Saturday, 22 June 2019

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு-பாகம்-76

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு-பாகம்-76

பணத்தைக் குறியாக க் கொண்ட சகோதரர்கள்,ராது,சுரபாலா போன்ற பல்வேறு ரக பைத்தியங்கள் . இவர்களுடன் தமது சித்தப்பாவான நீலமாதவரையும் அவரது இறுதி நாட்களில் அன்னையே கவனித்துக் கொண்டார். நீலமாதவர் திருமணம் செய்துகொள்ளவில்லை. ஒரு செல்வந்தரின் வீட்டில் சமையல் வேலை செய்து வந்த அவருக்கு வயதாகிய போது அவரை க்கவனித்துக் கொள்ள உறவினர் யாரும் முன்வரவில்லை.எனவே அன்னை அவரைத் தம்மிடம் அழைத்துக் கொண்டார். அவருக்கு வேண்டிய அனைத்தையும் தாமே செய்தார். எங்காவது போகும் போது சிலவேளைகளில் அவரைக்கூட்டிக்கொண்டு செல்வார். பக்தர்கள் தமக்காகக் கொண்டு வருகின்ற  பழம் இனிப்பு முதலியவற்றுள் மிக நல்லவற்றை அவருக்குக் கொடுப்பார்.யாராவது அதனைத்தடுத்தால் அவர் வாழப்போவது இன்னும் சில காலம் தான். நன்றாக அனுபவித்து ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ளட்டும்.நான் இன்னும் நீண்ட நாள்  வாழத்தான் போகிறேன். இவைபோல் எவ்வளவோ எனக்கு வரும் என்று கூறுவார்.
அவர் ஓர் ஆஸ்துமா நோயாளி.எவ்வளவோ சிகிச்சை செய்தும் அது குறையவில்லை. அவரது இறுதிவேளை நெருங்கிக் கொண்டிருந்தபோதுஅன்னை  மதியவுணவுகூட உண்ணச் செல்லாமல் அருகில் அமர்ந்திருந்தார். பக்தர்கள்  வந்து உடனடியாக அசம்பாவிதம் எதுவும் நிகழ  வாய்ப்பில்லை என்று கூறி,கட்டாயப்படுத்தி அவரைச் சாப்பாட்டிற்கு அழைத்துச் சென்றனர். அன்னையும்  சென்று அவசர அவசரமாக உண்டுவிட்டு வந்தார்.ஆனால் அதற்குள் எல்லாம்  முடிந்து விட்டிருந்தது. நீலமாதவரைச் சுற்றி நின்றவர்களின்  முகத்திலிருந்து அதனை ஊகித்துவிட்ட அன்னை, அப்படியானால் அவர் போய் விட்டாரா?என்று வேதனை வெடிக்க கேட்டார். சாப்பிடு,சாப்பிடு என்று என்னை அனுப்பி,இறுதி நேரத்தில் அவர் அருகில் இருக்க முடியாமல் செய்து விட்டீர்களே.என்று ஆத்திரத்துடன் கூறிவிட்டு விம்மிவிம்மி அழுதார். பின்னர் பூஜையறைக்குச் சென்று பிரசாத மலர்களை எடுத்து வந்து அவரது மார்பில் வைத்து அவரது ஆன்ம சாந்திக்காகப் பிரார்த்தித்தார். இது கல்கத்தாவில் 1905-ஆம் ஆண்டு நிகழ்ந்தது.
அடுத்த ஆண்டு அன்னை மற்றொரு பேரிழப்பைச் சந்திக்க நேர்ந்தது. அது சியாமாசுந்தரியின் மறைவு. ஒரு நிறைவான வாழ்க்கையை வாழ்ந்து முடித்திருந்தார் அவர்.தன் மகளை அம்மா  என்றழைக்கக் குழந்தைகள் இல்லாமல் போய்விடுமோ என்று ஆரம்பத்தில் அவரிடமிருந்த ஏக்கம் இந்த நாட்களில்  மறைந்து விட்டிருந்தது. அன்னை ஜெயராம்பாடியில் வாழத் தொடங்கிய காலத்திலிருந்தே பக்தர்கள் அன்னையைக் காணவும் மந்திர தீட்சை பெறவும் வரத் தொடங்கியிருந்தனர். அவர்கள் அன்னையை அம்மா என்றும் தன்னைப்பாட்டி என்றும் உரிமையுடன் அழைப்பது கேட்டு செவிகுளிர்ந்தார் சியாமா.என் பேரன், என் பேத்தி என்று ஒவ்வொருவரையும் சீராட்டுவார். அவர்களுக்கு வேண்டியவற்றைச் செய்வதில் அவருக்கு அலாதி ஆனந்தம். ஒரு நேரமும் ஓய்ந்திருக்க மாட்டார்.மாடுகளைக் கவனித்துக் கொள்வது,மாட்டுத்தொழுவத்தைச்சுத்தம் செய்வது,வயலில் வேலை செய்பவர்களுக்கு உணவு கொண்டு போய்க் கொடுப்பது,சமைப்பது,நெல் குத்துவது  என்று ஏதாவதுஒரு வேலையை இழுத்துப் போட்டுக்கொண்டு செய்தவண்ணமே இருப்பார்.எந்த வேலையைில் ஈடுபட்டிருந்தாலும் அவரது முகம் மலர்ச்சியாகவே காணப்படும். அவர் துயரத்துடன் இருப்பதையோ கோபப்படுவதையோ யாரும் கண்டதில்லை. யாராவது அவரைப்பாட்டி என்று அழைத்துவிட்டால் போதும்,அவரது மகிழ்ச்சி அளவற்றதாகிவிடும். இறுதிநாளன்று கூடகாலையில் நெல் குத்தினார். கடை வீதியில் சென்று கறிகாய் வாங்கிவந்தார். திடீரென முற்றத்தில் நிலைதடுமாறி வீழ்ந்தார். அன்னையின் சீடர் ஒருவரிடம்,எனக்கு த்தலை சுற்றுகிறது. இறுதிவேளை நெருங்கி விட்டது போலும் என்றார். அன்னையும் மற்றவர்களும் விரைந்தோடிச்சென்றனர். பூசணிக்காய்க் கூட்டு சாப்பிட வேண்டும் என்ற தனது ஆவலை மகளிடம் தெரிவித்தார் சியாமா. அதற்கு அன்னை, உடல்நிலை சரியாகியதும் செய்து தருவதாகக் கூறினார். பின்னர் தண்ணீர் வேண்டும் என்று கேட்டார். அன்னை கங்கை நீரை அளித்தார். தெய்வ மகளின் கையிலிருந்து தெய்வ கங்கை நீரை ப் பருகியவாறே அந்தப்புண்ணியாத்மாவின் உயிர் பிரிந்தது.சாதாரண ஒரு பெண்ணைப்போல்  ஏங்கிஏங்கி அழுதார் அன்னை.
-
-
தொடரும்...
-
ஸ்ரீராமகிருஷ்ணரின் ஆன்மீகக் குழுவில் இணைய 9789374109 என்ற எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலம் ரிக்கொஸ்ட் மெசேஜ் அனுப்பவும்



No comments:

Post a Comment