Saturday, 22 June 2019

ஸ்ரீராமகிருஷ்ணரின் விரிவான வாழ்க்கை வரலாறு

ஸ்ரீராமகிருஷ்ணரின் விரிவான வாழ்க்கை வரலாறு
-
பாகம்-1
-
 பிறப்பிடமும் பூர்வீகமும்
-
வங்காள மாநிலத்தில் ஹீக்ளி மாவட்டத்தில் வடமேற்குப்பகுதியும்,பாங்குரா,மேதினிபூர் மாவட்டங்களும் சந்திக்கின்ற இடத்திற்கு அருகில் முக்கோணமாக மூன்று கிராமங்கள் உள்ளன. உள்ளூர் வாசிகளுக்கு அவை ஸ்ரீபூர்,காமார்புகூர் ,முகுந்தபூர் என்று தனித்தனியாகத் தெரிந்திருந்தாலும்,ஒன்றையொன்று மிகவும் நெருங்கியிருப்பதால் .பயணிகளுக்கு அவை ஒரே கிராமத்தின் மூன்று பகுதிகளாகவே தோன்றும். பொதுவாக மூன்று கிராமங்களும் சேர்ந்த அந்தப்பகுதி காமார்புகூர் என்றே வழங்கப்பட்டு வந்தது.

பிராமணர்,ஷத்திரியர்.நெசவாளர் .இடையர்,கொல்லர்,குயவர், மீனவர்., துப்புரவாளர்,போன்ற பல  இனத்தவர் காமார்புகூரில் வசிக்கின்றனர்.
 இந்த கிராமத்தில் மூன்று நான்கு பெரிய குளங்கள் உள்ளன. அவற்றுள் பெரியது ஹல்தார்புகூர்.
நூறிதழ்த் தாமரைகளும்,வெண்ணிற அல்லி மலர்களும் மலர்ந்து அழகு செய்கின்ற சிறிய குளங்களும் ஏராளமாக உள்ளன.
செங்கல்லால் கட்டப்பட்ட பல வீடுகளும் சமாதிகளும் இந்த கிராமத்தில் ஏராளமாக இருந்தன.
காமார்புகூருக்கு மேற்கே இரண்டு மைல் தொலைவில் சாத்பேரே,நாராயண்பூர்.தேரே என்னும் மூன்று கிராமங்கள் அருகருகே அமைந்துள்ளன.
தேரேயில் உள்ள குளம்,அதற்கு அருகிலுள்ள கோயில் போன்ற பலவற்றிலிருந்து இந்த கிராமங்களின் பண்டைய செழிப்பை அறியலாம்.

நாம் கூறுகின்ற காலத்தில் இந்த மூன்று கிராமங்களும் பல்வேறு ஜமீன்தார்களின் ஆதிக்கத்தில் இருந்தன.
ஜமீன்தாரான ராமானந்த  ராய் சாத்பேரே கிராமத்தில் வசித்து வந்தார்.சுமாரான செல்வம் படைத்த இந்த ஜமீன்தார் தனது ஜமீனில் வாழ்ந்தவர்களை மிகவும் கொடுமைப்படுத்தி வந்தார்.யாரிடமாவது அவர் கோபம் கொண்டுவிட்டால் அவரது எல்லா உடமைகளையும் பறித்துக்கொள்ளத் தயங்க மாட்டார்.
தேரே கிராமத்தில் சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு சீலமுள்ள பரம்பரையில் தோன்றிய ஓர் அந்தணர் குடும்பம் வசித்து வந்தது.
ஓரளவே வருமானம் உள்ள அவர்கள் நல் ஆசாரங்களைத் தவறாமல் கடைப்பிடித்து வந்தனர்.ஸ்ரீராமசந்திர மூர்த்தியை அவர்கள் வழிபட்டு வந்தனர். அங்குள்ள சிவன்  கோயிலும் அருகிலுள்ள சட்டுஜ்ஜே குளமும் அவர்களை நினைவூட்டும் வகையில் இன்றும் உள்ளன.

இந்தக் குடும்பத்தைச்சேர்ந்த மாணிக்ராம் சட்டோபாத்யாருக்கு மூன்று மகன்களும் ஒரு மகளும் இருந்தனர். அவர்களுள் மூத்தவரான கூதிராம் கி.பி.1775-ஆம் ஆண்டில் பிறந்தார். அவருக்குப்பின் ராம்சிலா என்னும் மகளும்  நிதிராம்,கனைராம் என்னும் மகன்களும் பிறந்தனர்.
தந்தையின்  மறைவிற்குப்பிறகு  கூதிராம் பரம்பரைச் சொத்தைப்பராமரிக்கலானார்..
தார்மீக வழியிலிருந்து சிறிதும் பிறழாமல் தம்மால் முடிந்தவரை கடமைகளை ஆற்றி வந்தார். அவரது மனைவி இளமையிலேயே இறந்துவிட்டார். எனவே தமது 25-ஆம் வயதில் இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். மணமகனின் பெயர் சந்திரமணி . குடும்பத்தினர் அவளை சந்திரா என அழைத்தனர்.
சுமார் 1791-ஆம் ஆண்டில் பிறந்த சந்திரமணியின் திருமணம் எட்டாம் வயதில் நடைபெற்றது.

