Saturday, 22 June 2019

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு-பாகம்-83

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு-பாகம்-83

தேவைக்கும்  தகுதிக்கும் ஏற்ப அன்னை சிலருக்குக் கனவிலும் தீட்சை அளித்ததுண்டு. உபதேசிப்பதுண்டு. நேரிலோ படத்திலோ அன்னையைப் பார்த்திராத சிலர் கனவில் அவரை சாட்சாத்தேவியாகக்  கண்டுள்ளார். சிலர்  கனவில் அவரிடமிருந்து முழுமையாகவோ சிலவேளைகளில் அரைகுறையாகவோ மந்திரத்தைப் பெற்றுள்ளனர். அது மட்டுமல்ல, அவர்கள் அவரை நேரில் சந்தித்து தீட்சை பெற்றபோது கனவில் பெற்ற  அதே மந்திரத்தை நேரிலும் அளித்ததைக் கண்டனர்.சிலருக்கு அன்னைகனவின் மூலமோ நேரிலோ கொடுத்த அறிவுரைகளால் மிகப்பெரிய ஆபத்துக்களிலிருந்து தப்பியுள்ளனர்.
ஆனால் அன்னையைப் பொறுத்தவரை கனவிலோ அல்லது அது போன்ற அசாதாரண வழிகளிலோ தம்மிடம் தீட்சை பெற்றார்கள் என்பதற்காக மட்டும் அவற்றைப் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. அவர்களுக்கு  நேரடியாக தீட்சை அளிக்கும் வேளையில் தமது அகவுணர்வில் எழும் மந்திரத்துடன் பொருந்துவதாக இருந்தால் மட்டுமே அதைப் பயன்படுத்தும்படி அவர் கூறினார். பல நேரங்களிலும் அவை பொருந்தின. சில வேளைகளில் பொருந்தாமலும் போயின.அவ்வாறு பொருந்தாதபோது கனவில் பெற்ற மந்திரத்திற்குத் துணையாக ஒருமந்திரத்தை அளிப்பார். அல்லது சிறிது மாற்றிக் கொடுப்பார். அதைப் பயன்படுத்த வேண்டாம் என்றும் சிலரிடம் அன்னை தடுத்தது உண்டு. குசும் குமாரிக்கு அன்னையிடம் தீட்சை பெற வேண்டும் என்ற பேராவல் இருந்தது. ஆனால் பலமுறை முயன்றும் ஏதேதோ தடைகளின் காரணமாக அவரால் அன்னையிடம் செல்ல முடியவில்லை. இந்த வேளையில் ஒரு நாள் அவர் கனவில் அன்னையிடமிருந்து ஒரு மந்திரத்தைப் பெற்றார். அதன் பின் அந்த மந்திரத்தை ஜபிக்கத் துவங்கினார்.ஆனால் ஏனோ அந்த மந்திரம் தனக்குப் பொருந்தாதது போல் அவளுக்குத் தோன்றியது.சில நாள் கழித்து அவள் அன்னையிடம் சென்று தன் கனவு பற்றிக் கூறினாள். அன்னை இதைக் கேட்டதும் மகளே, யாரோ உன்னை அழிக்க  முயல்கிறார்கள். அதற்காகத்தான் மூன்று தெய்வங்களின் பெயரில்(என்னைப்போன்ற வடிவத்தின் மூலமாக) உனக்கு இந்த மந்திரம் கனவில் கொடுக்கப்பட்டிருக்கிறது. முடிந்த அளவு சீக்கிரம் அந்த மந்திரத்தை மறந்துவிடு. இங்கே வந்துவிட்டாய்.இனி நீ பயப்பட வேண்டியதில்லை என்றார்.பின்னர் புதிய மந்திரத்தைக் கொடுத்து தீட்சை தந்தார்.
