Sunday, 23 June 2019

ஸ்ரீராமகிருஷ்ணரின் விரிவான வாழ்க்கை வரலாறு பாகம்-44

ஸ்ரீராமகிருஷ்ணரின் விரிவான வாழ்க்கை வரலாறு
பாகம்-44

கங்கை நதிக்கு வெகு தொலைவிலிருந்து மனிதன் உட்பட ஐந்து உயிரினங்களின் சுபாவங்கள்  கொண்டுவரப்பட்டன. தாந்திரிக சாதனைகளுக்கு உகந்தவாறு இரண்டு பீடங்கள் அமைக்கப்பட்டன. இவற்றுள் ஒன்று, கோயில் நந்தவனத்தின் வடக்கு எல்லையிலிருந்த வில்வ மரத்தின் கீழும், மற்றொன்று குருதேவர் தம் கையால்  நட்டு உருவாக்கிய  பஞ்சவடியிலும் இருந்தன. இவற்றுள் ஏதேனும் ஒன்றில் அமர்ந்து குருதேவர் ஜப தியானங்களில் ஈடுபடுவார். இரவும் பகலும் எவ்வாறு கடந்து செல்கின்றன என்பது பற்றிய நினைவின்றி இந்த அற்புத சாதகரும் அந்த உத்தம குருவும் ஓரிரு மாதங்களைக் கழித்தனர்.
குருதேவர் கூறுவார்., பகல் வேளைகளில் பிராம்மணி கோயிலிலிருந்து வெகுதூரம் சென்று, பல இடங்களில் தேடி தாந்திரிக சாதனைக்குத் தேவையான பல அபூர்வப்பொருட்களைத் திரட்டி வருவார். அவற்றை இரவு நேரத்தில் பஞ்சவடி அல்லது வில்வ மரத்தின் கீழ் வைத்துவிட்டு என்னை அழைப்பார்.
அந்தப்பொருட்களைக்கொண்டு அன்னையின் பூஜையை முறைப்படி செய்துவிட்டு,ஜப தியானங்களில் ஆழ்ந்து ஈடுபடுமாறு செய்வார். ஏனோ என்னால் ஜபத்தில் சிறிதும் ஈடுபடமுடியவில்லை. ஜபமாலையை உருட்டத் தொடங்கியவுடனேயே மனம் சமாதியில் மூழ்கிவிடும்.சாஸ்திரம் கூறுகின்ற பலன் உடனே அனுபவமாகிவிடும்.
காட்சிக்குப் பின் காட்சி அனுபவத்திற்குப் பின் அனுபவம் என்று அந்த நாட்களில் எத்தனையெத்தனை அற்புத அனுபவங்கள்! நான் கண்ட காட்சிகளும் பெற்ற அனுபவங்களும் எண்ணில் அடங்கா! விஷ்ணு கிராந்தி என்று நூலில் உள்ள அறு பத்துநான்கு தந்திரங்களில் கூறப்பட்ட சாதனைகள் எல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக என்னை ஈடுபடுத்தினார் பிராம்மணி. அப்பப்பா எவ்வளவு கடினமான சாதனைகள்! அவற்றைச் செய்வதற்கு முயன்ற பல சாதகர்கள் வழிதவறி தோல்வியைத் தழுவினர். அன்னையின் பேரருளால் தான் நான் வெற்றி பெற முடிந்தது.
ஒரு நாள் இரவில் பிராம்மணி அழகிய இளம்பெண் ஒருத்தியைக்கூட்டி வந்தார். பூஜைக்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்துவிட்டு, தேவியின்ஆசனத்தில் அந்தப்பெண்ணை நிர்வாணமாக அமர்த்தி விட்டு என்னிடம் .
மகனே இவளை அன்னையாக எண்ணி பூஜை செய்“ என்று சொன்னார். பூஜைமுடிந்ததும், இவளை சாட்சாத் அன்னை பராசக்தியாக எண்ணி இவள் மடியில் அமர்ந்து ஒருமுகபட்ட மனத்துடன் ஜபம் செய், என்று கூறினார்.
எனக்கு பயம் வந்துவிட்டது அழுதுகொண்டே அன்னையிடம் அம்மா உன்னிடம் முற்றிலும் சரணடைந்துவிட்ட என்னை என்ன செய்கிறாய்?
இதற்குரிய சக்தி உனது இந்தக் குழந்தையிடம்   உள்ளதா? என்று முறையிட்டேன்.
இவ்வாறு நான் பிராத்தித்தது தான் தாமதம் தெய்வீக சக்தி என்னை ஆட்கொண்டது. ஆவேசம் வந்தவன் போல, மந்திரத்தைச்சொல்லிக்கொண்டே நான் என்ன செய்கிறேன் என்பதையே அறியாமல் அந்தப்பெண்ணின் மடியில் சென்று அமர்ந்தேன்.
