Saturday 31 December 2016

இந்து மதமும் அதன் சகல அம்சங்களும்-பாகம்-37


இந்து மதமும் அதன் சகல அம்சங்களும்-பாகம்-37
(சுவாமி விவேகானந்தர்)
-
ஒவ்வோர் ஆன்மாவும் முக்தியடைந்தே தீரும் என்பது துவைதிகளின் மற்றொரு வினோதமான கோட்பாடு. யாரும் இதற்கு விலக்கல்ல. 
-
சாதகமற்ற சூழ்நிலைகள் வழியாக, பல்வேறு இன்பதுன்பங்கள் வழியாகச் சென்று, கடைசியில் ஒவ்வொருவரும் வெளிவரத்தான் வேண்டும். எதிலிருந்து வெளிவர வேண்டும்? பிரபஞ்சத்தை விட்டு எல்லா ஆன்மாக்களும் வெளியேற வேண்டும் என்பது இந்து மதத்திலுள்ள எல்லா பிரிவுகளுக்கும் பொதுவான ஒரு கருத்து.
-
நாம் பார்க்கின்ற உணர்கின்ற இந்தப் பிரபஞ்சமோ, அல்லது கற்பனை செய்துகொள்ளும் ஒரு பிரபஞ்சமோ, உண்மையான சரியான பிரபஞ்சமாக இருக்க முடியாது. ஏனென்றால் இரண்டிலுமே நன்மையும் தீமையும் கலந்துதான் இருக்கின்றன.
 -
துவைதிகளின் கருத்துப்படி, இந்தப் பிரபஞ்சத்திற்கு அப்பால், நன்மையும் இன்பமும் மட்டுமே நிறைந்த ஓர் உலகம் இருக்கிறது. அந்த உலகை அடைந்துவிட்டால் பிறவி, மறுபிறவி, வாழ்வு, சாவு எதற்குமே அவசியமில்லை. இந்தக் கருத்து அவர்கள் மிகவும் விரும்புகின்ற ஒன்றாகும். அங்கே வியாதிகளோ மரணமோ இல்லை. அங்கே நிரந்தரமான இன்பம் இருக்கும். அந்த உலகை அடைபவர்கள் எப்போதும் கடவுளின் திருமுன்னர் இருந்துகொண்டு, அவரைக் கண்ணும் மனமும் குளிர தரித்துக் கொண்டிருப்பார்கள்.
-
சாதாரணமான புழுவிலிருந்து உயர்ந்த நிலையிலிருக்கும் தேவர்கள்வரை எல்லோருமே ஒருநாள் துன்ப மற்ற அந்த உலகை அடைந்தே தீர வேண்டும்.
-
ஆனால் தற்போதுள்ள இந்த உலகம் முடிந்து விடாது! எல்லையற்ற காலம்வரை இருந்துகொண்டேதான் இருக்கும். அதன் இயக்கம் அலை போன்றதாக, எழுவதும் வீழ்வதுமாக இருக்கும்.
-
அத்தகைய சுழற்சியான இயக்கமாக இருந்தாலும் அது முடிவதில்லை. காக்கப்பட வேண்டிய, முக்தி பெற வேண்டிய ஆன்மாக்களின் எண்ணிக்கைக்குக் கணக்கே இல்லை.
-
சிலஆன்மாக்கள் செடிகொடிகளிலும், சில, தாழ்ந்த மிருகங்களிலும், சில, மனிதர்களிலும், சில, தேவர்களிலும் இருக்கின்றன. ஆனால் உயர்ந்த தேவர்கள் உட்பட அனைவருமே நிறை நிலையை அடையாதவர்கள், பந்தத்தில் கட்டுண்டவர்கள்.
-
அந்தப் பந்தம் எது? பிறப்பதும், இறந்தேயாக வேண்டும் என்ற அவசியமும்தான். அது.
-
மிக உயர்ந்த தேவர்களுக்குக் கூட மரணம் உண்டு.
-
இந்தத் தேவர்கள் என்பது என்ன?
-
தொடரும்...

இந்து மதமும் அதன் சகல அம்சங்களும்-பாகம்-36


இந்து மதமும் அதன் சகல அம்சங்களும்-பாகம்-36
(சுவாமி விவேகானந்தர்)
-
ஒரே மனதாகக் குற்றத்தை மனிதனின் மீதே சுமத்தினார்கள் அது அவர்களுக்குச் சுலபமாகவும் இருந்தது.
-
ஏன்? ஏனென்றால் நான் சற்றுமுன் சொன்னது போல், சூன்யத்திலிருந்து ஆன்மாக்கள் படைக்கப்பட்டதாக இந்துக்கள் நம்பவில்லை.
-
நம்முடைய எதிர் காலத்தை நாமே உருவாக்கிக் கொள்ள முடியும் என்பதை இந்த வாழ்க்கையில் பார்க்கிறோம். நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும், மறு நாளுக்கான ஏற்பாடுகளைச் செய்யவே முயன்று கொண்டிருக்கிறோம்.
-
இன்று, நாளைய விதியை நிர்ணயிக்கிறோம். நாளை, நாளைக்கு அடுத்த நாளின் விதியை நிர்ணயிப்போம். இவ்வாறே தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.
-
இந்த வாதத்தை இறந்த காலத்திற்குப் பொருத்திப் பார்ப்பது, நியாயமானதே.
-
நாம் நமது செயல்களாலேயே நம் எதிர்காலத்தை நிர்ணயித்துக் கொள்கிறோம் என்றால், அதே விதியை இறந்தகாலத்திற்கும் ஏன் பொருத்திப் பார்க்கக்கூடாது?
(இப்போது கடினமாக உழைத்தால் எதிர்காலத்தில் நன்றாக இருக்கலாம் என்பது போல, இப்போது நாம் மோசமாக இருப்பதற்கு காரணம் என்ன?, இதற்கு முன் கடினமாக உழைக்கவில்லை என்பது புரிகிறது. அது முற்பிறவியாக கூட இருக்கலாம்)
நாம் இப்போது காண்பதுபோல் எல்லாவற்றிற்கும் ஒரு காரணம் இருக்க வேண்டும் என்பது உண்மையானால், இப்போது இருக்கும் நாம், நம்முடைய இறந்தகாலச் செயல்கள் முழுவதன் பலனே என்பதும் உண்மையாகத்தான் இருக்க வேண்டும்.
-
ஆகவே மனிதகுலத்தின் விதியை நிர்ணயிப்பதற்கு, மனிதனைத் தவிர வேறு யாருமே தேவையில்லை.
-
உலகிலுள்ள தீமைகள் எல்லாவற்றிற்கும் நாம்தான் காரணம். தீய செயல்களின் பலனாகத் துன்பங்கள் வருவது நமக்குத் தெரிகிறது. எனவே இப்போது உலகில் காணப்படும் துன்பங்களுக்கு, மனிதன் முன்பு செய்த தீய செயல்கள்தாம் காரணமாக இருக்க வேண்டும். இந்தக் கருத்தின்படி, மனிதனே எல்லா துன்பங்களுக்கும் காரணம்,
-
கடவுள்மீது பழி சுமத்தக் கூடாது.
-
. எதை நாம் விதைக்கிறோமோ அதையே அறுப்போம்.
-
--
தொடரும்...

