ்வான் என்பான் துணை. -திருக்குறள் ...