அமர்ந்ததும் சமாதி நிலையில் ஆழ்ந்து விட்டேன்.சுய நினைவு வந்த பின்னர் பிராம்மணி என்னிடம் , மகனே  எல்லாம் நிறைவுற்றுவிட்டது.பிறரால் எவ்வளவோ சிரமத்தின் பேரில், ஏதோ சிறிது நேரம் ஜபம் மட்டுமே செய்யமுடியும். நீயோ சுயநினைவை இழந்து ஒரேயடியாக சமாதிநிலையில் மூழ்கிவிட்டாய்! என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.
இதைக்கேட்டதும் எனக்கு நிம்மதியாயிற்று. இத்தகைய கடினமான சோதனையை வெற்றிகரமாக க் கடக்க வைத்ததற்காக மீண்டும் மீண்டும் அன்னையை       இதயம் நிறைந்த நன்றியுடன் வணங்கினேன்.
ஒரு நாள் பிராம்மணி கபாலம் ஒன்றில் மீனைச் சமைத்து அன்னைக்குப் படைத்தார். என்னையும் அவ்வாறு செய்யும்படிச்சொல்லி, அந்த மீனை உண்ணும்படிச்சொன்னார். அவர் சொன்னபடியே நான் செய்தேன்.எவ்வித அருவருப்பும் எனக்கு ஏற்படவில்லை.
ஆனால் எல்லா அருவருப்பும் சேர்ந்து வரத்தக்கதான சம்பவம் இன்னொரு நாள் நிகழ்ந்தது. அன்று பிராம்மணி அழுகிப்போன மனித மாமிசத்துண்டு ஒன்றைக்கொண்டுவந்து நிவேதனம் செய்தபின் அதை என் நாக்கால் தொடச்சொன்னார். தாங்கமுடியாத அருவருப்பின் காரணமாக,சீச்சீ இது எப்படி முடியும்? என்று கூறிவிட்டேன்.
ஆனால் பிராம்மணியோ அமைதியாக இதில் என்ன இருக்கிறது, இதோ பார் நான் செய்கிறேன், என்று கூறியபடியே அந்த மாமிசத்துண்டை விண்டு சிறுபகுதியைத் தம் வாயினுள் போட்டுக்கொண்டார். பின்னர் என்னிடம், எதிலும் அருவருப்பு கொள்ள  க்கூடாது. என்று கூறிவிட்டு மறுபகுதியை என் முகத்திற்கு நேராக நீட்டினார்.
உடனே அன்னையின் பயங்கரமான சண்டிகை உருவம் என்னுள் கிளர்ந்தெழுந்தது. அம்மா, அம்மா என்று சொல்லிக்கொண்டே பாவ சமாதியில் மூழ்கிவிட்டேன். அதன் பின்னர் பிராம்மணி என் வாயில் மாமிசத்துண்டை வைத்தபோது எனக்கு எவ்வித அருவருப்பும் தோன்றவில்லை.
இவ்வாறு எனக்குப் பூர்ணாபிஷேகம் செய்து, எத்தனை யெத்தனை தாந்திரிகச்சடங்குகளைச் செய்வித்தார் பிராம்மணி. அவற்றிற்கு ஒரு கணக்கே இல்லை.
இப்போது எல்லாம் என் நினைவுக்கு வரவில்லை. ஒரு நாள் இளம் காதலர் இருவர் உறவில் ஈடுபட்டிருந்ததைக்கண்டேன். எனக்கு அது சிவ-சக்தியின் திருவிளையாடலாகவே தோன்றியது.
அந்த உயர்ந்த நினைவில் ஆழ்ந்து சமாதியில் மூழ்கிவிட்டேன். சுயநினைவு திரும்பியபோது என்னிடம் பைரவி, மகனே, நீ ஆனந்தாசனத்தில்  வெற்றி பெற்று திவ்ய நிலையை அடைந்து விட்டாய்! இதுவே வீர நிலையின் இறுதிசாதனை என்று கூறினார்.
சிறிது காலம் கழித்து நான் தாந்திரிக முறைப்படி விலைமாது ஒருத்தியை காளி கோயில் மண்டபத்தில் அனைவர் முன்னிலையிலும்  பகலில் பூஜித்தேன். குலாகார பூஜை எனப்படும் இந்தப்பூஜைக்கு உதவுவதற்காக பைரவி பிராம்மணி வேறொரு பைரவியை அழைத்து வந்திருந்தார்.
அந்தப்பூஜையு்டன் எனது வீரநிலை சாதனைகள் நிறைவுற்றன.
