Saturday, 22 June 2019

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு-பாகம்-106

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு-பாகம்-106

ராமேசுவரத்திலிருந்து நேராக சென்னை வந்து குருதேவரின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டார். 1911 மார்ச் மாத இறுதியில் சுவாமி ராமகிருஷ்ணானந்தர்  உடன் வர பெங்களூர் சென்றார். அங்கு ஏற்கனவே ராமகிருஷ்ணமடம் ஒன்று செயல்பட்டுக்  கொண்டிருந்தது. அப்போது அதன் தலைவராக இருந்த சுவாமி நிர்மலானந்தர்  அன்னையை வரவேற்றார்.அன்னை மடத்திலேயே தங்கினார். அவருடன் வந்தவர்கள்  ஆசிரமத்தில் அமைக்கப்பட்ட கூடாரத்தில்  தங்கினர். பொது மக்களுக்கு முன் கூட்டித் தெரிவிக்கப்படாமல் இருந்தும்,  அன்னையை தரிசிக்க  ஏராளமானோர் மடத்திற்கு வந்தனர். பிற்காலத்தில்  ஆ! பெங்களூரில் தான் என்ன கூட்டம்! நான் ரயிலில் இருந்து இறங்கிய உடனே என் மீது பூக்களை மழையாகப் பொழிந்தார்கள். நான் நடந்து சென்ற பாதை முழுவதும் பூக்கள்.குருதேவரின் உபதேசங்கள் எல்லா இடங்களிலும் பரவியிருக்கிறது. அதனால் தான் அங்கே அவ்வளவு கூட்டம் வந்ததுஎன்று நினைவு கூர்ந்தார் அன்னை. அங்கே அவர் ஒரு வாரம் தங்கினார்.
ஒரு நாள் பிற்பகலில் அன்னை ஆசிரமத்திற்கு அருகில்  காவிபுரத்தில்  இருந்த குகைக் கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்து திரும்பினார். அப்போது ஆசிரம வாசல் முழுவதும் மக்கள் திரண்டிருந்தனர். அவர் வண்டியை விட்டு இறங்கியதும்,அத்தனைபேரும் தங்களை மறந்து நெடுஞ்சாண்கிடையாகத் தரையில் வீழ்ந்து அவரை வணங்கினர். அன்னையின் மனம் உருகியது. கண்களில்  நீர் அரும்பியது. தம்மை மறந்தவராக நெடுநேரம் அங்கேயே நின்று கைகளை உயர்த்தி, உள்ளம் நெகிழ அவர்களை ஆசீர்வதித்தார்.பக்தர்களின் உள்ளம் பேரானந்தத்தில் மூழ்கியது.
அன்னையை தரிசிக்க காலையும், மாலையும் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்தனர். அன்னையின் முன் அமைதி யோடும் ஆனந்தத்தோடும்  அமர்ந்திருந்தனர். மொழி தெரியாத காரணத்தால் அவர்களுக்கு ஆறுதலாகச் சில வார்த்தைகள் பேசவும் தம்மால் முடியாததற்கு அன்னை மிகவும் வருந்தினார். இதைக்கண்ட பக்தர்கள்,அம்மா நீங்கள் பேசவே வேண்டாம்,பேச்சு எதற்கு தாயே? உங்களைப் பார்த்துக்  கொண்டிருப்பதிலேயே எங்கள் இதயங்களில் அளவில்லாத ஆனந்தம் பொங்கிப் பெருகுகிறது என்று கூறினர்.
ஒரு நாள்  மாலை வேளை மடத்தின் பின்புறத்தில்  இருக்கும் ஒரு சிறு பாறையின் மீது அன்னை அமர்ந்து கதிரவன் மறையும் அழகை அனுபவித்துக்கொண்டிருந்தார். சில துறவிச் சீடர்களும் அங்கிருந்தனர். அன்று இயற்கையின் எழில் விவரிக்கவொண்ணா மாட்சியுடன் மிளிர்ந்தது. நீல வானத்தில் வெண்மேகங்கள்  மிதந்து சென்றன. அவற்றின் மீது மாலைச் சூரியன் தன் வர்ண ஜாலங்களை வீசி ஆகாயத்தை ஒப்பில்லா அழகுக் களஞ்சியமாக ஆக்கியிருந்தான். பிரகிருதியின் இந்த அழகைப் பார்த்ததும்,பிரகிருதியின் மூலப்பொருளான பரமாத்மாவின் சொல்லொணா அழகும் பெருமையும்  நினைவுக்கு வந்ததோ என்னவோ, அன்னை ஆழ்ந்த தியானத்தில் முழ்கிவிட்டார். இதனைக் கேள்வியுற்றராமகிருஷ்ணானந்தர்,அன்னை மலைமகள் ஆகிவிட்டார் என்று கூறி விட்டு அன்னை இருந்த பாறையின்  உச்சிக்கு விரைந்து ஏறினார். பருத்த தேகம்  உடையவராதலால் அந்தச் சிறு பாறையில் கூட சிரமத்தின் பேரிலேயே ஏறிச் செல்ல முடிந்தது. ஏறியவர் நேராக அன்னையின் திருமுன்னர் சென்று நமஸ்காரம் செய்து, அவரது திருப்பாதங்களில் தலைவைத்து,தேவீ மாகாத்மியத்திலுள்ள சுலோகங்களைச் சொல்லி,கருணை புரி தாயே! கருணை புரி அம்மா! என்று பிராத்தித்தார். கெஞ்சிக் கேட்கும் மகனைச் சாந்தப்படுத்தும் தாய் போன்று அன்னை அவரது தலையை அன்பாக த் தடவிக் கொடுத்தார். அன்னையின் பூரண ஆசி பெற்றுப் பூரித்தார் சுவாமிகள்.