இந்து மதமும் அதன் சகல அம்சங்களும்-பாகம்-35


இந்து மதமும் அதன் சகல அம்சங்களும்-பாகம்-35
(சுவாமி விவேகானந்தர்)
-
ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகளிலுள்ள எல்லா மதங்களுமே துவைத மதங்கள் தாம். அப்படித்தான் இருக்கவும் முடியும். நுட்பமானவற்றைச் சாதாரண மனிதனால் சிந்திக்க முடியாது. தன் அறிவுக்கு எட்டியவற்றைப் பிடித்துக் கொள்ளத்தான் அவன் விரும்புகிறான்.
-
அதாவது உயர்ந்த ஆன்மீக லட்சியங்களையும் தன்னுடைய நிலைக்குக் கொண்டு வருவதன் மூலம்தான் அவனால் புரிந்துகொள்ள முடியும். உலகம் முழுவதுமுள்ள சாதாரண மக்களின் மதம் இது தான்.
-
தங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்ட, தங்களை அடக்கியாளும் வல்லமை படைத்த சக்கரவர்த்தி போன்ற ஒரு கடவுளே அவர்களுக்கு வேண்டும்.
-
அவரைப் பூமியிலுள்ள சக்கரவர்த்திகளை எல்லாம்விடத் தூயவர் ஆக்குகிறார்கள். எல்லா நற்பண்புகளையும் உடையவராக அவரைக் காண்கிறார்கள், தீய பண்புகளை அவரிடமிருந்து விலக்குகிறார்கள்.
-
ஆனால் நன்மையும் தீமையும் தனித்தனியாக இருப்பது சாத்தியமல்ல என்பதை அவர்கள் மறந்துவிடுகிறார்கள்.
-
(நன்மை இருக்கும் இடத்தில் தீமையும் இருக்கும். நல்லகடவுள் என்று ஒருவர் இருக்க முடியாது.அவரிடம் நன்மை தீமை இரண்டும் இருக்கும். உலகில் நடக்கும் நன்மைக்கு அவர் காரணமானால், தீமைக்கும் அவர்தான் காரணமாக இருக்க முடியும்)
-
துவைதக் கருத்துக்கள் எல்லாவற்றிலுமே ஒரு பெரிய குறை இருக்கிறது. நற்குணக் களஞ்சியமாகவும், நீதியும் கருணையும் நிறைந்திருப்பவராகவும் இருக்கும் கடவுளின் ஆட்சிக்கு உட்பட்ட இந்த உலகில், இவ்வளவு தீமைகள் இருப்பது ஏன்?
-
எல்லா துவைத நெறிகளிலும் இந்தக் கேள்வி எழுந்தது. ஆனால் இந்தக் கேள்விக்குப் பதில் சொல்வதற்காக இந்துக்கள் எந்தச் சாத்தானையும் உருவாக்கவில்லை.
-
(தீமை செய்வது சாத்தானின் வேலை என்றால், அந்த சாத்தானை வெல்ல முடியாத,சாத்தானை கட்டுப்படுத்த முடியாதவரா இறைவன்? என்ற கேள்வி எழுகிறது).
ஆனால் வேதாந்திகள் இதை வேறு மாதிரி சிந்தித்தார்கள்.
--
தொடரும்...
-
-- விவேகானந்தர் விஜயம் --

இந்து மதமும் அதன் சகல அம்சங்களும்-பாகம்-34



இந்து மதமும் அதன் சகல அம்சங்களும்-பாகம்-34
(சுவாமி விவேகானந்தர்)
-
வேதாந்தம் மூன்று படிகளை உடையது 
-
1.துவைதம்,2.விசிஷ்டாத்வைதம்,3.அத்வைதம்
துவைதம் எனப்படுகின்ற வேதாந்தப் பிரிவைப் பற்றித் தான் நான் முதலில் உங்களிடம் பேசப் போகிறேன்.
-
பிரபஞ்சத்தைப் படைத்து அதை ஆள்பவரான கடவுள், இயற்கையிலிருந்தும் மனித ஆன்மாவிலிருந்தும் என்றென்றைக்குமாக வேறுபட்டவர் என்று துவைதிகள் நம்புகிறார்கள்.
-
கடவுள் என்றென்றும் இருப்பவர், இயற்கையும் என்றென்றும் இருப்பது, ஆன்மாக்களும் அப்படியே.
-
இயற்கையும் ஆன்மாக்களும் தங்களை வெளிப்படுத்துகின்றன. மாற்றமடைகின்றன. ஆனால் கடவுள் மாறுவதில்லை; எப்போதும் ஒருபோலவே இருக்கிறார்.
-
கடவுள் சகுணமானவர்(சகலகுணங்களும் உள்ளவர்); ஆனால் உடல் உள்ளவர் என்பதல்ல.(மனிதனைப்போல உடல் உள்ளவரல்ல)
-
அவருக்கு மனிதக் குணங்களெல்லாம் உள்ளன. அவர் கருணைமயமானவர், நியாயமானவர், சக்தி வாய்ந்தவர், சர்வ வல்லமை படைத்தவர், அவரை நாம் அணுக முடியும், பிரார்த்தனை செய்ய முடியும், அவரிடம் அன்பு செலுத்த முடியும், பிரதியாக அவரும் நம்மீது அன்பு செலுத்துகிறார் என்பனவெல்லாம் துவைதிகளின் கடவுள் பற்றிய கருத்துக்களாகும்.
-
ஒரே வார்த்தையில் சொல்லப்போனால், அவர் மனிதக் கடவுள். ஆனால் மனிதனைவிடப் பன்மடங்கு உயர்ந்தவர்.
-
மனிதர்களிடமுள்ள தீய குணங்கள் எதுவும் அவரிடமில்லை. எல்லையற்ற நற்குணக் களஞ்சியமே கடவுள் என்பதுதான் கடவுளைப்பற்றி துவைதிகளின் விளக்கம்.
-
(ஒரு பொருளை உருவாக்க மூலப்பொருள் ஏதாவது வேண்டும். அதேபோல் பிரபஞ்சத்தை படைக்க மூலப்பொருள் தேவை. ஒன்றும் இல்லாத சூன்யத்திலிருந்து எதையும் உருவாக்க முடியாது.இது தற்கால விஞ்ஞானம்)
-
மூலப் பொருட்கள் இல்லாமல் அவரால் படைக்க முடியாது. அந்த மூலப்பொருள் இயற்கை. அதைக்கொண்டே அவர் பிரபஞ்சம் முழுவதையும் படைக்கிறார்.
-
வேதாந்தத் துவைதிகளின் கருத்துப் படி, வேறுபாடில்லாமல், எங்கும் ஒரே போல் இருக்கும் இயற்கையிலிருந்துதான் கடவுள் பிரபஞ்சத்தைப் படைத்தார்.
-
இந்தியர்களில் பெரும்பான்மையோர் துவைதிகளே. சாதாரணமாக மனித இயல்பு உயர்ந்த எதையும் புரிந்து கொள்ளாது. மத நம்பிக்கை உள்ள உலக மக்களுள் நூற்றுக்குத் தொண்ணூறுபேர் துவைதிகளாக இருப்பதையே காண்கிறோம்.
-
தொடரும்...
-
-- விவேகானந்தர் விஜயம் --

