Sunday, 16 June 2019

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு-பாகம்-46


அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு-பாகம்-46

தளர்ந்து துவளும் நேரங்களில் தோன்றி ஆறுதல் தருவதற்கு மறைந்தும் மறையாத கணவர் இருக்கிறார். வாய் நிறைய அம்மா என்றழைக்க பிள்ளைகள் இருக்கிறார்கள். ஆனாலும் அன்னையின் மனம் வெறுமையில் உழன்றது. உலகில் வாழ இவை போதாதே!உலகின் கண்களில் தாம் ஒரு விதவை, பிள்ளைகளோ தம்பிடிக் காசு இல்லாத துறவிகள். என் காலத்திற்குப் பிறகு நீ காமார்புகூரில்  சென்று வாழ், சாதாரணஉணவுடன்  எளிமையாக வாழ்க்கை நடத்து. யாரிடமும் எதையும் எதிர்பார்க்காதே என்று பரிவுடன் கூறி , தன் வாழ்க்கைக்கான பொருள் வசதியையும் செய்து விட்டுச் சென்ற கரிசனமிக்க அந்தக் கணவரின் நினைவு அன்னையை மிகவும் வாட்டியது. அவர் இல்லாமல் வாழத்தான்  வேண்டுமா? என்று தோன்றியது அவருக்கு. அவர் போனபின் எனக்கு வாழ்க்கையில் பிடிப்பே இல்லாமல்  போயிற்று என்று பின்னாளில் அன்னை கூறினார். சமாதியில் ஆழ்ந்து உடலை உகுப்பது ஒன்றும் அன்னைக்குப் பெரிய காரியம் அல்ல. ஆனால் குருதேவர் ஒப்படைத்த பணியைவிட்டுவிட்டு எங்கே போவது? புதியதொரு துறவியர் பரம்பரைக்குத் தலைவியாக தாய்மையின்  பெருமையைத் தரணிக்கு எடுத்துக்காட்டுகின்ற  அன்னையாக இருக்கின்ற  அந்தப் பணியை விட்டு விட்டு எங்கே  போவது? அதற்கு மேலும் அன்னை குழம்பவில்லை. சிந்தனைகள் தெளிந்தன. தாம் வாழ்ந்தே தீர வேண்டும் என்பதில் உறுதிகொண்டார்.
 அன்னையின் மன வேதனைகள் ஒரு புறமிருக்க குருதேவரின் பக்தர்கள் சிலர் தங்கள் பங்குக்கு அந்த வேதனையைக் கிளறுவதுபோல் நடந்து கொண்டனர். குருதேவரின் மறைவுக்குப்பின உடனடியாகக் காசிப்பூர் வீட்டைக்காலி செய்ய  அவர்கள் முற்பட்டனர். ஆனால் நரேந்திரரும் அன்னையின் மற்ற துறவிப் பிள்ளைகளும் உடனடியாக அந்த வீட்டைக் காலி செய்து அன்னையை வெளியே அழைத்துச்செல்வது, அவருக்கு மிகுந்த வேதனை தருமென்று கூறித் தடுத்தனர். சில நாட்களாவது அவர் அந்த வீட்டிலேயே தங்குவதற்கு வழி செய்ய வேண்டுமென்றும், தேவை ஏற்பட்டால் தாங்கள் பிச்சை  எடுத்தாவது அன்னைக்கு உணவு கொண்டுவந்து கொடுப்பதாகவும் கூறினார். எனவே மேலும் சில நாட்கள் அன்னை காசிப்பூர் வீட்டில் தங்கினார். குருதேவரின் அஸ்திக்கலசத்திற்கு தினந்தோறும் உணவு நிவேதித்து வழிபாடு செய்யப்பட்டது. ஆனால் வீட்டைக்காலி செய்வதில் பக்தர்கள் பிடிவாதமாக இருந்தனர். எனவே ஐந்து நாட்களுக்குப் பிறகு பலராம் போஸ் அழைத்ததன் பேரில் ஆகஸ்ட் 21 ஆம் நாள் அன்னையும் லட்சுமியும் அவரது விட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அன்னை மௌனமாக அனைத்தையும் தாங்கிக் கொண்டார்.
இதற்கிடையில் அஸ்திக் கலசத்தை யார் பொறுப்பில்  வைத்துக்கொள்வது என்பதில் துறவிச் சீடர்களுக்கும்  இல்லறச் சீடர்களுக்கும்  இடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டது. அதற்கு மேலும்  அன்னையால் பொறுத்திருக்க முடியவில்லை. பார் கோலாப், ஈடிணையற்ற மகாபுருஷரை இழந்து நிற்கிறோம்.  இங்கே இவர்களோ அவருடைய அஸ்திக்காக அடித்துக் கொள்கிறார்கள். என்று வேதனை வெடிக்க க் கூறினார்.
பலவித கருத்துக்களுக்குப்பிறகு  கல்கத்தாவிற்கு வெளியே காங்குர்காச்சி என்னும் இடத்தில் ராமசந்திரருக்குச் சொந்தமான தோட்டத்தில் அஸ்தியை வைத்துக் கோயில் எழுப்ப இல்லற பக்தர்கள் முடிவு செய்தனர். குருதேவர் ஒரு முறை இந்தத் தோட்டத்திற்குச் சென்றிருந்தது.அவர்களின் இந்த முடிவிற்கு ஒரு காரணமாக அமைந்தது. ஆனால் துறவி சீடர்கள் இதை விரும்பவில்லை. எனவே அஸ்தியில் பெரும்பகுதியைத் தனியாக எடுத்து, பலராம் பாபுவின் வீட்டிற்கு அன்னை செல்லும் போது கொடுத்தனுப்பி அங்கே முறைப்படி வழிபாடு செய்து வரும்படிச் செய்தனர். அவர்களின் நோக்கம் பிற்காலத்தில் கங்கைக் கரையில் நிலம் வாங்கி அங்கே குருதேவருக்கு கோயிலை எழுப்ப வேண்டும் என்பதாகும். மீதமுள்ள அஸ்தி கிருஷ்ண ஜெயந்தி நாளன்று உரிய சடங்கு களோடு  காங்குர்காச்சிக்கு எடுத்துச் செல்லப்பட்டது. சசி இந்த அஸ்திக் கலசத்தைத் தலையில் சுமந்து சென்றார். துறவிச் சீடர்களும் பக்தர்களும் உடன் சென்றனர். காங்குர்காச்சியில் அதனை வைத்துக் கோயில் கட்டி முறைப்படி நாள்தோறும் வழிபாடுகள் நடைபெற ராம் ஏற்பாடு செய்தார்.
-
தொடரும்...
-
ஸ்ரீராமகிருஷ்ணரின் ஆன்மீகக் குழுவில் இணைய 9789374109 என்ற எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலம் ரிக்கொஸ்ட் மெசேஜ் அனுப்பவும்



No comments:

Post a Comment