Sunday, 16 June 2019

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு-பாகம்-62

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு-பாகம்-62

1889, ஜனவரி 12-ஆம் நாள் அனைவரும் கல்கத்தா திரும்பினார்.பிப்ரவரி 5-ஆம் நாள் நரேந்திரர்,சரத்,யோகின்,பாபுராம்,மகேந்திரநாத் குப்தர் மற்றும் பலருடன் பாபுராமின் பிறப்பிடமான ஆன்ட்பூருக்குச் சென்றார்அன்னை. அங்கிருந்து நேராக காமார்புகூர் சென்று ஒரு  சுமார்  ஒருவருட காலம் அங்கே தங்கிவிட்டு கல்கத்தாவிற்குத் திரும்பினார். 
19-சங்கஜனனி
பத்தொன்பதாம் நூற்றாண்டில் தோன்றிய அளவிற்கு வேறுஎப்போதும் சமய இயக்கங்கள் தோன்றியதில்லை. அவற்றுள் காலப் பெருவெள்ளத்தில் எதிர்நீச்சலிட்டு இன்றளவும் நிலைத்திருப்பவை மிகச்சிலவே. ஆனால் கையில் தம்பிடிக்காசு இல்லாமல் ஒருசில இளந்துறவியர் ஆரம்பித்த ராமகிருஷ்ண சங்கம் (ராமகிருஷ்ணமடம்-மிஷன்) இந்தக்குறுகிய  காலத்திற்குள் வளர்ந்து மாபெரும் இயக்கமாகப் பரிணமித்து வருகிறது. ஆராய்ச்சியாளர்களுக்கு ராமகிருஷ்ண சங்கத்தின் வளர்ச்சி  ஒரு வேளை ஒரு புதிராகத் தோன்றலாம். இந்த வளர்ச்சியின் காரணம் என்ன என்பது இயல்பாக எழும் கேள்வியே. இதற்கு ஒரே விடை தவம் என்பது தான். தவத்திலிருந்து ஆற்றல் பிறக்கிறது. அந்த ஆற்றல் வேறெந்த ஆற்றலையும் விட வலிமை வாய்ந்தது. அந்த ஆற்றலால் மட்டுமே பெரிய காரியங்கள் சாதிக்கப்பட்டுள்ளன. காலத்தை வென்று நிற்கின்ற எந்த ஒன்றும் அதன் பின்னணியில் மாபெரும் தவ ஆற்றலைக் கொண்டிருப்பதை நாம் காண முடியும். உலகையே வலம் வந்த ,வந்து கொண்டிருக்கின்ற புத்தரின் கருணைத் திறத்திற்கும் சங்கரரின் மேதா விலாசத்திற்கும் சைதன்யரின் பரவசப் பெருக்கிற்கும் தவமே ஆதாரமாக இருந்தது.தவத்தின் ஆற்றலால் தான் பிரம்மா உலகையே படைத்தார்.உபநிடதமும் எல்லா தவத்திலேயே நிலைபெற்றுள்ளன என்கிறது.குருதேவர் , அன்னை சுவாமிஜி மற்றும் சீடர்கள் என்று வழிவழியாக வந்து கொண்டிருக்கின்ற மகான்களின் மாபெரும் தவ ஆற்றலை ஆதாரமாகக் கொண்டிருப்பதால் தான் ராமகிருஷ்ணசங்கம் நாள்தோறும் வளர்ந்து கொண்டிருக்கிறது.
குருதேவரின் மறைவுக்குப்பிறகு அவரது துறவிச்சீடர்கள் வராக நகரத்தில் ஒரு பாழடைந்த வீட்டில் தங்கி, தவ வாழ்க்கை வாழ்ந்து வந்தனர். பேய்களே நெருங்க அஞ்சுகின்ற தவ வாழ்க்கையில் அப்போது நாங்கள் ஈடுபட்டிருந்தோம், என்று பின்னாளில் சுவாமிஜி அந்த நாட்களை நினைவு கூர்வதுண்டு.1887 ஜனவரி மாதத்தில் அவர்கள் சாஸ்திர விதிப்படி ஹோமம் வளர்த்து,முறைப்படி  துறவுநெறியை ஏற்றுக்கொண்டனர்.ஆனாலும் ஒரு சங்கமாக இணைத்து செயல்பட வேண்டும்.என்ற எண்ணம் அப்போது அவர்களிடம் ஏற்படவில்லை.எனவே ஒவ்வொருவரும்  தீர்த்த யாத்திரை, புண்ணியத் தலங்களில் தவ வாழ்க்கை என்று ஈடுபட்டிருந்தனர். அவர்கள் சங்கமாக இணைந்து வாழ  வேண்டும் என்ற எண்ணத்தில் முதல் விதை அன்னையிடமிருந்தே எழுந்தது.
துறவிச் சீடர்கள் வராக நகரில் தவம் செய்து வந்த அதே காலத்தில் அன்னை காமார்புகூரில் தவ வாழ்வில் ஈடுபட்டிருந்ததைக் கண்டோம்.1888-இல்  புரி சென்று வந்த அவர் சுமார் ஒரு வருட காலம் காமார்புகூரில் தங்கியிருந்தார்.குருதேவர் ஒருமுறை அன்னையிடம் கயை சென்று இறந்த தம் தாய்க்காக பிண்டம் அளிக்குமாறு கூறியிருந்தார். அதற்காக 1890, மார்ச் 25-ஆம் நாள் அன்னை மூத்தகோபாலுடன் கயை சென்றார். பின்னர் அங்கிருந்து புத்த கயை சென்றார்.