இந்து மதமும் அதன் சகல அம்சங்களும்-பாகம்-33


இந்து மதமும் அதன் சகல அம்சங்களும்-பாகம்-33
(சுவாமி விவேகானந்தர்)
-
வேதாந்தத்தில் நாம் மூன்று முக்கியமான வேறுபட்ட கோட்பாடுகளைக் காண்கிறோம். 
-
ஒரு விஷயத்தை அவர்கள் எல்லோருமே கடவுளை நம்புகிறார்கள். மேலும், வேதங்கள் இறைவனால் வெளியிடப்பட்டவை என்றும் நம்புகிறார்கள். ஆனால் இது கிறிஸ்தவர்களோ முஸ்லீம்களோ தங்கள் நூல்களைப் பற்றி நம்புவதுபோல் அல்லாமல், சற்று மாறுபட்ட, தனிப்பட்ட கருத்தாக இருக்கிறது.
-
வேதங்கள் கடவுளைப் பற்றிய அறிவை வெளிப்படுத்துபவை. கடவுள் நிரந்தரமானவர், ஆதலால் அவரைப் பற்றிய அறிவும் அவரிடம் நிரந்தரமாக உள்ளது. எனவே வேதங்களும் நிரந்தரமானவை என்பது வேதாந்திகளின் கருத்து.
-
வேதாந்திகளிடம் மற்றொரு பொதுவான நம்பிக்கை இருக்கிறது. படைப்பு சுழற்சியாக நடைபெறுகிறது என்பதே அது.
-
படைப்பு முழுவதுமே தோன்றி மறைகிறது. அது தன்னை வெளிப்படுத்திக் கொண்டு, சிறிதுசிறிதாகத் தூலத் தன்மை பெற்று(கண்களால் காணும் நிலை), கணக்கிட முடியாத காலத்திற்குப் பிறகு, சிறிதுசிறிதாக நுட்பத்தன்மை அடைந்து(கண்களால் காண முடியாத நிலை), கடைசியில் மறைந்து ஒடுங்கிவிடுகிறது.
-
அந்த ஒடுங்கிய நிலையிலேயே சிலகாலம் இருக்கிறது. பின்னர் மறுபடியும் இதே சுழற்சி நடைபெறுகிறது.
-
ஆகாசம், பிராணன் என்ற இரண்டு தத்துவங்களை அவர்கள் கற்பித்துக் கொள்கிறார்கள்.
-
இதில் ஆகாசம் என்பது ஏறுக்குறைய விஞ்ஞானிகள் கூறும் ஈதர் போன்றது.. பிராணன் என்பது ஒரு சக்தி. இந்தப் பிராணனின் அதிர்வினால்தான் பிரபஞ்சம் தோன்றுகிறது என்று அவர்கள் சொல்கிறார்கள்.
-
ஒரு சுழற்சி முடிந்தவுடனேயே, இயற்கையின் எல்லா வெளிப்பாடுகளும் சிறிதுசிறிதாக நுட்பத்தன்மை அடைந்து ஆகாசத்தில் கரைந்துவிடுகின்றன. ஆகாசத்தைப் பார்க்கவோ உணரவோ முடியாது. ஆனால் இந்த ஆகாசத்திலிருந்துதான் எல்லாமே தோன்றுகின்றன.
-
இயற்கையின் பலவித சக்திகளான ஈர்ப்புசக்தி, விலக்கும் சக்தி, சிந்தனை, உணர்ச்சிகள், நரம்புகளின் இயக்கம் எல்லாமே பிராணனில் ஒடுங்குகின்றன.
-
அப்போது பிராணனின் அதிர்வும் நின்றுவிடுகிறது. அடுத்த சுழற்சி ஆரம்பிக்கும் வரையில் பிராணன் அதே நிலையில் இருக்கிறது.
-
மறுபடியும் பிராணன் அதிரத் தொடங்குகிறது. அந்த அதிர்வு ஆகாசத்தின்மீது செயல்படுகிறது. பிரபஞ்சத்திலுள்ள உருவங்கள் அனைத்தும் ஒழுங்குமுறையுடன் அதிலிருந்து வெளிவருகின்றன.
-
தொடரும்...
-
-- விவேகானந்தர் விஜயம் --

