Saturday, 22 June 2019

ஸ்ரீராமகிருஷ்ணரின் விரிவான வாழ்க்கை வரலாறு

ஸ்ரீராமகிருஷ்ணரின் விரிவான வாழ்க்கை வரலாறு
-
பாகம்-2

காமார்புகூரில் தெய்வீகக் குடும்பம்
-
கூதிராமும் சந்திராவும் பத்து வயது பாலகன் ராம்குமாருடனும் நான்கு வயதே நிறைந்த காத்யாயனியுடனும் காமார்புகூருக்கு வந்து தங்களுக்கு அளிக்கப்பட்ட குடிசையில் வாழலாயினர். அவர்களின் உள்ளங்களில்  எத்தனையெத்தனை உணர்ச்சிகளும் எண்ணங்களும் அப்போது எழுந்து அலைமோதி மறைந்திருக்கும்! அவற்றின் ஆழத்தையும் பரிமாணத்தையும் யார் தான் அளக்க முடியும்?
வெறுப்பும் பொறாமையும் நிறைந்த இந்த உலகம் காரிருள் சூழ்ந்ததாக,பிணங்கள் நிறைந்த இடுகாடாக அவர்களுக்குத் தோன்றியது. துடிக்கும் அவர்களின் இதயங்களில் அன்பும் பண்பும் கருணையும் பாசமும் நீதியும் நேர்மையும் ஒளிக்கதிர்களை வீசி அவ்வப்போது மகிழ்ச்சி யூட்டினாலும் கண நேரத்தில் அவை தமது ஒளியை இழந்து அங்கு மீண்டும் துக்கக் காரிருள் சூழ்ந்துவிடும்.
கடந்த கால வாழ்க்கையுடன் நிகழ்காலத்தை ஒப்பிட்டுப் பார்க்கும் போது அவர்களின் உள்ளங்களில் இத்தகைய எண்ணங்கள் எழுந்தது இயற்கையே. அல்லலும் ஆபத்தும் அலைக்கழிக்கும் போது தான் மக்கள்  உலகின் நிலையாமையையும் பயனற்ற தன்மையையும் உணர்கின்றனர். அத்தகைய ஒரு தருணம் கூதிராமின் வாழ்விலும் இப்போது வந்திருக்கிறது.

இயல்பாகவே பக்தி நிறைந்த அவர் இந்த வேளையில் உலகிலிருந்து விலகி கடவுளை முற்றிலுமாகச் சார்ந்திருக்கத் தலைப்பட்டதில் வியப்பேதும் இல்லை. அனைத்தையும் இழந்து தெருவில் நிற்க வேண்டிய நிலை வந்த போது கூட தாம் யாரிடமும் சென்று கேட்காமலேயே தஞ்சம் கிடைத்ததை நினைத்து நினைத்து அவர் உருகினார். ஸ்ரீரகுவீரரின் அருள் வெள்ளத்தில் கரைந்த அவரது உள்ளம் உலகியலிலிருந்து மெள்ளமெள்ள விலகத் தொடங்கியது.ஸ்ரீரகுவீரரிடம் பக்திபூண்டு அவருடைய சேவையில் கூதிராம் மேலும்மேலும் நேரத்தைச் செலவிட்டார்.

இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் அவரது வாழ்க்கை பழங்கால வானபிரஸ்தர்களின் வாழ்க்கையைப்போல அமைந்தது.உலகில் வாழ்ந்தும் அவர் அதில் ஒட்டவில்லை.

