Saturday, 22 June 2019

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு-பாகம்-112

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு-பாகம்-112

எங்கும் நிறைந்தார்.
இந்த உலகில் சர்வ நிச்சயமாக ஒன்று உண்டென்றால் அது மரணம் .பிறப்பு. அது நம்மைக்கடந்து சென்று விட்டது. இனி அது விஷயமாக நாம் செய்வதற்கு எதுவும் இல்லை. மரணம், அது நம் முன் நிற்கிறது.பிறந்த ஒவ்வொருவரும் அதனை எதிர்கொண்டே தீர வேண்டும். பிறந்த ஒவ்வொருவரையும் மரணத்தை நோக்கி உந்தித் தள்ளிக்கொண்டே விரைகிறது. காலம் என்னும் மாபெரும் எந்திரம்.அதன் ஆற்றல் தான் எத்தனை! தன் சழற்சியில் தான் என்னென்ன மாற்றங்களை ஏற்படுத்தி விடுகிறது.ஏதோ சாதாரணமான, எந்த சக்தியும் இல்லாத ஒன்று போல் காலம் தன்னைச்காட்டிக்கொள்கிறது. ஆனால் உண்மையில் அது தான் மனித வாழ்வை ஒரு வாள்போல், ஒரு கணம் கூட இடையீடின்றி அறுத்துக்கொண்டிருக்கிறது என்று வியந்து நிற்கிறார். தெய்வப்புலவர் காலம் என்ற இந்த வல்லமை மிக்கக் கருவியை இயற்கை அனைவரிடமும் சமமாகக் கொடுத்திருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் வேறு எல்லாம் –அது சூழ்நிலையாகட்டும், உணவு, உடை உறையுள் என்று எதுவும் ஆகட்டும்- மனிதனுக்கு மனிதன் வேறுபடுகின்றன. காலம் மட்டும் அனைவருக்கும் ஒன்றே. இந்தக்காலம் என்னும் மாயக் கருவியைக் கையாளத் தெரிந்தவனை மரணம் அணுகுவதில்லை. அவனை மரணத்தை நோக்கி உந்தித் தள்ளுவதற்கானஆற்றலைக் காலம் இழந்து விடுகிறது. அவனுக்குக் காலம் அடிபணிகிறது.அவன் காலத்தை வெல்கிறான்.
நீர் குமிழிகள் போல் கோடானுகோடி பேர் தோன்றி மறைந்து விட்ட இந்த மனித வரலாற்றில், இவ்வாறு காலத்தை வென்று நிற்கின்ற சிலரை நாம் காண்கிறோம். இதுவரை நாம் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்ற வரலாறு அத்தகைய ஒன்று. ஆம், அன்னை காலத்தை வென்றவர். மரணத்தை வென்றவர். அவர் காசியில் இருந்தபோது ஒரு நாள் சுரபாலா வழக்கம் போல் அன்னையைத் திட்டியபடியே, நீ செத்து தொலை, எப்போது தான் செத்துத் தொலைவாயோ? என்று மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருந்தாள். இதைக்கேட்ட அனனை அமைதியாகச் சிரித்தார். பின்னர் பாவம் இவள் எனக்கு மரணமே கிடையாது என்பது இவளுக்குத் தெரியவி்ல்லை என்றார். அவர் பூமியிலிருந்து மறைந்து ஆண்டுகள் பல கடந்து விட்டன. ஆனால்  இன்றும் நாம் அவரது நினைவுகளைப் புனிதமாகப்போற்றுகிறோம் என்றால் அவர் நம்முடன் வாழ்ந்து   வருகிறார் என்று தானே பொருள்! இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன் பாங்குரா மாவட்டத்தின் வரைபடத்தில் கூடஇடம் பெற முடியாத ஒரு குக்கிராமமான ஜெயராம்பாடி, இன்று உலகெங்கிலுமிருந்து மக்கள் நாடி வருகின்ற ஒரு புனிதத் தலமாக உள்ளது என்றால் அன்னை இன்றும் வாழ்ந்து வருவதால் அல்லவா!