இந்து மதமும் அதன் சகல அம்சங்களும்-பாகம்-32


இந்து மதமும் அதன் சகல அம்சங்களும்-பாகம்-32
(சுவாமி விவேகானந்தர்)
-
மிகப் பழங்காலத்திலிருந்தே இந்தியச் சிந்தனையில் பல பிரிவுகள் இருந்திருக்கின்றன. இன்ன பிரிவினர் இன்ன கோட்பாட்டை நம்ப வேண்டும் என்றெல்லாம் வகுத்துத் தருவதற்கான அத்தாட்சி பெற்ற எந்தச் சங்கமோ அமைப்போ இல்லாததால், மக்கள் தங்களுக்குப் பிடித்த மதப் பிரிவைத் தேர்ந்தெடுத்துக் கொள்வதற்கும், தங்களுக்கென்று சொந்தமாக ஒரு தத்துவத்தையும் மதப்பிரிவையும் ஏற்படுத்திக் கொள்வதற்கும் சுதந்திரம் இருந்தது. 
-
எனவே மிகப் பழங்காலத்திலிருந்தே இந்தியா மதப் பிரிவுகளால் நிறைந்திருப்பதைக் காண்கிறோம். இப்போதுகூட எத்தனை நூறு மதப் பிரிவுகள் இந்தியாவில் இருக்கின்றன என்பதோ, ஆண்டுதோறும் எத்தனை புதிய பிரிவுகள் தோன்றிக் கொண்டிருக்கின்றன என்பதோ எனக்குத் தெரியாது. இந்தியாவின் மதப் பேரூற்று வற்றாமல் இருப்பதாகவே தோன்றுகிறது.
-
இந்தப் பல பிரிவுகளையும் இரண்டு தலைப்புகளின் கீழே கொண்டு வந்துவிடலாம். ஒன்று வைதீகம், மற்றொன்று அவைதீகம், அதாவது வைதீகம் அல்லாதது.
-
இந்துமத சாஸ்திரங்களான வேதங்கள் நிலையான அருள் வெளிப்பாடுகள் என்று நம்பும் பிரிவுகள் வைதீகமானவை. வேதங்களை மறுத்து, வேறு பிரமாணங்களைக் கொள்கின்ற பிரிவுகள் அவைதீகமானவை.
-
தற்கால அவைதீகப் பிரிவுகளில் முக்கியமானவை சமண மதமும் புத்த மதமுமே.
-
வைதீகப் பிரிவினருள் சிலர், பகுத்தறிவைவிட வேதங்களே உயர்ந்த பிரமாணங்கள் என்கிறார்கள். வேறு சிலர், சாஸ்திரங்களில் அறிவுபூர்வமானவற்றை மட்டும் ஏற்றுக்கொண்டு மற்றவற்றை விட்டுவிட வேண்டும் என்கிறார்கள்.
-
வைதீகப் பிரிவுகளுள் சாங்கியம், நையாயிகம், மீமாம்சகம் அல்லது வேதாந்தம் என்பவை முக்கியமான மூன்று ஆகும். இவற்றுள் முதலிரண்டும் தத்துவங்களுடன் நின்று விட்டனவே தவிர எந்த நெறிகளையும் அவை படைக்கவில்லை.
-
மீமாம்சகர் அல்லது வேதாந்திகளே இப்போது உண்மையில் இந்தியா முழுவதும் பரவியிருக்கின்ற ஒரே பிரிவினர். அவர்களுடைய தத்துவமே வேதாந்தம்.
-
இந்து மதத்திலுள்ள எல்லாத் தத்துவப் பிரிவுகளும் வேதாந்தம் அல்லது உபநிடதங்களிலிருந்தே தொடங்குகின்றன.
-
ஆனால் அத்வைதிகள் தங்களுக்கு, அந்தப் பெயரை ஒரு சிறப்புப் பெயராக வைத்துக் கொண்டார்கள். அவர்கள் தங்கள் கோட்பாடுகளையும் தத்துவங்களையும் வேதாந்தத்தைத் தவிர வேறு எந்த அடிப்படையிலும் அமைக்க விரும்பவில்லை. காலப்போக்கில் வேதாந்தம் மட்டும் வேரூன்றிவிட்டது.
-
இப்போது உள்ள இந்து மதப் பிரிவுகள் எல்லாமே வேதாந்தத்தின் ஏதாவது ஒரு நெறியுடன் தொடர்பு உடையனவாகவே இருக்கின்றன. இருந்தாலும் இந்தப் பிரிவுகளின் கருத்துக்களெல்லாம் ஒருமித்ததாக இல்லை.
-
தொடரும்...
-
-- விவேகானந்தர் விஜயம் --

இந்து மதமும் அதன் சகல அம்சங்களும்-பாகம்-31


இந்து மதமும் அதன் சகல அம்சங்களும்-பாகம்-31
(சுவாமி விவேகானந்தர்)
-
கொள்கைவெறி
----
வெறியர்களில் பலவகையினர் இருக்கிறார்கள்.பிறருடைய பெட்டியையோ,பணத்தையோ திருடுவது ஒரு திருடிக்கு தவறாக தோன்றாது,ஆனால் அவளுக்கு சிகரெட் பிடிக்காது.ஆகவே சிகரெட் பிடிப்பவர்களை கடுமையாக வெறுக்கிறாள்.பிறரை ஏமாற்றுவதையே தொழிலாகக்கொண்ட ஒருவன் இருக்கிறான்,ஆனால் அவனுக்கு குடிகாரர்களை கண்டால் பிடிக்காது.சாராயம் குடிப்பவன் நல்லவனே அல்ல என்று அவன் பேசுவான்.தான் செய்கின்ற ஏமாற்று வேலைகளை பற்றி அவர்கள் எண்ணுவதில்லை
--
கொள்கை வெறியர்களுக்கு நூற்றுக்கு தொண்ணுறுபேருக்கு கல்லீரல் நோயோ அல்லது ஜீரணகோளாறு நோயோ,வேறு வகை நோயோ இருக்க வேண்டும்.எந்த வகை வெறியானாலும் சரி,வெறியின் அடிப்படையில் தோன்றுகின்ற சீர்திருத்தங்களை விலக்குவதே அறிவுடைமை.இதை நான் அனுபவத்தில் கண்ட உண்மை.
--
உலகம் மெதுவாக சென்று கொண்டிருக்கிறது. அவசரப்படாதீர்கள். நன்றாக தூங்குங்கள்,நரம்புகளை நல்ல நிலையில் வைத்துக்கொள்ளுங்கள்,தகுந்த உணவை உட்கொள்ளுங்கள்,உலகிடம் அனுதாபம் கொள்ளுங்கள்.வெறியர்கள் வெறுப்பையே வளர்க்கிறார்கள்.வெறியர்களின் கூட்டத்திலிருந்து வெளியேறிய பிறகே அன்பும் பரிவும் காட்டுவது எப்படி என்பதை அறிவீர்கள்.
--
மனிதனுக்கு நம்பிக்கை மட்டும்போதாது,அது அறிவுக்கு ஏற்றதாக இருக்கவேண்டும். எல்லாவற்றையும் ஒருவன் நம்பவேண்டும் என்று சொல்வது அவனை பைத்தியமாக்கிவிடும்.
---சுவாமி விவேகானந்தர்

இந்து மதமும் அதன் சகல அம்சங்களும்-பாகம்-30

இந்து மதமும் அதன் சகல அம்சங்களும்-பாகம்-30
(சுவாமி விவேகானந்தர்)