உலகியல் வாழ்க்கையைப் பொறுத்தவரை அவரது துன்பங்கள்  தொடர்ந்த வண்ணமே இருந்தன. கூதிராம் எல்லா துரதிஷ்டங்களையும்  மகிழ்வுடன் தாங்கிக்கொண்டார்.
சாஸ்திர விதிகளைப் பின்பற்றுவதில் கூட அவர் எந்தக்குறையும் வைக்கவில்லை.சில நாட்கள் சாப்பிடுவதற்கு வீட்டில் எதுவும் இருக்காது. சந்திராதேவி கவலையுடன் அதைப்பற்றிக் கூறுவாள். ஆனால் கூதிராம் சிறிதும் மனம் கலங்காமல் ”கவலைப்படாதே”பூஜையின்போது ராமனுக்கு உணவு படைக்க உணவில்லை. ஸ்ரீராமனே பட்டினி கிடக்கும்போது அவருடன் சேர்ந்து நாமும் என் பட்டினி கிடக்கக்கூடாது? என்று கேட்டு அவளைத்தேற்றுவார். எளிய உள்ளம் படைத்த சந்திராதேவியும் அந்தப் பதிலில் திருப்தியடைந்துவிடுவாள். தன் கணவரைப்போலவே ஸ்ரீராமனைச் சரணடைந்து கவலையின்றி வீட்டுவேலைகளில் ஈடுபடுவாள்.

இதில் ஆச்சரியம் என்னவென்றால் தேவையான உணவு எப்படியோ அவர்களுக்குக் கிடைத்துவிடும்.

ஆறு வருடங்கள் உருண்டோடின. கூதிராமின் மகன் ராம்குமாருக்குப் பதினாறு வயதும் மகள் காத்யாயனிக்குப் பதினொரு வயதும் ஆயின. ராம்குமார்அடுத்த கிராமத்திலிருந்த சமஸ்கிருத பள்ளியில் வடமொழி இலக்கண இலக்கியங்களைக் கற்றுத் தேர்ந்தார். பின்னர் ஸ்மிருதிகளைக் கற்கலானார். காத்யாயனி திருமண வயதை எட்டியிருந்தாள். இருவருக்கும் திருமணத்தை நடத்தினார் கூதிராம்.

கூதிராமின் உள்ளத்தில் தீர்த்த யாத்திரை செல்ல வேண்டும் என்ற ஆசை இப்போது எழலாயிற்று.அது கி.பி 1824-ஆம் ஆண்டாக இருக்கலாம்.
தாமதமின்றி சேது பந்தன ராமேசுவரத்தை நோக்கிக் கால் நடையாகத் தமது தீர்த்த யாத்திரையைத் தொடங்கினார் அவர். ஓராண்டு காலம்  தென்னிந்தியாவில் பல புண்ணியத் தலங்களைத் தரிசித்த பின்னர் காமார்புகூர் திரும்பினார்.
ராமேசுவரத்திலிருந்து பாணலிங்கம் ஒன்றைக்கொண்டு சென்று அதனையும் தமது பூஜையறையில் வைத்து தினசரி வழிபாட்டைில் சேர்த்துக்கொண்டார்.

நீண்ட காலத்திற்குப் பிறகு சந்திராதேவி இப்போது மீண்டும் கருவுற்று,1826-இல் ஆண்மகவு ஒன்றை ஈன்றெடுத்தார். தமது தீர்த்த யாத்திரையின் நினைவாக கூதிராம் அந்தக்குழந்தைக்கு ராமேசுவரர் என்று பெயரிட்டார்.

அடுத்த எட்டு ஆண்டுகள் காமார்புகூரின் அந்த ஏழைக்குடும்பத்தில் பெரிய நிகழ்ச்சிகள் எதுவுமின்றி சாதாரணமாகக் கழிந்தன.

 ராம்குமார் சிறந்த தேவி உபாசகர். தகுந்த ஒருவரிடமிருந்து மந்திர உபதேசம் பெற்றிருந்த அவர் தீவிரமான சாதனைகள் மூலம் தன் இஷ்ட தெய்வமான ஆத்யாசக்தி அன்னையின் காட்சியைப்பெற்றார். ராம்குமாரின் வழிபாட்டில் மகிழ்ந்த அன்னை தன் திருக் கை விரலால் அவரது நாக்கில் ஒரு மந்திரத்தை எழுதினாள்.அதிலிருந்து ராம்குமார்  சோதிடக்கலையில் வல்லவரானார். அவர் சொன்னதெல்லாம் பலித்தது.

