Saturday, 22 June 2019

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு-பாகம்-115

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு-பாகம்-115

இந்த நிகழ்ச்சிக்குப்பிறகு சாப்பிட வேண்டும் என்று இருந்த சிறு ஆசையும் அன்னையிடமிருந்து போய் விட்டது.
நீண்ட கால நோயின் காரணத்தால் அன்னையின் இயல்பு ஒரு சிறிய பெண்ணின் இயல்புபோல் மாறிவிட்டது. கங்கைக்குப்போக வேண்டும் என்று அவ்வப்போது கூறுவார். அழைத்துக்கொண்டு போவதாக யாராவது சொல்லும் வரை சாப்பிட மாட்டார். அது மட்டுமின்றி அவரைச் சாப்பிட வைப்பதும் பெரும் பாடாகியது. அவர் சாப்பிடாமல் பிடிவாதம் செய்யும் போது, சாரதானந்தரை அழைக்கப்போவதாக சொன்னால் மட்டும், என் மகனை ஏன் தொந்தரவு செய்கிறாய்? என்று கூறிச் சாப்பிட்டுவிடுவார்.
ஒரு நாள் இரவு நெடுநேரம் கடந்து விட்டது. சரளா எவ்வளவோ முயன்றும் அன்னை சிறு குழந்தையைப்போல் சாப்பிட மறுத்துக்கொண்டிருந்தார். எப்பொழுது பார்த்தாலும்  சாப்பிடு, சாப்பிடு என்று சொல்வது அது முடிந்ததும் அந்தக்குச்சியை அக்குளில் வைப்பதும் இது தான் உன்வேலை.இதைத்தவிர உனக்கு வேறு எதுவும் தெரியாது. என்று கூறி எவ்வளவு சொல்லியும் சாப்பிட மறுத்துவிட்டார். சரளா வேறு வழியின்றி சாரதானந்தரை அழைப்பதாகக் கூறினாள். ஆனால் இம்முறை அந்த அஸ்திரம் பலனளிக்கவில்லை. கூப்பிடு! உன் கையால் நான் சாப்பிட மாட்டேன், சாப்பிடவே மாட்டேன் என்று  உறுதியாக கூறிவிட்டார் அன்னை. கடைசியில் கீழ்த்தளத்தில் இருந்த சாரதானந்தரை அழைத்தாள் சரளா. சுவாமிகள் மாடிக்கு வந்தார். அவர் வந்ததும் அன்னை நடந்து கொண்ட முறை வியப்பை அளிப்பதாக இருந்தது.
இது நாள் வரை அன்னை முகத்தைத் திரையிட்டுக்கொள்ளாமல் சாரதானந்தர் முன் இருந்ததில்லை. அவரோடு நேருக்குநேர் பேசவும் மாட்டார். யாராவது ஒருவர் மூலமே பேசுவார். ஆனால் இப்போது அவரை அருகில் வரும்படி அழைத்துத் தம் பக்கத்தில் உட்கார வைத்துக் கொண்டார்.அவருடைய முகவாயை மிகுந்த பாசத்தோடு தொட்டுமுத்தமிட்டு அவருடைய இரண்டு கைகளையும் தமது கைகளில் வைத்துக்கொண்டு சிறு குழந்தையைப்போல் சரளாவைக் காட்டி, மகனே இவள் என்னை எப்படியெல்லாம் தொந்தரவு செய்கிறாள் தெரியுமா? எப்போது பார்த்தாலும் சாப்பிடு, சாப்பிடு என்று உயிரை வாங்குகிறாள். அதைவிட்டால் அந்தக் குச்சியை அக்களில் வைத்துக்கொண்டு எடுக்கிறாள். என்னை இப்படி இம்சிக்கவேண்டாம் என்று அவளுக்குச் சொல் என்றார். சுவாமிகள் உடனே அம்மா இனிமேல் அவள் அப்படிச்செய்ய மாட்டாள் என்று ஆறுதல் கூறினார். சிறிதுநேரம் கழிந்ததும் அம்மா இரவு இவ்வளவு நேரமாகிவிட்டதே , ஏதாவது கொஞ்சம் சாப்பிடுங்களேன்” என்று மிகுந்த அன்புடன் கேட்டார். அன்னையும் சரி என்று தலையாட்டினார். உடனே சுவாமிகள் சரளாவிடம் உணவை ஊட்டுமாறு கூறினார். அன்னை அதைத் தடுத்து வேண்டாம், வேண்டாம். அவள் கொடுக்கவேண்டாம். நீயே என் கையால் கொடு” என்றார் . சுவாமிகளும் அன்னையின் வாயில் சிறிதுசிறிதாகப் பாலைப் புகட்டினார். பிறகு பால் பாத்திரத்தைக் கீழே வைத்துவிட்டு அம்மா” இப்போது இது போதும் கொஞ்சம் ஓய்வெடுத்துக்கொள்ளுங்கள், அப்புறம் சாப்பிடலாம் என்று பரிவுடன் கூறினார். இந்த வார்த்தைகளைக்கேட்டதும் அன்னை மிகுந்த மகிழ்ச்சியுடன் சரளாவையும் மற்றவர்களையும் பார்த்து, என் மகன் எவ்வளவு கனிவோடு பேசுகிறான். அம்மா,   கொஞ்சநேரம் ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கள்.