Friday, 21 June 2019

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு-பாகம்-65

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு-பாகம்-65

காலம் கடந்தது 1898 பிப்ரவரி 3 ஆம் நாள் ராமகிருஷ்ண மடம் இயங்குவதற்கு பேலூரில்  நிலையானதோர் இடம் வாங்கப்பட்டது. ஏப்ரல் மாதவாக்கில்  அன்னை அந்த இடத்திற்கு முதன்முதலாக அழைத்துச்செல்லப்பட்டார். அவருடன்  சுவாமிஜியின் மேலைநாட்டு சிஷ்யைகளான சகோதரி நிவேதிதை,மிசஸ் ஓலிபுல், மிஸ். ஜோசபின் மக்லவுட் ஆகியோரும் வந்தனர். மடத்துத் துறவியரும் பிரம்மசாரிகளும் அன்னையைப் பணிந்து வரவேற்றனர். அன்னையின் மகிழ்ச்சி  கரைகடந்ததாக இருந்தது. இப்போது என் பிள்ளைகள் தலைசாய்க்க ஓர் இடம் கிடைத்தது. இறுதியில் குருதேவர்  அவர்களுக்கும் அருள்புரிந்து விட்டார்.என்று குதூகலத்துடன் கூறினார். மற்றொரு முறை அன்னை சென்றபோது,சுவாமிஜி அன்னையுடன் சென்று மடத்தைச்சுற்றிக் காண்பித்து, அம்மா , இது உங்கள் இடம். எல்லா இடத்தையும் பாருங்கள் என்று கூறினார். பின்னாளில் பேலூர் மடத்தைப்பற்றிய தமது நினைவுகளைக் கூறும்போதுஆ! பேலூர் மடம் என்ன அமைதியான இடம்,தியானம் இயல்பாகவே  அங்கே  கைகூடுகிறது. அதனால் தான் நரேன் அந்த இடத்தைத் தேர்ந்தெடுத்தான்” என்று கூறினார். அதே ஆண்டு காளிபூஜை நாளில் (நவம்பர் 12) அன்னை அந்த இடத்தில் குருதேவரைப்பூஜித்து அங்கே அவரது பேரருளை நிறைத்தார்.தாம் பூஜித்து வந்த குருதேவரின் படத்தைக் கொண்டு வந்து , தம் கையாலேயே நிலத்தின் ஒரு பகுதியைச் சுத்தம் செய்து அங்கே அந்தப்படத்தை வைத்து குருதேவர் வாழ்வதை தாம் ஏற்கனவே ஒரு காட்சியில் கண்டதாகவும் பின்னாளில் கூறினார்.
 இவ்வாறு சவாமிஜியின் முயற்சிகள் அன்னையின் அருளால் நிறைவேறின. ராமகிருஷ்ண மிஷினின் வாராந்தரக்கூட்டம் ஞாயிறுதோறும் பலராம் போஸின் வீட்டில் நடைபெறத் தொடங்கியது. அன்னை பலமுறை இந்த க்கூட்டத்தில்  பக்தைகளுடன் கலந்து கொண்டிருக்கிறார். அன்னையின் திருமுன்னர் சுவாமிஜி பலமுறை பாடியதும் உண்டு.
ராமகிருஷ்ண சங்கத்தின் தோற்றம் முதல்அதன் ஒவ்வொரு கட்ட வளர்ச்சியும் அன்னையின் அருள்  துணையுடனேயே நடைபெற்றது. இவ்வாறு தமது அவதாரப்பணியில் ஒரு பகுதியான, சங்கத்தைத் தோற்றுவிக்கின்ற பணியைச் செய்தார்.சங்க ஜனனியான அன்னை, அதன் பிறகும் அவர் இந்த பூமியில் வாழ்ந்த நாள் வரை அவரது அருளாணைப்படியே சங்கம் செயல்பட்டு வந்தது. துறவியர் அதன்  செயல்படுதலைவர்களாக இருந்த போதிலும் அன்னையே அதன் உண்மைத் தலைவியாக இருந்தார். இதனைப் பின்னால் விரிவாகப் பார்ப்போம்.
-
இந்தக் காலக்கட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளைக் காலக்கிரமப்படி தொகுப்பது இயலாத காரியம். 1897 வரை காமார்புகூர்,ஜெயராம்பாடி.கல்கத்தா என்றே அன்னையின் வாழ்க்கை அமைந்தது.இதில் அவர்  எப்போது எங்கிருந்தார் என்பது போன்ற தகவல்களை அவ்வளவு முக்கியமானதாகக் கொள்ளாமல் நிகழ்ச்சிகளுக்கும்  அவற்றின் உட்பொருளுக்கும் முக்கியத்துவம்  கொடுத்து, இங்கே நாம் அவற்றை வரிசைப் படுத்தியுள்ளோம்.
-
தொடரும்...



No comments:

Post a Comment