புத்த கயையில் அன்னை பிரபலமானஒரு மடத்தைக்காண நேர்ந்தது. அது சிறந்த வசதிகளுடன் கட்டப்பட்டிருந்தது. உணவுக்கும் பிற தேவைகளுக்கும் உரிய ஏற்பாடுகளை் செய்யப்பட்டிருந்தன. இதைக்கண்ட அன்னையின் மனத்தில் வேதனை மிகுந்த காட்சி ஒன்று எழுந்தது. குருதேவரை நம்பி அவரே தெய்வமென்று தங்கள் படிப்பையும் சொத்து சுகங்களையும்  உற்றார். உறவினரையும் துறந்துவந்த அவரது சீடர்களாகிய தம் பிள்ளைகள் நாடு முழுவதும் அலைந்து கொண்டிருந்தனர்.இந்தக்காட்சி அன்னையின் கண்களில் நீரை நிறைத்தது. தம் பிள்ளைகளுக்கும் இதுபோல்  மடங்கள்  ஏற்படவேண்டும் என்று தாய்மை உணர்வு பீறிட்டு பொங்க கண்களில் நீர் பெருகப்பிராத்தனை செய்தார்.  அன்னையின் அந்தப்பிராத்தனை தான் இன்றைய ராமகிருஷ்ண மடங்கள் அனைத்திற்கும் வித்தாக அமைந்தது.   இதைப்பற்றி பின்னாளில் அன்னை கூறினார். ஒ! இதற்காக நான் குருதேவரிடம்  எவ்வளவு கண்ணீர் விட்டுப் பிராத்தனை செய்தேன் தெரியுமா? அதன் பிறகு தான் அவரது அருளால் இந்த மடம் (பேலூர் மடம்) தோன்றியுள்ளது. குருதேவர் மறைந்தபின்னர்  அவரது துறவி ச்சீடர்கள் தங்கள் வீடு வாசல்  அனைத்தையும் துறந்து ஒரு  வாடகை வீட்டில்  தங்கினார்கள். பின்னர் தவ வாழ்க்கையில் ஈடுபட்டவாறே தனித்தனியாக இங்கும் அங்கும் அலைந்து திரிந்தார்கள். இது என்னை மிகுந்த வேதனை க்கு .உள்ளாக்கியது.நான் குருதேவரிடம் ஓ! பகவானே! நீர் வந்தீர்.இவர்கள் சிலருடன் விளையாடல் புரிந்தீர்.பிறகு மறைந்தும் விட்டீர். அதனுடன் எல்லாம்  முடிந்துவிட வேண்டியது தானா? அது தான் முடிவு என்றால் நீர் பூமிக்கு வந்து ஏன் இத்தனை வேதனைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும். தெருக்களில் பிச்சையெடுத்துச் சாப்பிட்டுவிட்டு, மரத்தடியில் படுத்துக் கிடக்கும்துறவியர் எத்தனையோ பேரை பிருந்தாவனத்திலும் காசியிலும் பார்த்திருக்கிறேன். அத்தகைய சாதுக்களுக்கு இந்த நாட்டில் குறைவே கிடையாதே! உமது பெயரில் அனைத்தையும் துறந்த என் பிள்ளைகள் உணவுக்காகப் பிச்சையெடுப்பதை என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது. உம்மிடம் எனது பிராத்தனை இது தான். உமது பெயரைச் சொல்லிக்கொண்டு உலகைத் துறப்பவர்களுக்குச் சாதாரண உணவும் உடையும் கிடைக்கவேண்டும்.அவர்கள் உமது உபதேசங்களையும் லட்சியங்களையும் மையமாகக் கொண்டு ஓரிடத்தில் ஒன்றுகூடி வசிக்க வேண்டும். உலக வாழ்க்கையில் துன்புற்ற மக்கள் அவர்களிடம், வந்து உமது அமுதமொழிகளைக்கேட்டு ஆறுதல் பெற வேண்டும். அதற்காகவே அல்லவா நீர் வந்தீர்!  அவர்கள் அலைந்து திரிவதைக்காண என்னால் முடியவில்லை.என்று பிராத்தித்தேன். அதன் பின்னரே நரேன் படிப்படியாக இதையெல்லாம் உருவாக்கினான்.
 எத்தனை பொருள் பொதிந்த பிராத்தனை! தாய்மையின் இயல்பான உணர்ச்சிப் பெருக்குடன் எழுந்த பிராத்தனை தான்! ஆனால் ராமகிருஷ்ண இயக்கத்தின் உன்னத லட்சியங்களின்  விதையும் எவ்வளவு பாங்காக இந்தப்பிராத்தனையில் பொதிந்துள்ளது.
-
தொடரும்...
-


No comments:

Post a Comment