அன்னை கனவில் வழிகாட்டி அருள் புரிந்தவர்களுள் கிரீஷ் சந்திரகோஷின் வாழ்க்கை நிகழ்ச்சி சிறந்த உதாரணமாக அமைகிறது.கிரீஷ் குருதேவரின் இல்லறச்சீடர் பிரபல நாடகாசிரியர் நடிகர்,சிறந்த கவிஞர்,குடிகாரரும் தீயொழுக்கம் கொண்டிருந்தவருமான  அவர் குருதேவரின் பேரருளினால் வாழ்க்கை திருத்தியமையப்  பெற்றவர்.எனவே குருதேவரிடம் அசைக்க முடியாத  நம்பிக்கை  கொண்டிருந்தார். அன்னை புனிதமானவர் ,குரு பத்தினி என்ற அளவில் மட்டுமே அவருக்கு அன்னையிடம்  மதிப்பு இருந்தது. ஆனால் அன்னை ஆன்மீகத்தில் மிகவுயர்ந்தவர். குருதேவரின் அருள்சக்தி என்பதை அவர் உணரவில்லை.
குருதேவர் மறைந்த இரண்டு ஆண்டுகளுக்குப் பின்  அவருக்கு ஒரு மகன்  பிறந்தான். அவன் குருதேவரின் அருளால் பிறந்ததாக கிரீஷ் நம்பினார். அந்தச் சிறுவன் அன்னையிடம் மிகுந்த பாசம் கொண்டிருந்தான். அன்னையும் அவனைப் பார்த்ததும் ஆசையோடு தூக்கித் தம் மடியில் அமர்த்திக் கொள்வார்.1890-.இல் அன்னை வராக நகரில் ஒரு பக்தரின்  வீட்டில் தங்கியிருந்தார். கிரீஷ் அப்போது இந்தச் சிறுவனுடன்  அங்கே சென்றார். பேச்சுக்கூட வராத மூன்றே வயதுக் குழந்தையான அவன்  அன்னையைச் சந்திக்க மிகவும் ஆசைப்பட்டான். சைகையாலும் மழலை மொழியாலும் தன் ஆசையைப் பலவாறாக வெளிப்படுத்தினான். ஒரு பக்தர் அவனை மாடியிலிருந்த அன்னையிடம் எடுத்துச் சென்றார். அன்னையைக்கண்டதும் அவன் நெடுஞ்சாண்கிடையாகத்தரையில்  வீழ்ந்து வணங்கினான்.பின்னர் கீழே வந்ததும் கிரீஷை மேலே போகுமாறு வற்புறுத்தினான். அதற்கு கிரீஷ் பாவமே உருவான நான் அன்னையை எப்படிப் பார்ப்பேன்.என்று தயங்கினார். ஆனால் அந்தச் சிறுவனின் வற்புறுத்தலின் காரணமாக அவனைக் கைகளில் தூக்கியபடி மேலே சென்றார். உடம்பெல்லாம் நடுங்க அன்னையின் திருவடிகளில் வீழ்ந்து, அம்மா இந்தப் பையனால் நான் இன்று தங்கள் திருவடிகளைக் காணும் பேறு பெற்றேன் என்று நாத்தழுதழுக்க அன்னையிடம் கூறினார். அப்போது அவர் அன்னையின் முகத்தைப் பார்க்கவில்லை. அன்னை முகத்திரை இட்டிருந்தார்.போலும்! துரதிர்ஷ்டவசமாக இந்தப் பையன் சில காலத்திற்குள் இறந்துவிட்டான். கிரீஷ் மனமுடைந்து விட்டார். அவரது துயரம் கண்ட சுவாமி நிரஞ்ஜனானந்தர்  அவரிடம் அன்னையைச் சென்று தரிசிக்குமாறு கூறினார். எனவே அவருடனும் மற்றும் சில துறவிகளோடும் ஜெயராம்பாடி சென்றார் கிரீஷ்.
