Sunday, 16 June 2019

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு-பாகம்-49

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு-பாகம்-49

பக்திப் பெருக்கு வற்றாத ஊற்றாக இன்றும் பொங்கி கொண்டிருக்கின்ற புனித பூமி பிருந்தாவனம்.மறைந்து ஆயிரக்கணக்கான வருடங்கள் உருண்டோடி விட்ட போதிலும், பக்தர்களின் மனத்தில் இன்றும் பசுமையாகத் தங்கிவிட்ட கண்ணன் தன் இளமைநாட்களில் ஆடிக்களித்து திருவிளையாடல்கள் புரிந்த இடம்., இது.இத்தகைய பக்தியை உலகிலே கண்டதுமில்லை, கேட்டதுமில்லை.(அந்த பக்தியைக் கண்ணனிடம் செலுத்திய) கோபியருக்கு நமஸ்காரம்.என்று பின்னாளில் பக்தர்கள் போற்றிப்பாடிய கோபியரும் கண்ணனும் மகிழ்ந்து விளையாடிய இடம்இது. கோபியரின் தலைவியும் பக்தியின் அதிவுயர்ந்த எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தவளுமான ராதை, கண்ணனிடம் கொண்ட உயர்நிலைக் காதலாலும் பிரிவாற்றாமைக் கண்ணீராலும் பக்திப்பேருணர்வை நிறைத்த இடம். இது. அதனால் தானோ என்னவோ, இன்றும் இங்கு வாழும் சாதுக்களும் பிறரும் ஒருவரையொருவர் சந்திக்கும்போது கண்ணனின் பெயரைச் சொல்லாமலே் ராதே ராதே என்றுகூறிக்கொள்கிறார்கள்.தபால்காரர் ராதே ராதே என்றே கதவைத் தட்டுகிறார்.ரிக்ஷாக்காரர் ”ராதே ராதே என்று கூவியே ஒதுங்கச் சொல்கிறார். விளக்குக்கம்பத்திலும் சுவர்களிலும்  கூட ”ராதே ராதே என்றே காணப்படுகிறது. இவ்வளவு ஏன்! அங்கு நிற்கும் மரங்களின் கிளைகள் அசைந்தாடும் போதும், இலைகள் காற்றில் படபடக்கும் போதும் ராதே ராதே என்று சொல்வதாக பாரம்பரியப் பாடல் ஒன்று கூறுகிறது. அன்னியர் படையெடுப்புகளால் பெருவாரியான கோயில்கள் இடிபாடுகளுடன் காட்சி அளித்தாலும் இன்றும் தன் புராதன பாரம்பரியத்தை இழக்காமல் பக்தியின் விளைநிலமாக உள்ளது பிருந்தாவனம்.
அன்னை செப்டம்பர் மாதத்தில் அங்கு சென்றார். அப்போதுதான் மழைக்காலம் முடிந்திருக்கிறது. மரங்களும் செடிகொடிகளும் இளந்தளிர்களுடனும் மலர்களுடனும் கண்ணுக்கு விருந்தளித்தன. இயற்கையழகின் ஓர் அதிசய உண்மை என்னவென்றால் நாம் சந்தோஷமாக இருந்தால் அது நமது மகிழ்ச்சியைப் பன்மடங்காக்கும்.நமது மனம் வேதனையில் தத்தளித்துக் கொண்டிருந்தால் இயற்கையின் அதே எழிற் கோலங்கள் நம்மைத் துடிக்க வைத்து விடும். பச்சைப்பசேலென்று பட்டு விரித்து அதில் முத்தும் வைரங்களும் இழைத்ததுபோல் மலர்ந்திருந்த பல வண்ணப் பூக்களும், மருண்ட பார்வையுடன் அங்குமிங்கும் ஓடிய மான்களும், தோகை விரித்தாடிக் களித்த மயில்களும், புல் மேய்ந்து விட்டு மாலை வேளையில் கூட்டம் கூட்டமாகச் சென்று கொண்டிருந்த பசுக்களும் எல்லாம் அன்னையின் மனத்தில் ஒரே ஓர் எண்ணத்தை மட்டுமே எழுப்பியது. குருதேவர் எங்கே?