பக்தன் பன்றி இறைச்சியை உண்டு வாழலாமா?
-----
பசு எங்கேயும் இறைச்சி சாப்பிடுவதில்லை,ஆடும் மாமிசம் சாப்பிடுவதில்லை,அதனால் அவைகள் யோகியாகிவிடுமா?அல்லது அகிம்சைவாதிகளாகிவிடுமா?
--
அதேபோல் இலை தளை காய்கறிகளை உண்டு வாழ்கின்ற மனிதன் மிருகங்களைவிட எந்த விதத்திலும் உயர்ந்தவனாகிவிட மாட்டான். மற்றவர்களை ஏமாற்றி,பணத்திற்காக எதையும் செய்ய துணிகின்ற ஒருவன் புல்லை மட்டுமே உண்டு வாழ்ந்தாலும் அவன் கொடிய மிருகத்தைவிட கேவலமானவன்.
--
மனத்தாலும் கூட யார் மற்றவர்களுக்கு தீங்கு செய்வதில்லையோ,பகைவனின் வளர்ச்சியை கண்டும் யார் மகிழ்கிறாறோ அவனே பக்தன்.அவன் அன்றாடம் பன்றி இறைச்சியை தின்று வாழ்ந்தாலும் அவனே அனைவருக்கும் குரு.
---
எனவே அகத்தூய்மை தான் முக்கியம்,உண்மையான ஆன்மீக சாரத்தை மறந்து,புறப்பழக்கங்களை கெட்டியாக பிடித்துக்கொண்டு,எந்திரகதியில்,உணர்ச்சியில் செத்து,இரக்கமற்று வாழும் மனிதனின் நிலையும்,அவன் வாழும் நாடும் அய்யோ பாவம்!. உங்கள் புறபழக்கங்களால் அகவாழ்வில் ஒரு மாற்றம் ஏற்படாவிட்டால் அவற்றை இரக்கமின்றி அழித்துவிடுங்கள்.
-
---சுவாமி விவேகானந்தர்(பக்தியோகம் வழிமுறைகள்)

இந்து மதமும் அதன் சகல அம்சங்களும்-பாகம்-29


இந்து மதமும் அதன் சகல அம்சங்களும்-பாகம்-29
(சுவாமி விவேகானந்தர்)

இந்து சமயம் - உலகம் தழுவிய சமயம்
----
உலகம் தழுவிய சமயம் என்ற ஒன்று உருவாக வேண்டுமானால் அது இடத்திலும் காலத்தாலும் எல்லைப்படுத்த படாததாக இருக்க வேண்டும். அந்த சமயம் யாரைப் பற்றிப் பிரச்சாரம் செய்கிறதோ அந்தக் கடவுளைப் போன்று எல்லையற்றதாக இருக்க வேண்டும்.
----
🌿 சூரியன் தன் ஒளிக்கிரணங்களை எல்லோர் மீதும் சமமாகப் வீசுவதுபோல் அது கிருஷ்ண பக்தர்கள், கிறிஸ்து பக்தர்கள், ஞானிகள், பாவிகள், எல்லோரையும் சமமாகப் பார்க்க வேண்டும் ,அது பிராமண சமயமாகவோ பௌத்த சமயமாகவே கிறிஸ்தவ சமயமாகவோ முகமதிய சமயமாகவோ இருக்காமல் இவற்றின் ஒட்டுமொத்தமாக இருப்பதுடன், இன்னும் வளர்ச்சியடைய எல்லையற்ற இடம் உள்ளதாக இருக்க வேண்டும்.
----
🌿 அந்த சமயத்தில் பிற சமயத்தினரைத் துன்புறுத்தலும் சகிப்புத்தன்மையற்று நடந்துகொள்ளுதலும் இருக்காது.
-
அது ஆண் பெண் எல்லாரிடமும் தெய்வத்தன்மையை ஏற்றுக்கொள்ளும். மனித இனம் தன் உண்மையான தெய்வீகத் தன்மையை உணர்வதற்கு உதவி செய்வதே அதன் நோக்கமாக இருக்கும் . அதன் முழு ஆற்றலும் அதற்கே பயன்படும்.
---
🌿 அத்தகைய சமயத்தை அளியுங்கள், எல்லா நாடுகளும் உங்களைப் பின்பற்றும் .
---
🌿 சுவாமி விவேகானந்தர்

