Saturday, 22 June 2019

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு-பாகம்-74

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு-பாகம்-74

அன்னையின் கடைசித்தம்பியான அபயரின் மகள் ராது.அபயர் கல்கத்தாவில் மருத்துவப்படிப்பு படித்துக் கொண்டிருந்த போது,1899-ஆம் ஆண்டு திடீரென காலரா நோய் கண்டு காலமானார்.அப்போது அவரது மனைவி சுரபாலா கர்ப்பிணியாக இருந்தாள். மரணப்படுக்கையில் இருந்த அபயர் தன் மனைவியையும் பிறக்கப்போகும் குழந்தையையும் கவனித்துக் கொள்ளும்படி அன்னையின் கைகளைப் பிடித்துக்கொண்டு அழுதார்.மற்ற சகோதரர்களை விட அன்னைக்கு அவரிடம் ஆழ்ந்த பாசம் இருந்தது. ஆதலால் தம்பியின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டார். சில மணி நேரங்களில் அபயரின் உயிர் பிரிந்தது. அன்னை அளவில்லாத துயரடைந்தார்.தம்பியின் மரணத்தால் அவர் பட்ட வேதனையைவிட,சிறுவயதிலேயே ஒரு குழந்தைக்குத்தாயாகி,அந்தக் குழந்தையும் பிறப்பதற்கு முன்பேகணவனை இழந்து கைம்பெண்ணாக நிற்கும்  சுரபாலாவைப்பார்த்து தான் மிகவும் வேதனைப்பட்டார்.
சுரபாலாவுக்கு நேர்ந்த இந்த கதியைக் கண்டு அவளை வளர்த்த அவளுடைய பாட்டியும் அத்தையும் அடுத்தடுத்து இறந்து போனார்கள். வரிசையாக இத்தனைத் துயரங்களையும் அந்தப் பரிதாபத்துக்குரிய பெண்ணால்  தாங்க முடியவில்லை. அவளது மூளை கலங்கிவிட்டது. இந்த நிலையில் 1900 பிப்ரவரியில்  அவள்  ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். அவள் தான் ராதா ராணி செல்லமாக ராது என்றும் ராதி என்றும் அழைக்கப்பட்டாள். வாழ்க்கையின் மிக முக்கியமான நேரத்தில் கணவனையும் பிறகு தன் பாட்டி அத்தைகளையும் இழந்து துன்பப்பட்டதால் ,சுரபாலா அறிவுத் தெளிவைப் பெரும் பாலும் இழந்துவிட்டிருந்தாள்.போதாக்குறைக்கு ஒரு நாள் இரவில் தனியாக சமையலறைக்குப் போன போது, அங்கே நின்ற திருடனை் ஒருவனைக்கண்டு மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளானாள். ஏற்கனவே கலங்கிப் போயிருந்த அவளுடைய மூளையை இந்த அதிர்ச்சி மேலும் கலக்கியது. அவள் பைத்தியக்காரியானாள்.
பைத்தியக்காரிக்கு மகளாகப் பிறந்த குழந்தையை யார் வளர்ப்பது என்பது ஒரு பிரச்சனையாகியது. மரண வேளையில் தம்பிக்குக் கொடுத்த வாக்கையும்,இப்போதுஅவன் மனைவி ஆதரிப்பாரில்லாமல் பைத்தியமாக அலைவதையும், அவளுக்குப்பிறந்த குழந்தையின் கவனிப்பாரற்ற நிலையையும் அன்னை கண்டார்.தமக்கு ஏற்பட்டிருக்கும் புதிய பொறுப்பை உணர்ந்தார். ஆனால் சுரபாலாவையும் அவளது குழந்தையையும் கவனித்துக் கொள்வதற்கு குசும் குமாரி என்ற பெண் முன் வந்தாள். அவளிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு கல்கத்தா சென்றார் அன்னை.
கல்கத்தா சென்றாரே தவிர, அங்கே அன்னையால் முன்போல் நிம்மதியாக இருக்க முடியவில்லை. பச்சைக் குழந்தை ராதுவை குசும் குமாரி  ப் பார்த்துக் கொள்வாளோ,பைத்தியக்காரியான தாய் குழந்தையை என்ன செய்கிறாளோ, என்ற நினைப்பும் தவிப்பும் அவருடைய நிம்மதியைக் குலைத்தன. அப்போது அவருக்குஒரு காட்சி தெரிந்தது. அன்னை அந்தக் காட்சியைப்பற்றி  பின்னாளில் கூறினார்.