பிறகு சாப்பிடலாம், உங்களுக்கு ஏன் இப்படிப்பேசத் தெரியவில்லை. எப்போது பார்த்தாலும் சாப்பிடுங்கள், சாப்பிடுங்கள்-இதையேபேசுகிறீர்களே!என்றார். பிறகு சுவாமிகளைப்பார்த்து மிகுந்த அன்போடு மகனே, நீ நாளெல்லாம் உழைப்பவன், இந்த நள்ளிரவில் உன்னை இங்கே அழைத்துத் தொந்தரவு கொடுத்து விட்டார்கள்,! போய் ஒய்வெடுத்துக்கொள்! எனக்காக நீ எவ்வளவு கஷ்டப்பட்டுள்ளாய்” என்றார்.
 கடந்த சுமார் இருபது ஆண்டுகளாக அன்னையின் பொறுப்புகளை வகித்து, அவரது பேரன்பிற்குப் பாத்திரமாகி யிருந்த சுவாமி சாரதானந்தரின் மனத்தில் குறை ஒன்று அரித்துக்கொண்டே இருந்தது. அன்னைக்கு நேரடிப் பணிவிடைகள் எதுவும் செய்ய முடியவில்லையே என்ற ஆதங்கம் தான் அது. இயல்பான கூச்ச சுபாவம் காரணமாக அவராக அதைச் செய்யவில்லை.எல்லோர் உள்ளங்களின் ஆசைகளையும் அறிந்து நிறைவேற்றுகின்ற கருணைக் கடலான அன்னை சுவாமிகளின் அந்த ஆசையை இப்படி நிறைவேற்றினார். என் மனத்துயரை விலக்கவே அன்னை என் சேவையை ஏற்றுக்கொண்டார். என்று பின்னர் சுவாமிகள் கூறினார்.
அது சரி, சரளா? அன்னை இப்படித் தம்மை விலக்கியதை  அவளால் எப்படி பொறுக்க முடியும்? அன்னைக்குத் தொந்தரவாக இருக்க வேண்டாம் என்று எண்ணிய அவள் சாரதானந்தரிடம் சென்று நிலைமையைக் கூறி தனது பணியை மாற்றிக்கொண்டாள். சாதம் கொடுப்பது போன்ற பிற வேலைகளை நான் பார்த்துக் கொள்கிறேன். ஆனால் பால் கொடுப்பதையும் ஜீரத்தை அளவிடுவதையும் வேறு யாராவது செய்யட்டும். என்று கூறினாள். சுவாமிகளும் அதனை ஏற்றுக்கொண்டார். அன்னை மறுநாளே இதைப்புரிந்து கொண்டார். சரளா வெளியே  சென்றிருந்தபோது சிஷ்யை ஒருத்தியிடம் என்ன, சரளா என்னிடம் கோபித்துக் கொண்டு போய் விட்டாளா? என்று கேட்டார். அதற்கு அந்த சிஷ்யை ஏன் அம்மா! அவள் ஏன் உங்களிடம் கோபம் கொள்ளவேண்டும் என்று கூறினாள். அதற்கு அன்னை இல்லையில்லை.அவளுக்கு என் மீது கோபம் தான் என்றார்.சிறிது நேரம் கழித்து சரளாவந்தாள். கண்டதுமே அன்னை அவளை அன்புடன் அழைத்து பாசத்தையெல்லாம் அள்ளிக்கொட்டுகின்ற குரலில் மகளே! என் மீது கோபமா? என்று கேட்டார். நான் ஏன் உங்கள் மீது கோபம் கொள்ள வேண்டும் அம்மா? என்று பதிலளித்தாள் சரளா.அதற்கு அன்னை கோபம் இல்லை என்றால் நீ ஏன் எனக்க பால் தருவதில்லை? அந்தக் குச்சியை ஏன் என் அக்குளில் செருகுவதில்லை? மகளே, தொடர்ந்த நோய் எரிச்சலை உண்டாக்குகிறது. சில வேளைகளில் எதையோ நினைத்து எதையோ பேசி விடுகிறேன். என் வார்த்தைகளைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாதே என்றார். இவ்வாறு கூறிவிட்டு அவளது தலையை அப்படியே இழுத்துத் தம் மார்போடு அணைத்துக்கொண்டு அன்பொழுகத் தடவிக்கொடுத்தார். அன்னையின் அப்பழுக்கற்ற அன்பில் நனைந்த சரளா கேவிக்கேவி அழுதாள்.
அன்னைக்கு சரளாவிடம் ஒரு தனி இருந்தது. குறிப்பாக அவளது ஆன்மீக வாழ்வில் அவர் மிகுந்த ஈடுபாடு காட்டினார். ஏனெனில் இந்த சரளா பின்னாளில் ராமகிருஷ்ண இயக்கத்தின் வரலாற்றில் ஒரு முக்கிய இடம் வகிக்கப்போவதை அன்னை அறிந்திருந்தார். எனவே அதற்கேற்ப அவளை வழிநடத்தினார். ஒரு நாள் அது பற்றி அவளிடமே கூறவும் செய்தார்

No comments:

Post a Comment