Saturday, 22 June 2019

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு-பாகம்-98

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு-பாகம்-98
-
துறவிச்சீடர்களிடம் தாய்-சேய் உறவிலும் ஓர் எல்லையை வைத்திருந்தார் அன்னை. அவர்கள் தம்மிடம் பற்று வைப்பதை அன்னை வரவேற்கவில்லை. ஒரு துறவிச்சீடர் தாம் சில மாதங்கள் அன்னையைக் காண முடியாததால் மிகவும் வேதனைப் படுவதாக எழுதியிருந்தார். அது அன்னைக்குப்பிடிக்கவில்லை. அவன் ஏன் அப்படி வேதனையுற வேண்டும்? மாயையின் அனைத்து சங்கிலிகளையும் ஒரு துறவி உடைத்திருக்க வேண்டும். தங்கச்சங்கிலியாக இருக்கலாம் ஆனால் அதுவும் சங்கிலிதான் . துறவிக்குப் பற்றே கூடாது. அன்னையின் அன்பு என்ற எண்ணம் தனக்கு அது கிடைக்கவில்லையே என்ற புலம்பல்- இவையெல்லாம் சுத்த முட்டாள் தனம். ஆண்  சீடர்கள் என்னைச்சுற்றிச்சுற்றி வருவதை நான் விரும்பவில்லை. என்னதான் இருந்தாலும் எனக்கு இருப்பது மனிதவுருவம் அதனை தெய்வமாக உணர்வது அத்தனை எளிதல்ல என்றார் அவர். துறவியர் இல்லறத்தாருடன் அதிகமாகத் தொடர்புகள் வைப்பதையும் அன்னை அனுமதிக்கவில்லை. ஒரு முறை அன்னையின் துறவிச்சீடர் ஒருவர் கிரீஷீடன் காசி செல்ல எண்ணியிருந்தார். கிரீஷ் அவருடைய பயணச் செலவை  ஏற்றுக்கொள்வதாக ஏற்பாடு. அதைக்கேட்ட அன்னை கூறினார்,நீ ஒரு துறவி.உனது பயணச்செலவை வேறுவிதமாகப் பெற்றுக்கொள்ள முடியாதா? கிரீஷ் குடும்பத்தில் வாழ்பவர்.நீஏன் அவருடன் பயணம் செய்ய வேண்டும்.ஃ நீங்கள் ஒரே பெட்டியில் இருப்பீர்கள். அவர் தனக்காக ஏதாவது செய்யும் படி உன்னிடம் கூற நேரும்.துறவியான நீ அவர் கட்டளைப்படி நடக்க வேண்டுமா?
அன்னையின் துறவிச் சீடர்களுள் ஒருவர், துறவின் நியதிகளைப் பின்பற்ற இயலாமல் மீண்டும் பழைய வாழ்க்கையை நாடினார். அப்போது அன்னை கூறினார்.மண்பாண்டத்தில் சிங்கத்தின் பாலை வைக்க முடியுமா? உலகியல் மக்களின் வீடுகளில் தொடர்ந்து சாப்பிட்டதால் அவனது மனம் வழிதவறி விட்டது.
இவ்வாறு அன்னை அவ்வப்போது தமது துறவிப்பிள்ளைகளை வழிநடத்தியதிலிருந்து அவர் ராமகிருஷ்ண சங்கத்தின் கோட்பாடுகளாக எவற்றைக் கருதினார் எனபதை நாம் அறிந்து கொள்ள முடிகிறது.
குருதேவர் எல்லா தெய்வங்களும் திரண்ட வடிவினர்.அனைத்து மந்திர வடிவினர். உண்மையாக சத்தியமாக அவர் மூலம் எல்லா தெய்வங்களையும் வழிபடமுடியும். உலகின் துயரங்களையும் வேதனைகளையும் துடைக்கவே அவர் அவதரித்தார் என்பது அன்யைின் முடிவான கருத்தாக இருந்தது. எனவே அவரைப்பற்றிப் பிடித்துக் கொள்வதும் அவரிடம் பிராத்தனை செய்வதும் ஆன்மீக வாழ்க்கைக்கான அனைத்தையும் தரும் என்பதை உறுதிபடக் கூறுவார். குருதேவரிடம் ஒரு முறையேனும் பிராத்தனை செய்தவர்கள் எதற்கும் அஞ்சத்தேவையில்லை.ஆன்மீக வாழ்வின் சாரம் பிரேம பக்தி. குருதேவரிடம் தொடர்ந்து பிராத்தனை செய்வதன்  மூலமே அந்த பக்தியை அடைய முடியும், குருதேவரையே அன்னை ராமகிருஷ்ண துறவியரின் லட்சியமாக வைத்தார். நமது லட்சியம் குருதேவரே,குருதேவர் மட்டுமே நீ என்ன வேண்டுமானாலும் செய். ஆனால் குருதேவரைப்பற்றிப் பிடித்திருந்தாயானால் வழி தவற மாட்டாய் என்பார் அவர்.

--
தொடரும்...
-
ஸ்ரீராமகிருஷ்ணரின் ஆன்மீகக் குழுவில் இணைய 9789374109 என்ற எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலம் ரிக்கொஸ்ட் மெசேஜ் அனுப்பவும்


No comments:

Post a Comment