Saturday, 22 June 2019

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு-பாகம்-103

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு-பாகம்-103

அன்னை சொல்வதை மறு பேச்சின்றி ஏற்றுக்கொள்வார் சுவாமிஜி. பேலூர் மடத்தில் வேலை செய்து வந்த ஒருவரைத் திருட்டுக் குற்றத்திற்காக சுவாமிஜி வெளியேற்றினார். தன் தவறை உணர்ந்த அவன்  மன்னிப்பு வேண்டி நேராக உத்போதனுக்கு ஓடி அன்னையின் பாதங்களில் வீழ்ந்தான். அன்னையால் அவனை மன்னிக்காமல் இருக்க முடியவில்லை. அன்று பிற்பகல் பிரேமானந்தர்  எதேச்சையாக அன்னையிடம் சென்றிருந்தார். அன்னை அவரை அழைத்து இதோ பார் பாபுராம், இவன் மிகவும் ஏழை.வறுமை தான் அவனைத் திருடத் தூண்டியிருக்கிறது. அதற்காக நரேன் அவனைத் திட்டி வெளியேற்றிவிட வேண்டுமா என்ன? இந்த உலகம் இருக்கிறதே, அது துன்பங்களும் வேதனைகளும் நிறைந்ததப்பா!நீங்கள் துறவிகள் .உங்களுக்கு அதெல்லாம் எங்கே புரியும்! அது போகட்டும். இவனைக் கூட்டிச் செல் என்றார். அவனைக் கூட்டிச் சென்றால் சுவாமிஜி போபித்துக் கொள்வார் என்று அன்னைக்கு விளக்க முற்பட்டார் பிரேமானந்தர். ஆனால் அவரை ப் பேச விடாமல் இடைமறித்த அன்னை சற்று கண்டிப்பான குரலில்,நான் சொல்கிறேன்,கூட்டிச் செல் என்றார். வேறு வழியின்றி அவனை பேலூர் மடத்திற்கு அழைத்துச் சென்றார் பிரேமானந்தர். அவனைக்கண்டதும் சுவாமிஜி,பாபுராமின் புத்தியைப்பார்.அந்தத் திருடனை மீண்டும் கூட்டி வந்திருக்கிறான் என்று கோபத்தடன் கூறினார். ஆனால் உத்போதனில் நடைபெற்றதை பிரேமானந்தர் கூறியதும் மறு பேச்சின்றி மௌனமானார்.
 சுவாமிஜி மட்டுமல்ல,குருதேவரின் சீடர்கள் ஒவ்வொருவரும் அன்னையைத் தங்கள் தாயாகவும்  குருவாகவும்  தேவியாகவுமே கண்டனர். அவர்களுக்குப் பின் மடத்தில் சேர்ந்த அடுத்த தலைமுறையினருக்கு குருதேவரை நேரில் காணும் வாய்ப்பில்லை. எனவே அவர்கள் அன்னையையே தங்கள் புகலிடமாகக் கொண்டனர். துறவு வாழ்க்கையில் போதனைகளாலும் பயிற்சிகளாலும் மட்டும் வெற்றி பெறுவது கடினம். துறவி தன் வாழ்க்கையை அமைத்துக் கொள்வதற்கு ஓர் லட்சிய-வாழ்க்கை வேண்டும். அவன் தளர்வுறும் நேரங்களில் அவனுக்குப் புத்துணர்வை அளிப்பதற்கு ஆற்றல் மிக்க ஒரு குரு வேண்டும். குருதேவர் மறைந்துவிட்ட இந்த வேளையில் அந்த இடத்தைப் பூர்த்தி செய்தார் அன்னை.உபதேசங்களையும் வழிகாட்டுதலையும் விட இது மிக முக்கியமானது. தளர்வுற்ற நேரங்களில் எல்லாம் அவர்கள் அன்னையை நோக்கினர்.அவரது புனித வாழ்வு அவர்களிடம் ஆற்றலை  நிரப்பியது. எனவே புத்துணர்வுடன் தீவிரமான சாதனை வாழ்வில் ஈடுபட்டனர். கல்கத்தா செல்லும்போது முடிந்த நேரங்களில் எல்லாம் பேலூர் மடத்திற்குச் செல்வார் அன்னை. குறிப்பாக துர்க்கா பூஜை போன்ற விசேஷ நாட்களில் பல முறை சென்றுள்ளார். அன்னையின் வருகை துறவியருக்கு சாதனை வாழ்வில் ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் பண்மடங்காக்கியது.
ஆனால் துறவியரிடம் துறவுணர்வைக் கொழுந்து விட்டெரியச் செய்த அன்னை, குடும்பத்தில் தான் வாழ்ந்தார்.  குடும்பத்தில் வாழ்ந்து கொண்டே இல்லறத்தாருக்கும் துறவியருக்கும் ஆன்மீகப் பாதையைத் திறந்து வைத்தார். ஆன்மீக அனுபவங்களை அள்ளி வழங்கினார். இது வரலாறு காணாத அதிசயம்.
குருதேவி என்ற நிலையில் அன்னை சில  தீர்த்த தலங்களுக்குச் சென்றதை ஏற்கனவே கண்டோம். இப்போது அவர் தென்னகத்திற்கு வந்தது பற்றிப் பார்ப்போம்.
24-தென்னாட்டில்
அன்னை 1886-ஆம் ஆண்டு பிருந்தாவனத்திற்குச் சென்றதையும் 1888-இல் கயை புத்தகயை முதலான இடங்களை தரிசித்ததையும் ஏற்கனவே கண்டோம். 1893-டிசம்பரில் பலராம் போஸின் மகள் இறந்தாள். அதனை  அவரது மனைவியால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. மனமாற்றத்திற்காக அவளை பீகாரிலுள்ள கைல்வாருக்கு அனுப்ப எண்ணினார் அவர். அவளோ அன்னை உடன் செல்வதானால் மட்டுமே போக ஒப்புக் கொண்டாள்.எனவே அன்னையும் உடன் சென்றார். அவருடன் கோலாப்மா,சரத், யோகின்,சாரதா பிரசன்னர் மற்றும் பலரும் சென்றனர். கைல்வாரில் அன்னை இயற்கையழகில் ஆழ்ந்து ஈடுபட்டார். மான்கள் நிறைந்த காட்டுப்பகுதி அது. சிறிய சத்தம் கேட்டால் கூட அம்புபோல் பாய்ந்தோடும் மான்களின் கூட்டம் அவருக்கு அலாதியான இன்பத்தைக் கொடுத்தது.  பேரீச்சை மரங்களின் ரசம் வடிக்கப் பானைகள் கட்டியிருப்பார்கள். நரிகள் வந்து ரசத்தைக்குடித்துச் சென்றுவிடும். அவற்றை விரட்ட அந்தப்பகுதி மக்கள் வினோதமான யுக்தியைக் கையாண்டனர். பானை முதலான மண்பாண்டங்களைத் தலையில் கவிழ்த்துக் கொண்டு அருகிலுள்ள குழிகளில் மறைந்து கொள்வார்கள். நரிகள் வந்ததும் ஒரு விதமான ஒலியெழுப்பிக் கொண்டு அவற்றை விரட்டுவர். இதனைக் கண்டு சிறுமி போல் களித்தார் அன்னை. ஓரிரு மாதங்கள் அங்கே தங்கி விட்டு அனைவரும் 1894 ஆரம்பத்தில் திரும்பினர்.

No comments:

Post a Comment