 இப்போது கிரீஷ் அன்னையை இரண்டாம் முறையாக தரிசிக்கிறார். அன்னையின் முன் நெடுஞ்சாண்கிடையாக வணங்கிய கிரீஷ் அன்னையின் முகத்தைப் பார்த்தவுடனே ஆழ்ந்த சிந்தனை வசப்பட்டவராய் அங்கிருந்து விடுவிடென்று வெளியே வந்து தனியாக அமர்ந்தார். உடன் வந்தவர்கள் அவருடைய திடீர் மாற்றத்திற்கான காரணம் தெரியாமல்  திகைத்தனர். கடைசியாக சுவாமி நிரஞ்ஜனானந்தர்கிரீஷிடம்  சென்று காரணத்தை வினவினார். நெடுநேரம் அமைதியாக இருந்த கிரீஷ் அவரிடம் எனக்காக அன்னையிடம் போய் ஒன்று கேட்டு வர வேண்டும். எனது பத்தொன்பதாம் வயதில்  என் கனவில் தோன்றியவர் அன்னைதானா என்பதைக் கேட்டு வாருங்கள் என்றார். நிரஞ்ஜனானந்தர் சென்று கேட்ட போது அன்னை ஆமாம். தோன்றியது நான் தான் என்று அவரிடம் தெரிவித்தார். அதன் பிறகு கிரீஷ் அதைப்பற்றிய  விவரத்தைக் கூறினார்.
 பத்தொன்பதாம் வயதில் கிரீஷ் மிகக் கடுமையான நோயால் பீடிக்கப்பட்டார். அப்போது அவர் நாத்திகராக இருந்தார். மருத்துவர்கள் கைவிட்ட அந்த நிலையில் ஒரு நாள் அவருக்குக் கனவொன்று தோன்றியது. அதில் திடீரென்று வானெங்கும் தெய்வீக ஒளி நிறைந்தது. மெல்ல,மெல்ல அது அவரை நெருங்கி வந்து இறுதியில் ஒரு தேவியாக வடிவம் கொண்டது. அந்த தேவி அவரது அருகே அமர்ந்து அவரிடம், மகனே நீ வேதனையில் துடிக்கிறாய் அல்லவா? என்று கேட்டாள். பின்னர் சிறிது பிரசாதத்தை அவரது வாயில் ஊட்டி உண்ணச் செய்து விட்டு மறைந்தாள். இந்த நிகழ்ச்சிக்குப்பிறகு கிரீஷ் படிப்படியாக     குணமடைந்தார். அவள் யார் என்று  அறிய அவர் எவ்வளவோ முயன்றார். பலனேதும் கிடைக்கவில்லை. ஒரு வேளை தனக்கு நினைவு தெரியுமுன்இறந்து போன தன் தாயாக இருக்கும் என்று கருதி அது பற்றிச் சிந்திப்பதை விட்டுவிட்டார். ஆனால் இப்போது அன்னையைப் பார்த்ததும் அந்த தேவியின் முகச்சாயல் அன்னையிடம் இருப்பதைக் கண்ட அவருக்குப் பிரமிப்பாகி விட்டது. மீண்டும் இருமுறை அன்னையிடம் கனவில் வந்தது அவர் தானா என்று கேட்டபோது இரண்டு முறையும் அன்னை, அது நான் தான் என்று கூறினார்.கடைசியாகச் சொல்லும் போது கனவில் வந்தது நான் தான். அது மட்டுமல்ல உண்மையிலேயே        நான் உன் அன்னை, அன்னையே தான். உன் குருவின் மனைவி என்பதாலோ, செயற்கையாக வைத்துக்கொண்ட உறவுமுறையாலோ வெறும் பேச்சுக்காகவோ அல்ல.உண்மையில் நான் உன் தாய் தான் என்றார். அன்றிலிருந்து அன்னையிடம் கிரீஷின் பக்தி அளவிட முடியாததாகியது. நிரஞ்ஜனின் அருளால் நான் என் அம்மாவைக் கண்டு கொண்டேன்  என்பார் அவர்.
-
தொடரும்...
-
ஸ்ரீராமகிருஷ்ணரின் ஆன்மீகக் குழுவில் இணைய 9789374109 என்ற எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலம் ரிக்கொஸ்ட் மெசேஜ் அனுப்பவும்



No comments:

Post a Comment