கூதிராம் -சந்திரமணி தம்பதியரின் மூத்த புதல்வனான ராம்குமார் 1805-ஆம்ஆண்டு பிறந்ததாகக் கூறுகின்றனர்.
ஐந்து வருடங்களுக்குப் பிறகு காத்யாயனி என்ற மகளும் 1826-இல் ராமேசுவரர் என்ற மகனும் பிறந்தனர்.

சத்தியப் பாதையிலிருந்து பிறழாமல் உலகக் கடமைகளைச் செய்வது எவ்வளவு சிரமம் என்பதை அறிய கூதிராமிற்கு வெகுகாலம் ஆகவில்லை.
காத்யாயனி பிறந்த சில ஆண்டுகளுக்குள் கடுமையான சோதனை ஒன்றை அவர்  எதிர்கொள்ள வேண்டியதாயிற்று.
அந்த கிராமத்தின் ஜமீன்தாரான ராமானந்த ராய் கிராம மக்களைக் கொடுமைப்படுத்திவந்ததைப்பற்றி முன்னரே கூறியுள்ளோம்.

தேரேபூரைச்சேர்ந்த ஒருவரிடம் கோபம் கொண்டு அவர் மீது வழக்குத் தொடர்ந்திருந்தார்.அந்த ஜமீன்தார். வழக்கில் வெற்றி பெறுவதற்கு நற்பெயருடைய ஒருவரின் சாட்சி வேண்டியிருந்தது. அதற்காக கூதிராமைத் தமக்குச் சாதகமாக சாட்சி சொல்லும் படி அவர் கூறினார்.நாணயத்திற்கும் நேர்மைக்கும் பெயர் பெற்ற கூதிராமிற்கு நீதிமன்றம், வழக்கு போன்ற சொற்களே அச்சம் ஊட்டுபவையாக இருந்தன.தன் பக்கம் நியாயம் இருந்தால் கூட யார் மீதும் வழக்குத் தொடர்வதற்காக அவர் நீதிமன்றங்களை நாடியிருக்க மாட்டார். அத்தகையவருக்கு ராமானந்த ராயின் வேண்டுகோள் ஓர் இடிபோல் தலையில் இறங்கியது. ராமானந்த ராயின் கடுங்கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்று அறிந்திருந்தும் கூதிராம் பொய்சாட்சி கூற மறுத்துவிட்டார்.

தவிர்க்க முடியாதது நிகழ்ந்தது. அந்த ஜமீன்தார் கூதிராமின் மீதே பொய்வழக்கு ஒன்று தொடர்ந்து அதில் வென்று கூதிராமின் தந்தைவழிச் சொத்து முழுவதையும் அபகரித்து விட்டார்.
எனவே தேரேபூரில் ஓர் அங்குல நிலம் கூட இல்லாமல் அனைத்தையும் கூதிராம் இழந்தார். கிராம மக்கள் அவரது துன்பத்தை உணர்ந்திருந்தாலும் ஜமீன்தாரிடம் கொண்டுள்ள அச்சத்தால் அவருக்கு எந்த விதத்திலும் உதவ முன்வரவில்லை.

இது நிகழ்ந்த போது கூதிராமிற்குநாற்பது வயதிருக்கும்.பரம்பரைச் சொத்தும் அத்துடன் பல காலம் உழைத்துச் சம்பாதித்த செல்வமும் காற்றில் கலைந்து சென்ற மேகத்தைப்போல் மறைந்து விட்டன. ஆனால் இந்த நிகழ்ச்சி அவரது நேர்மையைச் சிறிதும் பாதிக்கவில்லை. ஸ்ரீரகுவீரரின் திருவடிகளில் சரண்புகுந்தார் அவர் .
கெட்ட மதியுடைய அந்த ஜமீன்தாரிடமிருந்து தப்பிக்க  மேற்கொண்டு என்ன செய்ய வேண்டும் என்று அமைதியாகச் சிந்தித்தார். முடிவில் தன் பரம்பரை இருப்பிடமான அந்த கிராமத்திற்கு நிரந்தரமாக விடைதரத் தீர்மானித்தார்.

காமார்புகூரைச்சேர்ந்த சுக்லால் கோசுவாமியும் கூதிராமும் ஒத்த மனத்தினர்.நெருங்கிய நண்பர்கள். கூதிராமிற்கு நேர்ந்த இழப்பை அறிந்த சுக்லால் மிகவும் மனம் வருந்தினார். தன் வசமிருந்த சில குடிசைகளைக் காலி செய்து அதில் நிரந்தரமாக வாசம் செய்யும் படி அவர் கூதிராமை அழைத்தார்.
இவ்வாறு கூதிராமிற்கு ஒரு தஞ்சம் கிடைத்தது. அந்த அழைப்பைக் கடவுளின் திருவிளையாடலாகக் கருதி கூதிராம் ஏற்றுக்கொண்டார். நன்றியால் நிறைந்த மனத்துடன் காமார்புகூரை அடைந்து அங்கு வாழத் தொடங்கினார்.

அந்த நல்ல நண்பர் தங்க இடம் கொடுத்ததுடன் நின்றுவிடவில்லை. குடும்பப் பராமரிப்புக்காக  நெல்விளையும்  நிலத்தையும் மனமுவந்து அளித்தார்.
-
தொடரும்...
-

No comments:

Post a Comment