ஆனால் உடல் அழிவது இயற்கை. பஞ்ச பூதங்களிலிருந்து தோன்றிய உடல் மீண்டும் அவற்றுடன் கலந்தே தீர வேண்டும். இது இயற்கை. பஞ்ச பூதங்களிலிருந்து தோன்றிய உடல் மீண்டும் அவற்றுடன் கலந்தே தீர வேண்டும். இது இயற்கை நியதி. அன்னையின் திருவுடலும் அந்த நியதிக்கு எற்ப அதன் அழிவை நோக்கிச் செல்லவே செய்தது. அன்னை 1919 ஜீலை இறுதியில் கோயால்பாராவிலிருந்து ஜெயராம்பாடி சென்றதுவரை, அதாவது அறுபத்தைந்தாம் வயது வரை அவரது வாழ்வைத் தொடர்ந்து வந்து விட்டோம். எத்தனைதவம்! என்ன உழைப்பு! என்ன அலைச்சல்! நோயற்ற உடல் கூட நலிந்து விடும். சதாகாலமும் பல்வேறு நோய்களுடன் போராடியவாறே வாழ்ந்த அன்னையின் திருவுடலைப்பற்றி சொல்லவும் வேண்டுமா? ஜெயராம்பாடி மலேரியாவுக்குப் பெயர் போன இடம். சிகிச்சைக்கும் பெரிய வசதிகள்  அங்கு இல்லை. எனவே இளமையிலிருந்தே அடிக்கடி மலேரியாவின் தாக்குதலுக்கு ஆளானார் அன்னை. அத்துடன் வயிற்றுக்கடுப்பு, சீதபேதி போன்ற நோய்களும் அவ்வப்போது அவரை வாட்டியது.தட்சிணேசுவர நாட்களில் கீல்வாதமும் நேர்ந்து கொண்டது. இதன் காரணமாக அன்னை வாழ்நாள் முழுவதும் விந்திவிந்தியே நடக்க வேண்டியிருந்தது. இதனை அன்னை ஒரு முறை வேடிக்கையாகக் குறிப்பிட்ட துண்டு. பக்தர் ஒருவர் அன்னையைப்புகழ்ந்து, அம்மா, வருங்காலத்தில் உங்களை எண்ணற்றோர் நினைவு கூர்வார்கள் என்றார் .அதற்கு அன்னை சிரித்தவாறே, ஆமாம், குள்ளமாக ஒருத்தி இருந்தாள், விந்தி விந்தி நடப்பாள் என்று நினைவு கூர்வார்கள் என்றார். குருதெவரின் மறைவுக்குப்பிறகு அன்னையின் கடுமையான தவ வாழ்வைக்கண்டோம். ராது அன்னையின் வாழ்வில் வந்த பிறகோ சொல்லவே வேண்டாம். அவளைப் பராமரிப்பதற்காக அன்னை        பட்டபாடு அவரது உடல்நலத்தை மேலும் சீர்குலைத்தது.
இவையனைத்திற்கும் மேலாக அன்னையே அடிக்கடி குறிப்பிடுவதான, பிறர் பாவங்களை ஏற்றுக்கொள்ளல், இதன் காரணமாக அன்னை அனுபவித்த உடல் நோய்கள் ஏராளம். ஆனால் இவற்றை அவர் பெரிதாக எடுத்துக்கொண்டதே இல்லை. மாறாக ராதுவின் சிகிச்சைகளுக்காகவே அவர் பெரிதும் கவலைப்பட்டார். அது மட்டுமின்றி சீடர்களிடம் என் உடல்நிலைப்பற்றி சரத்திற்கு எழுதி விடாதீர்கள். தீட்சைக்கு வருபவர்களை அவன் தடுத்துவிடுவான் என்பார். அத்தகைய கருணைக் கடலாக இருந்தார் அவர்.
பின்னாளில் காய்ச்சல் தொடர்ந்து அன்னையை வாட்டத் தொடங்கியது.

No comments:

Post a Comment