பெங்களூரிலிருந்து சென்னை வந்து ஓரிரு நாட்கள் தங்கியபின்  கல்கத்தா புறப்பட்டார் அன்னை. வழியில் ஆந்திர மாநிலத்தில் உள்ள ராஜமந்திரியில் தங்கி, கோதாவரியில் புண்ணிய நீராடி,பின்னர் புரி சென்று இரண்டு நாட்கள் அங்கே தங்கி ஜகன்னாதரை தரிசித்துவிட்டு ,1911 ஏப்ரல் 11-ஆம் நாள் கல்கத்தாவை அடைந்தார்.அங்கிருந்து பேலூர் மடத்திற்குச் சென்றார்.
இந்தியாவின் தென்கோடியான ராமேசுவரம் சென்று திரும்பும் தங்கள்  அன்னைக்கு பேலூர் மடத்தில் துறவிகளும் பிரம்மசாரிகளும் பக்தர்களும் காண்பவர் மனமெல்லாம் சிலிர்க்கும் படியான வரவேற்பை அளித்தனர். அன்னை வெள்ளை வெளேரென்ற ஆடையால் உடம்பு முழுவதையும்  போர்த்தியபடி நிதானமாக அடிமேல் அடி வைத்து உயிர் பெற்ற தெய்வத்திருவுரு போல் மடத்தின் வாசலிலிருந்து குருதேவரின் கோயிலுக்கு நடந்து வந்தார். சிஷ்யைகளும் பக்தைகளும் அவரைச் சூழ்ந்து வந்தனர். இரண்டு புறத்திலும் நீண்டபாதையில் பக்தர்கள்  வழி நெடுகிலும் நின்றபடி இனிமையான குரலில் தேவீ மாகாத்மியத்தைப் பாராயணம்  செய்தபடி வந்தனர். பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. இனிமையான பாடல்களைப் பாடியவாறே சிலர் அன்னையைப் பின் தொடர்ந்து வந்து கொண்டிருந்தனர்
கோயிலின் அருகே அன்னை வந்ததும் அன்னையைக்கண்ட அளவற்ற ஆனந்தத்தால் சுவாமி பிரம்மானந்தர் புறவுலக நினைவை இழந்து சமாதியில் மூழ்கினார். நெடுநேரம் கழிந்த பிறகு அன்னை கூறிய சில மந்திரங்கள் அவர் காதில் ஓதப்பட்ட பின்பே அவருக்கு உலக நினைவு திரும்பியது.
இதற்குப்பிறகு அன்னை ஒரே ஒரு பயணம் தான் மேற்கொண்டார்,அது 1912-ஆம் ஆண்டு அவர் காசிக்குச் சென்றது. அவருடன் சுவாமி பிரம்மானந்தர் முதலிய சில துறவிகளும்,அன்னையின் உறவினர்களும் பக்தர்களுமாகப் பெரிய கூட்டமே சென்றது. காசியில் ஸ்ரீராமகிருஷ்ண அத்வைத ஆசிரமத்திற்கு அருகில் அப்போது தான் கட்டப்பட்ட ”லட்சுமி நிவாஸ்” என்னும் வீட்டில் அன்னை தங்கினார். இந்த முறை காசியில் அன்னை இரண்டரை மாதங்கள் தங்கினார். எனவே நிதானமாக காசியில் இருந்த  முக்கியமான இடங்களுக்கும் கோயில்களுக்கும் சென்று வந்தார். காசிக்கு வந்த மூன்றாம் நாள் விசுவநாதரையும் அன்னபூரணி தேவியையும் தரிசித்தார்.
பின்னர் ராமகிருஷ்ண சங்கத்தின் ஆரம்பகால அமைப்பும், சிறந்த மருத்துவ சேவை செய்து வருவதுமான ராமகிருஷ்ண மிஷன் சேவாசிரமத்திற்குச் சென்றார். அந்த ஆசிரமத்தில் அமைந்திருந்த பல்வேறு மருத்துவப் பகுதிகளையும்,ஆசிரமம் சிறந்த முறையில் ஏழைகளுக்கு நோய் தீர்க்கும் காட்சியையும் நேரில் கண்டு மகிழ்ந்தார். ஆசிரமச் செலவுகளுக்குப் பணம் எப்படிக் கிடைக்கிறது,யார் அதைத் தொடங்கினார்கள் என்பதையெல்லாம் ஆவலோடு கேட்டறிந்தார். புறப்படும் போது,அதை நடத்தும் தம் துறவிப்பிள்ளைகளிடம் இந்த இடத்தில்  குருதேவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவரோடு செல்வத்தின் அதிபதியாகிய லட்சுமியும் எல்லா பெருமையோடும் வாழ்கிறாள். இந்த இடம் மிக அருமையாக இருக்கிறது. இங்கேயே தங்கிவிட வேண்டும் போல் தோன்றுகிறது என்று கூறினார். தாம் இருக்கும் வீட்டிற்கு ச்சென்றதும், பத்துரூபாய்  நோட்டு ஒன்றைத் தம்முடைய அன்பளிப்பாக ஆசிரமத்திற்கு அனுப்பி வைத்தார்.

No comments:

Post a Comment