இந்து மதமும் அதன் சகல அம்சங்களும்-பாகம்-28



இந்து மதமும் அதன் சகல அம்சங்களும்-பாகம்-28
(சுவாமி விவேகானந்தர்)
-
உலகத்தை துறந்து செல்வது எப்படி?
----
🌿 உலகத்தைத் துறப்பது என்பதை, அதனுடைய பழைய வளர்ச்சியுறாத பொருளில் புரிந்துகொண்டால், அது இப்படித்தான் இருக்கும்: வேலை செய்யக் கூடாது; சோம்பேறிகளாக இருக்க வேண்டும்; எதையும் சிந்திக்காமல், எதையும் செய்யாமல், பிடித்துவைத்த களிமண் போல் இருக்க வேண்டும்; விதியின்மீது பாரத்தைப் போட்டுவிட வேண்டும். ஒவ்வொரு சூழ்நிலையிலும் அதன் கைதியாக இருக்க வேண்டும்; இயற்கையின் விதிகளால் இடத்திற்கு இடம் பந்தாடப்பட வேண்டும். இதுதான் பொருள்.
---
🌿 உலகத்தைத் துறப்பது என்பதற்கு அது பொருளல்ல. நாம் வேலை செய்ய வேண்டும். பொய்யான ஆசைகளால் அலைக்கழிக்கப்படுகின்ற சாதாரண மனித குலத்திற்கு செயல் என்பதுபற்றி என்ன தெரியும்? உணர்ச்சிகளாலும் புலன்களாலும் ஆட்டி வைக்கப்படுகின்ற மனிதனுக்குச் செயல் என்பதுபற்றி என்ன தெரியும்? சொந்த ஆசைகளால் தூண்டப்படாதன்தான், சுயநலம் துளியும் இல்லாதவன் தான் செயல்புரிய முடியும். தனக்கென்று சுய நோக்கம் எதுவும் இல்லாதவன் தான் வேலை செய்ய முடியும். லாபம் கருதாதவன்தான் வேலை செய்ய முடியும்.
---
🌿 ஓவியத்தை ரசிப்பது யார்? விற்பவனா, பார்க்க வந்தவனா? விற்பவன், அந்தப் படத்தை விற்பதால் தனக்கு எவ்வளவு லாபம் கிடைக்கும் என்று கணக்கு வழக்குகளில் மூழ்கிக் கிடக்கிறான்; அதை ஏலத்திற்கு விடலாமா, விலை எப்படி ஏறுகிறது, எந்த இடத்தில் மூன்றாம் தரம் கூறினால் லாபம் அதிகமாகும் என்பதில் கவனமாக இருக்கிறான். அவனது மனம் முழுவதிலும் அந்த எண்ணமே நிறைந்திருக்கிறது. அந்தப் படத்தை வாங்கும் எண்ணமோ விற்கும் எண்ணமோ இல்லாமல் அங்கே போயிருக்கும் ஒருவன் தான் அந்தப் படத்தைப் பார்த்து ரசிக்க முடியும். அவனே அந்தப் படத்தை அனுபவிக்கிறான். அதைப் பார்த்து மகிழ்ச்சி அடைகிறான்.
---
🌿 இந்தப் பிரபஞ்சமே ஓர் ஓவியம். ஆசைகள் மறையும் போது மனிதன் உலகை அனுபவிக்கிறான். வாங்குவது, விற்பது, சொந்தம் கொண்டாடுவது போன்ற முட்டாள்தனமான கருத்துக்கள் எல்லாம் அப்போது மறைந்து விடுகின்றன. கடன் கொடுப்பவன், வாங்குபவன், விற்பவன் எல்லோரும் மறைந்து, உலகம் மட்டுமே ஒரு சித்திரமாக ஓர் அழகிய ஓவியமாக எஞ்சி நிற்கிறது.
---
🌿 ஆசைகளை ஒழித்தால்தான் இறைவனின் இந்த அழகிய பிரபஞ்சத்தை புரிந்துகொண்டு, அதில் நாம் ஆனந்தமாகத் திளைக்க முடியும். அப்போது எல்லாம் தெய்வீகமாகிவிடும். மூலைமுடுக்குகள் மற்றும் தீய, தூய்மையற்ற இடங்களும்கூட தெய்வீகமாகிவிடும். எல்லாமே அவற்றின் உண்மை இயல்பை வெளிப்படுத்தும். நமது அழுகையும் கதறலும் எல்லாமே குழந்தைத்தனமானவை. நாம் இவற்றிற்கெல்லாம் வெறும் சாட்சியாக மட்டுமே இருந்து வந்திருக்கிறோம் என்பதை அப்போது புரிந்துகொள்வோம், நம்மைப் பார்த்து நாமே சிரித்துக் கொள்வோம்.
---
🌿 ஆகவே உங்கள் வேலையைச் செய்யுங்கள் என்கிறது வேதாந்தம். எப்படி வேலை செய்வது என்பதை அது முதலில் போதிக்கிறது. எப்படி?
துறப்பதன் மூலம், பொய்த் தோற்றமான இந்த உலகை விட்டுவிடுவதன்மூலம். இதன் பொருள் என்ன? எங்கும் இறைவனைக் காணல் என்பது தான். அப்படித்தான் நாம் செயல்புரிய வேண்டும்.
---
🌿 நூறுவருடங்களாக வாழ ஆசைப்படலாம். விரும்பினால் எல்லா உலக ஆசைகளுக்கும் நம் மனத்தில் இடம் கொடுக்கலாம். ஆனால் எல்லாவற்றையும் தெய்வீமாக்கி விடுங்கள், சொர்க்கமாக்கிவிடுங்கள், அவ்வளவுதான். பிறருக்கு உதவி செய்துகொண்டு ஆனந்தமான நீண்ட வாழ்க்கை வாழ வேண்டுமென்று நாம் ஆசைப்படலாம். இவ்வாறு செயல்புரிந்தபடிதான் முக்திக்கான வழியைத் தேட முடியும். இதைத் தவிர வேறு வழியே இல்லை.
---
🌿 உண்மையை அறிந்துகொள்ளாமல், ஒருவன் உலக போகங்களில் முட்டாள்தனமாக மூழ்கினால் அவ்ன வழிதவறிவிட்டான், அவனால் லட்சியத்தை அடைய முடியாது. இனி, உலகைச் சபித்துக்கொண்டு அதை விட்டு விட்டுக் காட்டிற்குப்போய், உடலை ஒடுக்கி, பட்டினியால் உடலை அணு அணுவாகக் கொன்று, நெஞ்சை ஈரமற்ற கல்லாக்கிக் கொண்டு, கடின சித்தமுள்ளவனாக ஆகின்றவனும் வழி தவறியவனே. இவை இரண்டும் இரண்டு துருவங்கள். இரண்டுமே தவறான நோக்குடையவை. இருவரும் வழி தவறியவர்களே. இருவரும் லட்சியத்தை அடைய முடியாது.
---
🌿 எனவே எல்லாவற்றிலும் இறைவனை இணைத்துச் செயல்புரியுங்கள் என்று வேதாந்தம் சொல்கிறது. வாழ்க்கையைத் தெய்வீகமாக்கி, தெய்வமாக ஆக்கி, இடைவிடாமல் வேலை செய்யுங்கள். நாம் செய்ய வேண்டியதும், கேட்டுப் பெற வேண்டியதும் இவ்வளவுதான் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். எங்கும் இறைவன் இருக்கிறார். அவரைத் தேடி நாம் எங்கே போவது? ஒவ்வொரு செயலிலும் ஒவ்வோர் எண்ணத்திலும் ஒவ்வோர் உணர்ச்சியிலும் அவர் ஏற்கனவே உள்ளார். இதை உணர்ந்து செயல்புரிய வேண்டும். அது ஒன்றுதான் வழி. வேறு வழியே இல்லை. அப்போதுதான் நமது கர்மபலன்கள் நம்மைக் கட்டுப்படுத்தாது.
---
சுவாமி விவேகானந்தர்