தாந்திரிக சாதனைக்காலத்தில் அனைத்துப்பெண்களையும் அன்னையாகக் காணும் மனநிலையைப்பெற்றிருந்தது  போல துளிகூட மது அருந்தாமலும் இருந்தேன்.
ஏனெனில் காரணம், என்ற சொல்லைக்கேட்டதுமே என்மனம் உலகின் காரணப் பொருளான அன்னையை எண்ணி, அதில் லயித்து நான் என்னை மறந்து விடுவேன்.
அது போல யோனி” என்ற சொல் மூட என்னை உலகின் யோனியான( மூலக்காரணமான) அன்னையை நினைவூட்டி சமாதியில் ஆழ்த்திவிடும்.
தட்சிணேசுவரத்தில் வாழ்ந்த நாட்களில் ஒரு நாள் குருதேவர் தாம் வாழ்நாள் முழுவதம் பெண்களைத் தாயாக பாவித்து வந்ததைப்பற்றி எங்களிடம் கூறினார். அதனை விளக்க முழுமுதற் கடவுளான விநாயகப்பெருமானைப்பற்றிய கதை  ஒன்றையும் சொன்னார்.ஞானியர்க்கும் சித்தர்களுக்கும் அதிபதியான அவரது மனத்தில் பெண்கள் அனைவரும் தாய் என்னும் எண்ணம் எப்படி வேரூன்றியது என்பதை விளக்குவது அந்தக் கதை.
அந்தக் கதையைக்கேட்டுமுன், பானை வயிற்றோனும் யானை முகனுமான பிள்ளையாரிடம் எங்களுக்கு மரியாதையோ பக்தியோ இருக்கவில்லை. குருதேவர் இந்தக் கதையைக்கூறிய பின்னர் தான் மற்ற தெய்வங்களுக்கு முன் வணங்கப்பட வேண்டியவர் விநாயகரே என்ற முடிவுக்கு வந்தோம்.
குழந்தைப்பருவத்தில் ஒரு நாள் விநாயகர் விளையாடிக்கொண்டிருந்தபோது ஒரு பூனையைத்துன்புறுத்த நேர்ந்தது. அடித்தும் கிள்ளியும்  அதனைக்காயப்படுத்தினார் அவர். அந்தப் பூனை சிறிது நேரத்திற்குப்பின் எவ்வாறோ ஓடிவிட்டது.
விளையாட்டு முடிந்தபின் அவர் அன்னை உமையிடம் வந்தார். அங்கே அன்னையின் உடலில் பல காயங்கள் ஏற்பட்டிருந்தன. அதற்கான காரணத்தைக்கேட்டார்.உமாதேவி. இதற்கெல்லாம் நீ தான் காரணம். என்று கூறினார். இந்தப்பதில் விநாயகருக்கு ஆச்சரியத்தைக்கொடுத்தது. என்ன நான் காரணமா, நான் எப்போது உங்களைக் காயப்படுத்தினேன்.?
அல்லது நான் செய்த தவறுக்காக நீங்கள் இவ்வாறு துன்புறநேர்ந்ததா. அது எப்படி? என்று கேட்டார். உலகின் அன்னையான உமை. மகனே, இன்று ஏதேனும் உயிருக்கு நீ துன்பம் விளைவித்தாயா? நினைவு படுத்திப்பார் என்றாள். விநாயகருக்குப் பூனையின் ஞாபகம் வந்தது.ஆம். சற்று நேரத்திற்கு முன் நான் ஒருபூனையை அடித்தேன் என்று தயங்கியபடி சொன்னார். அந்தப் பூனையின் சொந்தக்காரன்  தான் அன்னையை இவ்வாறு அடித்திருப்பான் என்று எண்ணிய விநாயகர், தன் தவறால் அன்னை காயப்பட நேர்ந்ததை எண்ணி அழத்தொடங்கினார்.
அழுகின்ற பிள்ளையை அணைத்தபடி, மகனே, என்னை யாரும் அடிக்கவில்லை. அந்தப்பூனையில் இருப்பது நானே அல்லவா! உயிர்கள் அனைத்துமாக நானே அல்லவா நடமாடுகிறேன்! அதனால் பூனையை நீ அடித்த அடிகள் என் மேலும் விழுந்துள்ளன. நீ அறியாமல் செய்து விட்டாய், வருந்தாதே, பெண் வடிவங்கள் அனைத்திலும் நானும் , ஆண் வடிவங்களில் உன் தந்தையும் இருக்கிறோம் என்பதை மறக்காதே. சக்தி, சிவம் இரண்டையும் தவிர இவ்வுலகில் வேறு எதுவும் இல்லை என்பதைத்தெரிந்து கொள்! என்று கூறினார் உமாதேவி! இந்தச்சொற்கள் விநாயகரின் உள்ளத்தில் பதிந்துவிட்டன. பின்னர் திருமணம் செய்து கொள்ளவும் மறுத்துவிட்டார்.