நோயாளி ஒருவனைப்பார்த்த மாத்திரத்திலேயே அவன் நலம் பெறுவானா மாட்டானா என்பதை அவரால் கூற முடிந்தது.
எதிர்காலத்தைக் கணிப்பதில் வல்லவர் என்று அவரது பெயர் அந்தப்பகுதியில் பரவியது.சாதாரண நோயாகட்டும் கொடிய வியாதி ஆகட்டும்.அவரிடம் வந்த யாரும் குணமாகாமல் போனதில்லை.

நோயாளி வந்ததும் ஸ்வஸ்த்யயனம் என்ற சடங்கைச் செய்வார்.பின்னர் நான் இப்போது பூஜை செய்யும் இடத்தில் விதைக்கின்ற விதைகள் முளைக்க ஆரம்பித்ததும் இவன் குணமடைவான் என்று உறுதியுடன் கூறுவார்.
அவர் கூறுவது சிறிதும் பிசகின்றி உண்மையாகி வந்தது. இதற்கு எடுத்துக்காட்டாகப் பின்வரும் நிகழ்ச்சியை சிவராம் கூறினார்.
ஒரு சமயம் வேலை நிமித்தமாக ராம்குமார் கல்கத்தா செல்ல நேர்ந்தது.
அங்கே ஒரு நாள் காலையில் அவர் கங்கையில் குளித்துக்கொண்டிருந்தார். அப்போது செல்வந்தன் ஒருவன் குடும்பத்துடன் அங்கே குளிக்க வந்தான்.
தனது மனைவி பிறர் காணாமல் நீராட வேண்டும் என்பதற்காக அவள் அமர்ந்திருந்த பல்லக்கையே  நதியினுள் எடுத்துச்செல்ல ஏற்பாடு செய்திருந்தான் அவன்.
ராம்குமார் கிராமவாசி. பெண்ணொருத்தி இவ்வளவு தூரம் தன்னை மறைத்துக்கொண்டு குளிப்பதை அவர் கண்டதில்லை. அதை அவர் வியப்புடன் பார்த்தார். அப்போது தற்செயலாக அந்தப்பெண்ணின் முகத்தைக் காண நேர்ந்தது.

அந்தோ பரிதாபம் என்று தனக்குள் கூறிக்கொண்டார் ராம்குமார்.

ஏனெனில் மறுநாளே அந்தப்பெண் சாகப்போகிறாள் என்பது அவருக்குத் தெரிந்தது.ஐயோ! இன்று  இத்தனை ஆடம்பரத்துடன் மறைவாக நீராடும் இந்த உடல் நாளை எல்லார் கண்முன்னாலும் இதே கங்கையில் பிணமாக மூழ்கப்போகிறதேஎன்று முணுமுணுத்தார்.

இதைக்கேட்டு விட்டான் அந்தப்பணக்காரன்.ராம்குமாரின்வார்த்தைகள் அவனுக்கு அதிர்ச்சியை அளித்ததுடன் ஆத்திரத்தையும் மூட்டின.
அந்தப்பெண் நல்ல உடல் நிலையுடன் இருந்தாள். மறுநாள் இறப்பதற்கான எந்த அறிகுறியும் அவளிடம் காணப்படவில்லை. எனவே ராம்குமார் கூறியதைச்சோதிக்க முடிவு செய்தான் அவன்.
கணிப்பு தவறாகி விட்டால் அவருக்குச் சரியான பாடம் கற்பிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அவரை வற்புறுத்தித் தன் வீட்டிற்குக்கூட்டிச்சென்றான். ஆனால் ராம்குமாரின் வாக்கு பொய்க்கவில்லை.
மறுநாளே் அந்தப்பெண் திடீரென இறந்து விட்டாள். வேறு வழியின்றி அவரைப்போக விட்டான் அவன்.
-
தொடரும்...

No comments:

Post a Comment