இந்து மதமும் அதன் சகல அம்சங்களும்-பாகம்-27


இந்து மதமும் அதன் சகல அம்சங்களும்-பாகம்-27
(சுவாமி விவேகானந்தர்)
-
இந்துக்களின் உருவ வழிபாடு 
-----
🌿 நான் சிறுவனாயிருந்த போது, கிறிஸ்தவ பாதிரியார் ஒருவர், ஒரு கூட்டத்தில் பிரச்சாரம் செய்து கொண்டிருந்த நிகழ்ச்சி என் நினைவிற்கு வருகிறது. பலசுவையான செய்திகளைச் சொல்லிக்கொண்டே வந்த அவர் இடையில் நான் உங்கள் விக்கிரகத்தை என் கைத்தடியால் ஓங்கி அடித்தால் அது என்னை என்ன செய்து விடும்? என்று கேட்டார். 
அதனைக் கேட்டுக் கொண்டிருந்தவர்களுள் ஒருவர் சற்றும் தாமதியாமல் உங்கள் ஆண்டவரை நான் ஏசினால் அவர் என்னை என்ன செய்வார்? என்று கேட்டார்,' இறந்தாலும் நீ தண்டிக்கப்படுவாய் என்று பதிலளித்தார் பாதிரி. ' அப்படியே எங்கள் விக்கிரமும் நீர் இறந்ததும் உம்மைத் தண்டிக்கும்' என்று திரும்பிச் சொன்னார் அந்த இந்து!
----
🌿 மூடநம்பிக்கை மனிதனின் பெரும் பகையாகும். ஆனால் சமயவெறி அதைவிட மோசமானது. கிறிஸ்தவன் ஏன் சர்ச்சிற்குப் போகிறான் ? சிலுவை ஏன் புனிதமானது ? பிராத்தனை செய்யும்போது முகம் ஏன் வானை நோக்க வேண்டும் ? கத்தோலிக்க சர்ச்சுகளில் ஏன் அத்தனை உருவங்கள் இருக்கின்றன? பிராட்டஸ்டன்டினர் பிரார்த்தனை செய்யும் போது அவர்கள் உள்ளங்களில் ஏன் அத்தனை உருவங்கள் உள்ளன?
---
🌿 என் சகோதரர்களே சுவாசிக்காமல் உயிர்வாழ முடியாதது போல் உள்ளத்தில் ஓர் உருவத் தோற்றமின்றி. நாம் எதனையும் நினைத்துப் பார்க்க முடியாது. தொடர்பு விதியின்படி புற உருவம் அகக் கருத்தையும், அகக்கருத்து புற உருவத்தையும் நினைவு படுத்துகிறது. 
அதனால் தான் இந்து வழிபடும்போது, ஒரு புறச் சின்னத்தைப் பயன்படுத்துகிறான். தான் வழிபடும் பரம்பொருளின் மீது சிந்தையைப் பதியச் செய்வதற்கு அது உதவுகிறது என்று அவன் கூறுவான் 
---
🌿 அந்த உருவம்கடவுள் அல்ல அது எங்கும் நிறைந்தது அல்ல என்று உங்களைப்போல் அவனுக்கும் தெரியும் 
🌿 ' எங்கும் நிறைந்தது என்று சொல்லும்போது பெரிதாக என்னதான் புரிந்துகொள்ள முடியும்? அது ஒரு சொல் சின்னம் மட்டுமே . இறைவனுக்குப் பரப்பு இருக்க முடியுமாஎன்ன? எங்கும் நிறைந்தவர்என்று நாம் திரும்பத்திரும்பச் சொல்லும் போது, மிஞ்சிப் போனால் விரிந்த வானையும் பரந்த வெளியையும் நினைக்கலாம் அவ்வளவுதான்.
---
🌿 சிலர் சர்ச்சியின் உருவ வழிபாட்டுடன் தங்கள் வாழ்க்கை முழுவதையும் இணைத்துக்கொண்டு அதற்குமேல் வளராமல் நின்று விடுகிறார்கள் அவர்களைப் பொறுத்தவரை சமயம் என்றால் சில கோட்பாடுளை ஒப்புக்கொள்வது. பிறருக்கு உதவி செய்வது என்பவை மட்டும்தான்.
---
🌿 இந்துவின் சமயமோ தெய்வத்தை நேரடியாக உணர்வது. தெய்வத்தை உணர்ந்து மனிதன் தெய்வமாக வேண்டும்.
---
🌿 இந்து யாருடைய விக்கிரகத்தையும் இழிவுபடுத்திப் பேசுவதில்லை எந்த வழிபாட்டையும் பாவம் என்று கூறுவதில்லை .அது வாழ்க்கையின் இன்றியமையாத படி என்று அவன் ஏற்றுக் கொள்கிறான் .
---
🌿 குழந்தை மனிதனின் தந்தை குழந்தை பருவம் பாவமானது அல்லது வாலிபப் பருவம் பாவமானது என்று வயதானவர் சொல்வது சரியாகுமா?
---
🌿 ஒரு விக்கிரகத்தின் மூலமாக தனது தெய்வீக இயல்பை ஒருவன் உணர முடியும் என்றால் , அதைப் பாவம் என்று கூறுவது சரியா? அந்த நிலையைக் கடந்த பிறகு அவனே அதைப் பிழை என்று கூறலாமா?
---
🌿 இந்துவின் கொள்கைப்படி மனிதன் தவறிலிருந்து உண்மைக்குச் செல்லவில்லை, உண்மையிலிருந்து உண்மைக்கு, அதாவது கீழ்நிலை உண்மையிலிருந்து மேல் நிலைக்கு உண்மைக்கு பயணம் செய்கிறான். அவனைப் பொறுத்தவரை மிகவும் தாழ்ந்த ஆவி வழிபாட்டிலிருந்து அத்வைதம் வரை எல்லாமே பரம்பொருளை உணர்வதற்காக ஆன்மா செய்யும் முயற்சிகள்
---
🌿 வேறுபாட்டில் ஒருமைதான் இயற்கையின் நியதி அதை இந்து உணர்ந்துள்ளான். பிற சமயங்கள் எல்லாம் சில கோட்பாடுகளை நிர்ணயித்து அவற்றைச் சமுதாயம் ஏற்றுக் கொள்ளுமாறு கட்டாயப்படுத்துகின்றன;. ஒரே ஒரு சட்டையைவைத்துக்கொண்டு சமுதாயத்திலுள்ள ஜாக், ஜான் ,ஹென்றி எல்லோருக்கும் அந்த ஒரு சட்டை பொருத்த வேண்டும் என்று கூறுகின்றன. ஜானுக்கோ ஹென்றிக்கோ சட்டை பொருந்தாவிட்டால் அவர்கள் சட்டையில்லாமல் தான் இருக்கவேண்டும்.
---
🌿 திருவுருவங்களும் சிலுவைகளும் பிறைகளும் வெறும் சின்னங்களே, ஆன்மீகக் கருத்துக்களை மாட்டி வைப்பதற்குப் பயன்படும் ஆணிகளே என்பதை இந்துக்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த உதவி எல்லோருக்கும் தேவை என்பது அல்ல ஆனால் தேவைப்படாதவர்கள் அது தவறு என்று கூற உரிமையில்லை. இந்து சமயத்தில் அது கட்டாயமும் அல்ல.
---
🌿 இந்தியாவில் உருவ வழிபாடு என்பது பயங்கரமான ஒன்றல்ல. ஒன்றைக் கவனியுங்கள். அவர்கள் தங்கள் உடல்களை வருத்திக் கொள்வார்களே தவிர அடுத்தவனின் கழுத்தை அறுக்க மாட்டார்கள். இந்து சமய வெறியன் தன்னைத் தீயில் கொளுத்திக் கொள்வானே தவிரப் பிறரையல்ல.
--
🌿 இந்துக்கள் மட்டுமே காப்பாற்றபடுவார்கள். , மற்றவர்கள் காப்பாற்றப்பட மாட்டார்கள் என்று சம்ஸ்கிருதத் தத்துவ இலக்கியத்தில் எங்காவது கூறப்பட்டிருக்கிறதா என்று கண்டுபிடிக்கும்படி நான் உலகத்திற்குச் சவால் விடுகிறேன்
---
🌿 சுவாமி விவேகானந்தர்

