Saturday, 22 June 2019

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு-பாகம்-80

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு-பாகம்-80

இத்தகைய சூழ்நிலையில் அமைதியான தொரு வாழ்க்கை நடத்த முடியுமா என்பதே கேள்விக்குறியாக இருக்க அத்தகைய வாழ்க்கையை நடத்தியது மட்டுமல்ல, தம்மை நாடி வந்த ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கும் அமைதியையும் ஆன்மீகப் பேரானந்தத்தையும் வாரி வழங்கினார் அன்னை. குடும்பத் தலைவியாக வாழ்ந்தும் அவர் இல்லறத்தாருக்கும் துறவிகளுக்கும் குருதேவியாக இருந்து, அவர்களை வழிநடத்தியதை இப்போதுகாண்போம்.

இறைவனையே குருவாகக் கொள்கிறது இந்துமதம். ஆன்மீக வாழ்க்கைக்கான ஒளியும்,வழியும் ஆற்றலும் அவரிடம் இருந்து மட்டுமே வர முடியும். பொதுவாக இந்த ஆற்றல் , மானிடர் ஒருவர் மூலம் வெளிப்படுகிறது. அதாவது ஒருவர் தவ வாழ்க்கையின் மூலமும் ஆன்மீக சாதனைகளின் மூலமும் தன்னைத் தகுதியுடையவர் ஆக்கிக் கொள்ளும்போது குரு-ஆற்றல் அவரிடம் வெளிப்படுகிறது. அவரது ஆன்மீக உயர்வுக்கு ஏற்ப அந்த ஆற்றலின் வெளிப்பாடு கூடியும் குறைந்தும் காணப்படும். இப்படி யாரிடம் இறைவனின் குரு-ஆற்றல் வெளிப்படுகிறதோ அவரை குரு என்று அழைக்கிறோம். அத்தகையோரை இறைவனின் ஆணைபெற்றவர்கள் என்பார் குருதேவர். மனித குலத்திற்கு உபதேசிக்கின்ற உரிமை இவர்களுக்கே உண்டு.இவர்கள் சொல்வதை மட்டுமே மக்கள் ஏற்றுக்கொள்வா். இவர்கள் ஒரு போதும் மேடையேறி பிரசங்கம் செய்தோ கூட்டங்கள் கூட்டியோ தங்களை குரு என்று அறிமுகப்படுத்திக்கொள்ள வேண்டியதில்லை. காட்டில் எங்கோ ஒரு மூலையில் மலர்கின்ற மனோரஞ்சிதத்தின் நறுமணம் மென்மையாகப்பரவி வண்டினங்களைக் கவர்ந்திழுப்பது போல் உண்மை குருவின் ஆற்றலும் செயல்படுகிறது. ஆன்மதாகம் கொண்டோர் இயல்பாகவே அவரிடம் கவரப்படுகின்றனர்.
நாம் கடவுளை நோக்கிச் செல்லும் போது கடவுளும் நம்மை நோக்கி வருகிறார். இதன்  பொருள் என்னவென்றால் நாம் நம்முள் நமது இயல்பான தெய்வீகத் தன்மையை உணரும் தோறும் கடவுள் தம்மை வெளிப்படுத்தி அருள்கிறார்.நாம் நமது தெய்வீகத் தன்மையைஉணர குரு வழிகாட்டுகிறார்.இதுவேதீட்சை எனப்படுகிறது.குருவின் ஆற்றலுக்கும் சீடனின் தகுதிக்கும் ஏற்ப தீட்சை  முறை மாறுபடுகிறது. பார்வை மூலம்(சஷீ தீட்சை), தொடுதல் மூலம் (ஸ்பரிச தீட்சை),கனவு மூலம் (ஸ்வப்னதீட்சை) என்றெல்லாம்  தீட்சை கொடுப்பது பற்றி தந்திர சாஸ்திரங்கள் கூறுகின்றன. ஆனால் சாதகனின் மன அமைப்பிற்கு ஏற்ப ஓர் இஷ்ட தெய்வத்தை அறிவித்து,ஜபம் செய்வதற்கு ஒருமந்திரத்தை அளிப்பது தான் பொதுவாகப் பின்பற்றப்படுகிறது. இதுவே மந்திர தீட்சை. மந்திரம் உடலையும் மனத்தையும் புனிதப்படுத்துகிறது. குரு அளித்த மந்திரத்தை ஜபம் செய்வதால் ஒருவர் புனிதமாக்குகிறார்.என்பார் அன்னை. மனம் புனிதம் பெறும்போது அங்கே தெய்வீகம் குடிகொள்கிறது
-
தொடரும்...
-
ஸ்ரீராமகிருஷ்ணரின் ஆன்மீகக் குழுவில் இணைய 9789374109 என்ற எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலம் ரிக்கொஸ்ட் மெசேஜ் அனுப்பவும்



No comments:

Post a Comment