அவர் அனனையை அல்லவா திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்பதற்காக பிரம்மசாரியாகவே வாழ்ந்தார். அண்டம் அனைத்தையும் சிவசக்தி வடிவாகவே கண்டதால் ஞானியருள் தலைசிறந்த ஞானியாகத் திகழ்கிறார் விநாயகர்.
பின்னர் விநாயகரின் அறிவுத் திறனைக் காட்டுகின்ற இன்னொரு கதையும் கூறினார் குருதேவர்.
ஒரு நாள் உமாதேவி தான் அணிந்திருந்த ரத்தினமாலையை விநாயகருக்கும் முருகனுக்கும் காட்டி, பதினான்கு உலகங்களைக் கொண்டிருக்கும் இந்த அண்டத்தைச்சுற்றி விட்டு முதலில் என்னிடம் வருபவனுக்கு இந்தமாலையைப் பரிசாகக்கொடுக்கிறேன். என்று கூறினாள். மயல்வாகனனும் தேவசேனாபதியுமானமுருகன் அண்ணனின் பருத்த உடம்பையும் பானைவயிற்றையும் அவனது வாகனமான மூஞ்சுறுவையும் நினைத்துப்பார்த்து ஏளனப் புன்னகையோடு தனது வெற்றி நிச்சயம்  என்ற நம்பிக்கையுடன் மயில்மீது அமர்ந்து அண்டத்தை வலம்வரத் தொடங்கினான். கந்தன் புறப்பட்டு வெகுநேரம் கழித்த பின்னர் விநாயகர் தம் இருக்கையிலிருந்து மெள்ள எழுந்தார். சிவசக்தி மயமான இந்த அண்டம் முழுவதும் பார்வதிபரமேசுவரர்களின்  உடலில் அடங்கியுள்ளது. என்பதைத் தம் ஞானக்கண்ணால் கண்டார் அவர். நிதானமாக அவர்களை வலம் வந்து வணங்கி அமர்ந்தார்.. சிறிது நேரத்தில் முருகனும் திரும்பி வந்து சேர்ந்தார். பார்வதிதேவி விநாயகரின் அறிவுக்கூர்மையையும் பக்தியையும் கண்டு ரத்தினமாலையை விநாயகரின்                  கழுத்தில் அணிவித்து அருள்பாலித்தாள்.
விநாயகரின் அறிவு நுட்பத்தையும் அனைத்துப்பெண்களையும் அன்னையாகக்கருதும் மனோபாவத்தையும்  இவ்வாறு விளக்கிய குருதேவர் ” நானும் பெண்களை இவ்வாறே காண்கிறேன்.அதனால் தான் நான் திருமணம் செய்து கொண்ட பெண்ணிடம் அன்னையைக்கண்டு அவளை வழிபடவும் அவளது பாதங்களில் வீழ்ந்து வணங்கவும் செய்தேன் என்று கூறினார்.
அனைத்துப்பெண்களையும், அன்னையெனக்கொண்டு தந்திரங்கள் கூறும் வீர நிலை சாதனைகள் அனைத்தையும் செய்த இன்னொருவரை இதுவரை நாம் கேள்விப்பட்டதில்லை.
வீர நிலை சாதகர்கள் அனைவரும் மனைவியின் துணையுடன் சாதனை புரிவது தான் வழக்கமாக இருந்து வந்தது. பெண்துணையின்றி சாதனைபுரியும் சாதகன் தனது குறிக்கோளை அதாவது அன்னையின் அருளைப்பெற முடியாது என்றே அனைவரும் நம்பியிருந்தனர். இந்த நம்பிக்கையின் ஆதிக்கத்தாலும் சுய ஆசைகளின்  வேகத்தாலும் சாதகர்கள் தாந்திரிக சாதனைகளில் மற்றப் பெண்களையும் சேர்த்துக்கொள்ளலாயினர். இதனால் தந்திர சாஸ்திரங்கள் கூறும் வீர நிலை சாதனைகள் இழிந்தவையாகக்கருத படலாயின.
 யுகாவதார புருஷரான குருதேவர் இது விஷயமாக எங்களிடம் பலமுறை கூறியுள்ளார். கனவில் கூட அவர் ஒரு பெண்துணையை எண்ணிப்பார்த்ததில்லை. வாழ்நாள்  முழுவதும் பெண்களை அன்னையாக பாவித்த குருதேவரைத் தாந்திரிகம் கூறுகின்ற வீர நிலை சாதனைகளைச்செய்ய வைத்ததன் மூலம் எத்தனை மகத்தான உள்நோக்கத்தை வெளிப்படுத்திவிட்டாள் அன்னை காளி.

தொடரும்..

No comments:

Post a Comment