இந்து மதமும் அதன் சகல அம்சங்களும்-பாகம்-25



இந்து மதமும் அதன் சகல அம்சங்களும்-பாகம்-25
(சுவாமி விவேகானந்தர்)
-
கடவுளை மனத்தால் அறிய முடியுமா?
-----
🌿 நாம் சாதாரணமாக அறிவு என்று சொல்வதற்கு என்ன பொருள்?
--
🌿 அறிவு என்பது, நம் மனத்தின் எல்லைக்கு உட்பட்டது, நாம் அறிவது.
--
🌿 அறிவு மனத்தைக் கடந்ததாக இருக்கும்போது அதை அறிவு என்று சொல்ல முடியாது. மனத்தின் எல்லையை கடந்து இருப்பதை மனத்தால் அறிய முடியாது
--
🌿 பரம்பொருள், மனத்தின் எல்லைக்குள் வந்து விட்டால் அது பரம்பொருளாக இருக்க முடியாது, எல்லைக்கு உட்பட்டதாக ஆகிவிடும்.
--
🌿 மனத்தால் அறியக்கூடியது,மனத்தினால் கட்டுப்பட்டது எதுவுமே எல்லைக்கு உட்பட்டதாக ஆகிவிடுகிறது.
---
🌿 மனத்தின் எல்லையை கடந்து இருக்கும் பரம்பொருளை மனத்தால் எப்படி அறிய முடியும்?
---
🌿 ஆகவே பரம்பொருளை அறிவது என்று சொல்வதே முரணானது. அதனால்தான் இந்தக் கேள்விக்கு ஒரு போதும் பதிலே கிடைக்கவில்லை.
--
🌿 கடவுளை அறிய முடியுமானால் அவர் கடவுள் அல்ல; அவரும் நம்மைப்போல் எல்லைக்கு உட்பட்டவராக ஆகிவிடுகிறார். அவரை அறிந்து கொள்ள முடியாது. அவர் அறிந்து கொள்ள முடியாதவராகவே என்றும் இருக்கிறார்.
--
🌿 மனத்தால் அறிந்துகொள்ள முடியாத கடவுளை அறியவே முடியாதா?
--
🌿 அவருள்ளும் அவர் மூலமாகவும்தான் நாம் இந்த நாற்காலியையே அறிய முடிகிறது இந்த உலகை பார்க்க முடிகிறது. அவர் சாட்சிப் பொருள், எல்லா அறிவுக்கும் நிரந்தர சாட்சியாக அவர் இருக்கிறார். நாம் அறிவதையெல்லாம் அவருள்ளும் அவர் மூலமாகவும்தான் அறிய முடியும்.
---
🌿 நமது சொந்த ஆன்மாவின் சாரமாக இருப்பவர் அவர். நான் உணர்வின் சாரமாக இருப்பவரும் அவரே. இந்த நான்- உணர்வின் உள்ளேயும் மூலமாகவும் அல்லாமல் நாம் எதையும் அறிய முடியாது.
---
🌿 அவர் அறியக் கூடியவரும் அல்ல; அறியப்பட முடியாதவரும் அல்ல. இந்த இரண்டு நிலைகளையும்விட எல்லையற்ற மடங்கு உயர்ந்த நிலையில் அவர் இருக்கிறார்.
---
🌿 அவரே நமது ஆன்மா. அந்தப் பரம்பொருள் நிறைந்திருக்காவிட்டால், இந்தப் பிரபஞ்சத்தில் ஒரு கணம்கூடயாரால் வாழ முடியும்? யாரால் மூச்சுவிட முடியும்?
--
🌿 ஏனென்றால் அவருள்ளும் அவர் மூலமாகவும் தான் நாம் மூச்சுவிடுகிறோம். அவருள்ளும் அவர் மூலமாகவும்தான் வாழ்கிறோம்.
--
🌿 அவர் எங்கேயோ நின்றுகொண்டு என் உடலில் ரத்தத்தை ஓடச் செய்கிறார் என்பது பொருளல்ல. எல்லாவற்றின் சாரமாகவும் ஆன்மாவின் ஆன்மாவாகவும் அவர் இருக்கிறார் என்பதே பொருள்.
---
🌿 எந்தக் காரணத்தைக் கொண்டும் கடவுளை அறிவதாக நாம் சொல்ல முடியாது. அப்படிச் சொல்வது அவரைத் தாழ்த்திப் பேசுவதே ஆகும்.
---
🌿 நாம் நம்மை விட்டு வெளியே குதிக்க முடியாது. அதுபோல் நாம் கடவுளை அறியவும் முடியாது.
---
🌿 அறிவு என்றால், ஒன்றை நம்மிலிருந்து வேறுபடுத்தி அறிவது உதாரணமாக, நாம் ஒன்றை நினைக்க வேண்டுமானால் அதை மனத்திற்கு வெளியே கொண்டுவந்து, அதாவது அதை மனத்திலிருந்து வேறுபடுத்திதான் பார்க்க முடியும்.
கடவுள் விஷயத்தில் இம்மாதிரி செய்ய முடியாது. ஏனெனில் அவர் நம் ஆன்மாவின் சாரமாக இருப்பவர். அவரை நமக்கு வெளியே கொண்டு நிறுத்த முடியாது.
---
🌿 வேதாந்தத்திலுள்ள மிக உன்னதமான கருத்துக்களில் ஒன்று இதோ இருக்கிறது. உன்னுடைய ஆன்மாவின் சாரமாக இருப்பவரே மெய்ப்பொருள். அவரே பரமாத்மா. நீயே அது. நீயே கடவுள் என்பதன் பொருள் இதுவே.அஹம் பிரம்மாஸ்மி. நான் கடவுளாக இருக்கிறேன்
--
🌿 நம் ஆன்மாவின் சாரமாகவும் மெய்ப்பொருளாகவும் இருப்பவரை, நம்மிலிருந்து நாம் எப்படிப் பிரித்துப் பார்க்க முடியும்?
--
🌿 கடவுள் நம்மோடு இரண்டறக் கலந்தவர். நம்மோடு இரண்டறக் கலந்து நாமாகவே இருப்பவர் . நம்மை நாமே புறத்தில் கொண்டுவந்து பார்க்க முடியாது. நம்மை வெளியே கொண்டு வந்து அறிய முடியாது. ஏனெனில் நாமே அதுவாக இருக்கிறோம். அதிலிருந்து நம்மைப் பிரிக்க முடியாது.
--
🌿 நாம் நம்மைவிட நன்றாக வேறு எந்தப் பொருளையும் அறிந்திருக்க முடியாது, நமது அறிவின் மையமே நாம்தானே.-
----
🌿 சுவாமி விவேகானந்தர் 🌿