விரகதாபம் அவர் இதயத்தின் ஒவ்வோர் அணுவையும் தாக்கி வாட்டியெடுக்கத் துவங்கியது. மறைந்து கிடந்த சோக உணர்ச்சிகள் புதிய வேகத்துடன் அவர் மனத்தில் அலைமோதின. இரவும் பகலும் குருதேவரின் நினைவே அவரை நிறைத்தது. எந்த நேரமும் அவரை நினைத்துக் கண்ணீர் விட்டு, வெளியே குரல் கேட்காதவாறு கதறியபடியே இருந்தார் அன்னை. குருதேவரின் மறைவிற்கு முன்பே, பிருந்தாவனம் வந்துவிட்டிருந்த யோகின்மாவைப் பார்த்ததும், வெடித்துவருகின்ற தம் அழுகையைக் கட்டுப்படுத்த முடியாமல், ஓ யோகின் என் மகளே! என்று ஓடிப்போய் அவளை மார்போடு கட்டி அணைத்துக் கொண்டு, சின்னஞ்சிறு குழந்தையைப்போல் நெடுநேரம் அழுதார். காதலும்,கடுந்துயரமும் ஒன்று கலக்க விரகதாபத்தால் துடித்தார் அன்னை.
வேதனையின் வேகத்தில் தம்மை மறந்து ஏதோ சிறுமி போல் அன்னை பேசத்தொடங்கினார்.ஒரு நாள் இறந்து போன ஒருவரின் உடலைப்பூக்களால் அலங்கரித்து பாடையில் வைத்து,மேளதாளத்தோடு சுடுகாட்டிற்குத் தூக்கிக் கொண்டு போனார்கள்.இதைப்பார்த்த அன்னை யோகின்மாவிடம் யோகின் இந்தப் புண்ணிய பூமியான பிருந்தாவனத்தில் உயிர் விடுவதற்கு அவர் எவ்வளவு அதிஷ்டம் செய்திருக்க வேண்டும். நானும் என் இறுதிக்காலத்தை நாடித்தான் பிருந்தாவனம் வந்தேன்.ஆனால் ஒரு சிறு ஜீரமாவது வர வேண்டுமே,வரவே இல்லை. நான் ஒன்றும் வயதாகாதவளல்ல. என்னைப்பார்! நான் எவ்வளவு வயதானவளாகி விட்டேன்.ஃ என் தந்தை, என் கணவரின் மூத்த அண்ணன் எல்லோரையும் பார்த்து விட்டேன் என்றார். இதைக்கேட்ட யோகின்மாவால் சிரிப்பைக்கட்டுப்படுத்த முடியவில்லை. சிரித்தபடி அம்மா நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? இந்த உலகில் யார்தான் தன் தந்தையைப் பார்க்கவில்லை! என்று சொல்லிவிட்டு மேலும் சிரித்தார்.
ஆனால் இப்படி எத்தனை நாள்? தொடர்ந்து கண்ணீரும் கம்பலையுமாக இருந்தால்  உடம்பு எப்படித் தாக்குப் பிடிக்கும்? அன்னையின் உடல் உருக்குலையத் தொடங்கியது. அப்போது ஒரு நாள் அன்னையின் முன்தோன்றிய குருதேவர். ஏன் இப்படி அழுது துடிக்கிறாய்? நான் எங்கே போய்விட்டேன்? இங்கே தானே இருக்கிறேன்! ஓர் அறையிலிருந்து இன்னொன்றிற்குப் போயிருக்கிறேன், அவ்வளவு தான்! என்றார்.
இந்தக்  காட்சிக்குப் பிறகு அன்னையின் வாழ்க்கை வெகுவாக மாறியது. குருதேவரின் தொடர்ந்த காட்சிகளாலும் உயர்ந்த ஆன்மீக அனுபவங்களாலும் அவரது வேதனை விலகி, அந்த இடத்தை தெய்வீகப் பரவசம்   பிடித்துக் கொண்டது.
-
தொடரும்...
-


No comments:

Post a Comment