ஒரு நாள்மாலை நான் பூஜை செய்து கொண்டிருந்தேன்.அப்போது நாடக மேடையில்  திரைவிலகுவது போல்,திடீரென்று என் மனத்தில் ஒரு திரை விலகியது. ஜெயராம்பாடியில் சின்னஞ்சிறு குழந்தையான ராது கவனிக்க ஆள் இல்லாமல் கொடுமைக்கு ஆளாக்கப்படுகிறாள்.அவளது பசிக்குக் கொஞ்சம் பொரி மட்டுமே கொடுக்கப்பட்டிருந்தது.கவனிப்பார் யாரும் இல்லாததால் குழந்தை அதைத் தின்றபடியே தெருப்புழுதியில் வீழ்ந்து கிடக்கிறாள்.அந்தக் குழந்தையின் தாயோ பல்வேறு நிறத்துணிகளைக் கிழித்து கைகளில் கட்டிக்கொண்டு திரிகிறாள். மற்றக் குழந்தைகள் நன்றாகக் கவனிக்கப்படுகின்றன.ராதுவின் இந்த நிலைமையைக் கண்ட போது என் தலையை யாரோ தண்ணீருக்குள் அழுத்திப்பிடிப்பது போல் துடித்தேன்.நானே நேரடியாக அந்தக் குழந்தையின் பொறுப்பை எடுத்துக்கொள்ளாவிடில் அதன் கதி இவ்வாறு தான் ஆகும் என்பது எனக்குத் தெரிந்தது.
அன்னையால் அதன் பிறகு கல்கத்தாவில் இருக்க முடியவில்லை.உடனே ஜெயராம்பாடி திரும்பினார். அவர் கண்ட காட்சி அங்கே நிதரிசனமான  உண்மையாக இருந்தது. தந்தையையும் இழந்து விட்டாள்,தாயோ பைத்தியம். இந்தப் பரிதாபத்திற்குரிய குழந்தையை என்னையன்றி வேறு யார் கவனிப்பார்கள்?என்று எண்ணியவாறே ராதுவை வாரியெடுத்தார்.அப்போது குருதேவர் அன்னையின் முன் தோன்றி நீ முன்பு கண்ட சிறுமி இவளே.இவளை உன் ஆதாரமாகப் பற்றி க் கொள்.இவள் யோக மாயை என்று கூறி மறைந்தார்.
இந்தக் காட்சியைப்பற்றி அன்னைப்பிற்காலத்தில்  சொல்லும்போது அந்தக்கணத்தில் தான் உலகை மயக்குகின்றமகாமாயை என்னைத்தன் பிடியில் சிக்க வைத்தாள் என்று கூறினார். அப்போதிலிருந்து தமது வாழ்நாளில் இறுதியில் தாமேஅந்த மாயையைத்துண்டித்துக்கொள்ளும் வரைராதுவிடம் அவரது பாசம் அளவிட முடியாததாக இருந்தது. ராதுவைப் பிரிந்திருக்க அவரால் முடியவில்லை.ராது தம்மைப்பிரியவும்  அவர் விடுவதில்லை. ராது அருகில் இல்லை என்றால்  அவரால் தூங்க முடியாது.தடித்த ஒரு சங்கிலியால் இந்தச் சிறுமியுடனும் அவள் மூலம் குடும்பத்தினருடனும் கட்டப்பட்டவர் போல்ஆனார் அன்னை.
ராது அழகானவளாக இருந்தாள்.அவளது கள்ளங்கபடம் அற்ற பாங்கு காண்போரைக் கவர்வதாக இருந்தது. அவள் அன்னையை அம்மா” என்றழைத்தாள். சொந்தத்தாயை மொட்டையம்மா” என்று கூப்பிடுவாள். ஏனெனில் அந்கக்காலத்து இந்து விதவைகளின் வழக்கப்படி சுரபாலா அடிக்கடி மொட்டையடித்துக் கொள்வாள்.சுரபாலாவைப்பொறுத்த வரை பக்தர்கள் கொண்டு வருகின்ற பழம் மற்றும் பண்டங்கள் அனைத்தும் ராதுவுக்கே உரியவை. அவற்றை அவர் வேறு  யாருக்கும் கொடுப்பதைப் பார்த்து விட்டால்,அதோ மீண்டும்வாரி வழங்குகிறாள்.ராதுவின் எதிர்காலம் என்னவாகும்?ராதி வந்து விடு. உன் அத்தை மற்றவர்களுக்குத்தான் எல்லாம் கொடுப்பாள்.உனக்கென்று ஒன்றுமே வைக்கவில்லை. நீ ஏன் அவளுடன் வாழ வேண்டும்? வா, நம் வீட்டிற்குப் போகலாம். என்று ராதுவை இழுப்பாள். ஆனால் ராதுவுக்கு இது சற்றும் பிடிக்காது. அவள் சுரபாலாவைத் திட்டி விட்டு அன்னையிடம் வந்து விடுவாள். முடிந்த அளவு சுரபாலாவிடமிருந்து அகன்றே இருந்தாள் அவள்.
-
தொடரும்...
-
ஸ்ரீராமகிருஷ்ணரின் ஆன்மீகக் குழுவில் இணைய 9789374109 என்ற எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலம் ரிக்கொஸ்ட் மெசேஜ் அனுப்பவும்


No comments:

Post a Comment